
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐயாறப்பர் ஆலயம். தஞ்சாவூர் அருகே உள்ள ஊர் சக்கரபள்ளி. அங்கே நாதசன்மா என்ற சிவபக்தர் வசித்து வந்தார். அவருடைய மனைவி அநவித்யை. அவளும் ஒரு சிறந்த சிவபக்தையே. இருவரும் தினசரி மூன்று வேளையும் திருவையாறில் அருள்பாலிக்கும் இறைவன் ஐயாறப்பரையும், அன்னை அறம் வளர்த்த நாயகியையும் பூஜை செய்துவந்தனர்.
ஐப்பசி மாத கடைசி நாளன்று மாயூரத்தில் (தற்போதைய மயிலாடுதுறை) நடைபெறும் விழா கடைமுழுக்கு. அன்று அங்கு உள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் உலாவாக எழுந்தருளி, மாயூரநாதர் அபயாம்பிகையோடு காவிரியில் தீர்த்தம் கொடுப்பது வழக்கம். துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும் காவிரியில் கலப்பதாகவும், கங்கை நதியும் தன் மீது படிந்த பாவங்களைப் போக்க காவிரியில் நீராடுவதாகவும் ஐதீகம். பல தலைமுறைகளாக நாம் செய்த பாவம் இங்கு நீராடுவதால் கரைந்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.
நாதசன்மா, அநவித்யை தம்பதியருக்கு இந்த ‘கடைமுழுக்கு‘ விழாவில் கலந்து கொண்டு, துலா கட்டத்தில் நீராட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. உடனே காலை பூஜைகளை திருவையாறில் முடித்துவிட்டு இரவு திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தோடு மாயூரம் புறப்பட்டனர். ஆனால், இரவு நேரம் நெருங்கிவிட்டது. நாம் நினைத்தபடி ஐப்பசி கடைசி நாளில் பகலில் காவிரியில் நீராட முடியவில்லையே என வேதனைப்பட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால், அவர்களால் உடனடியாக திருவையாறு திரும்பி ஐயாறப்பரையும் தரிசனம் செய்ய முடியவில்லை.
இதனால் அவர்கள் பெரும் கவலையடைந்தனர். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. ‘கவலை வேண்டாம். பொழுது விடிவதற்குள் காவிரியில் போய் நீராடுங்கள். உங்களுக்கு ஐப்பசியில் நீராடிய அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும். தவிர திருவையாற்றுக்கு திரும்ப முடியவில்லையே என வருந்த வேண்டாம். மாயூரநாதர் ஆலயத்திற்கு மேற்கில் உள்ள ஆலயத்தில் யாம் எழுந்தருளியுள்ளோம்.
அங்கு வந்து எங்களை தரிசித்துச் செல்லுங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படி இருவரும் மறுநாள் விடியற்காலையில் காவிரியில் நீராடி விட்டு, அசரீரி சொன்ன ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டனர். இந்த ஆலயமே மயிலாடுதுறை ஐயாறப்பர் ஆலயம். ஆமாம், திருவையாறில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஐயாறப்பரும், இறைவி அறம்வளர்த்த நாயகியும் தன் பக்தர் களுக்காக அதே பெயரில் இங்கும் எழுந்தருளியிருக்கின்றனர். ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் திருக்குளமும், அதனருகே படித்துறை விநாயகர் ஆலயமும் உள்ளன. அடுத்துள்ள முகப்பைக் கடந்ததும் விசாலமான பிராகாரத்தில் பலி பீடம், நந்தியம் பெருமான், கொடிமரம் ஆகியவை உள்ளன. மேற்கு பிராகாரத்தில் விநாயகர், தென் கயிலைநாதர், வடகயிலை நாதர், சுப்ரமணியர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாவிஷ்ணு, கஜலட்சுமி சந்நதிகள் உள்ளன. வடக்கில் சண்டீஸ்வரர் சந்நதி கொண்டிருக்கிறார்.
வடகிழக்கில் பைரவர், சனிபகவான், சூரியன் திருமேனிகளும், கிழக்கு பிராகாரத்தில் நவகிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். தெற்கு பிராகாரத்தில் நால்வர் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் இடதுபுறம் அன்னை அறம் வளர்த்த நாயகியின் சந்நதி. அன்னை கருவறையின் முன் இரண்டு துவார பாலகிகள் சுதை வடிவினராக வீற்றிருக்கின்றனர். இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் சங்கு மாலையையும், மேல் இடது கரத்தில் தாமரையையும் ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ இன்முகம் காட்டி அருள்பாலிக்கிறாள்.
மகாமண்டபத்தின் இடதுபுறம் பள்ளியறையும், நடராஜர்-சிவகாமி அருள்பாலிக்கும் நடன சபையும் உள்ளன. அடுத்துள்ள இறைவனின் அர்த்த மண்டப நுழைவாயிலை துவாரபாலகர் களின் சுதை வடிவ திருமேனிகள் அலங்கரிக்க, கருவறையில் இறைவன் ஐயாறப்பர் சிவலிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவகோட்டத்தில் வடபுறம் பிரம்மா, துர்க்கையம்மன் திருமேனிகளும், கிழக்கில் அர்த்தநாரீஸ் வரரும், தெற்கில் விநாயகர், தட்சிணாமூர்த்தியும் அருளாசி வழங்குகின்றனர்.
இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அர்த்தநாரீஸ்வரருக்கு தொடர்ந்து 5 வாரங்கள் அர்ச்சனை செய்து வந்தால் தடைபட்ட திருமணம் நடந்தேறுவதுடன் கன்னியருக்கு விரைந்து திருமணம் நடக்கும் என்ப்து பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. அமாவாசை தினங்களில் அர்த்த நாரீஸ்வரருக்கு, 350 அர்ச்சனையாவது நடை பெறுவது வியக்க வைக்கும். பிரதோஷ பூஜையும் இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
நவராத்திரி, சிவராத்திரி, மார்கழி 30 நாட்கள், சோமவாரம், கார்த்திகை, பொங்கல், பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜர், சிவகாமி வீதியுலா வருவதுண்டு. இங்குள்ள துர்க்கைக்கு வெள்ளியன்று நடைபெறும் ராகுகால பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். வெள்ளி தோறும் மாலை ஆறுமணி அளவில் வார வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகின்றன. இறைவனின் சந்நதியின் முன் அப்பர் சுவாமிகள் தரையில் விழுந்து இறைவனை வணங்குவது போன்ற கருங்கல் சிலை ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை சப்தஸ்தான திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். பத்தாம் நாள் இந்த ஆலயத்திலிருந்து இறைவனும் இறைவியும் காலையில் பல்லக்கில் புறப்படுவர்.
சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் திருக்கோயில், கூறைநாடு திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில், சித்தர்காடு மங்கள சவுந்திர நாயகி சமேத மார்க்க சகாய சுவாமி கோயில், மூவலூர் அறம்வளர்த்த நாயகி அம்பாள் சமேத அழகிய நாதர் கோயில், சோழம்பேட்டை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வர சுவாமி கோயில் (வள்ளலார் திருக்கோவில்), திருஇந்தளூர் காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாத சுவாமி கோயில், துலாக்கட்டம் அபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி கோயில் ஆகிய தலங்களுக்கு எழுந்தருளுவார்கள்.
இரவு 7.30 மணியளவில் மாயூரநாதசுவாமி கோயிலில் அனைத்து ஆலய இறைவன், இறைவிக்கும் தீபாராதனை நடைபெறும். பின் அவர்கள் யாவரும் தத்தமது ஆலயம் திரும்புவார்கள். தன்னை துதிக்கும் பக்தர்களுக்காக எழுந்தருளிய இத்தலத்து இறைவன் தன்னை நாடும் பக்தர்களின் குறையையும், கவலையையும் தீர்த்து வைப்பார் என்பதில் ஐயமில்லை. தன்னை வணங்கிய இருவரையும் தன்னுள் ஐக்கியமாகும்படி இறைவன் பணிக்க, அப்படியே நாதசன்மாவும், அநவித்யையும் சிவபெருமானுடன் ஐக்கியமாயினர்.
நாதசன்மா ஐக்கியமான சிவலிங்கம், மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கணக்கடி விநாயகர் சந்நதிக்கு அருகே தனிச் சந்நதியில் அமைந்துள்ளது. அநவித்யை ஐக்கியமான சிவலிங்கம், மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள அன்னை அபயாம்பிகை சந்நதிக்கு தென்புறத்தில் இருக்கிறது. அநவித்யை ஐக்கியமான சிவலிங்கத்திற்கு வழக்கமான ஆடை அலங்காரங்களுக்கு பதிலாக இங்கு சேலையே உடுத்துகின்றனர். இது எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.
No comments:
Post a Comment