Tuesday, 1 August 2017

அழகு முகம் தந்த ஆகாச கங்கை


கோதாவரி நதிக்கரையில் வசித்த கேசவ பட்டர், அவரது தந்தையின் சிராத்த தினத்தன்று முன்னோர் கடன் செய்தார். அப்போது அறிமுகம் இல்லாத அந்தணர் ஒருவர் பட்டர் வீட்டுக்கு வந்தார். அவருக்கு அறுசுவை அன்னமும் தட்சணையும் அளிக்கப்பட்டது. 

அந்தணர் கிளம்பிய சிறிது நேரத்தில், பட்டருக்கு எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்தது.

அவரின் முகம் மட்டும் கழுதையாக மாறியது.

பயத்தில் அலறிய பட்டர், அகத்திய முனிவரின் ஆஸ்ரமம் நோக்கி ஓடினார்.

முனிவரின் திருவடியில் விழுந்து வணங்கினார். 

நடந்ததை எடுத்துச் சொல்வதற்கு முன்பே, அகத்தியர் ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்தார். 

"இன்று உன் தந்தையின் சிரார்த்த நாளாயிற்றே....'' என்றார் அத்தியர்.

"ஆம் சுவாமி'' என்ற பட்டர் கண்களில் தாரையாக கண்ணீர் வழிந்தது. 

"சிராத்த நாளில், பாவி ஒருவனுக்கு அன்ன மிட்டதால் இத்துன்பத்திற்கு ஆளாகி விட்டாய். இருந்தாலும், உன் கவலை தீர்க்கும் மருந்து திருமலை (திருப்பதி)யில் இருக்கிறது. திருப்பதி மலையிலுள்ள ஆகாச கங்கை தீர்த்தத்திற்கு சென்று நீராடி, ஏழுமலையானைத் தரிசனம் செய். சுயவடிவம் பெறுவாய்'' என ஆசி அளித்தார் அகத்தியர்.

ஆகாச கங்கை தீர்த்த மகிமையால் கேசவ பட்டரும் சுயவடிவம் பெற்றார். திருப்பதி சென்றால் ஆகாச கங்கை தீர்த்தத்திற்கு சென்று தலையில் நீர் தெளித்து வாருங்கள்.

நோய் நொடி போக்கும் அழியா இலங்கை அம்மன்


சித்தர்கள் உலவிய ராசிபுரம் உலைவாயன் மலைச்சாரலில் இருக்கிறது கூனவேலம்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அழியா இலங்கை அம்மன் கோயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சிவனும், பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அம்மன் காட்சியளிப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பம்சம். அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகத்திற்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. அம்மனின் குழந்தைகள் என்று கருதப்படும் 27 நட்சத்திரங்கள் உருவங்களாக அமைக்கப் பட்டு தனித்தனி சன்னதியில் குடிகொண்டு அருள்பாலிக்கின்றனர். நாற்புறமும் மதில்சுவர்கள், மூன்று வாயில்கள் என அதிஅற்புதமாக திகழும் அழியா அம்மன் கோயிலைக் காண,கோடிக்கண் வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.

‘‘ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதையை தேடி அனுமன் இலங்கைக்கு சென்றார். அப்போது வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் அவரை தடுத்தாள். கோபம் கொண்ட அனுமன், தன்வாலில் சுற்றி அவளை தூக்கி வீச, தலைகீழாக வந்து விழுந்த இடம் தான் கூனவேலம்பட்டி. அவளது பாதங்களை இங்கு வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இலங்கை அழிவதற்கு முன்பே அம்மன் இங்கு வந்து சேர்ந்ததால் அழியா இலங்கை அம்மன் என்று போற்றப்படுகிறாள்’’ என்பது தலவரலாறு. ராவணனின் தங்கை சூர்ப்பனகை தான், இந்த அழியா இலங்கை அம்மன். அந்த வகையில் உலகிலேயே சூர்ப்பனகைக்கு கட்டப்பட்ட ஒரே கோயில் இது என்ற பெருமையும் இதற்கு உண்டு என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.

ஆரம்பத்தில் புதர்கள் மண்டிய பூமியாக இந்த இடம் காட்சியளித்துள்ளது. மேய்ச்சலுக்காக வந்த பசுமாடு ஒன்று, அங்கிருந்த புற்றின் மீது தினமும் பாலை சொரிந்துள்ளது. மாடு சரியாக பால் கறக்காத காரணம் என்ன? என்பதை கண்டறிய, அது செல்லும் இடத்திற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அன்றைய தினம் அவரது கனவில் வந்த இலங்கையம்மன், தனது வரலாற்றை கூறி, புற்றிருக்கும் இடத்தில் தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டாள். இதனால் அந்த இடத்தில் அம்மன் குடியிருக்க, சிறிய குடில் அமைக்கப்பட்டது. அந்த குடில் தான், இன்று 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த அழியா இலங்ைகயம்மன் கோயிலாக காட்சியளிக்கிறது. கருவறை புற்று வடிவில் அமைந் துள்ளது. இந்த புற்றில் வடக்கு திசையில் தலைகீழாக, மேல்நோக்கிய படி அம்மன் பாதங்கள் நிற்கிறது. திருவிழாக் காலங்களில் இந்த பாதத்தின் மீது உருவச்சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

அழியா இலங்கை அம்மனை மனமுருக வழிபட்டால், எப்படிப்பட்ட கொடிய நோயும் அழிந்து போகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நோய் தீர்க்க வழிபடும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியவுடன் நாய் மற்றும் பாம்பு உருவத்தை அம்மன் சன்னதியில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் விவசாயிகள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் அம்மனை வழிபட்டுச் செல் கின்றனர். இதற்கு நேர்த்திக்கடனாக மண்ணால் செய்த பசு உருவங்களை கோயிலுக்கு கொண்டு வந்து வைத்துச் செல்கின்றனர்.  ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு கோலாகலமாக திருவிழா கொண்டாடப்படுகிறது. அப்போது சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராம மக்கள், வெள்ளைச் சேலை அணிந்து தரையில் படுத்து உறங்கி, அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடும் ஐதீகமும் ஆண்டாண்டு காலமாய் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மூலிகைகள் கிடைக்கும் மலை

போகரின் சிஷ்யரான கொங்கணர், இந்த மலையில் உள்ள சுனையின் நீரை பெரும் கொப்பரையில் காய்ச்ச, போகர் தக்க பக்குவத்தோடு அனைத்து மூலிகைகளையும் பதம் பார்த்து காய்ச்சினார். இறுகிய மூலிகை பாஷணங்களை கொண்டு தமிழ்கடவுள் முருகனுக்கு சிலை வடித்தார். அது தான், தற்போது பழனிமலையில் அருள்பாலிக்கும் முருகன். நவபாஷாணம் செய்ய உலை வைக்கப்பட்ட மலை என்பதால், இது உலைவாயன் மலை என்று போற்றப்படுகிறது. இந்த மலையில் அனைத்து வித அபூர்வ மூலிகைகளும் உண்டு. காகபுஜண்டரை வணங்கி எந்த மூலிகை தேவை என்று தேட ஆரம்பித்தாலும், அந்த மூலிகை கண்டிப்பாய் கிடைக்கும் என்கின்றனர் மூத்த நாட்டு வைத்தியர்கள்.

கதிர்காமம் முருகன் அருள் பெற்ற வேடன்


தமிழகத்தில் முருகன் பக்தியைப் வளர்த்தவர்கள், வளர்த்து வருபவர்கள் ஏராளம். அவர்களை அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர், தாண்டவராய சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

என்றாலும், "இவர்களில் முதலாமவர் "அருணகிரிநாதர்' என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இவர் பல முருகன் தலங்களுக்கும் சென்றுள்ளார். 
அருணகிரிநாதர், ""வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே'' என்று திருப்புகழில் (பாடல் 441) கூறியிருக்கிறார். 

""கதிர்காமத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்ட முருகப் பெருமானே! நீ வேடன் அருளிய பூஜையை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டாய்'' என்று கூறுகிறார். 
அருணகிரிநாதர் குறிப்பிடும் அந்த வேடன் வரலாற்றை, இங்கு நாம் பார்க்கப் போகிறோம். 

இலங்கையில் முக்கியத்துவம் உடைய முருகன் திருத்தலம் கதிர்காமம். சிங்கள மொழியில், ""கதிர கம்பா'' என்றால் ""கருங்காலி மரக் காடு'' என்று பொருள். அந்நாளில் கதிர்காமம் பகுதியில், கருங்காலி மரங்கள் அடர்ந்த காடு இருந்தது. 

அந்தக் காட்டில் வாழ்ந்த வேடர்கள் முருகனை வழிபடும் தெய்வமாகக் கொண்டிருந்தார்கள். 

ஒரு நாள் ஒரு வேடன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒருமுறை, ஒரு முருகன் கோவில் அவன் கண்ணில் பட்டது. அது அவன் முன்வினை புண்ணியத்தால் நேர்ந்தது. 

கதிர்காமம் முருகன் வேடனை ஆட்கொண்டான். அதனால் அந்த முருகப் பெருமான்மீது அந்த வேடனுக்கு பக்தி ஊற்றாகப் பெருக்கெடுத்தது. முருக நாமத்தை எப்போதும் மனதில் ஜபம் செய்துகொண்டிருந்தான். முருக பக்தியில் பழுத்த பழமாகி விட்டான்.

அவன் தினமும் காட்டில் ஓடும் மாணிக்கக்கங்கை ஆற்றில் நீராடுவான். முருகனைப் பூஜிப்பதற்கு காட்டு மலர்களையும், கனிகளையும் பறிப்பான். அவற்றுடன் மாணிக்கக்கங்கை நீரை, முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்கு எடுத்துச் செல்வான். 

இப்படி அவன் முருகன் மீது பக்தி செய்யத் தொடங்கி, ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் வந்தது. அன்று அவன் முருகன் கோவிலுக்கு விரைந்து கொண்டிருந்தான்.

வழியில் ஓர் ஆண் சிங்கம் எதிர்ப்பட்டது. அவன் சிங்கத்தைப் பார்த்து பயப்படும் இயல்பு உடையவன் அல்ல. வேறு நேரமாக இருந்திருந்தால், அவனே அந்தச் சிங்கத்தைக் குறி வைத்து கொன்றிருப்பான். 

ஆனால், இப்போது அவன் முருகனைப் பூஜிப்பதற்காக அல்லவா விரைந்து கொண்டிருக்கிறான்? அதனால் அவன் சிங்கத்தை விட்டு ஒதுங்கிச் சென்றான். 
ஆனால், சிங்கம் மனிதனை விடுமா! அவனைக் கொல்லும் நோக்கத்துடன், அவனுடைய இரண்டு தோள்களில் தன் இரண்டு முன்னங்கால்களை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது. வேடன் திணறினான். 

அவன் சிங்கத்திடம், ""என்னை இப்போது போகவிடு! நான் முருகனைப் பூஜிக்க சென்று கொண்டிருக்கிறேன்,'' என்றான்.

அதற்கு சிங்கம், ""உன்னை நான் விடமாட்டேன்! எங்கள் இனத்தை எத்தனை முறை நீ கொன்றிருக்கிறாய்? உன்னை விட்டுவிடுவேனா, என்ன?'' என்று உறுமியது.

அதனிடம் வேடன், ""நான் முருக பூஜையை முடித்து விட்டு வந்து விடுகிறேன். நான் திரும்பி வந்ததும், நீ என்னை உன் விருப்பம்போல் கொன்று தின்னலாம். இப்போது என்னை முருகனைப் பூஜிப்பதற்கு செல்ல விடு. இது நான் ஐம்பது ஆண்டுகளாக வணங்கும் முருகன் மீது சத்தியம்...'' என்று உறுதியளித்தான்.

அதைக் கேட்ட சிங்கம், ""முருகன் மீது சத்தியம்' என்று கூறியதால், நான் உனக்கு அனுமதி கொடுக்கிறேன். ஆனால், நீ என்னை ஏமாற்ற நினைத்தால், எங்கிருந்தாலும் உன்னைத் தேடிப் பிடித்துக் கொல்வேன்! சீக்கிரம் திரும்பி வா...'' என்று கூறி பிடியைத் தளர்த்தியது.

வேடன் முருகன் சன்னிதியை அடைந்தான். அப்போது பூஜை நேரம். கருணை வள்ளலான முருகா! கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் உன்னைப் பூஜிக்கும் பாக்கியம் அருளியதற்காக நன்றி,'' என்று மனம் நெகிழ்ந்து வணங்கினான். கண்களை மூடி, அமர்ந்தவன் அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டான். நேரம் போனதே தெரியவில்லை.

அப்போதுமங்கள வாத்தியங்கள் முழங்கின. அதன் ஒலி கேட்டு, தியானம் கலைந்த போது தான், சிங்கத்திற்கு தான் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. 

உடனே எழுந்து, சிங்கம் இருந்த இடம் நோக்கி விரைந்தான்.

சிங்கத்தை அணுகியதும் அவன், ""நான் முருகனைப் பூஜித்தபோது என் மனம் முருகனிடம் ஒன்றி லயித்துவிட்டது. எனவே தாமதமாக வந்தேன். அதற்காக என்னை மன்னித்துவிடு! இப்போது நீ உன் விருப்பம்போல் என்னைக் கொன்று தின்னலாம்'' என்று கூறிவிட்டு தன் கண்கள் மூடி, கைககள் கூப்பி, முருகனை நினைத்து மனதிற்குள், ""முருகா, முருகா, முருகா!'' என்று ஜபம் செய்ய ஆரம்பித்தான். 

தன்மீது எந்த விநாடியும் சிங்கம் பாய்ந்து தன்னைக் கொன்றுவிடும்!' என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததுபோல் அங்கு எதுவும் நிகழவில்லை.

சிங்கம் அவன் தோள்களில், தன் முன்னங்கால்கள் இரண்டையும் வைத்தது. அது இதமாகத் தன் கால்களால் வேடனின் தோள்களையும், முகத்தையும் தடவிக் கொடுத்தது! 

சிங்கத்தின் அந்த ஸ்பரிசம், அவனை ஏதோ ஓர் உன்னத ஆன்மிக நிலைக்கு உயர்த்தியது! ஆதலால், "கண்டறியாதன கண்ட'' ஆன்மிக அனுபவம் அவனுக்கு ஏற்பட்டது. 

அவன் கண்களைத் திறந்து பார்த்தான். ஆஹா! அங்கு சிங்கம் இல்லை! மாறாக, சிங்கம் இருந்த இடத்தில் முருகப் பெருமான் புன்னகையுடன் நின்று வேடனை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார். 

சிவபெருமான் மீது பக்தி செலுத்தி உயர்ந்த வேடன் கண்ணப்பன், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இடம் பெற்றார். நம் கதிர்காமம் வேடனும், முருகன் பக்தியில் உயர்ந்து நிற்கிறான். இதனால் தான், அருணகிரிநாதரின் திருப்புகழில், "வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே'' என்று சிறப்பான இடம் பெற்றிருக்கிறான்.

அம்பாளுக்கு உப்பில்லாத சாதம் நிவேதனம்


களம்பூர்

திருவண்ணாமலை அடுத்த களம்பூர் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சோழர் காலத்தில் கட்டப்பட்டதை நினைவுகூறும் வகையில் மகாமேரு வடிவம்போல அமைந்துள்ளது. பிற்காலத்தில் விஜயநகர பேரரசர்களால் புதுப்பிக்கப்பட்டது. காசி விஸ்வநாதர், மூலஸ்தானத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவரது திருமேனியில் அம்புபட்ட தழும்பு உள்ளது. இங்கு சுவாமி சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் உள்ளன. காசி, ராமேஸ்வரம் தரிசனம்போல் மேற்கு நோக்கிய தலம் இது. இத்தலத்திற்கு வருகை தந்தால், காசி ராமேஸ்வரத்திற்குச் சென்றுவந்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். 

இக்கோயிலில் வளர்பிறை பிரதோஷத்தின்போது உச்சிகாலத்தில் அம்பாளுக்கு விசேஷ வழிபாடு செய்கிறார்கள். அப்போது  குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அரிசி, தேங்காய், பழம் மற்றும் உப்பில்லாத சாதத்தை நிவேதனமாக வைத்து அம்பாளை வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்து பலர் புத்திர பாக்கியம் பெற்றுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.  கோயிலின் தல விருட்சம், வில்வமரம். கோயிலில் பிராகார வலம் வரும்போது காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சந்நதிகளையும், கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை, பிராகார தெய்வங்களாக மகா கணபதி, சுப்பிரமணியர், சண்டீசர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். 

சோமூதாபுரியை ஆண்ட பாணாசூரன் தனக்கு ஏற்பட்ட சாபம் தீர பல சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அப்போது களம்பூருக்கு வந்து, இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் லிங்கமொன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றான் என்கிறது இத்தல புராணம். மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், ஒன்பது நாட்கள் பிரமோற்சவமும், மாசி மகாசிவராத்திரியும் இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலையிலிருந்து போளூர் வழியாக ஆரணி செல்லும் அனைத்து பேருந்துகளும் களம்பூரில் நின்று செல்லும். ஆரணியில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 43 கி.மீ. தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது.

ரகு குல திலகன்... ராமனை இப்படி அழைப்பது ஏன் ?


புரட்டாசி சனிக்கிழமையன்று, திருமாலின் அவதாரமான ராமரை வணங்குவோரும் உண்டு. ராமனை "ரகு குல திலகன்' என்பர். இந்தப் பெயர் அவருக்கு ஏன் வந்தது என்று தெரிந்து கொண்டு, அவரை வணங்கினால், நம் வழிபாடு இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

வரதந்து மகரிஷியிடம் கவுத்சன் என்ற சீடன் பாடம் கற்க வந்தான். பயிற்சி முடிந்ததும், சீடனை சோதிக்க குரு தேர்வு நடத்தினார். அதில் கவுத்சன் வெற்றி பெற்றான். 

பிறகு, ""குருதேவா! உங்களுக்கு தட்சணை தர விரும்புகிறேன். தங்களின் விருப்பம் அறிய விரும்புகிறேன்,'' என்றான்.

""இத்தனை காலமும் நீ என்னிடம் பணிவுடன் கற்ற விதமே, தட்சணை பெற்ற மன நிறைவைத் தந்தது. எனவே வேறு ஏதும் தேவையில்லை,'' என்றார் வரதந்து. ஆனால், கவுத்சன் விடுவதாக இல்லை.

""தாங்கள் தட்சணை பெற்றுக் கொண்டால் தான், எனக்கு மனநிறைவு உண்டாகும்,'' என உறுதியுடன் தெரிவித்தான். 

"" சரி.... கவுத்சா.... நீ இதுவரை என்னிடம் 14 ஆயிரம் வித்தை கற்றுக் கொண்டாய். வித்தைக்கு ஒரு தங்கக் காசு வீதம் 14 ஆயிரம் பொன் கொடு'' என்றார் வரதந்து.

இதுகேட்டு கவுத்சன் சிறிதும் மனம் கலங்கவில்லை.

""நிச்சயம் நீங்கள் கேட்ட தட்சணையுடன் வருகிறேன் குருநாதா,'' என்று சொல்லிப் புறப்பட்டான். அயோத்தி மன்னர் ரகு பற்றி கவுத்சன் கேள்விப்பட்டிருந்தான். அவரிடம் சென்றால் தானம் பெறலாம் என்ற நம்பிக்கை அவனுக்குள் எழுந்தது. 

அயோத்திக்கு புறப்பட்டான். அவனை மன்னர் ரகு வரவேற்றார். 

ரகு அளித்த அறுசுவை உணவை சாப்பிட்ட கவுத்சன், ""தங்களின் உபசரிப்புக்கு நன்றி'' என்று சொல்லி விட்டு கிளம்பத் தயாரானான். 

""அதிதியாக வந்த தாங்கள், தானம் ஏதும் பெறாமல் செல்லலாமா?'' என்றார் ரகு. 

""அரசரே.... நானும் தங்களிடம் பொருள் பெறும் நோக்கத்துடன் தான் வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகே, தாங்கள் பொன், பொருள் அனைத்தையும் தானம் செய்து விட்டதை அறிய முடிந்தது. எனக்கு உணவளிக்க கூட எளிய மண் பாத்திரங்களையே வைத்திருக்கிறீர்கள். 

என்னுடைய தேவையோ பதினாலாயிரம் பொற்காசுகள். அதைக் கேட்டு உங்களைச் சிரமப்படுத்த விரும்பவில்லை,'' என்றான் கவுத்சன்.

""உங்கள் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுவரை இங்கேயே தங்கியிருங்கள்'' என்றார் ரகு.

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் மீது போர் தொடுத்து, செல்வம் பெற்று வரலாம் என்பது அரசரின் எண்ணம். ஆனால், அப்போது அங்கு ஓடி வந்த அமைச்சர், "" அரசே! நமது பொக்கிஷ அறையில் குபேரன் தங்கமழை பொழிந்து கொண்டிருக்கிறார்,'' என்றார்.

""அப்படியா... மகிழ்ச்சி'' என்றார் ரகு.

உடனே கவுத்சனை அழைத்து, ""உமது விருப்பம் எளிதாக நிறைவேறி விட்டது. குபேரன் மீது போர் தொடுக்க தேவையில்லை. 

அவன் தானாகவே வந்து தங்கமழை கொட்டிக் கொண்டிருக்கிறான். அவை அனைத்தும் உமக்கே சொந்தம்,'' என்றார். 

கவுத்சன்,"" குருதட்சணையான பதினாலாயிரம் பொன் மட்டும் போதும். அதற்கு மேல் வேண்டாம்'' என்றான்.

""அப்படி என்றால், நீங்கள் பெற்றது போக மீதியை தானம் பெற வருவோருக்கே கொடுப்பேன்'' என்றார் ரகு. இப்படி, தனக்கென வைத்துக் கொள்ளாமல், பிறருக்கே அனைத்தையும் கொடுத்து மகிழ்ந்த அரசர் ரகுவின் வம்சத்தில், திருமால் ராமராக பிறந்தார். "ரகு குல திலகன்' என பெயர் பெற்றார்.

கோலாகல வாழ்வருளும் கோட்டை மாரியம்மன்


சேலம்

கொங்கு மண்டலம் மலை வளமும், மண் வளமும், தமிழ் மணமும் கமழ விளங்கிய நாடாக விளங்கியது. சேலம் சேரநாட்டின் ஒரு பகுதியாக திகழ்ந்தது. 500 ஆண்டுகளுக்கு முன்பு சேரநாட்டை சேர்ந்த சிற்றரசர்கள் சேலத்தில் கோட்டை எழுப்பினர். கோட்டையில் தங்கியிருந்த வீரர்கள், அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மனை காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். கால ஓட்டத்தில் அப்பகுதியிலிருந்த கோட்டை இன்று குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டது. கோட்டை இருந்ததற்கான அடையாளமாக கோட்டை மேடு என்ற பகுதி மட்டும் இன்றும் உள்ளது. இங்கே மாரியம்மன் திருமணிமுத்தாறு நதிக்கரையில் எழுந்தருளியுள்ளாள். முன்பு பக்தர்கள் திருமணிமுத்தாற்றில் நீராடி, பின்னர் அம்மனை தரிசனம் செய்து வந்தனர். 

கொங்கு மண்டலத்தில் கோட்டை மாரியம்மன் தனிச்சிறப்புடன் இருந்ததால், சுற்றுப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோட்டை மாரியம்மனை தரிசிக்க நடைப் பயணமாக வந்து சென்றனர். இதற்காக 1876ம் ஆண்டு பழைய கோட்டை பட்டக்காரர் பார்வதியம்மாள், முத்துக்குமார பிள்ளை ஆகியோர் தர்ம சத்திரம் ஒன்றை கட்டிக் கொடுத்தனர். 1881ம் ஆண்டு கோட்டை மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அம்மனின் சிரசில் ஜ்வாலா கிரீடம், அக்னி கிரீட அமைப்பில் நாகம் படம் எடுத்த வண்ணம் உள்ளது. வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தியிருக்கிறாள். 

வலது கீழ்கரத்தில் திரிசூலம் இருக்கிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், இடது கீழ்கரத்தில் கபாலத்துடனும் காட்சி தருகிறாள். இடது காலை மேல் யோகாசனமாய் மடித்து ஈசான திசையை நோக்கி அமைதி வடிவாய் ஆனந்த முகத்துடன் வீற்றிருக்கிறாள். அன்னையின் அடியவர்கள் மாரி (மழை) வேண்டி விழா எடுத்தனர். அன்னையும் மனமுருகி மழை பொழிந்தாள். இதனால் ஆடி முழுவதும் மழை பெய்து 18ம் நாள் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.  கோட்டை மாரியம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

ஆடித்திருவிழா இத்தலத்தின் மிகப்பெரிய விழா ஆகும், இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பூச்சாட்டுதலின்போது சேலத்திலுள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று அந்தக் கோயில்களில் பூச்சாட்டுதல் நடைபெறுகின்றது. இது தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பிரதாயமாகும். இத்திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடைபெறும். பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைப்பு, சக்தி கரகம், உருளுதண்டம், பொங்கலிடுதல், மகா அபிஷேகம் ஆகியவை முக்கிய அம்சங்களாகும். தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும். 

எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி இந்த உலக நாயகியைக் கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நைவேத்தியம் அம்பாளுக்கு முன்னால் படைக்கப்படுவதில்லை; மாறாக எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம். கோயிலில் கருவறை, முன்மண்டபம், பலிபீடம், வெளிப்பிராகார மண்டபம், கிளி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றுடன் மிக உயர்ந்த ராஜகோபுரமும் காட்சி தருகிறது. அம்மன் நோய், கண் நோய் நீங்க, திருமணத்தடை, குடும்ப பிரச்னை தீர பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். கீழ்க்காணும் பல்வேறு வகையான பிரார்த்தனைகள் இத்தலத்தில் நிறைவேற்றப்படுகின்றன:

மண் உரு சாத்துதல்:  அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு கோயிலை மூன்று முறை வலம் வந்து பொம்மைகளை சமர்ப்பிக்கிறார்கள். கண்ணடக்கம் சாத்துதல்: கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக் கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்துவர். உருவாரம் சாத்துதல்: நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதேபோன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பர்.

அடியளந்து கொடுத்தல்: பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை திருக்கோயிலை சுற்றி வருகின்றனர். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர். உப்பு மிளகு போடுதல்: பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின்மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம். இத்தலத்தில் வழிபட்டால் கல்யாண பாக்கியம், குழந்தைப் பேறு கைகூடுகிறது.

பூப்போட்டுப் பார்த்தல்: இது மிகவும் பிரசித்தமானது. குடும்பத்தில் சிக்கல் தீர, திருமணம் நடைபெற, நோய் தீர, உத்யோகம் கிடைக்க… இப்படி தங்கள் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க பக்தர்கள் வெள்ளை, சிவப்பு நிறங்களிலுள்ள பூக்களை தனித்தனி பொட்டலங்களில் கட்டி அம்மன் திருவடிகளில் வைத்து எடுப்பார்கள். தாம் நினைத்த நிறப்பூ வந்து விட்டால் தாம் எண்ணி வந்த செயல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

பணம் எனக்கு பெரிசில்லே


பெருமாளின் பக்தரான துகாராமை தரிசிக்க மன்னர் சிவாஜி விரும்பினார். அரண்மனை பணியாளர்கள் மூலம் பல்லக்கு, குதிரை, யானைகளை அவரின் குடிசைக்கு அனுப்பி வைத்தார். 

பணியாளர்கள், ""சுவாமிஜி! தங்களை தரிசிக்க மன்னர் சிவாஜி விரும்புகிறார். விரும்பிய வாகனத்தில் அரண்மனைக்குப் புறப்பட வசதியாக யானை, குதிரை, பல்லக்கு எல்லாம் இங்கு வந்திருக்கின்றன. எதில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளுங்கள்,'' என்றனர்.

"எனக்கு வாகனம் எதுவும் தேவையில்லை. கடவுள் கொடுத்த கால்கள் போதும். நடந்தே வருகிறேன். ஆனால், இப்போது திருமாலுக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறேன். வர இயலாதே,'' என்றார்.

" தேடி வந்த ராஜ உபசாரத்தை மறுக்கும் இவர் மன்னரின் கோபத்திற்கு ஆளாகப் போகிறார்,'' என நினைத்த பணியாளர்கள், சிவாஜியிடம் போய் விஷயத்தை சொன்னார்கள்.

சிவாஜிக்கு கோபம் வரவில்லை. மாறாக, துகாராமிற்கு காணிக்கை அளிக்க பை நிறைய பொற்காசுடன் குதிரையில் புறப்பட்டார்.

"சுவாமிஜி....தவறுக்கு மன்னியுங்கள். தங்களைத் தரிசிக்க நான் முதலிலேயே வந்திருக்க வேண்டும்,'' என்றார்.

" தவறு செய்தால் தானே மன்னிக்கலாம்,'' என்ற துகாராம் சிவாஜிக்கு ஆசியளித்தார்.

சிவாஜி அவரிடம், ""சுவாமி... இந்த காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என பொற்காசு பையைக் கொடுத்தார். 

"பணத்தாசை என்னும் மாயையில் சிக்கினால் பக்தி பயனில்லாமல் போகுமே'' என்ற துகாராம் அதை ஏற்க மறுத்தார். துகாராமின் நிஜ பக்தியை உணர்ந்த சிவாஜி வியப்பில் ஆழ்ந்தார்.