Sunday, 1 October 2017

வீடு கட்டும் பணி தடையின்றி நடக்க!


"சொந்தமா வீடு கட்டணுங்கற ஆசை யாருக்குத் தான் இல்லை! ஆனால், "ஆனை அசைந்து தின்னும்! வீடு அசையாமல் தின்னும்!' "வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் பண்ணிப்பார்' என்றெல்லாம், வீடு கட்டும் பட்ஜெட் பற்றி அந்தக் காலத்திலேயே சுலவடைகள் சொல்லியிருக்கிறார்களே! எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், கட்டட வேலையைத் தொட்டு விட்டால் பட்ஜெட் இழுத்துக் கொண்டு போவதைத் தவிர்க்க முடியாது."பணம் புரட்ட படாதபாடு பட்டுட்டேன். இந்த வீட்டுவேலை எப்ப தான் முடியுமோ தெரியலை!' என்று வருந்தாத வீடு கட்டுவோரே இல்லை.

இத்தகைய பிரச்னைகள் குறைந்து நல்லபடியாக வீடு கட்டி முடிக்க.. இதோ! ஒரு சிறந்த பரிகாரம் இருக்கிறது. 

திருச்சி மலைக்கோட்டையில் கோயில் கொண்டிருக்கும் தாயுமான சுவாமி குறித்து திருஞானசம்பந்தர் பாடியுள்ள பாடல் ஒன்று உள்ளது. தினமும் காலையில் அதை12 முறை படித்து வாருங்கள். திங்கள்கிழமையில் சிவபெருமானை வில்வஇலையால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். 

அந்தப் பாடல் இதுதான்.

""நன்று உடையானை தீயது இலானை நரை வெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை
சென்று அடையாத திரு உடையானை சிராப்பள்ளிக் 
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே'' 

கட்டிடவேலை முடியும் வரை பாடலைத் தொடருங்கள். நல்லமுறையில் வீடு கட்டுவதோடு, உங்கள் உள்ளம் குளிரும்படி கிரகப்பிரவேசம் நடத்திட சிவனருள் முன்னிற்கும். கிரகப்பிரவேசத்திற்குப் பிறகு மலைக்கோட்டை ஈசனை குடும்பத்துடன் வணங்கி வாருங்கள். 

கட்டிக்காப்பார் காலபைரவர்


வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூர் கிளம்ப பயப்படுவோர் பலர். அதிலும், இந்த கலியுகத்தில் ஆள் இருக்கும்போதே பொருட்களை அபேஸ் செய்து விடுகிறார்கள். நியாயமான வழியில், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருட்கள், நம்மிடமே தங்க அருள்புரிகிறார் காலபைரவர். இவரது வாகனம் நாய்.
வாயில்லா ஜீவனான நாய் நன்றியுணர்வோடு சுற்றி வந்து வீட்டைப் பாதுகாப்பது போல, இவரும் நம் இல்லத்துக்கு பாதுகாப்பாக இருப்பார். தன்னை முழுநம்பிக்கையுடன் அண்டி வந்தவர்களைக் காவல் காப்பதில் காலபைரவர் ஈடுஇணை இல்லாதவர். தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவது சிறந்தது. வழிபாட்டின்போது, எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். திருமஞ்சனப்பொடி, பால், தயிர்,பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகங்களும் செய்யலாம். தயிர்சாதம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வீட்டுக்கு பாதுகாப்பு கிடைக்கும். 

பூத்துக்குலுங்கட்டும் பாசமலர்கள்


 

"தம்பி உடையான் படைக்கஞ்சான்' என்ற வாசகத்தை மெய்ப்படுத்திய பெருமை, ராமனின் சகோதரன் லட்சுமணரையே சேரும், குடும்பத்தில் சகோதர ஒற்றுமை இல்லாவிட்டால், பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாது. அவ்வீட்டில் மீண்டும் மகிழ்ச்சி தழைக்க என்ன செய்வது என்பதைப் பாருங்கள். 

ராமர் பட்டாபிஷேக படம் வாங்கி பூஜையறையில் மாட்டுங்கள். புனர்பூச நட்சத்திரம் அல்லது சனிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி 108 அல்லது 1008 முறை "ராம்' என்றோ அல்லது "ஸ்ரீராம ஜெயம்' என்றோ ஜெபியுங்கள். அருகிலுள்ள ராமர் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி மூன்றுமுறை சந்நிதியை வலம் வாருங்கள். ராமசகோதரர்களின் ஆசியோடு உங்கள் வீட்டிலும் பாசமலர்கள் பூத்துக் குலுங்கும். 

சொக்கச் செய்யும் சோமநாதபுரம்


மாபெரும் சிற்பக்கூடம்
சோமநாதபுரம் கோயிலில் பெரிய பிரகாரமும், மண்டபங்களும் உள்ளன. பிரகலாதன் வரலாறு, ராமாயணம், மகாபாரதச் சிற்பங்கள், தசாவதாரக் காட்சிகள், ஹயக்ரீவர், பிரம்மா, சிவன், கணபதி, மன்மதன், லட்சுமி, சரஸ்வதி, கருடன், இந்திரன் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. யோகநிலையில் இருக்கும் விஷ்ணு சிற்பம் வித்தியாசமானது. 

பத்மாசனத்தில் விஷ்ணு வலக்காலையும், இடக்காலையும் மடித்து அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். முத்திரை காட்டும் வலக்கரத்தை இடக்கரம் தாங்கி நிற்கிறது. விழிகளில் கருணையும், முகத்தில் சாந்தமும் தவழ்கிறது. மேலிரண்டும் விஷ்ணுவிற்குரிய சங்கு, சக்கரத்தை தாங்கி நிற்கின்றன. மொத்தத்தில் இக்கோயில் ஒரு மாபெரும் சிற்பக்கூடமாக விளங்குகிறது.

அரும்பாகி மொட்டாகி பூவாகி


சோமநாதபுரம் கேசவர் கோயிலில் சிற்பவேலைப்பாடு மிக்க நவரங்க மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் மேல்விதானத்தை காண்பவர் மனம் ஆச்சரியப்படும். கூம்பிய நிலையில் இருக்கும் வாழைப்பூவின் அரும்பு, பிஞ்சு, அரும்பு,மொட்டு, மடல் என்று அதன் வளர்ச்சி படிநிலைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சரித்திர ஆய்வாளர்களின் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் விதத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

பெருமாளுக்கு மூன்று கருவறை


மைசூருவுக்கு கிழக்கே 38 கி.மீ., தூரத்தில் உள்ள தலம் சோமநாதபுரம் கேசவர் கோயில். இங்கு கேசவன், ஜனார்த்தனன், வேணு கோபாலனுக்கு தனித்தனி கருவறைகள் உள்ளன. 1269ல் கட்டப்பட்டது. ஹொய்சால மன்னர் 3ம் நரசிம்மரின் மந்திரி சோமநாதர் இக்கோயிலைக் கட்டி, தன் பெயரை ஊருக்கு வைத்தார். ஸ்தபதி ஜக்கன்னாச்சாரி இக்கோயிலைக் கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது. 215 அடி நீளமும் 177 அடி அகலமும் கொண்ட இக்கோயில் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். பார்வையாளர் கட்டணம்ரூ.5. 

நான்கு வாசலிலும் நால்வர்


கோயில் என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும். தரிசிக்க முக்தி தரும் தலமான சிதம்பரத்தில், நடராஜர் மீது, சமயக்குரவர்களாகிய சம்பந்தர், அப்பர் (திருநாவுக்கரசர்), சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகம் பாடியுள்ளனர். இவர்கள் நால்வரும் நான்குகோபுர வாசல்வழியாக வந்து தரிசனம் செய்துள்ளனர். கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும், தெற்கில் ஞானசம்பந்தரும், மேற்கில் அப்பரும், வடக்கு கோபுரம் வழியே சுந்தரரும் கோயிலுக்குள் நுழைந்தனர் என தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள நான்கு ரத வீதிகளிலும் அங்கப்பிரதட்சணம் செய்த பிறகே, அப்பர் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்தார்.