Thursday, 28 December 2017

தானம் - தர்மம் வித்தியாசமானது


தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? 

உயர்ந்தவர்களுக்குக் கொடுப்பது தானம். எளியவர்களுக்கு கொடுப்பது தர்மம். பொதுவாக உதவி புரியும் எண்ணத்துடன் செய்யும் எந்த செயலுக்கும் இரவு, பகல் கிடையாது. அதற்குரிய புண்ணியம் கொடுத்தவருக்கு உடனே கிடைத்து விடும். ஆனால், மனதில் எண்ணியிருக்கும் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் தானத்தை பகலில் தான் செய்ய வேண்டும். ஏனென்றால், அதற்கு சூரியதேவன் சாட்சியாக இருப்பார் என்பது ஐதீகம். சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப்பிறப்பு, வெளியூர் கிளம்பும் நேரம், ஆபத்து காலம்,குழந்தை பிறப்பு, ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு போன்றவற்றின் போது இரவு நேரத்திலும் தானம் செய்யலாம்.

புதன், சுக்கிர பெயர்ச்சிக்கு விழா இல்லையே ஏன் ?

Image result for புதன்

சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என்பன நவக்கிரகங்கள் ஆகும். இக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம்பெயரும் போது வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். சந்திரனை பொறுத்தளவில் இரண்டே கால் நாளுக்கு ஒருமுறையும், புதன், சூரியன், தலா ஒரு மாதமும், சுக்கிரன் ஒன்றரை மாதமும், செவ்வாய் ஒன்று முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டங்களில் இடம்பெயரும். குறைவான காலகட்டத்தில் இக்கிரகங்கள் இடம்பெயர்ந்து விடுவதால் பலனும், பாதிப்பும் குறைவான காலங்களிலே இருக்கும். இதே சுழற்சி அடுத்தடுத்து நிகழ்வதால் இக்கிரகங்களின் இடப்பெயர்ச்சி பெரியளவில் பேசப்படுவதில்லை.

ஆனால் குருவை பொறுத்தளவில் ஓராண்டிலும், ராகுகேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் என ஒரு ராசியில் சஞ்சரிக்க நேரம் எடுத்து கொள்ளும். இந்த வீரிய கிரகங்கள் குறைந்தது ஓராண்டு முதல் 2.5 ஆண்டுகள் வரை ராசிகளில் சஞ்சரிப்பதால் பாதிப்பும், பலனும் அக்காலம் முழுவதும் தொடரும். இதனால் இக்கிரக பெயர்ச்சிகள் விழா போன்று சிறப்பித்து கொண்டாடப்படுகிறது. பாதிப்பு ஏற்படுபவர்கள் நிவர்த்தி பூஜைகளும், பலன் கிடைக்கும் ராசிக்காரர்கள் அதனை முழுமையாக பெறவும் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

குரு ஆண்டுதோறும் இடம்பெயர்வதால் பெரும்பாலான ஆண்டுகளில் குருப்பெயர்ச்சி ஏற்படும். ராகுகேதுவை பொறுத்தளவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால் ஒரு சில ஆண்டுகளில் இதன் பெயர்ச்சி இருக்காது.

கல்யாணத்துக்கு உதவும் குருபகவான் ?

Image result for குருபகவான்

குரு என்ற சொல்லிற்கு அறியாமையை அகற்றுகிறவர் என்று பொருள். ஜோதிட சாஸ்திரத்தின்படி வியாழன் என்றும், பிரகஸ்பதி என்றும் அழைப்பர். தேவர்களின் அரசனாக விளங்கிய காரணத்தால் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிகப்படைத்து கல்வி, கேள்விகளில் சிறந்தவர் என்பதால் பிரகஸ்பதி என்ற திருநாமங்கள் அமைந்தன. நம் உடலிலும், உள்ளத்திலும் இறைவனுடைய சக்தியை பிரதிபலிக்கிறவராகவும், நம்முடைய வழிபாட்டின் மூலமாக இறைசக்தியை நம்மனத்துள் நிரப்புபவராகவும் உள்ளவர் இவர். இதனாலேயே இவரைத் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும் மூலப்பொருளான காரகன் என்பார்கள். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பொருட்செல்வம், இன்னொன்று புத்திர யோகம். இந்த இரண்டிற்கும் காரகன் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குருபகவான். 

அத்துடன் நீர்த்தன்மை வாய்ந்த கிரகம், மறைமிகு நூல்கள், மேதா விலாசம், சாஸ்திர ஞானம், நற்பண்புகள், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, ஐஸ்வர்யம், தங்கம், தனம், புகழ், கீர்த்தி, பக்தி, ஞானம், மந்திர உபதேசம், தானம், தியானம், தர்மம், புத்திரம், நிதி, நீதி, நீதிபதிகள். வக்கீல், மந்திரி மதபோதகர், மதத்தலைவர், மடாதிபதி, ஆன்மிகத்துறவிகள், அறங்காவலர்கள், ஆசான், ஆசிரியர், வழிகாட்டி, விரிவுரையாளர், பேச்சாளர், பள்ளிகள், கல்லூரிகள், தர்மஸ்தாபனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், வேதம், வேதபாட சாலைகள், அன்ன சத்திரங்கள், சாஸ்திர ஆராய்ச்சி, தான் சார்ந்த மதத்தில் அதிகமான பற்று, பூஜை, யாகம், ஆகம சாஸ்திர விஷயங்கள் என பல்வேறு விஷயங்களில் குருவின் ஆதிக்கம் உள்ளது. ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி தத்துவ கோட்பாடுகளை விளக்கி வழிகாட்டுபவர்களை குரு என்று சொல்வார்கள். நமக்குத் தெரியாததைத் தெளிவுபடுத்தி கற்றுத்தருபவர்களை குலகுரு, ஜகத்குரு, ஆசான் என்று அழைக்கின்றோம். குரு இல்லாத வித்தை பாழ் என்று சொல்வார்கள். 

குரு: ஞான வழியை போதிப்பவர், தெளிவை ஏற்படுத்துபவர்.

பரமகுரு: குரு பரம்பரை, குருவிற்கு குருவாக இருப்பவர், மரபுகளை பேணிக்காப்பவர். ஆதிசங்கரர் போன்றவர்கள்.

பராபரகுரு: தத்துவங்கள் தோன்ற காரணகர்த்தாக்கள், மகாகுரு. துவைதம், அத்வைதம்,  விசிஷ்டாத்வைதம் போன்றவற்றை நாம் அறிந்து உணர்ந்துகொள்ள காரணமானவர்கள். இவர்கள்தான் வேதவியாசர் போன்ற மகாரிஷிகள்.

பரமேஷ்டிகுரு: இகபர சுக இன்ப துன்பங்களில் இருந்து நம் கர்ம வினைக்கேற்ப பலாபலன்களை அருளும் மிகமிக உயர்ந்த இறை தூதர்கள், அடியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள். இதன் ஒட்டு மொத்த இறைக்கோலம்தான் சிவனின் தட்சிணாமூர்த்தி அம்சமாகும்.

ஜோதிடத்தில் குருவின் செயல்கள் :

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமான அம்சம், ஆளுமை, காரகத்துவம் உள்ளன. நமக்கு நடைபெறும் பலாபலன்கள் பிறந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையில் அந்தக்காலத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் காரணமாகின்றன. ஒருவருக்கு நன்மை செய்யும் கிரகம் மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்ல யோகத்தை தரும் தசாபுக்தி, மற்றவருக்கு பாதகமான பலனை செய்யும். ஒருவருக்கு நல்ல ராஜயோக வசதி வந்தால் சுக்கிர தசை அடிக்கிறது என்பார்கள். ஒருவர் மிகவும் கஷ்ட நிலையில் இருந்தால் அதற்கு சனி காரணம் என்று வீண்வதந்தி பரப்புவார்கள்.  இந்த வகையில் தேவகுரு என்று சாஸ்திரத்தில் சிறப்பித்து கூறப்பட்டுள்ள முழு சுபகிரகமான குருவிற்கு சுப, அசுப, தோஷ பலன்கள் உண்டு. இவருக்கு மற்ற கிரகங்களைப்போலவே மறைவு ஸ்தானம், நீச்சம், வக்ரம், ஆட்சி, உச்சம் என்று கலவையான அம்சங்கள் உண்டு. 

குரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. அப்படி இல்லாமல் தனித்த குருவாக இருந்தால் அந்த ஸ்தானம் சுகப்படாது என்பது சாஸ்திர விளக்கம் மட்டுமல்ல, அனுபவத்திலும் பொருந்தி வருவது. குரு சில முக்கியமான வீடுகளில் தனியாக இருந்தால் அந்தக் குறிப்பிட்ட ஸ்தானம் பலம் குறைந்துபோகும். 

அந்த வகையில் லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, பத்து போன்ற வீடுகளில் இருக்கும்பொழுது சில விஷயங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளையும், தடுமாற்றங்களையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு ஆதிபத்தியம் வருவதால் அந்தவகையிலும் சில சங்கடங்கள் உருவாகி விடுகின்றது. லக்னத்தில் குரு: குரு லக்னத்தில் இருப்பது பொதுவாக ஜாதகரை மிகப்பெரிய குழப்பவாதியாக்கும். சுயமாக முடிவு எடுக்கமுடியாமல் திணறுவார். கொள்கை, கோட்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார். எடுப்பார் கைப்பிள்ளை என்றும் சொல்லலாம். ஆனாலும் இப்படிப்பட்டவர்களுக்கு குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் படுவதால் பூர்வ புண்ணிய யோக அதிர்ஷ்ட பாக்கியங்கள் கிடைக்கும்.

இரண்டில் குரு: தனம், குடும்பம், வாக்கு, நேத்ரம் என்ற இந்த ஸ்தானத்தில் தனித்த குருவால் பல குறைகள் இருக்கும். சதா வாக்குவாதத்தில் ஈடுபட வைப்பார். பலநேரங்களில் பணத்தட்டுப்பாடுகள் வரலாம், கடன் கொடுத்த பணத்தை வசூலிப்பது மிகவும் சிரமம். பேச்சில் தடுமாற்றம், திக்குவாய் வரலாம். திருப்தியற்ற நிலை, சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். கண் சம்பந்தமான குறைபாடுகள் வரலாம்.

ஐந்தில் குரு: இந்த இடத்தில் தனித்த குரு இருப்பதால் ஜாதகர் ஏதாவது சிந்தனை செய்துகொண்டே இருப்பார். சாஸ்திர மறதி ஏற்படும். குழந்தை பாக்கிய பிரச்னைகள் இருக்கும். புத்திர தோஷம், புத்திர சோகம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை, கொள்கை, தத்துவ, மரபுகளை மீறுவது, சாஸ்திர விரோத மார்க்கம் என இருக்கும்.

இரண்டாம் இடம், ஐந்தாம் இடம் இந்த இரண்டும் தனம், புத்திரம் ஆகிய இரண்டிற்கு ஆதாரமாக உள்ளவை. குருவின் முக்கிய அம்சமே தன, புத்திரகாரகன் என்ற அமைப்பாகும். மேலும் இதை அஸ்திவாரம் என்றும் சொல்லலாம். இந்த இரண்டு இடங்களில் குருவின் தனித்த நிலை ஏதாவது ஒன்றில் இருக்கும்போது மற்ற கிரக யோக பலம் மற்றும் பூர்வ கர்ம புண்ணிய பலம் காரணமாக செல்வம் செழித்து லட்சுமி தாண்டவமாடினாலும் அந்த ஜாதகர் எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத நிலை இருக்கும். குடும்பத்தோடு இருப்பார். ஆனால், பற்றற்ற மனநிலை இருக்கும். இதேபோல் புத்திரஸ்தானத்தில் குரு தனித்து நிற்கும்போது பூர்வ புண்ணிய  சுகிர்த விசேஷத்தினால் புத்திர பாக்கியம் கிடைத்தாலும், எதாவது குறை ஏற்பட்டு விடும். புத்திரர்களால் அவப்பெயர் வரக்கூடும். தக்க சமயத்தில் பிள்ளைகளின் அன்பு, ஆதரவு கிடைக்காது. காசு, பணம், பிள்ளைகள் என்று இருந்தாலும் முதியோர் இல்லத்தில் முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கும். ‘காரகோ பாவ நாஸ்தி’ என்ற ஸ்லோகப்படி தன, புத்திரகாரகன் காரகத்தில் அந்த குறிப்பிட்ட காரகாம்சம் கெட்டு விடுகின்றது.

ஏழில் குரு: லக்னத்திற்கு 7ம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும். சுபகிரக ஆதிக்கம் உள்ள குருவிற்கு இங்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. இந்த இடத்தில் குரு தனித்து இருப்பதால் மணவாழ்க்கை வளர்பிைற, தேய்பிறைபோல் போராட்டமாக அமையும். எதிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருக்கும். புரிந்துகொள்ளுதல் இருவருக்கும் சரியாக வாய்க்காது. குடும்ப உறவில்தான் இப்படி சிக்கல்கள் இருக்கும். ஆனால், வெளிவட்டாரத்தில் ஜாதகருக்கு அந்தஸ்து, கௌரவம், புகழ், செல்வாக்கு எல்லாம் குருவால் கிடைக்கும்.

பத்தில் குரு: லக்னத்திற்கு பத்தாம் இடம் என்பது தசம கேந்திரம். ஆகையால் கேந்திராதிபத்திய தோஷம் காட்டும். வியாபார, தொழில், உத்யோக, ஜீவனஸ்தானத்தில் குரு தனித்து இருக்கும்போது வியாபாரம், தொழிலில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி தொழிலை மாற்றுவார்கள். பல தொழில்கள் செய்தாலும் எதிலும் நிறைவு இருக்காது. தொழில் செய்யும் இடங்களில் வழக்குகள், அரசாங்க குறிக்கீடுகள் இருக்கும். உத்யோக வகையில் பல நிர்ப்பந்தங்கள் இருக்கும். வேண்டா வெறுப்பாக வேலை பார்ப்பார். ஊர் மாற்றம், இலாகா மாற்றம், பதவி உயர்வில் தடங்கல்கள் வரும். இந்தளவிற்கு இடைஞ்சல் தர காரணம் முழுச் சுபகிரகமான குரு தனித்து 10ல் இருப்பதுதான். இதனால்தான் ஜோதிட சாஸ்திர வழிமுறைப்படி பத்தில் பாம்போ அல்லது சூரியனோ இருப்பது சிறப்பு.

குரு சண்டாள யோகம்: ராகுகேது இருவரும் தாம் இருக்கின்ற இடம், பார்க்கின்ற கிரகம், சேருகின்ற கிரகம், சாரபலம் போன்றவை மூலம் பல யோகங்களை, தோஷங்களை தரவல்லவர்கள். சுபகிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. ஆனால் ராகு, கேதுவிற்கு கேந்திர, திரிகோணங்களில் அதிக யோகபலம் உண்டு. ராகுவை, யோககாரகன், போககாரகன் என்று சாஸ்திரம் சிறப்பித்துக் கூறுகிறது. இப்படிப்பட்ட ராகு பவித்திரமான குருவுடன் சேரும்போது எதிர்பாராத விஷயங்கள் கூடிவந்துவிடுகிறது. ஒருவகையில் குருவும் போககாரகனாகும். குரு சண்டாள யோகம் ஒருவருக்கு பரிபூரணமாக பலன் தரும்போது நடக்குமா, நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏங்கித் தவித்த விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறும். 

உயர் பதவிகள், அதிகார மையங்களின் தொடர்புகள், ஒரு காலத்தில் சாதாரண நிலை, இன்று நினைத்துப் பார்க்க முடியாத  மிரள வைக்கும் அசுர வளர்ச்சி, போக இச்சை, வன்முறை, அடக்குமுறை, அடியாள், கட்ட பஞ்சாயத்து, கொடுஞ்செயல்கள், அதிகார துஷ்பிரயோகம் என்று பல்வேறு வகைகளில் கொடிகட்டிப் பறப்பார்கள். அரசியலில் உயர்பதவிகள் தேடிவரும். லட்சுமிதேவியின் அருள் தானாக வந்து தழைக்கும். பொன்னும், பொருளும், முத்து சிவிகையும் கிடைக்கும் என்கிறது புலிப்பாணி பாடல். இந்த காலத்தில் மிக உயர்ந்த  நான்கு சக்கர வாகனம். ராகுவின் மூலம் வரும். செல்வம், யோகம் எல்லாம் நிழலான, மறைவான, சட்டத்திற்கு புறம்பான வகையில்தான் கிடைக்கும் என்பது சாஸ்திர நியதியாகும்.

குரு தர்ம பாக்கிய யோகம் :

ராகுகேது இருவருக்கும் எதிர்மறையான குண இயல்புகள் உண்டு. ராகு மூலம் எது கிடைத்தாலும் அதில் எதிர்மறை நீச்சத்தன்மை இருக்கும். ஆனால், கேது மூலம் ஏற்படுகின்ற அமைப்புகள் சீரும் சிறப்பும் உடையதாக இருக்கும். குருவிற்கும், கேதுவிற்கும் ஜோதிட அமைப்புகளில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குரு, தவம், ஞானம், மந்திர சித்தி, மகான்கள், நீதி, மதம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டவர். கேது, ஞானம், மதம், குருஸ்தானம், மருத்துவம், ஞான மோட்சகாரகன் என்ற அமைப்பைப் பெற்றவர். குருவும்கேதுவும் சம்பந்தப்படுவது நல்ல அமைப்பாகும். குரு கேதுசாரம், கேதுவுடன் சேர்க்கை, சார பரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், பார்வை என்று எந்த வகையிலாவது சம்பந்தம் ஏற்பட்டால் மதம், மதக்கோட்பாடு, இறைசக்தி, வேதாந்த ஞானம், கௌரவம், செல்வாக்கு, தலைமைப்பதவி, சாதனை படைப்பது, நல்லோர் சேர்க்கை நாடாளும் யோகம் என ராஜயோக பலன்கள் ஏற்படும்.

குருவுடன், கேது சேர்க்கை பெற்று, அந்த குருவிற்கும், கேதுவிற்கும் ஒன்பதாவது வீட்டில் புதனும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அல்லது இருவரில் ஒருவராவது இருக்க வேண்டும். இத்தகைய அமைப்புள்ள ஜாதகம் எந்த வகையிலாவது கோடீஸ்வர ராஜயோகத்தை அனுபவிக்கும். ஜாதகத்தில் எந்த வகையிலாவது குருகேது சம்பந்தப்பட்டு இந்த இருவரின் தசா, புக்தி காலங்களில் அவரவர் கர்ம பூர்வ புண்ணிய சுகிர்த விசேஷத்திற்கேற்ப குபேர சம்பத்தை ஜாதகர் அனுபவிப்பார். ஆன்மிக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார். மத போதகர், மதப்பிரசாரகர் மற்றும் கதை, காலட்சேபம், சொற்பொழிவு போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். மகான்களின் ஆசி பெறுவர். 

மடாதிபதி, அறநிலையத்துறை, கோயில் தக்கார், அறங்காவலர்கள் போன்ற பதவிகள் கிட்டும். கோயில் கட்டுதல், புனரமைத்தல், குளம் வெட்டுதல், கும்பாபிஷேகம் போன்றவற்றை முன்நின்று நடத்தும் பேறு பெறுவர். பெரிய தர்மஸ்தாபனம், கட்டளைகள் அறச்செயல்கள், கல்விச்சாலைகள், வேத பாடசாலைகள், நிதிநிறுவனங்கள் அமைக்கும் பாக்கியம் கிடைக்கும். ஜோதிடம், சாஸ்திர ஆராய்ச்சி, இஷ்ட தெய்வ உபாசனை. குறி சொல்லுதல் போன்றவற்றில் தேர்ச்சியும், ஞானமும் கிடைக்கும். இயல், இசை, நாடகம், நடனம், நாட்டியம், சங்கீதம், பாட்டு ஆகியவற்றில் சிறப்படைவர்.

வியாழ வட்டம் :

ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும், குருவளையம் என்றும் அழைக்கப்படுகின்றன. நம் ஆட்காட்டி விரல்  குருவிரல் என்றும் அந்த விரலுக்கு கீழே உள்ள மேடு குரு மேடு என்றும் அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன ராசிகளில் குரு இருக்கப் பிறந்தவர்களுக்கு, குருமேட்டைச் சுற்றி மோதிரம் போன்ற வளையம் தோன்றும். இதற்கு குருவளையம் (சாலமன் ரிங்) என்று பெயர். இத்தகைய அமைப்புள்ள ஜாதகர்கள் மரியாதையும், மாண்புகழும் உடையவர்களாக இருப்பார்கள். நாட்டின் உயர் அந்தஸ்துள்ள பதவிகளில் அமருவர். நிதி, நீதித்துறைகளில் இவர்களின் பங்களிப்பு இருக்கும். வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கப்பட இடமுண்டு. சமூகத்தில் இவர்களின் சொல்லிற்கும், பேச்சிற்கும், எழுத்திற்கும் மதிப்பு இருக்கும்.

வெளிநாட்டு சம்பந்தம் :

ஜலராசி அமைப்பு என்பது முக்கியமானதாகும். இதில் குருவின் பங்கு மிகவும் முக்கியமானதும், இன்றியமையாததுமாகும். காரணம் கடகம் என்ற ஜலராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜலராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜலராசியில் குரு நீச்சம் அடைகிறார். இதில் கடகம், மீனம் ஆகிய இரண்டு ராசிகளிலும் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், பூரட்டாதி அமைகின்றன. மேலே சொன்ன ராசிகளில் குரு இருப்பது அல்லது பார்வை, சம்பந்தம் கொண்டு பிறக்கும் ஜாதகர்கள் வெளிநாட்டில் நிரந்தரமாகத்  தங்குவதற்கான பாக்கியம் இருக்கும். அடிக்கடி கடல்கடந்து சென்று வருவார்கள். தொழில்ஸ்தான அமைப்பு சம்பந்தப்படும்போது ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் கைகொடுக்கும். தண்ணீர் சம்பந்தமான, மீள்வளத்துறை மற்றும் கப்பல், வாணிபம் கூடிவரும்.

சந்திராதி யோகங்கள் :

கிரக சேர்க்கை, பார்வை மூலம் பலவகையான யோகங்கள் உண்டாகின்றன. குரு சம்பந்தமாக பல்வேறு யோக அம்சங்கள் நிறைய உள்ளன. யோகங்கள் பெரும்பாலும் லக்னம், சந்திரனை வைத்து செயல்படுகிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருப்பது கஜகேசரி யோகம், குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கஜகேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு உண்டு. குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும் குருசந்திர யோகம் உண்டாகிறது இதனால் நிறைய உயர்வுகள் இருந்தாலும் மனக்குறை இருந்துகொண்டே இருக்கும். பெரும்பான்மையானவர்களுக்குப் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.

பூலோகத்தில் பிரவேசிக்கும் பித்ருக்கள் ?

Image result for பித்ருக்கள்

ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடியில் ருத்ரபாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கு மஹாளயபட்ச தர்ப்பணம் செய்து முன்னோர்கள் அருள்பெறுவோர் ஆயிரக்கணக்கில் உண்டு. திருப்பூவனம் பூவனநாதர் ஆலயத்தில் சூரியனால் உண்டாக்கப்பட்ட மணிகன்னிகை தீர்த்தக் கரையில் மஹாளயபட்ச தினத்தன்று தர்ப்பணாதி காரியங்களை புரிபவர்கள் முன்னோர்களின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள்.

விருத்த காசி எனப்படும் விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகேயே ஓடும் மணிமுத்தாறு நதி தீரத்திலும் நீத்தார் கடனை மக்கள் நிறைவேற்றுகிறார்கள்.

திருச்சியில் ரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால் அபரிமிதமான பலன்கள் கிட்டும்.

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், கூடுதுறையில், பக்தர்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுத்து மங்கலங்கள் பெறுகின்றனர். திருவையாற்றுப் படித்துறையில் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்தால் தீவினைகள் அகன்று நன்மைகள் கிட்டும். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தர்ப்பணம் செய்து கரையில், ஆலமரத்தடியில் தான தர்மங்கள் செய்தால் நன்மைகள் சூழும். கங்கை நதி ஓடும் காசியில், தர்ப்பணாதி பூஜைகள் செய்வதை சாஸ்திரங்கள் சிறப்பிக்கின்றன. காசியின் அருகே உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில் தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்கள் வந்து சேரும்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலய திருக்குளத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றுமே முன்னோர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவர். மஹாளய அமாவாசை அன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குழுமுவார்கள். கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள திலதைப்பதியில் தர்ப்பணம் செய்து வழிபட முன்னோர்கள் ஆசி கிட்டும். ராமபிரான் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில் முன்னோர்களை வழிபட, அவர்கள்  வம்சம் தழைக்கும். சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின் பகுதியில் பக்தர்கள் தம் முன்னோர் கடன்களை செய்து புண்ணியம் பெறுகின்றனர். கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் அங்குள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அத்தல குளக்கரையில் முன்னோர் கடன் தீர்த்து அருள் பெறுபவர்கள் ஏராளம்.

வேதாரண்யத்தில் ஆதிசேது எனும் கோடியக்கரை தீர்த்தக்கரையில் மூழ்கி திதி கொடுத்து பக்தர்கள் வாழ்வில் வளம் பெறுகிறார்கள். ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கையில்  நீத்தார் கடனை நிறைவேற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும். காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில், ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றினார். அங்கு, திதி நிறைவேற்றினால் முன்னோர் ஆசியுடன், திருமாலின் திருவருளும் கிட்டும்.

அளகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலில் நவகிரக சந்நதியில் சூரியனும் சந்திரனும் எதிரெதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மஹாளயபட்சத்தன்று அங்கு நீத்தார் கடனை நிறைவேற்றும் பக்தர்கள் அனேகம். திருச்சி, பூவாளூர் திருமூலநாதர் ஆலயத்திற்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளயபட்ச தர்ப்பணம் செய்தால் திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் ஆசி கிட்டும்.

Wednesday, 27 December 2017

தோஷங்கள் நீக்கும் நள தீர்த்தம்

Image result for நள தீர்த்தம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம். இங்கே நளதீர்த்தத்தில் நீராடி சனீசுவரை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார். விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது  புராண வரலாறு. 

நளன்குளம் வரலாறு : 

பிரமாண்டமான அரண்மனை கொலு மண்டபத்திலே தமயந்தியின் சுயம்வரத் திருமணம் நடந்தேறியது. நள மகராஜனை மணந்து கொண்ட தமயந்தி, மனமகிழ்ச்சியுடன் நளனுடன் கைகோர்த்துக்கொண்டு மணமாலை சகிதமாய் மணிமண்டபத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். தமயந்தியின்  சுயம்வரம் திருவிழாவில் தானும் பங்கேற்று தமயந்தியை அடைய வேண்டும் என்ற ஆவலோடு எதிரே சற்று தொலைவில் சனீஸ்வர பகவான் வந்து கொண்டிருந்தார்.  

சனீஸ்வரனின் ஒரு கால் ஊனமாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுயம்வரத்துக்கு வரமுடியாமல் போனது. இப்போது சுயம்வரம் முடிந்து நளனும், தமயந்தியும் எதிரே வருவதை கண்டார். தமயந்தி தமக்கு கிடைக்காமல் போனதால் வேதனையும், கோபமும் கொண்டு அப்படியே நின்றுவிட்டார். நளனும் தமயந்தியும் பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தமாக சிரித்தபடி சனீஸ்வரனை கண்டும் காணாமலும் சென்றனர். சனிபகவானுக்கு அவர்கள் இருவரையும் ஆட்டிப்படைக்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. இறைவனை பூஜிப்பதற்காக பாதத்தில் தண்ணீர் ஊற்றி கழுவ முனைந்த நளன், சரிவரக்கழுவாமல் பூஜைக்கு சென்றமர்ந்தான். இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த சனிபகவான், நளனின் இடது கால் பாதத்தை பற்றிக்கொண்டான்.  

சனியின் தோஷத்திற்கு ஆளான நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். நாரத மகரிஷி அறிவுரையின்படி சனிப்பிரீத்தி செய்ய தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல மகான்களை தரிசித்தும், புண்ணிய நதிகளில் நீராடியும் அவனது மனக்கலக்கம் தீரவில்லை. இறுதியில் பரத்வாஜ முனிவரை சந்தித்து தன் மனக்கலக்கம் தீர வழிகேட்டான். அவரும், திருநள்ளாறு சென்று வழிபடுமாறு கூறினார். நளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு குடும்பத்துடன் வந்து அங்குள்ள குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசித்து கருமை நிற வஸ்திரம் சாற்றி, எள் அன்னம் நிவேதனம் செய்து, எள் விளக்கேற்றி தம் பிழையை பொறுத்தருளவும், நல்வாழ்வு கிட்டவும் வேண்டிக்கொண்டான்.   

சனிபகவான் தனக்கு காட்சி கொடுத்து பேரருள் வழங்கியதால் நளமகராஜனின் ஏழரை சனியின் கொடுமை, துன்பங்களும் நீங்கியதாம். நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நளதீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை  உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.

கோயிலின் தீர்த்தமே அக்னி தீர்த்தம் ?

Image result for அக்னீஸ்வரர்

மதுரை மாவட்டம் தேவன்குறிச்சி, டி.கல்லுப்பட்டி எனும் தலத்தில் அக்னீஸ்வரராக ஈசன் அருள்பாலிக்கிறார். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கஞ்சனூர் எனும் பிரசித்தி பெற்ற சுக்கிரன் தலத்தில் அக்னீஸ்வரரே மூலவராக அருளாட்சி நடத்துகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள நல்லாடை எனும் தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் அருள்கிறார்; அம்பாள் சுந்தரநாயகி எனும் திருநாமத்தோடு அபயம் அளிக்கிறாள். இங்கு அக்னி சொரூபமாக இருப்பதால் அதை தணிக்கும் வகையில் அருகேயே தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டிருப்பது சிறப்பாகும். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மூலவராகவே அக்னீஸ்வரர் அருள்கிறார்.

கோயிலின் தீர்த்தமே அக்னி தீர்த்தம்தான். திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு அருகேயுள்ள எட்டரை கிராமத்தில் அக்னீஸ்வரர் அருள்கிறார். திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் அக்னித்தலமாக கருதப்படுகிறது. அதேபோல ராஜவல்லிபுரம் எனும் தலத்தில் அக்னீஸ்வரர் மூலவராக ஆருள்பாலிக்கிறார். அக்னி பகவான் சிவபெருமானை பூசித்த திருத்தலங்கள் ஏழு ஆகும். அவை திருப்புகலூர், கஞ்சனூர், அன்னியூர், திருத்துறைப்பூண்டிக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காடு, கோட்டூர், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணத்திற்கு அருகேயுள்ள முழையூர் ஆகும். முழையூர் ஈசனுக்கு வன்னீஸ்வரர் என்பது பெயராகும். ‘வன்னிக்குடி முழையூர்’ என்றே இவ்வூர் அழைக்கப்பட்டிருந்திருக்கிறது. 

கரூருக்கு அருகேயுள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயே அக்னீஸ்வரர் எனும் திருப்பெயரில் கோயில் அமைந்துள்ளது. ஈசனின் நெற்றிக் கண்ணை உலைக்கண் என்பார்கள். உலை என்பது கனன்று நெருப்புப் பொறியோடு காணப்படுவதாகும். மாமல்லபுரத்தில் பழைய கலங்கரை விளக்கம் என்ற பெயரில் இருப்பது உலைக்கண்ணீஸ்வரருக்கு கட்டப்பட்ட கோயிலாகும். கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு பிரம்மா-விஷ்ணுக்கிடையே ஏற்பட்ட போட்டியால் ஈசனே நெருப்பு ஸ்தம்பமாய் நின்ற நிகழ்வையே விளக்குகிறது. 

அந்த பெருந்தீயையே நாம் புறத்திலே எரியவிட்டு அகத்திலும் எரிய வேண்டுமென பிரார்த்திக்கிறோம். இதுதவிர அக்னியை கரத்தில் ஏந்தி (அக்னி சட்டி) வருதல், நெருப்பு மிதித்தல், அக்னிக் காவடி என்று பல்வேறு சடங்குகளினூடாகவும் அக்னி வழிபாட்டை நாம் மேற்கொண்டு வருகிறோம். அந்தணர்கள் மூன்று சந்நதிகளிலும் ‘செந்தீ வேட்டல்’ எனப்படும் ஆஹிதாக்னியை வழிபட்டு அக்னி ஹோத்ரம் செய்வர். ஈசன் இவர்களின் வேள்விக் குண்டத்தில் முத்தீயின் வடிவமாக விளங்குகிறார். அக்னி காலையில் பாலகனாகவும், முற்பகலும் பிற்பகலும் சந்திக்கும் வேளையில் யௌவனாக்னியாகவும், இரவு தொடங்கும் அந்திப் பொழுதில் விருத்தாக்னியாகவும் வழிபடப்படுகிறார். வேதங்கள் அந்தணர்கள் வேட்பித்து வணங்கும் தீயை தட்சிணாக்னி, காருகபத்யம், ஆஹவனீயம் என்று வகைப்படுத்தி வேள்வி செய்து வணங்குகின்றார்கள். அக்னீஸ்வரராக இருந்து இறைவன் அருள்பாலிப்பதுபோல அக்னி தீர்த்தமாகவும் பல்வேறு தலங்களில் அமைந்திருக்கின்றன. திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கே அமைந்துள்ளது திருவெண்காடு, ராமேஸ்வரம், கீழ்வேளூர், கூவம் ஆகிய தலங்களிலும் அருள்பாலிக்கின்றார்.

மார்கழி மாதம் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ?

Image result for guru god

தனம், புத்திரம் ஆகிய இரண்டிற்கும் முக்கிய அதிகாரம் பெற்றிருக்கும் குருவின் சொந்த வீட்டில் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதத்தை மார்கழி மாதம் என்று அழைக்கின்றோம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மனோபலமும், ஆன்ம பலமும் நிரம்பப் பெற்றவர்கள். எதையும் வேகமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அரசியல், ஆன்மிகம், தத்துவம் போன்ற பல துறைகளில் பொறுப்புள்ள பதவிகளில் திறமையாக செயல்படுபவர்களுக்கு கல்வி அறிவும், அரிய பல நூல்களை கற்பதில் அதிக ஆர்வமும் இருக்கும். இவர்களில் பலர் பல மொழிகளில் பாண்டித்யம் பெற்று இருப்பார்கள். வெளிவிஷயங்களையும், பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் உடனே கிரகிக்கும் சக்தி உடையவர்கள். எந்த விஷயத்தை பற்றி விவாதிப்பது என்றாலும் அதைப்பற்றி உடன் படித்து தெரிந்து கொண்டு புள்ளி விவரங்களுடன் பேசுவார்கள். 

நுனிப்புல் மேய்வது இவர்களுக்குப் பிடிக்காது. பிடிவாத குணமும், முன்கோபமும் இருக்கும். அதே நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்வார்கள். நியாயத்திற்கும், நேர்மைக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். இவர்களிடம் ஒளிவு மறைவு இருக்காது. இதனால் பலரின் எதிர்ப்பை இவர்களே தேடிக்கொள்வார்கள். எந்த ஒரு வேலை அல்லது பொறுப்பை இவரை நம்பி, இவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்தால் அதை செவ்வனே செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். பருவ வயதில் உள்ள ஆண்கள், பெண்கள் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பில் வளர்வது மிகவும் அவசியமாகும். கூடா நட்பு கேடாய் விளையும் என்பதற்கேற்ப சிறு வயதில் தகாத சேர்க்கையால் சில இடையூறுகள் வரவாய்ப்புள்ளது. தீய பழக்கவழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றும். எதிலும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக்கூடியவர்கள் என்பதால் பிரச்னைகளை இவர்களே வலிய சென்று வரவழைத்துக்கொள்வார்கள். பின்பு அதற்காக மிகவும் வருந்துவார்கள். 

போட்டி, பந்தயங்களில் கலந்துகொள்வது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அறிவுத்திறன் போட்டிகள், படம் வரைவது கலைகளில் ஆர்வம் செலுத்துவது இயற்கையிலேயே அமைந்து இருக்கும். ஓட்டப்பந்தயம், தடகள விளையாட்டு, உடற்பயிற்சி, பளுதூக்குதல், நீச்சல், கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களில் அதிக ஆர்வமும் எளிதாக அதில் உள்ள நுணுக்கங்களை கிரகித்துக்கொள்ளும் ஆற்றலும் மிக்கவர்கள். லக்கினம், லக்கினாதிபதி, குரு, புதன் ஆகியவை நல்ல அம்சத்தில் இருக்கப் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் வெற்றியாளர்களாகத் திகழ்வதற்கு யோகம் உண்டு. சாஸ்திர சம்பிரதாய ஒழுக்கம், ஞானம், சமூக நலன், பொதுநலனிலும் அக்கரை உடையவர்களாக இருப்பார்கள்.

தனம்  குடும்பம்  வாக்கு :

இவர்கள் குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அடிக்கடி இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, பிடிவாத குணம் தலை தூக்கும். இவர்களின் குற்றங்களை மிக சாமர்த்தியமாக மறைப்பார்கள். மற்றவர்களின் குற்றங்குறைகளை தேடிக் கண்டுபிடித்து சுட்டிக்காட்ட தயங்க மாட்டார்கள். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு வார்த்தைகளை அள்ளிக்கொட்டிவிட்டு பின்பு வருத்தப்படுவார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கறாராக இருந்தாலும், நெளிவு, சுழிவு பார்த்து நடந்துகொள்வார்கள். சேமிப்பில் இவர்கள் அதிக கவனமாக இருப்பார்கள். குரு, சனி, செவ்வாய் சாதகமாக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு பல வகைகளில் வருமானம் வரும். தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது இவர்களுக்கு லாபத்தை தரும். நல்ல விஷயங்களை பேசி முடிப்பதற்கும், மத்தியஸ்தம், தூது செல்வதற்கும் மிகவும் ஏற்றவர்கள். சுய தேவைக்கும், ஆசைக்கும் பணம் செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.

திட  தைரிய  வீரியம் :

தைரியமாகவும், விவேகமாகவும், வேகமாகவும் காரியம் சாதிப்பதில் இவர்களுக்கு இணை இவர்களே, பேச்சில் ஒளிவு, மறைவு இருக்காது. தற்புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். அதே நேரத்தில் பிறரை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் கை தேர்ந்தவர்கள். வெளி விஷயங்கள், மனக்குழப்பங்களை பிறர் மீது காட்ட மாட்டார்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும் அைத சரியாக முடித்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். சனி, புதன் பலமாக அமையப் பெற்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கால நேரத்தை விரயம் செய்யாமல் குறித்த நேரத்தில் எதுவும் நடக்க வேண்டும் என்று திடமாக செயல்படுவார்கள். மறைமுக, நேர்முக எதிர்ப்புக்கள் இவர்களுக்கு இருக்கும். இருந்தாலும் எதை எதை எப்படி கையாள வேண்டுமோ அப்படி செயல்பட்டு வெற்றியடைவார்கள்.

சொத்து  சுகம் :

தனபுத்திரகாரகன் குருவின் அமைப்பு நல்ல யோக அம்சத்தில் இருந்தால் படிப்பறிவும் அனுபவ அறிவும் கை கொடுக்கும். தாய்வழி மூலம் சொத்து சேருவதற்கு அதிக வாய்ப்புண்டு. பூர்வீகச் சொத்துக்கள் இவர்களுக்கு உரிய காலத்தில் பலன் தரும். செவ்வாய் சாதகமாக இருந்தால் பூமி லாபம் உண்டு. எஸ்டேட், தோட்டம், தோப்பு போன்றவைகள் இவர்களுக்கு எளிதாக அமையும். கட்டிடங்கள், பிளாட்டுக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். சிந்தனா சக்திமிகுந்தவர்கள், எப்பொழுதும் எதையாவது கணக்குப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். மூளைக்கு அதிக உழைப்பைத் தருவதால் அடிக்கடி கழுத்துவலி, ஒற்றைத் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, பார்வை கோளாறுகள் ஏற்படும். ஜீரண கோளாறுகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. ஆகையால் கண்ட நேரங்களில் இவர்கள் கண்டதை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ரத்த சம்பந்தமான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக மஞ்சள் காமாலை போன்றவற்றில் கவனமாக இருப்பது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி சரிபார்த்துக் கொள்வது நல்லது.

பூர்வ புண்ணியம்  குழந்தைகள் :

இவர்கள் கைராசி, வாக்குபலிதம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களால் தொடங்கி வைக்கப்படும் நல்ல விஷயங்கள் மளமளவென பல்கிப் பெருகும். இவர்களுக்கு E.S.P. என்று சொல்லக்கூடிய காலத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் இருக்கும். உள்ளுணர்வு அதிகம் இருக்கும். ஒருவரின் எண்ண ஓட்டத்தை சில நிமிடங்களிலேயே தெரிந்து கொள்வார்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். மந்திர, தந்திர, சாஸ்திர விஷயங்கள் மற்றும் தியானப் பயிற்சி இவர்களுக்கு சித்தியாகும். திருப்புகழ், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களில் உள்ள பாடல்களை அதன் பொருள் உணர்ந்து  ஓதி மனதை செம்மைப்படுத்தும் வழிமுறைகள் இவர்களுக்கு கைகூடும். சிவன், விநாயகர், முருகர் வழிபாடு இவர்களுக்கு நல்ல பலனைத் தரும். மகான்களின் சமாதிகளுக்குச் சென்று தரிசனம் செய்வதால் ஆன்ம பலம், லயம் கிட்டும். செவ்வாய், வியாழன் மற்றும் அமாவாசை நாட்களில் விரத வழிபாடு மேற்கொண்டால் நல்ல ஞான யோகம் சித்திக்கும். குழந்தைகள், பேரப்பிள்ளைகள் மூலம் பெருமை அடைவார்கள். சகோதர உறவுகளும் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

ருணம்  ரோகம்  சத்ரு :

இவர்களின் குணாதிசயங்கள் அடிக்கடி மாறுவதால் மறைமுக, நேர்முக எதிர்ப்புக்கள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் இவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சனி சாதகமாக அமைந்தால் பெரிய அளவில் கடன் பிரச்னைகள் வராது. இவர்களின் எதையும் சமாளிக்கும் திறமை காரணமாக எதிலும் அகலக்கால் வைத்து சிக்கிக்கொள்ள மாட்டார்கள். ரத்த சொந்தங்கள் மூலம் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. ஆனால் அக்கம், பக்கம் உள்ளவர்கள், தொழில் போட்டியாளர்கள் மூலம் சில வருத்தங்கள், சங்கடங்கள் வந்து தீரும். பெண்கள் மூலம் சில பிரச்னைகள், வம்பு வழக்குகள், சர்ச்சைகள் வருவதற்கு இடம் உண்டு.

பயணங்கள்  மனைவி  கூட்டாளிகள் :

பயணங்களில் அதிக ஆர்வமும் நாட்டமும் உடையவர்களாக இருப்பார்கள். சிறுவயதில் நண்பர்களுடன் உல்லாசப் பயணங்கள் செல்வது மிகவும் பிடிக்கும். மலை, அருவி, எழில் தோற்றங்களை கண்டு ரசிப்பார்கள். அழகை ஆராதிப்பவர்கள். பயண அனுபவங்களை ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். கப்பல் மற்றும் விமான பயணங்களில் அலாதி பிரியம் இருக்கும். நண்பர்கள், தொழில், வியாபார கூட்டாளிகளுடன் இவர்களுக்கு நல் உறவு இருக்கும். இவர்களின் விடாப்பிடியான குணநலன்களை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள். மனைவி வகையில் நல்ல யோக, போக, பாக்கியத்தை அடையக்கூடியவர்கள். பொதுவாக திருமணத்திற்கு பிறகுதான் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமையும். சுக்கிரன் சாதகமாக அமைந்தால் இருவருக்கும் இல்லறம் இனிக்கும். சில நேரங்களில் இவர்களின் பிடிவாத குணம் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்துபோகும். கிரக தசா புக்திகள் சாதகமாக இல்லாமல் இருப்பார்கள். சிறிது காலம் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகளும் வரும்.

தசமஸ்தானம்  தொழில் :

வேலைவாய்ப்பு, தொழில் வியாபாரம் போன்ற அமைப்புக்களில் இவர்கள் தனியார், அரசுத்துறையில் பெரிய பதவிகளில் அமரும் யோகம் உடையவர்கள். சமயோசித புத்தி, அறிவு, அனுபவ ஞானம் இவர்களுக்கு பெருமளவு கைகொடுக்கும். அரசாங்க நிர்வாக பதவிகளில் பணிபுரியும் அமைப்பு உண்டு. குரு, சனி, புதன் சாதகமாக அமையப்பெற்ற ஜாதகர்கள் நிதி, நீதித்துறையில் பணிபுரிபவர்கள் திறமை வாய்ந்த வக்கீல்களாக விளங்குவார்கள். சமய நெறி போதகர்களாகவும், சாஸ்திர, விஞ்ஞான ஆராய்ச்சி நிபுணராகவும், பேராசிரியர்களாகவும், வணிகவியல், கணக்கு, அக்கவுன்டன்சி, ஆடிட்டர்களாகவும் இருப்பார்கள். மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இன்ஜினீயர்களாக உருவாவதற்கு இடம் உண்டு. பத்திரிக்கை சம்பந்தமான தொழில் அச்சகத்தொழில், பதிப்பகம், புத்தக வணிகம் போன்றவற்றில் நல்ல நிலையை அடைவார்கள். இயல், இசை, நாடகம் திரைப்படம் சம்பந்தமான கலைத்துறை அது சார்ந்த உபதொழில்கள் இவர்களுக்கு அமையும். கார், லாரி, பஸ் போன்ற வாகனம் சம்பந்தமான டூரிஸ்ட் தொழில்கள் கைகொடுக்கும். நிலம் சம்பந்தமான ரியல் எஸ்டேட், அடுக்குமாடி கட்டி விற்பது, கமிஷன், புரோக்கர், கான்ட்ராக்ட் தொழில்கள் மூலம் பெரும் தனமும், புகழும் பெரும் அமைப்பும் இவர்களுக்கு கிடைக்கும்.