Monday, 1 January 2018

மரத்துக்குப் பேரு மஞ்சுளா

Image result for குருவாயூரப்பன்

குருவாயூரப்பன் கோயிலில் உள்ள அரசமரத்தை "மஞ்சுள விருட்சம்' என்கிறார்கள். "விருட்சம்' என்றால் "மரம்'. மஞ்சுளா என்ற கிருஷ்ணபக்தை தினமும் குருவாயூரப்பனுக்கு மகிழமலர் மாலை சாத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒருநாள், மாலையில் அவள் வர தாமதமாகி விட்டது. நடை சாத்தி விட்டனர். இதற்காக அவள் வருந்தி நின்ற போது, கோயில் வாசலில் இருந்த பூந்தானம் என்ற பாகவதர், அருகிலுள்ள அரசமரத்திற்கு அந்த மாலையை அணிவிக்கும்படி ஆலோசனை சொன்னார். அதன்படியே செய்தாள் மஞ்சுளா. மறுநாள் நம்பூதிரி அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்திற்காக கோயிலைத் திறந்தபோது குருவாயூரப்பன் கழுத்தில் மகிழமலர் மாலை கிடந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதன்பின் அவருக்கு முதல்நாள் நடந்த சம்பவம் தெரிய வந்தது. அந்த அரசமரத்தையே பக்தையின் பெயரால் "மஞ்சுளா விருட்சம்' என அழைக்கின்றனர். இப்போது அரசமரத்தடியில், கலைநயம் மிக்க கருடன் சிற்பம் இருக்கிறது.

கோவிந்தனுக்கு எத்தனை பெயர் ?


கோவிந்த நாமம் கிருஷ்ணருக்கு உரியது. இதற்கு "பசுக்களைக் காத்தவன்' என்பது பொருள். தசாவதாரத்தையும் இந்த கோவிந்த நாமம் குறிக்கும். வேதங்களைக் காத்தவன் என்னும் பொருளில் மச்ச அவதாரத்தையும், மலையைத் தாங்கி நின்றவன் என்னும் பொருளில் கூர்ம அவதாரத்தையும், பூமிதேவியைக் காத்தவன் என்பதால் வராகரையும், கோபம் தணிவதற்காக வணங்கப்பட்டவன் என்பதால் நரசிம்மரையும், பூமியை அளந்தவன் என்பதால் வாமனரையும், உலகம் முழுவதும் சுற்றியவன் என்னும் பொருளில் பரசுராமனைக் குறிக்கும். அஸ்திரம் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவன் என்னும் பொருளில் ராமனையும், யமுனை நதியை உழுதவன் என்னும் பொருளில் பலராம அவதாரத்தையும், உலகைக் காப்பவன் என்னும் பொருளில் கல்கி அவதாரத்தையும் குறிக்கும். அதனால் இந்த கோவிந்த நாமம் விசேஷமானதாக கருதப்படுகிறது. 

அனுமதி அளிக்கும் நந்தி

Related image

சிவன் சந்நிதிக்கு எதிரில் நந்திதேவர் வீற்றிருப்பார். இவரை பிரதோஷ நேரத்தில் அபிஷேகத்தின் போது தரிசிப்பது சிறப்பு. கோயிலில் சிவனை தரிசிக்கச் செல்லும் போதெல்லாம், இவரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்பது நியதி. இதற்காக தனி ஸ்லோகம் ஒன்றும் உண்டு.

"நந்திகேச மஹாபாக
சிவ தியான பராயண!
உமா சங்கர ஸேவார்த்தம்
அனுக்ஞாம் தாதுமர்ஹஸி!!

"நந்தீஸ்வரரே! எப்போதும் சிவ தியானத்தில் ஈடுபடுபவரே! நான் இப்போது கோயிலுக்குள் சென்று உமாதேவியோடு வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்கப் போகிறேன். அதற்கு நீங்கள் இப்போது அனுமதி அளிக்க வேண்டும்'' என்பது இதன் பொருள். 

குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்


எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு நேர்கின்றதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன். தீயோர்களைத் தண்டித்து, நல்லோர்களைக் காப்பேன்'' - இது கீதைநாயகன் கண்ணன் வாக்கு. "தெய்வம் மனித வடிவில் வரும்' என்று சொல்வார்கள் பெரியவர்கள். அந்த வாக்குகளை மெய்ப்பிக்கும் சம்பவத்தைக் கேளுங்கள்.

எந்த நேரமும் கண்ணனின் நினைவு. அதன் விளைவாக ஆட்டம், பாட்டம், பஜனை என்று வாழ்ந்த உத்தமர் அக்ராஜி. அவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு கண்ணனே நேரில் அவருக்கு அவ்வப்போது காட்சியளித்து வந்தார்.

பக்தியில் லயித்த அக்ராஜி, ஆதரவற்ற ஒரு சிறுவனை வளர்த்து வந்தார். அவரது பெயர் நாபாஜி. அக்ராஜியின் மடத்தில் நடக்கும் பஜனை, அங்கு வரும் மகான்களின் உபதேசங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் நாபாஜி சிறந்த பக்தராக விளங்கினார்.

ஒருநாள்...அக்ராஜி பூஜைகள் முடித்து நிஷ்டையில் அமர்ந்தார். வழக்கமாக தரிசனம் தரும் கண்ணன் அன்று நீண்ட நேரமாக வரவேயில்லை.

அக்ராஜியின் மனதில் கவலை உண்டானது. ""என் பக்தியில் குறை வந்து விட்டதா? நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனோ?' எனக் கண் கலங்கினார்.
அருகில் இருந்த நாபாஜி மெல்ல நெருங்கி வந்து, ""குருதேவா! உங்கள் பக்தியில் எந்தக் குறையும் இல்லை. ஒரு பெரும் வியாபாரியின் கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது. அந்த வியாபாரி உங்கள் மீது பக்தி கொண்டவர். தன்னைக் காப்பாற்றினால், தன் பொருளில் கால்பங்கை இந்த மடத்திற்கு அளிப்பதாக பகவானிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற கிருஷ்ணர் அங்கு போயிருக்கிறார். அதனால் தான் இன்று அவர் உங்களுக்குத் தரிசனம் தரவில்லை,'' என்றார். சற்று நேரத்தில் பகவான் தரிசனம் தந்து, நாபாஜி சொன்ன அதே விஷயத்தையே தாமதத்திற்கான காரணமாகச் சொன்னார். 

அக்ராஜிக்கு வியப்பு மேலிட்டது. நாபாஜியை புகழ்ந்து பாராட்டினார். நாபாஜியோ, ""உங்களுக்கு அடியேன் செய்த பணிவிடைகளாலும், தாங்கள் அளித்த ஆசியாலும் தான் கிருஷ்ணரின் அருள் எனக்கு கிடைத்தது'' என்று பணிவுடன் பதிலளித்தார். 

அவருடைய உத்தரவுப்படி நாபாஜி எழுதியது தான் "பக்த விஜயக் கதைகள்' பாண்டுரங்கனின் புகழ்பாடும் அந்த நூல் உருவாகக் காரணம்.... தூய்மையான பக்தி, கருணை, குருபக்தி, குருசேவை ஆகியவையே. நம்மையும் நல்வழியில் வழிநடத்தும்படி அந்த பரம்பொருளையே வேண்டுவோம்.

வெள்ளை உலகம்


விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவர் சென்ற கோகுலம் பூலோக சொர்க்கமாக மாறியது. அவதாரம் நிகழ்ந்து முடிந்த பின் விண்ணுலகம் புறப்பட்ட கிருஷ்ணர், பசுக்களின் உலகமான "கோலோகத்திற்கு' சென்றதாகவும், இன்றும் அவர் பிருந்தாவனப் பசுக்களுடன் அங்கு இருப்பதாகவும் சொல்வர். கண்ணன் நிரந்தரமாக வாசம் செய்வதால் இதற்கு "நித்ய கோகுலம்' என்று பெயர். பாற்கடலைக் கடைந்தபோது பிறந்த பசுக்களான நந்தை, பத்திரை, சுரபி, சுசிலை, சுமனை என்னும் ஐந்தின் வழித்தோன்றல்கள் இந்த கோலோகத்தில் உள்ளன. அண்ட கோளத்தின் அருகிலுள்ள கோலோகம், கோடி சூரியபிரகாசம் கொண்ட வெண்ணிற உலகமாக உள்ளது என்கிறது புராணத்தகவல்.

கலியுகமே சிறந்த யுகம்


கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் உள்ளன. கடவுளை அடைய முதல் மூன்று யுகங்களில் தானம், தவம், யாகம் போன்றவற்றில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால், கலியுகத்தில் கடவுளை அன்புடன் மனதில் நினைத்தாலே போதும் என்ற நிலை இருக்கிறது. இந்த வகையில் பார்த்தால் கலியுகம் மிகச்சிறந்த யுகமாக திகழ்கிறது. 

தான் நினைத்த நேரமெல்லாம் முருகப்பெருமான் நேரில் வந்து காட்சியளித்ததை அருணகிரிநாதர், "எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே' என்று குறிப்பிடுகிறார். பக்தர் ஒருமுறை நினைத்தால் முருகன் இருமுறை தோன்றி அருள்புரிவான் என்பதை, "ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும்' என்கிறார் நக்கீரர். கலியுக தெய்வமான கந்தனை நம்பிக்கையுடன் நினைத்து வணங்கியவருக்கு நினைத்தது நிறைவேறும்.

கோயிலில் எவ்வாறு வழிபடுவது ?

Image result for hindu temple

மன அமைதிக்காக பெரும்பாலானோர் அவரவர் மதத்திற்கு ஏற்ற கோயில்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது இந்து கோயில்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ? கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை தூய்மையாக இருக்கவேண்டும். நெற்றியில் ஆண்கள் திருநீறும் சந்தனமும், நாமம் பெண்கள் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது. கோயில் வாயிலில் நுழையும் முன் தண்ணீரால் கை, கால்களை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும். கோயிலுக்குள் சென்ற பிறகு யாரிடமும் பேசாமல், இறைவனை மட்டும் மனதில் பிரார்த்தனை செய்ய வேண்டும். கோயிலுக்கு சென்றவுடன் முதலில் கோபுரத்தை தரிசிக்க வேண்டும். இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி வணங்க வேண்டும். 

அதன்பிறகு கொடி மரத்தின் வலது பக்கத்தில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். பிறகு பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலி கொடுத்ததாக வணங்க வேண்டும். அதன்பிறகு விநாயகரை வணங்க வேண்டும். விநாயகரை வணங்கும்போது தோப்புக்கரணம் போட வேண்டும். அப்போது நெற்றி பொட்டுகளில் லேசாக குட்டிக்கொள்ள வேண்டும். கோயிலுக்குள் சுற்றும்போது வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும். மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க வேண்டும். அர்ச்சனைகள் செய்து ஆரத்தி காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பின்பு கோயிலுக்கு வெளியில் அனுமாரை தரிசித்து கோயிலுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

பிறகு சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் மானசீகமாக தரிசித்துவிட்டு உத்தரவு பெற்றுக் கொண்டு கிளம்ப வேண்டும்.  பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். விநாயகர், சிவன், முருகன் கோயில்களில் ஒருமுறை வலம் வரலாம். சிவன், முருகன் கோயில்களில் 3 முறை வலம் வரவேண்டும். அம்மன் கோவிலில் நான்கு முறையும், நவக்கிரங்களை 9முறையும், பெருமாள் கோயிலில் 4முறையும் வலம்வர வேண்டும். அப்போது நந்தி, மயில் போன்ற வாகனங்களையும் சேர்த்தே வலம் வரவேண்டும். மூலவருக்கும்வாகனங்களுக்கும் குறுக்கே ஒருபோதும் வரக்கூடாது. 

அதனால்தான் ஆலயங்களில் மூலவரை வழிபடும் இடத்தில் இரண்டு பக்கங்களில் இருபிரிவாக இருந்து வழிபடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாலயங்களில் சிவனை வழிபடுவதற்கு முன்பு நந்தி தேவரை வழிபட்டு ‘நந்தியே சிவபெருமானை வழிபட எனக்கு அனுமதி கொடு’ என்று வேண்டியபின்னரே சிவனை வழிபட வேண்டும். விழுந்து வணங்குதல் நான் எவ்வளவு அதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், பெரிய மனிதனாக இருந்தாலும் இறைவனுக்கு முன்பு அவை ஒரு பொருட்டல்ல, எல்லாம் நீ தந்ததுதான் என்று இறைவனிடம் சரணடைவதுதான் இதன் பொருள். ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.

அஷ்டாங்கப் பணிவு : அஷ்டாங்கம் என்பது எட்டு அங்கங்களைக் குறிக்கும். அவை தலை, இரண்டு செவிகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், முகம் என்பனவாகும். இந்த எட்டு அவயங்களும் தரையில் படுமாறு பணிந்து வணங்குதல் அஷ்டாங்கப்பணிவு ஆகும். ஆண்கள் இப்படித்தான் விழுந்து வணங்க வேண்டும். பஞ்சாங்கப் பணிவு: பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் குறிக்கும். அவை தலை, இருமுன் கைகள், இரு முழங்கால்கள் ஆகும். இந்த ஐந்து அங்கங்களும் தரையில் படுமாறு பெண்கள் பணிந்து வணங்க வேண்டும். 

கோயில் கொடி மரத்தின் முன்பு மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். வேறெங்கும் கூடாது. அவ்வாறு வணங்கும்போது மேற்கு அல்லது தெற்கு திசையில் மட்டுமே கால் நீட்ட வேண்டும், சூரிய கிரகணம் சங்கராந்தி தினங்களில் வழிபடும்போது மட்டும் மேற்கு திசையில் கால் நீட்டக்கூடாது, வடக்கு அல்லது தெற்கு நோக்கிய சன்னதிகளில் விழுந்து வணங்குதல் அவசியமில்லை. கரங்குவித்து வணங்குதலே போதும். தரையில் விழுந்து வணங்கும்போது உடம்பில் எவ்வளவு தூசி படிகிறதோ அவ்வளவு அதிகமான காலம் நாம் கயிலையில் வாழும் பாக்கியம் கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.app.tntemples&hl=en