Thursday, 1 February 2018

அம்மான்னா... ஆனந்தம்


கங்கையில் பிறந்ததால் முருகனுக்கு "காங்கேயன்' என்று பெயர். இதுபோல், விநாயகரையும் கங்கையோடு சம்பந்தப்படுத்தி "த்வை மாதுரன்' என்ற பெயர் சூட்டியுள்ளனர். "இரண்டு தாயாரைப் பெற்றவர்' என்பது இதன் பொருள். பார்வதி மட்டும் இல்லாமல், சிவனின் இன்னொரு மனைவியான கங்கையும், விநாயகரின் தாய் என்ற வகையில் இந்த பெயர் வழங்கப்படுகிறது. "நியாயேந்து சேகரம்' என்ற தர்க்க சாஸ்திர நூலில் விநாயகர் ஸ்லோகத்தில் இப்பெயர் இடம் பெற்றுள்ளது. யானை இயல்பாகவே தண்ணீரைக் கண்டால் ஓடோடி வந்து விளையாடி மகிழும். துதிக்கையால் நீரை உறிஞ்சி கொப்பளித்து ஆனந்தத்தில் மிதக்கும். இதனடிப்படையில், ஆனைமுக விநாயகருக்கும் பெரிய தாயாகிய கங்கையின் பெயரும் தனக்கு இருக்க வேண்டும் என இப்படி அழைக்கப்படுகிறார்.

'கொம்பு' முளைச்சா என்னாகும் ?


"நான்' என்னும் ஆணவ எண்ணத்தைப் போக்குவதே தெய்வ வழிபாட்டின் நோக்கம். இதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று கந்தபுராணத்தில் உள்ளது. ஒருமுறை சிவ தரிசனத்திற்காக கைலாயம் வந்தார் பிரம்மா. ஞான பண்டிதரான முருகன் வழியில் நின்றார். அவரைப் பார்த்தும் பார்க்காதது போல பிரம்மா உள்ளே சென்றார். முருகன் அதைப் பொருட்படுத்தவும் இல்லை. பிரம்மாவைத் தண்டிக்கவும் விரும்பவில்லை. சிறிது நேரத்தில் சிவ தரிசனம் முடித்து பிரம்மா திரும்பினார். அப்போதும் பிரம்மாவுக்கு "நான்' என்னும் ஆணவம் நீங்கவில்லை. இதைக் கண்ட முருகன், பிரம்மாவை சிறையில் தள்ளினார். 

சிறைப்படுத்திய காரணத்தை சிவன் கேட்டதற்கு முருகன், ""தந்தையே! உம்மைத் தரிசிக்கும் முன்னும் ஆணவம் இருந்தது. வழிபட்டு வந்த போதும் அது நீங்கவில்லை. அதனால் சிறை பிடித்தேன்,'' என்று பதிலளித்தார். இதனை, "நின்னை வந்தனை செய்யினும் தன் அகந்தை தீர்கிலான்' என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆணவத்தைப் போக்கவே, கோவில்களில் கொடிமரத்தின் முன் பலிபீடம் இடம் பெற்றுள்ளது. அதைக் கடக்கும் போது மானசீகமாக "நான்' என்னும் கொம்பு முளைக்காமல் இருக்கும்படி கடவுளிடம் வேண்டிக் கொள்வது அவசியம். 

அழகர்கோவில் வரலாறு


ஒருமுறை நியாயஸ்தரான எமதர்மராஜனுக்கே சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலைக்கு வந்தார். விருசுபகிரி என்னும் பெயர் கொண்ட இம்மலையில் தவம் செய்தார். இந்த மலைத்தொடர் திருப்பதியைப் போல ஏழு மலைகளை கொண்டது. தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சி தந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம், "தினமும் உன்னை ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும்,'' என்று கேட்டார். பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோவிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம்.

எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய, தர்மராஜன் விருப்பத்தின் பேரில் இங்கேயே திருமால் எழுந்தருளினார். விஸ்வகர்மாவால் இங்கு சோமசந்த விமானம் (வட்ட வடிவம்) அமைக்கப்பட்டது. சங்கு, சக்கரம், கதை, வில், வாள் தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். 

வித்தியாசமான முருகன்


சேவல் கொடியும் உலோகத்தால் செய்த வேலும் ஏந்தியே முருகன் காட்சி தருவதுண்டு. ஆனால் சில ஊர்களில் இவர் வித்தியாசமாக காட்சி தருகிறார். 

கிளி ஏந்திய முருகன் - கனககிரி 

கல்வேல் கொண்ட முருகன் - திருச்செங்கோடு

கரும்பு ஏந்திய முருகன் - பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம்

மாம்பழம் கொண்ட முருகன்- திருநள்ளாறு

வில் ஏந்திய முருகன்- ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில், கும்பகோணம் - பட்டீஸ்வரம் ரோட்டில் 15 கி.மீ.,

ஒருமுகம், ஆறு கைகள் கொண்ட முருகன் - தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை.

சங்கு சக்கரம் கொண்ட முருகன் - கர்நாடகா அரிசிக்கரை புத்தூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில்.

முதிர்ச்சி தந்த அதிர்ச்சி


திருமங்கையாழ்வார் பிறந்த திருவாலி திருநகரிக்கு (காஞ்சிபுரம் அருகிலுள்ள ஊர்) ராமானுஜர் விஜயம் செய்தார். அப்போது, ஒரு தாழ்த்தப்பட்ட குலப்பெண் ராமானுஜருக்கு நெருக்கமாக வந்து கொண்டிருந்தார்.

"அம்மா! அடியார் கூட்டத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிச் செல்லக்கூடாதா?'' என்று கேட்டார் ராமானுஜர்.

"எங்கே என்னை ஒதுங்கச் சொல்கிறீர். வலதுபக்கம் ஒதுங்க நினைத்தால் திருமங்கையாழ்வாருக்கு உபதேசம் செய்த இடம். இடதுபக்கம் ஒதுங்கினால் திருவாலிப்பெருமாள் கோவில் உள்ளது. உலகம் முழுவதுமே உலகளந்தான் இருப்பிடம் தானே! இதிலே எனக்கென ஏது தனி இடம்,'' என்றாள். அவளுடைய முதிர்ச்சியான பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ராமானுஜர்.

"அம்மா! தாங்கள் சொல்வதே நிஜம். கடவுள் இல்லாத இடமேது! இந்த அரிய கருத்தை உணர்த்திய நீயே சங்கு, சக்கர சின்னங்களை ஏற்க தகுதியானவள் (தீவிர வைணவர்கள் உடலில் இந்த சின்னங்களை இடுவர்),'' என்று சொல்லி அவளை அடியவளாக ஏற்றார். எளியவர்களையும் ஜாதி வித்தியாசமின்றி அடியாராக ஏற்கும் உயர்ந்த பண்பாளராக ராமானுஜர் திகழ்ந்தார்.

வக்ர துண்ட சுவாமியை தெரியுமா ?


"வக்ரம்' என்றால் "வளைந்த' என்றும், "கோணலான' என்றும் பொருள். வக்ரபுத்தி உள்ளவர் என்றால், கோணல் புத்தி உள்ளவர் என்று பொருள் கொள்ளலாம். இதன் அடிப்படையில் தான், தீயவழியில் நடப்பவர்களை "வக்கிரம் பிடித்தவன்' என்று சொல்வர். தெய்வங்களில் விநாயகருக்கு, "வக்ர துண்டன்' என்ற பெயருண்டு. "வக்ரம்' என்றால் "வளைந்த', "துண்டம்' என்றால் "துதிக்கை' என்று பொருள். "வளைந்த துதிக்கையை உடையவர்' என்பது இதன் பொருள். கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கிச் செல்வதை "வக்ர கதி' என்பர்.

பயம் நீக்கும் பாட்டு


தேவையற்ற பயம் நெஞ்சை ஆட்கொண்டிருக்கிறதா? இதோ! இந்தப் பாடலைப் படியுங்கள்.

குமரா நம என்று கூறினார் ஓர்கால் 
அமராவதி ஆள்வர் அன்றி -யமராஜன் 
கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாய் உதரப்
பைபுகுதார் சேரார் பயம்.

பொருள்: "குமராயநம' என்னும் ஆறெழுத்து மந்திரத்தை, ஒருமுறை பக்தியுடன் ஓதுபவர்கள், தேவர்கள் வாழும் அமராவதி நகரத்தில் வாழும் பேறு பெறுவர். உயிர்களைப் பறிக்கும் எமனின் கையில் அகப்பட்டு அடையும் துன்பம் வராது. இவர்கள் போரூரில் அருள்செய்யும் முருகப் பெருமானின் திருவடியில் தங்கிஇருப்பர். இனி எந்த தாயின் வயிற்றிலும் பிறவி எடுக்க மாட்டார்கள். அவர்களை பயம் அணுகவே அணுகாது. சென்னை அருகிலுள்ள போரூர் முருகன் குறித்த பாடல் இது.