Monday, 2 April 2018

ஆலயம் சொல்லும் தத்துவம்

ஆலயம் சொல்லும் தத்துவம்

ஆலயங்களின் உட்பொருள் அறியாத பலர், அதை நிந்திக்கின்றனர். சிலர் அவதூறு பரப்புகின்றனர். இன்னும் சிலரோ ‘நான் எத்தனையோ முறை ஆலயம் சென்று வந்துள்ளேன். யாருக்கும் எவ்வித தீங்கும் செய்ததில்லை. ஆனாலும் வாழ்வில் எனக்கு எவ்வித நல்ல விஷயங்களையும் தெய்வம் செய்யவில்லை’ என்று குற்றம் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் அறியாமை வார்த்தைகள். இவர்கள் அனைவருமே ஆலயங்கள் சொல்லும் ஆன்மிக ரகசியங்களை சரிவர புரிந்துகொள்ளாதவர்கள்.

தன் வாழ்வில் பெரும்பாலும் ஆலயங்களுக்குச் செல்லாமல், அக வழிபாட்டை மட்டுமே சிந்தையில் நிறுத்தி, தன் வாழ்வை வென்ற சித்தர்கள் பலரும், தன்னுடைய இறுதி காலத்தில் ஆலயங்களுக்கு சென்று சமாதி நிலை அடையக் காரணம் என்ன? என்பதை எவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

சரி.. வாருங்கள்.. ஆலயம் சொல்லும் தத்துவத்தை சரியாக உணர்ந்து கொள்வோம்.

இந்த பிரபஞ்சம் அருளும், நம்முடைய சாதாரண புலன்களுக்கு புலப்படாத பேரின்ப நிலையை நாம் அடைய வேண்டுமானால், நம்முடைய ஆன்மா செயல்படும் ஆறுவகையான நிலைகளை ஒவ்வொருவரும் கடந்து வரவேண்டும்.

அப்படி கடந்து உள்ளே வாருங்கள். பேரின்ப நிலையை உங்களுக்கு உணர்த்துகிறேன் என்பதே ஆலயங்கள் கூறும் தத்துவமாகும்.

நம்முடைய ஆன்மாவில் மாறுபட்ட ஆறு நிலைகள் உள்ளன. அவை: பூதான்மா, அந்தரான்மா, தத்துவான்மா, சீவான்மா, மந்திரான்மா, பரமான்மா.

மனிதன் என்பவர் வெறும் உடம்பல்ல, அறிவும் அல்ல.. அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆன்மாவே மனிதன். ஆன்மா என்பது நம்மில் இயங்குவது; நம்மை இயக்குவது.

ஒருவன் தன்னுடைய உடல்தான் ‘நான்’ என்றும், அது மட்டுமே நிஜம் என்றும் நினைத்து வாழும்போது, அவன் ‘பூதான்மா’ ஆகிறான்.

அதே மனிதன் தன்னுடைய இச்சைகள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தனக்குள் உட்கொள்ளும்போது, அவன் ‘அந்தரான்மா’ ஆகிறான்.

பஞ்ச பூதங்கள் முதல் ஆன்ம தத்துவங்கள் வரை அறிய முற்படும் மனதை தானாக கொள்ளும்பொழுது அவன் ‘தத்துவான்மா’ ஆகிறான்.

அந்த தத்துவான்மாவின் பயனாக, மேல்சொன்ன அனைத்தையும் அடக்கி ஆண்டு நானே பிரம்மம் என்று ஆணவ முனைப்பில் உணரும்பொழுது அவன் ‘சீவான்மா’ ஆகிறான்.

நான், எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, சிவம் நிலை அடைய வேண்டி மந்திர உபாசனையில் நிற்கும்பொழுது அவன் ‘மந்திரான்மா’ ஆகிறான்.

கடைசியில் இறையோடு இரண்டற கலக்கும் அந்த நொடியில் அவன் ‘பரமான்மா’வாக மாறுகிறான்.

இந்த ஆறு நிலையைத் தான் ஆலயங்களிலும் வைத்து பொருத்திப் பார்க்க வேண்டும். அதன்படி...

முன்கோபுரம் - பூதான்மா

பலிபீடம் - அந்தரான்மா

கொடிமரம் - தத்துவான்மா

மூலவர் - சீவான்மா

இறை மந்திரம் - மந்திரான்மா

பரவெளி - பரமான்மா

ஒரு ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பாக நம்மை வரவேற்பது முன்கோபுரம். அந்த இடம் வந்த உடன் பூதான்மாவை அழிக்க வேண்டும். அதாவது இந்த உடல் தான் ‘நான்’ என்ற எண்ணத்தை அடியோடு அகற்ற வேண்டும். அகற்றிவிட்டு தான் உள்ளே நுழைய வேண்டும்.

இரண்டாவதாக நாம் காண்பது பலிபீடம். இங்கே அந்தரான்மாவை ஒழிக்க வேண்டும். அதாவது தன் இச்சைகள், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை அங்கே அழித்துவிட வேண்டும். அதன் பின்னர் தான் மேற்கொண்டு செல்ல வேண்டும்.

மூன்றாவதாக கொடிமரம். அங்கே தத்துவான்மாவை ஒழிக்க வேண்டும். அதாவது மனம் தான் நான் என எண்ணும் அந்த நிலையை அழித்துவிட வேண்டும். அதாவது மனம் அங்கே வேரறுக்கப்பட வேண்டும்.

நான்காவதாக நாம் காண்பது மூலவர். அங்கே தான் நம்முடைய சீவான்மா அழிக்கப்பட வேண்டும். அதாவது நம்முடைய ஆணவம். ‘அனைத்தும் நாமே’ என்ற ஆணவம் அங்கே அழிக்கப்பட வேண்டும்.

ஐந்தாவதாக நாம் செய்ய வேண்டியது நம்மை உணர்தல். அதற்கு தான் இறைமந்திரம் உதவி செய்கிறது. இறை மந்திரங்களை உச்சரித்து மனதை ஒருநிலைப்படுத்தும்போது, ‘மந்திரான்மா’ மறைந்துவிட வேண்டும். அதாவது பேரின்ப வீடு வேண்டி நிற்கும் அந்த ஆன்மா, அந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.

ஆறாவதாக நாம் காண்பது தீப ஒளி. அதாவது கற்பூர, தீப ஆரத்தி. இறைவனுக்கு ஆராதனை செய்யும்போது, தீயில் கரைந்து போகும் கற்பூரத்தைப் போல, நாமும் இறைவனோடு இரண்டற கலந்து, பரவெளி நிலையான ‘பரமான்மா’ நிலையை அடைய வேண்டும்.

இந்த வகையில் ஆறு வகை பேதங்களை, அதாவது ஆறு வகை ஆன்ம பேதங்களை நாம் கடந்து சென்றோமானால், நாம் இறையுடன் இரண்டற கலக்கும் உன்னத நிலைக்குச் செல்லலாம். இதை உணர்த்துவது தான் ஆலயங்கள்.

கோபுரம் முதல் தீபம் வரை, அதன் நிலைகளில் நாம் சரியாக கடந்து சென்றோமானால், நாம் பேரின்ப நிலையை அடையலாம். இதை உணரத்தான் நம் முன்னோர்கள் ஆலயங்களை அமைத்தார்கள். அந்த தத்துவங்களை நாம் உணரத்தான் சித்தர் பெருமக்களும், அங்கே சமாதி நிலைக்குச் சென்று அமர்ந்தார்கள்.

அற்புதமான நிலைக்கு செல்ல வேண்டிதான் இந்த ஆலய அமைப்பே தவிர, வேண்டுதல் செய்யவோ.. பூஜைகளும் பரிகாரங்களும் செய்யவோ மட்டுமே ஆனதல்ல ஆலயங்கள்.

மேற்சொன்ன வகையில் ஆலயங்களுக்கு ஒரே ஒரு முறை சென்று வாருங்கள். இறை சக்தியுடன் இரண்டற கலப்பதை உணரலாம். 

Sunday, 1 April 2018

ஈசனின் உத்தரவால் நோய் தீர்த்த சங்கு சுவாமி

ஈசனின் உத்தரவால் நோய் தீர்த்த சங்கு சுவாமி

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அருகே உள்ளது பசுவந்தனை என்னும் கிராமம். கரிசல் பூமியாக இருந்தாலும் வளமை மிகுந்தது இந்தக் கிராமம். இங்கு தான் சிவஞான தேசிகர் - ஞானம்மை தம்பதிகளின் மகனாக சங்கு சுவாமிகள் அவதரித்தார். சிறுவயது முதலே சிவன் மீது தீவிர பற்று கொண்டிருந்தார். தினமும் சிவனை எண்ணி துதித்து, தன் பணிகளைத் தொடங்குவதே இவரது வழக்கம்.

ஆரம்பக் காலத்தில் யாரும் இவரைப் பற்றி அறியவில்லை. ஏதோ ஒன்றும் அறியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்; இவர் ஒரு பித்தர் என்று தான் நினைத்தார்கள்.

அதற்கேற்றாற்போல், சங்கு சுவாமிகளும், உலகத்தை மறந்து எப்போதும் சிவ சிந்தையுடன் தான் இருப்பார். வானத்தை நோக்கியபடியே வெகுநேரம் பார்த்துக் கொண்டே நிற்பார். மழை பொழிந்தாலும் அசைய மாட்டார். சில நேரம் சிரிப்பார், சில நேரம் அழுவார். எதற்காக சிரிக்கிறார்; எதற்காக அழுகிறார் என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாது. சில சமயம் தான் வழிபடும் சிவபெருமானுக்காக பூக்களைக் கொண்டு செல்கையில், அந்த பூக்களுடன் கூட பேசிக்கொண்டே இருப்பார். ‘உன்னை இன்று ஈசனுக்கு சூட்டி மகிழப்போகிறேன்’ என்பார்.

அவர் தன்னுடைய வீடாகவே, எல்லா வீட்டையும் எண்ணுவார். எல்லா வீடுகளில் தரும் உணவையும் உண்பார். இரவிலே ஊருக்கு வெளியேயுள்ள தோப்புகளிலோ, சாலைகளிலோ தனியாக உலவுவார்.

பலரும் இவரைப் பற்றி அறியாமல், தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் வேலை வாங்குவார்கள். ஒருசிலர் நெல் அறுவடைக் காலத்தில், இவரை அழைத்து நெற்கதிரை ஏற்றி சுமக்க விடுவார்கள். அவரும் சுமப்பார். சிலர் இவரை கிணற்றில் தண்ணீரை இறைக்கச் சொல்வார்கள். அதையும் இவர் சிரித்துக் கொண்டே சளைக்காமல் செய்வார். மேகத்தினால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல சங்கு சுவாமி தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் வாழ்ந்து வந்தார்.

ஒரு சமயம் சங்கு சுவாமியின் தந்தை, அவரை விவசாய நிலத்தில் மாட்டை பூட்டி உழவு தொழில் செய்ய அனுப்பியிருந்தார். ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் எருதுகள் தவிக்கிறதே என எண்ணிய சங்கு சுவாமி, தான் உடுத்திருந்த வேஷ்டியை தண்ணீரில் நனைத்து எருது மீது போர்த்தினார். அங்கு வந்த தந்தை அவரை அடித்து உதைத்தார்.

உடனே ‘அப்பா அடிக்காதீர்கள். உங்கள் கை வலிக்கும்' என்றார் சங்குசுவாமி. அதுபோலவே அவருக்கு கை வலித்தது. அவர் துடித்துக்கொண்டே ‘என்னடா செய்தாய்?' என்று கேட்டபடி அடிப்பதை நிறுத்த, ‘அப்பா இனி வலிக்காது’ என்றார். அதுபோலவே வலி நின்று போனது. இவர் ஒரு அதிசய பிறவி என்பதை அவர்கள், அப்போதும் உணரவில்லை.

ஒருநாள் அதிகாலையில், சங்கு சுவாமியின் சகோதரர், அவரை நோக்கி வந்தார். வந்தவர், ‘நமது வயலுக்கு போய் ஏற்றத்தில் தண்ணீர் இறை. விடிவதற்குள் இந்த வயல் முழுவதும் தண்ணீர் பாய வேண்டும்’ என்று சொல்லி விட்டு போய்விட்டார்.

உலக பற்றற்ற சங்கு சுவாமி, எதை பற்றியும் கவலைப்படாமல் சிவசிந்தனையுடன் ஏற்றம் இறைக்கத் தொடங்கினார்.

சங்கு சுவாமியின் இயற்பை அறிந்திருந்த பக்கத்து வயலுக்குச் சொந்தக்காரன், சரியான நேரம் பார்த்து, மெல்ல தண்ணீர் மடையைத் தன் வயலுக்குத் திருப்பிக் கொண்டான். விடிவதற்குள் பக்கத்து நிலத்துக்காரனின் வயலில் நன்றாக நீர் பாய்ந்து தேங்கியது. அதை அறியாதபடி சிவசிந்தனையில் இருந்த சங்கு சுவாமிகள், தண்ணீர் இறைத்தபடியே இருந்தார்.

பொழுது விடிந்தது. சங்கு சுவாமியின் சகோதரன், வயலுக்கு வந்து சேர்ந்தார். தங்கள் வயலில் ஒரு துளி நீர்க் கூடப் பாயவில்லை. அடுத்த வயலில் தடாகம் போல் தண்ணீர் தேங்கியிருந்தது. கோபத்தில், ‘உனக்கு ஏதாவது மூளையிருக்கின்றதா? இத்தனை மணி நேரம் நீர் இறைத்தும் நம்ம வயலில் தண்ணீர் பாயவில்லையே’ என்றார்.

அதற்கு சங்கு சுவாமிகள் மலர்ந்த முகத்துடன் தண்ணீர் இறைத்துக் கொண்டே ‘அதுவும் நம்ம வயல் தானே?’ என்றார்.

அவ்வளவுதான், சகோதரனுக்கு கோபம் அதிகரித்து ஒரு கம்பை எடுத்து வந்து சங்கு சுவாமியை ஓங்கி பல முறை அடித்தார். ஆனால் சிவசிந்தனையில் இருந்த சங்கு சுவாமியோ சிரித்தபடி ‘தம்பீ! இப்படி ஓங்கி அடிக்கிறாய். உனக்குக் கை வலிக்குமே?’ என்றார்.

அடுத்த நிமிடமே அவனது தோள், தேள் கொட்டியதுபோல் வலித்தது. கீழே விழுந்தான்; புழுவைப் போல் துடித்தான்; புரண்டான். ‘ஐயோ! ஐயோ! வலி தாங்க முடியவில்லையே’ என்று கதறினான்.

கருணை வடிவாகிய சங்கு சுவாமி ‘தம்பீ! வருந்தாதே. சரியாகிவிடும்’ என்றார். உடனே வலி நின்றுவிட்டது. அப்போதும் கூட அவரை ஞான மூர்த்தியென்று அவன் அறியவில்லை.

‘இவன் கரு நாக்குக்காரன். இவன் சொன்னால் பலிக்கின்றது. இவன் விஷயத்தில் இனி தலையிடக்கூடாது’ என்று கூறி விட்டு தெருவில் ஓட ஆரம்பித்தான்.

இந்தச் செய்தி ஊரெங்கும் பரவியது. அன்று முதல் சங்கு சுவாமியை கண்டால் எல்லோருக்கும் ஒரு வகையான பயம் தொற்றிக் கொண்டது. அவருக்கு யாரும் வேலை தந்து கஷ்டப் படுத்துவதில்லை.

சங்கு சுவாமிகள் தன்னிச்சைப்படி இடிந்த மண்டபம் ஒன்றில் வந்து தங்கினார். கண்களை மூடி அமர்ந்தார். அப்போதும் பலர், ‘எப்படி உட்கார்ந்தபடியே தூங்குகிறான் பார்’ என்றுதான் நினைத்தார்கள். அவருடைய தவவலிமை ஊருக்குத் தெரியவில்லை.

ஆனால் அவருடைய ஞான சித்தியைப் பற்றி அனைவரும் அறியும் காலம் ஒன்று வந்தது.

ஒரு நாள் வீட்டின் வெளியே அனைவரும் படுத்திருந்தனர். நிலவு வானத்தில் இருந்து தனது ஒளியை பூமிக்கு பாய்ச்சி கொண்டிருந்தது. சுவாமி தீடிரென்று எழுந்து அனைவரையும் உள்ளே சென்று படுக்கச்சொன்னார். கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கொண்டு கட்டினார். அதன் உணவுகளை சேகரித்தார். ‘இவனுக்கு என்ன கிறுக்கு பிடித்து விட்டதா?’ என்று வீட்டில் உள்ளவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மிகப்பெரிய புயல் காற்று வந்தது. கூரைகள் பறந்தன. கடும் மழையால் வெள்ளம் பாய்ந்தோடியது. இந்த சம்பவத்துக்கு பிறகு சுவாமியை பற்றி உணரத் தொடங்கினர். ஆனால் முழுமையாக நம்பிவிடவில்லை.

ஒரு நாள், சங்கு சுவாமியும், அவரது சகோதரரும் உணவருந்த அமர்ந்தனர். சங்கு சுவாமிகள் சாப்பிடும் முன்பாக தியானிப்பது வழக்கம். அப்படி கண்களை மூடி தியானத்தபோது, அவரது இலையில் இருந்த உணவை, அவரது சகோதரன் எடுத்து விட்டான். ஆனால் சுவாமிகள் இலையில் அள்ள அள்ள குறையாமல் உணவு இருந்தது.

இதனால் அதிர்ந்து போன அவரது சகோதரன், அவரின் சக்தியை உணராமல் அவருக்கு ஏதோ துஷ்ட ஆவி பிடித்து விட்ட தாக நினைத்தான். அதனால் சங்கு சுவாமியை அனைவரும் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றார்கள்.

அந்த மந்திரவாதியைப் பார்த்ததும் சங்கு சுவாமிகள், ‘விதி முடிந்தவனா என் விதியை மாற்றப் போகிறான்?’ என்றார்.

அவர் சொன்னதன் பொருள்.. அப்போது யாருக்கும் புரியவில்லை. மந்திரவாதியோ, எலுமிச்சைப் பழம் எடுப்பதற்காக அருகில் இருந்த பூக்கூடைக்குள் கையை விட, உள்ளே இருந்த கருநாகம் அவரைத் தீண்டியது. அலறியபடி சரிந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார் மந்திரவாதி. பூக்கூடையில் இருந்து வெளியில் வந்த கருநாகம், சங்குச்சுவாமியின் முன் வந்து பணிந்து நின்றது. இந்தச் சம்பவத்துக்கு பின்னர், சங்கு சுவாமி யிடம் ஏதோ சக்தி இருப்பதை பசுவந்தனை மக்கள் நம்பி னார்கள்.

சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லகுத்தி பெரியசாமி தேவருக்கு, மகோதரம் என்னும் நோய் ஏற்பட்டது. அந்த காலத்தில் இதுபோன்ற நோய்கள் வந்தால் மருத்துவரால் காப்பாற்ற முடியாது. இறைவனே கதி என காத்துக்கிடக்கவேண்டியது தான். அதுபோலவே தில்லை அம்பல நடராஜனிடம் ஜமீன்தார் வேண்டினார். தொடர்ந்து 48 மண்டலமாக அங்கு அமர்ந்து வணங்க ஆரம்பித்தார். நோய் தணியவில்லை. எனவே ஜமீன்தார் மனம் நொந்தார்.

ஜமீன்தார் ‘ஐயனே! விடிவதற்குள் என் நோய் தீரவில்லையென்றால், உன் சிவகங்கையில் வீழ்ந்து உயிரிழந்து விடுவேன். இது சத்தியம்’ என்று சபதம் செய்தார்.

அன்று ஜமீன்தாருடைய கனவில் தோன்றிய தில்லைநாதன், ‘அன்பனே! பாண்டி நாட்டிலே பசுவந்தனை என்னும் தலத்திலே சங்கு சுவாமிகள் என்ற பெயர் தாங்கி, எனது அடியவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் சென்று வணங்குவாய். அவன் உன் நோயை விரைவில் தீர்ப்பான்’ என்று அருளினார்.

ஆனந்தத்துடன் உடனே பசுவந்தனை நோக்கி கிளம்பினார்.

அங்கிருந்த மக்கள், சங்கு சுவாமிகள் வாழ்ந்த பாழடைந்த மண்டபத்தை ஜமீன்தாருக்கு காட்டினார்கள். ஜமீன்தார், முத்து முத்தாய் கண்ணீர்த் துளி சிந்தவும், அன்பு வெள்ளம் பெருகவும் ஓடி, அவரது திருவடிகளில் வீழ்ந்தார். தட்டுக்களில் கற்கண்டும் பழங்களும் வைத்துப் பணிந்தார். ஆரவாரத்தினை பார்த்தவுடன் அதுவரை தியானத்தில் இருந்தவர் திடுக்கிட்டு விழித்தார்.

எதிரில் நின்ற ஜமீன்தாரைப் பார்த்ததும் சிரித்தார். ‘என்ன.. நடராஜ மூர்த்தி அனுப்பினாரோ? ரொம்ப சந்தோஷம். இந்தா! இந்தப் பழத்தைச் சாப்பிடு’ என்று தட்டில் உள்ள பழங்களில் ஒன்றையெடுத்துக் கொடுத்தார். அதையுண்டதும் ஜமீன்தாருடைய மகோதரம் அகன்றது. ஊரார் அனைவரும் அதிசயத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.

மன அழுக்கை அழிக்கும் தீட்சை

மன அழுக்கை அழிக்கும் தீட்சை

`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை. மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன. மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும், சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.

நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் ‘மாந்திரீகர்கள்’ ஆவர்.

முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் ‘தாந்திரீகர்கள்’ ஆவர்.

இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ‘ஞானகுரு’ ஆவார்கள். இந்த ஞான குருக்களே தன் சீடர்களுக்கு, உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.

தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன: பரிச தீட்சை, நயன தீட்சை, பாவானா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை ஆகியவையாகும். 


பரிச தீட்சை

ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டை பொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சை. ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில் புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். 

நயன தீட்சை

ஒரு மீன் முட்டையிட்டு, அதனைத் தன் கண்களால் பார்த்து, பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து, புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனதை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். 

பாவானா தீட்சை

ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிருப்பதைப் போன்றது பாவானா தீட்சை. ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து, சும்மா இருக்கும் சுகமான, எண்ண மற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவானா தீட்சை. 

யோக தீட்சை

ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து, 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து, வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும். 

வாக்கு தீட்சை

ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்து களையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும். 

நூல் தீட்சை

சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும். 

எண்ணங்களை ஈடேற்றும் படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்

எண்ணங்களை ஈடேற்றும் படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்

பல்லவர், சோழர் திருப்பணிச் செய்து போற்றிய ஆலயம், சைவ, வைணவ சமயங்களை போற்றும் திருக்கோவில், வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் இறைவன், மகாலட்சுமியை மார்பிற்கு பதிலாக தலைமீது வைத்திருக்கும் ஸ்ரீனிவாசன் வாழும் கோவில், சங்கு, சக்கரங்களை திசை மாற்றி வைத்துள்ள திருமால் குடியிருக்கும் திருத்தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது சென்னையை அடுத்த படூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்.

தல வரலாறு :

பல்லவர், சோழர் காலத்தில் இந்த ஆலயம் சைவ, வைணவ சமயங்களை ஒன்றாகப் போற்றும் திருத்தலமாக புகழ்பெற்று இருந்துள்ளது. காலப்போக்கில், அந்நியர்கள் படையெடுப்பால் சிதிலமடைந்த இவ்வாலயம், 1992-ம் ஆண்டில் கிருஷ்ணவேணி அம்மையார் என்ற அடியாரின் பெருமுயற்சியால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்து இன்று வழிபாட்டுக்கு வந்துள்ளது.

படூர் கடற்கரைப் பகுதி, பழங்காலத்தில் படகுகளின் துறைமுகமாக விளங்கியது. படகுகள் நிறைந்த ஊராக விளங்கியதால் ‘படகூர்’ என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி, ‘படூர்’ என அழைக்கப்படுகிறது.

மணிகண்டீஸ்வரர் - மரகதவல்லி :

திருக்கோவிலின் பிரதான நாயகனாக விளங்குபவர் மணிகண்டீஸ்வரர். மன்னர் கால கருவறையில் இடம் மாறாமல், கருவறைக்குள் குடியிருக்கும் எழிலான மூர்த்தியாக மணிகண்டீஸ்வரர் விளங்குகிறார். சதுர வடிவ ஆவுடையாரில் உயரமான லிங்கத் திருமேனி கொண்டவராக இந்த இறைவன் பொலிவுடன் காட்சியளிக்கிறார். மன்னர் காலத்தில் இந்த இறைவன், சிறுகாளேஸ்வரமுடைய மகாதேவர், சிறுமண்ணீஸ்வரமுடைய மகாதேவர், திருகாரீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். இவரது கருவறை எதிரே தென்முகமாக, அன்னை மரகதவல்லி, நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையோடு காட்சியளிக்கிறாள்.

ஆலய அமைப்பு :

கிழக்கு முகமாய் எளிய நுழைவு வாசலைக் கொண்டு இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் மூன்று அங்கங்களைக் கொண்டு விளங்குகின்றது. நடுநாயகமாக மணிகண்டீஸ்வரர், இடதுபுறம் புதியதாக அமைந்த ஐயப்பன் ஆலயம், வலதுபுறம் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சிதர, மகாமண்டபம், கருவறை முன்மண்டபம், கருவறையும் காட்சி தருகின்றன. மகாமண்டபத்தில் அன்னை மரகதவல்லி சன்னிதி இருக்கிறது.

கருவறை முன்பாக விநாயகர், முருகன், கருவறைச் சுற்றில் விநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சோழர் கால சண்டிகேசுவரர் ஆகியோரது திருமேனிகள் காணப்படுகின்றன. இதுதவிர பைரவர், பவானி அம்மன், சூரியன், நந்திதேவருடன் ஜலகண்டேஸ்வரர் ஆகியோரும் தரிசனம் தருகின்றார்கள்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனையும், இறைவியையும் வணங்கினால், திருமணத் தடைநீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடு சென்றுவர விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தலமாகவும் இது விளங்குவதாக சொல்கிறார்கள்.

விழாக்கள் :

அண்மையில் குடமுழுக்கு விழா நடந்தேறிய இந்த ஆலயம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்தக் கோவிலில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, பவானி அம்மனுக்கு ஆடி ஞாயிறு, ஐய்யப்பனுக்கு மாதந்தோறும் ஐந்து நாட்கள் நெய் அபிஷேகம், ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருமண வைபவம், மார்கழியில் திருப்பாவை உற்சவம் ஆகியவை சிறப்போடு நடத்தப்படுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

பெருமாள் தலையில் லட்சுமி :

மகாலட்சுமியை தலையில் தாங்கி நிற்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீற்றிருக்கும் சன்னிதியானது, மணிகண்டீஸ்வரர் ஆலயத்தின் ஒரு அங்கமாக தனித்த ஆலயம் போல் விளங்குகிறது. இங்குள்ள பெருமாள் பல்லவர் காலத்தைச் சார்ந்தவர். மகாலட்சுமியோடு வீற்றிருக்கும் பெருமாள், பொதுவாக தாயாரை தன்னுடைய மார்பில் தாங்கியபடிதான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு தாயாரை தன்னுடைய தலையின் மீது தாங்கி நிற்கும் அபூர்வ கோலத்தில் பெருமாள் திருக்காட்சி தருகிறார். இது தவிர, இந்த ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருக்கரங்களில் சங்கும், சக்கரமும் திசை மாறி இருக்கும் அரிய கோலத்தையும் பார்க்கலாம். ஊழி காலத்தில் மக்களைக் காக்க, சக்கரத்தையும், சங்கையும் ஏவும் கோலம் இது எனக் கருதப்படுகிறது. மகாலட்சுமி தாயார் மற்றும் ஆண்டாள் கருவறையின் முன்புறம் அமைந்திருக்க, எதிரில் அனுமன் பவ்யம் காட்டி வணங்கி நிற்கிறார். கருவறையின் பின்புறம் தன்வந்திரியின் தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

ஜலகண்டேஸ்வரர் :

கொடி மரத்திற்கு அருகே வானம் பார்த்தபடி, நந்தியோடு ஜலகண்டேஸ்வரர் சிறிய திருமேனியாக அமைந்துள்ளார். இவரை பக்தர்கள் தங்கள் கரங்களில் தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் இதற்கென பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவரை பூஜித்தால் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

அமைவிடம் :

காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், பழைய மகாபலிபுரம் சாலையில், படூர் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், மகாபலிபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் படூர் என்ற ஊர் இருக்கிறது.

சர்வ வித்யா கணபதி மந்திரம்

சர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம்
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே

வர வரத ஐம் ப்ளூம்
சர்வ வித்யாம்
தேஹி ஸ்வாஹா

முருக வழிபாடும், நோன்புகளும்

முருக வழிபாடும், நோன்புகளும்

ஒருமுறை வசிட்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளைப் பற்றிக் கூறினார். வாரத்தின் 7 நாட்களுள் வெள்ளிக்கிழமையன்று செய்யப்படும் நோன்பு சிறப்பானது. இது முருகக் கடவுளுக்கு உரிய நோன்பாகும். இந்நோன்பை நோற்று பகீரதன் தன் அரசை மீண்டும் பெற்றான்.

முன்னொரு காலத்தில் நாரதமுனிவர் விநாயகரிடம் வந்தார். ஏழு முனிவர்களை காட்டிலும் உயர்ந்தவராக தான் ஆவதற்கு என்ன செய்யவேண்டும் எனக்கேட்டார். அதற்கு விநாயகர், முருகனுக்குரிய கார்த்திகை நோன்பினை நோற்கும்படி சொல்லியருளினார். அந்நோன்பை இயற்றுபவர் பரணிநாள் பகலில் நீராடவேண்டும். ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும். வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும். 

கார்த்திகை நாள் காலையில் நீராட வேண்டும். நாணல் புல்லில் இரவில் படுக்க வேண்டும். முருகன் திருவடிகளையே உறக்கமின்றி நினைத்திருக்க வேண்டும்.இந்த முறைப்படியே நாரத முனிவர் நோன்பிருந்தார். ரோகிணி நாள் அன்று முனிவர்களோடு சேர்ந்து உணவு உண்டார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் நோன்பிருந்தார். முருகன் அருளால் ஏழு முனிவர்களை காட்டிலும் உயர்ந்தவர் ஆனார்.

இது போல கார்த்திகை நோன்பு இருந்தவர்கள் பலர். அவர்கள் முருகனின் அருளால் மேன்மைகள் பலவற்றை அடைந்தனர். முருகனுக்குரிய நோன்புகளும் சஷ்டியும் ஒன்று. ஐப்பசி மாதம் சுக்லபட்ச பிரதமை நாள் முதலாக ஆறு நாட்கள் முறையாக நீராட வேண்டும். உண்ணாதிருக்க வேண்டும். மோதகம் செய்து படைத்து முருகனை வழிபட வேண்டும். இதுவே சஷ்டி நோன்பு ஆகும். 

திருவடிசூலத்தில் 108 திவ்யதேசங்களும் ஒரே இடத்தில்!

perumal

பரந்தாமன் ஸ்ரீமன் நாராயணன் தர்மத்தை ரக்ஷிப்பதற்காக யுகங்கள் தோறும் அவ்வவ்போது பல அவதாரங்களை எடுத்தருள்கின்றார். 

யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத 
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்!

பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே கே - பகவத்கீதை

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்||
அனேகரூப தைத்யாம்தம் னமாமி புருஷோத்தமம் - விஷ்ணுஸஹசரநாமம் 

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை ருத்திரனும், ப்ரஹ்மனும், பல தேவர்களும், கந்தர்வர்களும், ஞானிகளும், யோகிகளும், ஆழ்வார்களும், சக்ரவர்த்திகளும், மன்னர்களும் பிராத்தனை செய்யும் தருணம் இந்த மண் உலகினில் அவனுடைய பிரபாவத்தினை வெளிப்படுத்தி அருள்பாலிக்கின்றார். 

இப்படி எம்பெருமானின் தரிசனம் பெற்றவர்கள் ஆங்காங்கே தரிசனம் கண்ட இடத்திலேயே ஆலயம் அமைத்து எம்பெருமானை பூஜித்தார்கள். அனந்த மூர்த்தியான இறைவன் நாராயணின் மீது அளவற்ற பக்தி கொண்டு அவன் திருவடியை அடைந்த ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் தீந்தமிழால் பாடிய திவ்யபிரபந்தம் என்னும் பதிகங்களில் பாடியுள்ள திருத்தலங்களே திவ்ய தேசங்கள் ஆகும். 

சோழநாட்டில் 40, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, மலைநாட்டில் 13, பாண்டிய நாட்டில் 18, வட நாட்டில் 11 ஆக மொத்தம் 106 திவ்யதேசங்கள் இந்த நிலஉலகில் உள்ளன. பரந்தாமன் வசிக்கும் இடங்களான பாற்கடல் மற்றும் பரமபதம் ஆகிய இரண்டு திவ்ய தேசங்களுடன் மொத்தம் 108 திவ்ய தேசங்கள் ஆகும். 

எம்பெருமான் ராகவானாகவும், நரசிம்மராகவும், வராகனாகவும், மச்சமாகவும், வாமன திருவிக்ரமனாகவும், ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மற்றும் பல அவதாரங்களின் ரூபங்களாக 108 திவ்ய தேசங்கள் தோறும் பக்தர்கள் தன்னை பாடி பரவசப்படுவதற்கே பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். 

ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நிகழ்வு நடந்து அங்கு ஆலயம் அமைந்து, பின்பு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்களே 108 திவ்ய தேசங்கள் ஆகும். 

ஒவ்வொரு காலகட்டத்தில் அமைய பெற்ற திவ்யதேசங்களை காணுவது என்பதே அரியதாய் விளங்கும் தருணத்தில், ஒரே இடத்தில் 108 திவ்யதேசங்களும் அமைய பெற்றால் எவ்வாறு இருக்கும். ஆம் திருவடிசூலம் என்னும் மகா ஆரண்ய ஷேத்ரத்தில் நிலவுலகில் 108 திவ்ய தேவங்களும் திருக்கோயில்களாக அமைய பெறவுள்ளது. மற்றும் பாற்கடல், பரமபதம் ஆகிய இரண்டு திவ்ய தேசங்களில் வசிக்கும் ஸ்ரீமன் நாரயணனின் திருக்காட்சி 21000 சாளக்ராமஸ்வரூபமாக அமைய பெறவுள்ளது. இவ்வனைத்தும் எம்பெருமானின் அத்துணை அனுகிரஹம் இருந்தாலே இது சாத்தியமாகும். அககுண யோகி புண்ணியக் கோட்டி மதுரைமுத்து ஸ்வாமிகளுக்கு மலை போல் குவிந்து கிடக்கும் சாளக்ராம குவியலாக நிதர்சன காட்சி அளித்ததால் இந்த 108 திவ்ய தேசங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகின்றது. 

நிலஉலகின் 106 திவ்யதேசங்களில் ஸம்ப்ரோக்ஷணத்தை நம்மால் அந்த காலத்திற்கு சென்று காண பெறுவது சாத்தியமா? அவ்வாறு இருக்க இங்கு திருவடிசூலத்தில் 106 திவ்யதேசங்களுக்கு ஒரே நேரத்தில் ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது என்றால் இது மனித பிரயத்தனத்துக்கு அப்பாற்பட்டது. இறைவனுடைய பிரயத்தனத்துக்கு மட்டுமே உட்பட்டது ஆகும். 

108 திவ்யதேசங்கள் உலக வரலாற்றில் முதன் முறையாக சர்வ சக்திகள் ஒன்றினைக்கப்பட்ட பீடமான திருவடிசூலத்தில் அமையபெறுகின்றது. அன்னை மஹாசக்தி. முதன்முதலில் இப்புண்ணிய பாரதத்தில் தன் திருவடியை பதித்த ஆரண்ய ஷேத்திரமே திருவடிசூலம் என்னும் மஹாசேத்திரம் ஆகும். 

துவாபர யுகத்தில் அம்பாள் மகாமாயியாக அவதரித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணனனுக்கு துனை நின்று துஷ்டர்களை வதம் செய்கிறாள். சத்தி லோகமாக இருக்கின்ற இந்த கலியுகத்தில் அவள் அண்ணனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அவன் கலி அவதாரம் முடித்து இவன் அவதரித்து எங்கெல்லாம் நின்று வாக்குரைத்து அருள்பாலிக்கின்றாளோ அவளுக்கு அருகாமையில் அச்சாவதாரமாக நின்று மானிடருக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று பெற்றுகொண்ட சத்தியத்தினால் மகாவிஷ்ணுவின் கலி அவதாரமாக இருக்ககூடிய ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் அம்பாளின் கலியுக அவதாரமான கருமாரிக்கு நேர் பின்புறமாக அமர்ந்திருக்கிறார் திருவடிசூலத்தில். 

அம்பாள் தக்ஷயான யாகத்தின் போது பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சக்ரத்தால் 51 அவையங்களாக அறுபட்டு பூலோகத்தில் விழுந்து 51 சக்தி பீடங்கள் அமைய காரணமாகி நின்றாள். ஆக ஆங்காங்கே விழுந்த அவயங்கள் ஒன்றினைந்து ஒரே ரூபமாக விஸ்வரூபிணியாக 51 அடி உயரத்தில் அமர்ந்திருக்கிறார் திருவடிசூலத்தில்.

மஹாமாயியும் சர்வசக்தியின் அண்ணன் என்று அழைக்கப்படும் எம்பெருமான் நாராயணன் சர்வசக்தியினுள் ஐக்கியமாகி ஒன்றினைந்து ஸ்வாமிக்கு காட்சி அளித்ததால், சக்தியின் 51 அவயங்கள் ஒன்றினைக்கப்பெற்று ஒரே பீடமாக சர்வ சக்தியாகவும் எப்பெருமான் மகா விஷ்ணுவின் 106 திவ்ய தேசங்களின் சக்திகள் ஒன்றினைக்கப்பெற்று ஒரே இடத்தில் அமையபெரும் இந்த மகா சக்தியின் பீடமே சப்த சைலஜமத்ய பீடம், திருவடிசூலம். 

கிருஷ்ணனின் அனுகிரஹமும் கிருஷ்ணமாரியின் அனுகிரஹமும் கலியுக நாயகி கருமாரியின் அனுகிரஹமும் கலியுக நாயகன் எம்பெருமான் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாளின் அனுகிரஹமும் பெற்ற சர்வசக்தி பீடமே திருவடிசூலம்!

ஸ்ரீ பாதாத்ரி என்கின்ற திருவடிசூலத்தில் அமையப்பெற்றுள்ள 108 திவ்ய க்ஷேத்ர நூதன ஆலயங்களின் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷண வைபவம் ஏப்ரல் 5-ம் தேதி காலை 9.56-க்கு மேல் 10.26-க்குள் பல மகான்கள் சமய சான்றோர்கள், ஆன்றோர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றது. அன்று மாலை 4.30-க்கு திருக்கல்யாண மகோத்சவம் நடைபெறுகின்றது. பூர்வாங்க, யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் ஏப்ரல் 1-ம் தேதி துவங்குகின்றது. 

(செங்கல்பட்டு - திருப்போர் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது திருவடிசூலம்)