Monday, 2 April 2018

ராகுதோஷம் போக்க குன்றத்தூர் போங்க


கும்பகோணத்தை போலவே சென்னை குன்றத்துாரிலும், திருநாகேஸ்வரம் என்னும் பெயரில் கோயில் உள்ளது. இங்கு வழிபட ராகு தோஷம் நீங்கும். 

தல வரலாறு 

சிவபக்தரான 'சேக்கிழார்' தமிழ்ப்புலமையில் சிறந்தவராக இருந்தார். அவரை அனபாயச்சோழன் தலைமை அமைச்சராக நியமித்தார். திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் மீது ஈடுபாடு கொண்ட சேக்கிழார் தினமும் தரிசித்து வந்தார். இந்நிலையில் தன் சொந்த ஊரான சென்னை குன்றத்துாரில் நாகேஸ்வரர் என்னும் பெயரில் புதிய கோயிலை கட்டினார். இத்தலம் 'வடநாகேஸ்வரம்' என அழைக்கப்படுகிறது.

நாகதோஷ பரிகாரம்

ராகுவின் அம்சமான நாகேஸ்வரருக்கு தினமும் காலை 6:30, 10:00, மாலை 5:00 மணிக்கு பாலபிஷேகம் நடக்கிறது. நாக தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள், ராகுகாலத்தில் அபிஷேகம் செய்து, உளுந்து சாதம் படைத்து வழிபடுகின்றனர். மூலவருக்கு எதிரில் காமாட்சியம்மனின் தனி சன்னதி உள்ளது. நினைத்தது நிறைவேற, அம்மனுக்கு தை வெள்ளிக்கிழமைகளில் பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர். சித்ரா பவுர்ணமியன்று நாகேஸ்வரர், காமாட்சி அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.

வைகாசி பூசவிழா 

சேக்கிழார் சிவனை தரிசித்தபடி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். வலது கையால் சின்முத்திரை காட்டும் இவர், இடது கையில் ஏடு வைத்திருக்கிறார். இவருக்கு பூசம் நட்சத்திரத்தன்று அபிேஷகம் செய்கின்றனர். வைகாசி பூசத்தை முன்னிட்டு 10 நாள் குருபூஜை நடக்கும். சேக்கிழார் பிறந்த இடத்தில் தனி கோயிலும் உள்ளது. 

கனவில் வந்த சிவன் 

சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வரர் சற்று சேதம் அடைந்ததால், பக்தர்கள் அதை கோயிலிலுள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கடித்தனர். புதிதாக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தனர். துறவி ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மீண்டும் பழைய லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். பின், தீர்த்தத்தில் மூழ்கிய லிங்கத்தை எடுத்து பிரதிஷ்டை செய்தனர். புதிய லிங்கம் கருவறைக்கு பின்புறம் வைக்கப்பட்டது. இதை 'அருணாச்சலேஸ்வரர்' என்கின்றனர். கற்பக விநாயகர், காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, முருகனின் தளபதி வீரபாகு, வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

எப்படி செல்வது

* சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கி.மீ., 
* பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ.,

விசேஷ நாட்கள் 

சித்ராபவுர்ணமி 10 நாள் பிரம்மோற்ஸவம், வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூஜை, தைப்பூசம், ஆடிப்பூரம், மாசிமகம்.

நேரம்

காலை 6:30 - 12:00 மணி 
மாலை 5:00 - 09:00 மணி

தொடர்புக்கு 

044 - 2478 0436, 93828 89430

மாலை தேவையில்லை மனசு தான் தேவை



* பெரிய மாலை கடவுளுக்கு தேவை இல்லை. ஒரு பூவை மனத் துாய்மையுடன் காலடியில் வைத்தாலும் அன்புடன் ஏற்பார். 
* எங்கிருந்தாலும் உடன் இருப்பவருக்கு மகிழ்ச்சி தருபவரே பண்பு மிக்கவர். ஒருவர் சென்ற பிறகே மற்றவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் அவர் பண்பற்றவர்.
* மனமே கடவுளின் இருப்பிடம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவரின் அருளால் தான் வாழ்க்கை சக்கரம் இயங்குகிறது. 
* தினமும் தியானம் செய்வதால் மனம் பக்குவம் பெறும். துன்பம் நேரும் போது சமாளிக்கும் வல்லமை உண்டாகும்.
* லாபம் என மக்கள் கருதுபவை ஆன்மிகத்தில் கிடைக்காமல் போகலாம். ஆனால், ஆன்மிகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றதில் கிடைப்பதில்லை. 
* உள்ளத்தில் நிறைவு இருந்தால் உடலில் ஏற்படும் துன்பங்கள் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.
* மனிதர்கள் செய்யும் சமூகத்தொண்டு பெரிதாக தோன்றலாம். ஆனால், ஞானிகள் உலக நன்மைக்காக செய்யும் பிரார்த்தனையின் சக்தி அளப்பரியது. 
* எல்லா உயிர்களிடத்திலும் கடவுளை காணும் பாக்கியம் பெற்றவனே உண்மையான பக்தன். 
* விரதம் இருப்பதால் உடல், மனம் துாய்மையடைகின்றன. அப்போது கடவுளுக்காக கண் விழிப்பதோ, பட்டினி கிடப்பதோ சிரமமாக இருக்காது.

ஹேப் பி பெருமாள்


சுவாமியை காணும் பக்தர்கள் மகிழ்வது இயல்பு. பக்தர்களை கண்டு சுவாமி மகிழ்வதை பார்க்க... திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி, 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' கோயிலுக்கு செல்லுங்கள். 'ஹேப்பி பெருமாள்' என இவரை அழைக்கின்றனர். 

தல வரலாறு 

ராவணன் துாக்கி சென்ற போது, தன் ஆபரணங்களை, சீதை ஒவ்வொன்றாக கழற்றி, வழியில் போட்டுக்கொண்டே சென்றாள். மனைவியை தேடி ராமர் பாடகச்சேரி என்னும் இத்தலத்திற்கு லட்சுமணனுடன் வந்த போது, சீதையின் கொலுசு கிடக்க கண்டனர். 'பாடகம்' என்பதற்கு 'கொலுசு' என்பது பொருள். 
'இது பிராட்டியின் கொலுசு தான்' என்றார் லட்சுமணர். 'அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய்?' என ராமர் கேட்டார். 'நான் அண்ணியின் திருப்பாதம் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை' என்றார். உள்ளம் சிலிர்த்த ராமர், 'பாடகம் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்' என்றார். அதனால் இங்கு சுவாமிக்கு 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்று பெயர். பாடகம் கிடைத்த இடம் என்பதால் 'பாடகச்சேரி' எனப்பட்டது. 

திருவோண திருமஞ்சனம்

இந்தக் கோயில் விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் பாதியில் நின்றது. 2011ல்தான் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். திருவோண நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடக்கிறது. இதில் பங்கேற்றால் திருமணயோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும். இவரை வேண்டிக் கொள்ள தொலைந்த பொருள் கைவந்து சேரும். 
இத்தலத்தில் சவுந்தரநாயகி, பசுபதீஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள பாடகச்சேரி மகான் ராமலிங்க சுவாமிகளின் மடத்தில் ஆடிபூரத்தன்று குருபூஜையும், பவுர்ணமியன்று அன்னதானமும் நடக்கிறது. பல கோயில்களில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம்நடத்திய இவர், நாடி வரும் பக்தர்களின் நோய்களை குணப்படுத்தினார். இவருடைய ஜீவசமாதி சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி அருகில் உள்ளது.

எப்படி செல்வது 

* கும்பகோணம் - ஆலங்குடி வழியில் 14 கி.மீ.,
* கும்பகோணம் - மன்னார்குடி வழியில் வலங்கைமான் சென்று அங்கிருந்து 5 கி.மீ.,

விசேஷ நாட்கள் 

திருவோணம், வைகுண்ட ஏகாதசி

நேரம் 

காலை 6:00 - 10:00 மணி 
மாலை 5:00 - 8:00 மணி. 

தொடர்புக்கு: 97517 34868

அந்தாதி பாடிய அம்மையார்


அந்தாதி என்ற சொல்லை கேட்டதும் அபிராமிப்பட்டரின் 'அபிராமி அந்தாதி' நினைவுக்கு வரும். இதைப் போலவே சிவபெருமானுக்கும் அந்தாதி இருக்கிறது. பதினோராம் திருமுறையில் 'சிவபெருமான் திருவந்தாதி' இடம் பெற்றுள்ளது. இதை பாடியவர் கபிலதேவர். இது போலவே சிவன் மீது 'அற்புத திருவந்தாதி' என்றும் ஒரு பாடல் உண்டு. அதை பாடியவர் காரைக்கால் அம்மையார். இவரது பக்தியை கண்டு வியந்த சிவன், 'அம்மையே' என அன்புடன் அழைத்தார். இதனால் இவரை 'அப்பனை பாடிய அம்மை' என அழைப்பர்.

வண்டு சொன்ன நல்ல சேதி

Related image

அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை, அங்கிருந்த அரக்கிகள் துன்புறுத்தினாலும், விபீஷணனின் மகளான திரிசடை மட்டும் ஏதும் செய்யவில்லை. ஒருநாள் சீதையின் காதருகில் வண்டு ஒன்று ரீங்காரம் இட்டு சென்றதை கண்ட அவள், “அம்மா! அந்த வண்டு உங்கள் காதருகே வந்து ஏதாவது நல்ல சேதி சொன்னதா! என்னைப் பொறுத்தவரை இது நல்ல சகுனம் என கருதுகிறேன். உங்களுக்கு விடிவு காலம் நெருங்குவதை உணர்கிறேன்,” என்றாள். 

இது கேட்டு சோகம் மறந்த சீதை, “உன் பேச்சு தேன் போல காதில் பாய்கிறது. அமிர்தம் போல என் மனதுக்கு நலம் தருகிறது” என்றாள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் போதும். அவர்களின் மனதில் நம்பிக்கை துளிர் விட்டுவிடும்.

முருகப்பெருமானின் திருநாமங்களும், அருட்சிறப்பும்

முருகப்பெருமானின் திருநாமங்களும், அருட்சிறப்பும்

தமிழர்களின் வாழ்வியல் கூறுகளில் இறைவழிவாடு இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. இத்தகைய வழிபாடு தமிழர்களின் சமூக ஒருங்கிணைப்பையும் பண்பாட்டு நெறிகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. திருமால், சிவன், கொற்றவை, இந்திரன், முருகன் போன்ற தெய்வங்கள் சங்க தமிழர்களின் வாழ்வியல் வழிபாட்டுக்குரிய முதன்மை கடவுள்களாக திகழ்கின்றனர். இறைவனிடம் வேண்டும்போது ‘இறைவா எங்களை காக்க வேண்டும்’ என்று தான் வேண்டுகிறோம். எனவே காத்தலைக்குறிக்கும் உகரமே சிறந்தது என்பது உணரத்தக்கது. 

உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவே இறைவன் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார். அவை சரவண பொய்கையில் சேர்ந்தன. பின்னர் அவை ஆறு குழந்தைகளாயின அவற்றை கண்டு களிப்புற்ற உமாதேவி ஆறு குழந்தைகளையும் சேர்த்தெடுத்தார். 

ஆறு குழந்தைகளும் ஓர் உடலும், ஆறு முகங்களும், பன்னிரு கைகளும் உடையதாயின. அக்குழந்தைக்கு கந்தன் என்று பெயரிடப்பட்டது. கந்தன் என்றால் அழகன், முருகன் என்று பொருள். குமரன், குகன், விசாகன், சரவணபவன், காங்கேயன், கடம்பன், சண்முகம், ஆறுமுகன், சிவகுருநாதன், கதிர்வேலன், ஞானபண்டிதன், வேலாயுதன், தண்டாயுதபாணி, பழனியாண்டவர், செவ்வேள், சுப்பிரமணியன் என்று பல்வேறு பெயர்களும் உண்டு. 

ஆறு திருமுகங்களை கொண்ட முருகப்பெருமான் ஞானத்தின் கடவுள், சக்தியின் கடவுள், அன்பின் கடவுள், அருளின் கடவுள், வீரத்தின் கடவுள், வினைகளைகடந்த வேலையும், பயங்களைகளையும் மயிலையும் உடையவர் ஆவார். சச்சிதானந்தம் சிவம் என்றால் சத்து, உமை என்றால் சித்து, முருகன் என்றால் ஆனந்தம் இதுதான் சோமாஸ்கந்த மூர்த்தம். இதனால் முருகன் ஆனந்த வடிவம் என்பதும், அப்பரம்பொருளை வழிபட்டோர் ஆனந்தம் பெறுவர் என்பதும் உறுதி. 

முருகனது பேரறிவையும் பேராற்றலையும் புலப்படுத்தவே ஆறு தலைகளையும், பன்னிரு கைகளையும் உடையவராகவே அவரை உருவகம் செய்துள்ளனர் என மறைமலை அடிகள் கூறுகின்றார். முருகனின் பன்னிரு கைகளிலும் வெள்ளையாட்டுமறி, மயில், சேவல், வில், தோமரம், வாள், ஈட்டி, கோடாரி, கணிச்சி, மழுப்படை, மாலை, மண் ஆகியன உள்ளன. அவற்றுள் தீக்கடவுள் சேவலையும், இந்திரன் மயிலையும், கூற்றுவன் மறியையும் கொடுத்தனர். மற்ற தேவர்கள் பிறவற்றை வழங்கினர் என பரிபாடல் கூறுகிறது. 

முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரம் ‘சரவண பவ‘ ஆகும். நெற்றியில் தூயதிருநீரு அணிந்து இந்த ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து பக்தி செய்யும் ஒருவரையும் முருகன் என்றுமே கை விடுவதில்லை என்பது நம்பிக்கை. அருணகிரிநாதருக்கு குருவாக வந்து அருள் புரிந்தார். வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு குருவாக வந்து முருகப்பெருமான் அருள்பாலித்தார். இப்படி முருகப்பெருமான் குருவாக வந்து அருள்பாலிப்பார் என்பதை சுவாமி நாத வடிவம் உணர்த்துகிறது. குமரனே தனக்கு மகனாக வரவேண்டும் என்று ஈசனே வரம் கேட்டிருக்கிறார். அத்தகைய சிறப்புக்களை பெற்றுள்ள முருகன், பழனியிலே ஞானதண்டாயுதபாணியாகவும், குழந்தையாகரும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ராகு தோஷ பாதிப்பை குறைக்கும் திருநாகேஸ்வரம்

ராகு தோஷ பாதிப்பை குறைக்கும் திருநாகேஸ்வரம்

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனிக்கோவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ராகுபகவான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் தனது இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே பிருகு முனிவர் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தார். பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள்.

அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர். இறைவன் பெயர் நாகேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவியின் நாமம் பிறையணிஅம்மன். மகாசிவராத்திரி அன்று ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். இதனால் தினமும் சிவ தரிசனம் பெறவேண்டி தனது மனைவிகள் நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரத்தில் தங்கி விட்டார்.

பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, ராஜயோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.

இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கு பிறையணி வாநுதல் உமை சன்னிதி, கிரிகுஜாம்பிகை சன்னிதியும் உண்டு. இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு.

ராகுவை போல் கொடுப்பாரும் இல்லை. கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி. ஒருவர் ஜாதகத் தில் 3, 6, 11 ஆகிய இடங்களில் ராகு விளங்கினால் ராஜயோகம் கிட்டும்.

பரிகாரமுறை

ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வந்து விநாயகர், சிவன், கிரிகுஜாம்பாள் ஆகியோரை வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஹோமம், நாகசாந்தி செய்யலாம். 

கோவிலில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் விலகும். அதே போன்று வீட்டிற்கு நாகம் வந்தால் அவர்கள் பித்தளையில் நாக வடிவினை செய்து கோவிலில் வைக்க வேண்டும். நாகதோஷம் உள்ளவர்கள் கல்லால் ஆன நாக வடிவை வைத்து தோஷம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும்.

ராகு திசை கடுமையாக பாதித்தால் செவ்வாய்க்கிழமை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் துர்க்கை, காளியை வழிபடுவது நல்லது. உளுந்துசாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். நாகநாதருக்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும், துன்பங்களும் நீங்கி நாகநாதரின் பரிபூரண அருள் கிடைக்கும் கும்பகோணத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல அடிக்கடி பஸ்வசதி உள்ளது.