Tuesday, 1 May 2018

பதினாறு செல்வங்களும் அருளும் பஞ்சநதீஸ்வரர்


புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை அருகே உள்ளது திருவாண்டார்கோவில். நடுநாட்டைச் சேர்ந்த திருவாண்டார்கோவில் திருவடுகூர், திருவாறையுடை, திருவையாறு திருபுவனை, மாதேவி, சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. 

சோழர்கால கோயில்: 

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் முதலாம் பராந்தக சோழ மன்னன் காலத்தில் கிபி 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பரகேசரி என்னும் உத்தம சோழன் இராசகேசரி என்னும் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களாலும், விஜயநகர அரசர் விருப்பண்ணர், வீரபுக்கர், சாளுவ நரசிம்மன், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் என்னும் விஜயநகர் மன்னர்களாலும் ராஷ்டிரகூடர், கன்னர், தேவர் மூன்றாம் கிருஷ்ணராலும் பராமரிக்கப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்ட சிறப்பினை உடையதாகும். திருவடுகூர் என்று திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற பெருமையும் இதற்கு உண்டு. 

கும்பாபிஷேகம்:   

வடுகபைரவர் என்னும் பிரம்மன் வழிபட்ட திருக்கோயில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு இந்த கோயிலில் அருள்பாலிக்கும் இறைவன் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் என்றும், பரமசுவாமி என்றும், வடுகூர் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி திரிபுரசுந்தரி என்றும், வடுகையர் கன்னி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த திருக்கோவிலுக்கு கடந்த 1985ஆண்டும் 1991ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து  27 ஆண்டுகளுக்கு பிறகு 30.03.2018 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கோயில் அமைப்பு: 

இத்திருக்கோவில் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்படுகிறது. நுழைவு வாயிலுக்கு வெளியில் கருங்கல்லால் அமைக்கப்பட்ட நந்தி உள்ளது. இராஜகோபுரம் இல்லாத கட்ட கோபுரம் நுழைவு வாயிலை கடந்து சென்றால் கொடி மர மேடை, நந்தி, பலி பீடங்கள் ஆகியவற்றுடன் பதினெட்டாங்கால் மண்டபம் ஒன்றை காணலாம் இதில் தான் தெற்கு நோக்கி அமைந்த தேவி திருக்கோவில் உள்ளது. இந்த மண்டபத்தை கடந்து சென்றால் முழுத்தூண்களும், அரைத்தூண்களுமாக 8 தூண்களை கொண்ட அர்த்த மண்டபம் உள்ளது. கருவறை சதுர வடிவில் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது மூலஸ்தானத்தில் சந்திரசேகரர், திரிபுரசுந்தரி, கணபதி, திருநாவுக்கரசர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் காணப்படுகின்றன பிரகாரத்தை வலம் வரும்போது பிரகாரத்தில் நால்வர் திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 

கன்னி மூலையில் தனிக்கோயிலில் வலம்புரி விநாயகர் அருள் பாலிக்கிறார். திருதி மூலையில் ஆறுமுக கடவுள் வள்ளிதெய்வானையுடன் காட்சி தருகிறார். தெற்கு நோக்கிய மாடங்களில் பிச்சாடனர், பிள்ளையார், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும், மேற்கு நோக்கிய மாடத்தில் லிங்கோத்பவரையும், வடக்கு நோக்கிய மாடங்களில் பிரம்மா, எட்டு கரங்களோடு கோரப்பல் இல்லாத நிலையில் சாந்த மூர்த்தியாக விளங்கும் துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், இடபாருடர் ஆகியோரையும் கண்டு தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் சண்டேசர் கோவில் உள்ளது. வடகிழக்கே பைரவர் மண்டபமும், கிழக்கே சூரிய மண்டபமும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் சிற்பங்களையும் அமைப்பையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள் இதனை முதலாம் பராந்தகச் சோழன் காலத்து திருப்பணி என்று கூறியுள்ளனர். 

சிறப்புகள்: 

இந்த கோயிலில் மட்டும் 19 கல்வெட்டுகள் இருக்கின்றன. முதலாம் பராந்தக சோழன் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவன். அவனுக்கு அடுத்து முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகிய சோழமன்னர் காலத்தில் சிறந்து விளங்கியது. திருவாண்டார்கோவில் முதலாம் ஆதித்தசோழன் ஆட்சி காலத்திலிருந்தே சீரும், சிறப்புமாக விளங்கி வந்துள்ளது. பஞ்சநதீஸ்வரரை தரிசனம் செய்தால் பதினாறு செல்வங்களும் நம்மை வந்து சேரும். வாழ்க்கை வளமாகும். பெண்கள் மனமுருகி இறைவனை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

செல்வது எப்படி?

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவாண்டார்கோவில் என்ற இடத்தில் சாலையின் வடபுறத்தில் இந்தக்கோயில் அமைந்துள்ளது.

பாட்டு வந்ததும் விதை முளைத்தது


மகான் மத்வர், ஒருமுறை கோவா வந்தார். அங்குள்ள மக்களுக்கு சங்கீதத்தின் மீது அலாதி பிரியம். சங்கீதத்தைக் கேட்டு, பயிர்கள் அதிக விளைச்சலை தருகின்றன என்று வேளாண்மைத் துறையினர் சொல்வதை, சாஸ்திர ரீதியாக நம்பினர். பாட முயற்சித்து பயிர் வளராமல் போனால் அவமானம் நேருமே என யாரும் சோதித்து பார்க்க விரும்பவில்லை.  மத்வரிடம் மக்கள் தங்கள் ஆசையைக் கூறினர்.

“ஆச்சாரியரே! சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள இக்கருத்து உண்மைதானா?” என்றனர். “அதிலென்ன சந்தேகம். நமது சாஸ்திரங்கள் சொல்லும் அத்தனையும் உண்மையே. விளைந்த பயிர்கள் மட்டுமல்ல; சங்கீதம் கேட்டு, நம் கையில் வைத்திருக்கும் விதை கூட முளைக்கும்,” என்றார்.

உடனே ஒரு விதை கொண்டு வரப்பட்டது. அதை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, தேனினும் இனிய பாடலைப் பாடினார். ஒரு கட்டத்தில் அந்த விதை அசைந்தது. சற்றுநேரத்தில் முளைவிட்டது. இப்போது புரிகிறதா.. சங்கீதத்தால் பயிரை விளைவிக்கலாம்.

காமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

காமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. இது பெரும்பாலும் பல வீடுகளில் இருக்கும். காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்? அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்? என்பதை இப்போது காணலாம்.

* உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர், காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.

* காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, ‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடுவார்கள். அதற்கு ‘காமாட்சி தீபம்’ என்று பெயர்.

* அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள். திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான் காரணம். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

* மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும்.

* மணப்பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும் போது, காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குவார்கள்.

* சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கு, இந்த காமாட்சி அம்மன் விளக்கு.

மருது அளித்த விருது


மருதுபாண்டிய மன்னர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிவன் கோயிலுக்கு புதிய தேர் செய்ய உத்தரவிட்டார். தச்சர்கள் மரம் தேடி அலைந்தனர். சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய திருத்தலமான பூவணநாதசுவாமி கோயிலில் ஒரு மருத மரம் இருந்தது. தேர் செய்வதற்கு அதை வெட்ட முடிவெடுத்து ஆட்களும் வந்தனர். மரத்தை வெட்ட அர்ச்சகருக்கு மனமில்லை. 

''மன்னரின் மீது ஆணை! இந்த மரத்தை யாரும் வெட்டக்கூடாது'' என கத்தினார் அர்ச்சகர். பணியாளர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். விஷயமறிந்த மன்னருக்கு கோபம் வந்தது. 

''என் கட்டளையை மீறும் அதிகாரம் அர்ச்சகருக்கு எப்படி வந்தது'' என விரைந்தார். மன்னரின் வருகையை அறிந்த அர்ச்சகர், சிவனை வணங்கி விட்டு, ''மன்னா! உங்களை போலவே இந்த மருத மரமும் குளிர்ந்த நிழல் கொடுக்கிறது. இதன் நிழலில் தங்கும் போதெல்லாம் தங்களின் நல்லாட்சியே நினைவிற்கு வருகிறது. அதனால் தான் மரத்தை வெட்ட மனமில்லை,'' என்றார். மன்னரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவரை பாராட்டிய மன்னர், பரிசளித்து விட்டு புறப்பட்டார். மன்னரிடம் விருது பெற்றது போல அர்ச்சகர் மனம் மகிழ்ந்தார். 

இந்த வார விசேஷங்கள்- 1.5.2018 முதல் 7.5.2018 வரை

இந்த வார விசேஷங்கள்- 1.5.2018 முதல் 7.5.2018 வரை

1-ந் தேதி (செவ்வாய்) :

* உழைப்பாளர் தினம்.
* மதுரை கள்ளழகர் காலை மோகன அவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலக் காட்சி.
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் இரவு சந்திர பிரபையில் பவனி.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் விைடயாற்று உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

2-ந் தேதி (புதன்): 

* முகூர்த்த நாள்.
* மதுரை கள்ளழகர் அதிகாலை திருமலைக்கு எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் பவனி.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

3-ந் தேதி (வியாழன்)

* சங்கடஹர சதுர்த்தி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காலை ேமாகன அவதாரம், மாலை அனுமன் வாகனத்தில் வீதி உலா.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், தங்கப்பல்லக்கில் பவனி வருதல்.
* இன்று விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பு தரும்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (வெள்ளி)

* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
* முகூர்த்த நாள்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கண்ணாடி பல்லக்கில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் சூர்ணாபிஷேகம், இரவு புண்ணியகோடி விமானத்திலும், யானை வாகனத்திலும் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரி சனம்.
* கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (சனி)

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் ஆலயத்தில் ரத உற்சவம்.
* சமயபுரம் மாரியம்மன் வசந்த மண்டபம் எழுந்தருளும் உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பல்லக்கில் வெண்ணெய் தாழி சேவை, மாலை குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.
* சிரவண விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* சென்னை சென்னகேசவப் பெருமாள் தங்கப் பல்லக்கிலும், புண்ணிய கோடி விமானத்திலும் பவனி.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* கீழ்திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் திருவீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
* மேல்நோக்கு நாள். 

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது தெரியுமா?

Buddha_Statue_5

உலகில் சிலைகளாக அதிகம் வைக்கப்பட்ட மனிதர் என்றால் அது புத்தர் தான். விதவிதமாக பல நிலைகளில் புத்தர் சிலைகள் சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவற்றிற்கெல்லாம் சிகரம் தொட்டதுபோல ஒரு சிலை சீனாவில் இருக்கிறது. அச்சிலைதான் உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையாகும். இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்கப்பட்டது.

சீனாவின் தெற்குப் பகுதியான லெசான் நகரத்தின் பிரம்மாண்ட மலையை குடைந்து இந்தப் பிரம்மாண்ட புத்தர் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது. Leshan Giant Buddha என்று அழைக்கப்படும் இச்சிலையை உலகின் பாரம்பரியச் சின்னமாக 1996ஆம் ஆண்டு டிசம்பரில் யுனெஸ்கோ அறிவித்தது.

இச்சிலை உருவாக்கிய பின் ஏற்பட்ட ஆச்சரியம் என்றால் அது இதுதான்

புத்தர் சிலை அமைந்திருக்கும் லெசான் மலைப்பகுதியைச் சுற்றி 'மின்சியாங்" என்ற ஆறு ஓடுகிறது. தற்போது அமைதியாக ஓடும் இந்த ஆறு கி.பி. 7-ம் நூற்றாண்டில் அதிக சப்தத்துடன், அதிகமான இழுப்பு சக்தியுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ஆற்றைக் கடப்பதும், படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவதும் அப்பகுதி மக்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

அதனால் அப்பகுதி மக்கள், 'ஹை டாங்" என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். அந்தத் துறவி, ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொன்னார். மக்களும், சிலை வடிப்பதற்கான பணியைத் தொடங்கினர்.

கி.பி.713-ல் தொடங்கிய இந்தப் பணி, வெகுவிரைவாக நடைபெற்றது. புத்தரின் சிலை பாதி வடிக்கப்பட்ட நிலையில், அந்த துறவி இறந்து போனார். அதனால் சிலை வடிப்பு பணிகளில் தடை ஏற்பட்டு நின்றே போனது. ஆனால் மின்சியாங் ஆற்றின் ஆக்ரோஷம் மட்டும் நிற்க வில்லை.

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னர், லெசான் நகரை பார்வையிட வந்த அந்தப் பகுதியை ஆட்சி செய்த டாக் வம்ச ஆளுநர் சிலையைப் பற்றி அறிந்த பிறகு, டாங் டைனஸ்டி அவரது முயற்சியால் கி.பி.803-ல் புத்தர் சிலை முழு வடிவம் பெற்றது. இதில் ஆச்சரியமிக்க விஷயம் என்னவென்றால், சிலை முழுமை பெற்றதுமே.. ஆக்ரோஷமான மின்சியாங் ஆறு அமைதியின் மறு உருவாக மாறிவிட்டதாம்.

சிலையின் அமைப்பு

இந்த புத்தர் சிலையின் தலையில் 1,021 சுருள் முடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் மலையின் பாறையிலேயே அமைக்கப்பட்ட இந்த புத்தரின் காதுகள் மட்டும் மரத்தால் ஆனது. இப்படி காதுகளை மட்டும் மரத்தில் செய்து இணைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். இதற்காக மட்டும் சுமார் 1,000 பேர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்த புத்தர் சிலையை காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை புத்தரை ரசித்தபடியே செல்ல பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு நீண்ட வரலாறு மற்றும் உலகளாவிய புகழ் பெற்ற புத்தரின் புனரமைப்பு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், 1963-ம் ஆண்டுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக சீன அரசாங்கத்தால் இந்த பிரம்மாண்ட புத்தர் சிலை அழிக்கப்பட்டது. தற்போது யுனெஸ்கோவின் ஆய்வாளர்களின் கீழ் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விளம்பி வருடத்தில் வரும் அமாவாசை விரத நாட்கள்

விளம்பி வருடத்தில் வரும் அமாவாசை விரத நாட்கள்

சித்திரை    02 (15.04.2018) -    ஞாயிறு
வைகாசி    01 (15.05.2018) -    செவ்வாய்
வைகாசி    30 (13.06.2018) -    புதன்
ஆனி    28 (12.07.2018) -    வியாழன்
ஆடி    26 (11.08.2018) -    சனி
ஆவணி    24 (09.09.2018) -    ஞாயிறு
புரட்டாசி    22 (08.10.2018) -    திங்கள்
ஐப்பசி    21 (07.11.2018) -    புதன்
கார்த்திகை    20 (06.12.2018) -    வியாழன்
மார்கழி    21 (05.01.2019) -    சனி
தை    21 (04.02.2019) -    திங்கள்
மாசி    22 (06.03.2019) -    புதன்
பங்குனி    21 (04.04.2019 -    வியாழன்