Tuesday, 29 May 2018

இது தான் புதையல் யோகம்

நோயில் வாடிய விவசாயி தன் மகன் முருகனை அழைத்தார்.  '' நான் சொல்றதைக் கேளப்பா! என் காலத்திற்கு அப்புறமா வயலை யாருக்கும் வித்திடாதே! அங்கே புதையல் வச்சிருக்கேன். எந்த மூலையில இருக்குதுன்னு ஞாபகமில்லே! ஒரு இடம் பாக்கி இல்லாம கலப்பையால நல்லா உழுதிடு. புதையல் யோகம் கிடைக்கும்'' என்று சொல்லி விட்டு உயிர் விட்டார். இந்த ரகசியத்தை அவன் அம்மாவிடம் கூட சொல்லவில்லை. ஒருவாரம் கழிந்தது.அப்போது கோடை மழை கொட்டியது.

அந்த நேரத்தில் முருகன் கலப்பையுடன் புதையலைத் தேடி வயலுக்குப் போனான். அதைக் கண்ட முருகனின் அம்மா, ''கணவர் இறந்ததும், மகனுக்கு நல்ல புத்தி வந்திருச்சு '' என எண்ணினாள். வயலில் ஒரு மண்கட்டியைக் கூட விட்டு வைக்கவில்லை. 

மூலை முடுக்கெல்லாம் ஆழமாக உழுதான். புதையல் கிடைத்தபாடில்லை. அப்பா மீது கோபம் எழுந்தாலும், வெளிப்படுத்தவில்லை. அடுத்தடுத்த வயல்களில் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பித்தனர். உழுதது வீணாகாமல் இருக்க, முருகனும் விதைத்தான். விதைகள் முளைவிட்டதைக் கண்டு மகிழ்ந்தான். ஆர்வமுடன் பயிர்களைப் பாதுகாத்து நீர் பாய்ச்சினான். 

அறுவடை நாள் நெருங்கியது. எதிர்பார்த்ததை விட இருமடங்கு விளைச்சலோடு, நிறைய பணம் வர மகிழ்ச்சியாக வாழ்ந்தான். உழைப்பின் அருமையைத் தான் 'புதையல் யோகம்' என்று அப்பா சொன்னது அவனுக்கு புரிந்தது.

Monday, 28 May 2018

மூகாம்பிகையை எப்படி வர்ணித்து பாடி வழிபட வேண்டும்?

மூகாம்பிகையை எப்படி வர்ணித்து பாடி வழிபட வேண்டும்?

கொல்லூர் மூகாம்பிகையை நேரில் பார்த்து வழிபடும் அரிய வாய்ப்பு கிடைத்தால், அவளிடம் மனம் விட்டுப் பேசத் தயங்காதீர்கள். அவளிடம் உரிமையாடு உங்கள் உள்ளத்து குமுறல்களை கொட்டுங்கள். அப்படியே திரும்பி வந்து விடாதீர்கள்.

நாலு வார்த்தை நல்ல விதமாக புகழ்ந்து பேசுங்கள். மூகாம்பிகை மகிழ்ச்சி அடைவாள். அவள் மனம் குளிரும் போது நமக்கு வேண்டியதை எல்லாம், கேட்டதை எல்லாம் தருவாள்.

அம்மா... தாயே... ஈசுவரி என்பதைத் தவிர அவளை புகழ வேறு எதுவும் தெரியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். உங்களுக்காகவே கீழ்கண்டதை கொடுத்துள்ளோம். அன்னையை வர்ணித்து படியுங்கள். நல்லதே நடக்கும்.

ஜெயந்தி, மங்களா, காளி, பத்ரகாளி, கபாலினி, துர்க்கா, சமா, சிவா, தாத்ரி, ஸ்வாகா, ஸ்வதா என்று பல்வேறு விதமான நாமதே யங்களைப் பெற்றவளே! உனக்கு என் நமஸ்காரம்.

மது என்னும் அசுரனையும், கைடபன் என்னும் அசுரனையும் நாசம் செய்தவளே! நான்முகனுக்கு அருள்புரிந்தவளே! உனக்கு என்னுடைய நமஸ்காரம். எனக்கு நல்ல வடிவினை அளிப்பாய். வெற்றியை அளிப்பாய், புகழைக் கொடுப்பாய். என் எதிரிகளை அழிப்பாய்! அப்படிப்பட்ட வல்லமை உடைய உனக்கு என் நமஸ்காரம்.

உலகத்தில் உள்ள அனைவராலும் வணங்கப்படக் கூடிய பாத கமலங்களை உடையவளே! தேவர்களுக்கு அசுரர்களினால் ஏற்படும் பயத்தினை விரட்டியடித்து அவர்களுக்கு வெற்றி என்னும் சவுபாக்கியத்தினை அளிப்பவளே! உனக்கு என் நமஸ்காரம்.

மகிசாசூரன் என்னும் அசுரனைக் கொன்று பூமியைக் காப்பாற்றுபவளே! நான்முகனுக்கு நல்ல வரங்கள் பலவற்றை அளிப்பவளே! உனக்கு என் நமஸ்காரம்!
பக்த பீஜன் என்னும் அசுரனைக் கொன்ற தேவியே! சண்டன் என்னும் அசுரனையம், முண்டன் என்னும் அசுரனையும் வதம் செய்தவளே! எண்ண முடியாத அர்தான வடிவம் பெற்றவளே! எல்லாவிதமான எதிரிகளையும் நாசமாக்குபவளே!

பரப்ருஹ்ம ஸ்வரூபிணியாக விளங்கும் சண்டிகையே! எப்போதும் எவர் உன்னைப் பக்தியுடன் வணங்குகின்றார்களோ அவர்களுக்கும், உன்னை எப்போதும் வணங்கும் எனக்கும் அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைத் தரவேண்டும். புகழைத் தரவேண்டும் என் எதிரிகளை அழிக்க வேண்டும்.

சண்டிகை தேவியே! வியாதியினை முற்றிலும் ஒழிப்பவளே! பக்தியின் காரணமாக உன்னை வணங்குவோருக்கு நல்ல அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைக் கொடுக்க வேண்டும்.

சண்டிகையே! யார் உன்னை எப்போதும் பக்தியுடன் அர்ச்சனை செய்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைக் கொடுக்க வேண்டும்.

தேவி, சகல விதமான பாக்கியங்களையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். பேரின்பமாகிய பரம சுகத்தினையும் அளிக்க வேண்டும்.

எதிரிகளுக்கு நாசத்தைக் தர வேண்டும். பிரமாண்டமான செல்வ வளத்தைத் தர வேண்டும்.


தேவி, மங்களமான விஷயங்களை அருள வேண்டும். பிரம்மாண்டமான செல்வ வளத்தைத் தர வேண்டும்.
கல்வியில் சிறந்தவனாகவும், புகழ் பெற்றவனாகவும், நிறைந்த செல்வம் உடையவனாகவும் என்னை மாற்றி அருள வேண்டும்.

மிகவும் பிரபலமான அசுரர்களுடைய கர்வத்தினை அழித்தவளே! சண்டிகையே, உன்னை நமஸ்கரிக்கும் எனக்கு நல்ல குணத்தினைத் தருவாய், மகிழ்ச்சியைக் கொடுப்பாய்.

நான்கு கைகளைப் பெற்றவளே! நான் முகனால் துதி செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவி, அம்பிகையே! இடைவிடாமல் நீ கிருஷ்ணனால் துதி செய்யப்பட்டவளே!

பார்வதியின் கணவரான பரமேஸ்வரரால் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவர்களும், அரக்கர்களும் தங்கள் மணி முடியில் உள்ள ரத்னங்கள் கீழே புரளும் வண்ணம் தொட்டு வணங்கத்தக்க திருப் பாத கமலங்களை உடையவளே! அம்பிகையே!

இந்திராணியின் கணவனான இந்திரனால் உள்ளன்புடன் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவி, கொடிய புஜ பல பராக்ரமம் மிகுந்த அசுரர்களுடைய கர்வத்தினை நாசம் செய்தவளே!

தேவி, எவ்வித உறவுகளும் அற்ற பக்தர்களுக்கு பரமானந்த மூலமான மோட்ச சாம்ராஜ்யத்தை அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தவளே! அம்பிகையே!

மனத்திற்கு இனிமையைத் தரக் கூடியவளாகவும் 

மனத்தின் போக்கினை அறிந்து நடப்பவளாகவும் 

கடக்க முடியாத சம்சார சாகரத்தினைக் கடப்பதற்கு உதவி புரிபவளாகவும் 

நல்ல குலத்தில் உதித்தவளாயும் உள்ள மனைவியை அளிக்க வேண்டும்.

மூகாம்பிகையை வழிபடும் போது இதை படித்த பிறகே மகா ஸ்தோத்திரமான தேவி மகாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். இதைப் படிப்பதன் மூலம் மிகச்சிறந்த பலன்கள் உண்டாகும்.

சிக்கலான நோய் தீர்க்கும் சிந்தாமணி வைத்தீஸ்வரர் கோவில்

சிக்கலான நோய் தீர்க்கும் சிந்தாமணி வைத்தீஸ்வரர் கோவில்

அம்மனின் பாதங்கள் கொண்ட கோவில், சோழப்பேரரசியின் பெயரால் உருவான திருத்தலம், சித்தர் சமாதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.

இந்த இறைவன் முன்காலத்தில் குலோத்துங்கச் சோழீஸ்வரமுடைய மகாதேவன் என்று அழைக்கப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. தினசிந்தாமணி என்ற பேரரசியின் பெயரால் அழைக்கப்பட்ட இவ்வூர், இன்று ‘சிந்தாமணி’ என்று வழங்கப்படுகிறது. முதலாம் குலோத்துங்கசோழனின் பேரரசி மதுராந்தகி. இவளுக்கு தினசிந்தாமணி என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. இவளின் பெயரால் சோழமன்னன் உருவாக்கிய தலமே இன்றைய சிந்தாமணி

ஆலயஅமைப்பு :

ஊரின் கடைக்கோடியில் வயல்வெளிகள் சூழ இயற்கையான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், ராஜகோபுரம் ஏதுமில்லை என்றாலும், விசாலமான இடத்தில் ஆலயம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் வேம்பும், அரசும் காணப்படுகின்றன. அருகே விஸ்வரூப அனுமன் வணங்கிய நிலையில் காட்சிதருகிறார். அருகே, நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. சற்று நடந்ததும், அம்மன் சன்னிதி தனிச் சன்னிதியாக கிழக்கு முகமாய்க் காட்சியளிக்கிறது. அன்னை தையல்நாயகி என அழைக்கப்படுகின்றாள். சன்னிதியின் எதிரில் அம்பிகையின் பாதக் கமலங்கள் தனி பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன.

இதனைக் கடந்த பின் சுவாமி சன்னிதி வருகிறது. பெரியநந்திதேவர் இறைவனை நோக்குகிறது. மகாமண்டபம் கடந்ததும், கருவறை முன்மண்டபம், கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் நீண்ட லிங்கத் திருமேனியராக இறைவன் காட்சிதருகின்றார். குலோத்துங்கச் சோழீஸ்வரமுடையமகாதேவரின் இன்றைய பெயர் வைத்தீஸ் வரர். இங்கு வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதால் இந்த திருநாமத்தைப் பெற்றுள்ளார். இந்தத் திருமேனியும், கோட்டத்தில் அமைந்துள்ள திருமேனிகளும், சுவாமி சன்னிதியும் மட்டுமே பழமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன.

இவ்வாலயத்தின் சிறப்பு, இங்கு வடிக்கப்பட்டுள்ள சிலா வடிவங்கள அனைத்தும் கலைநயத்தினை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்துவதாகும். நர்த்தன விநாயகர், ஊர்த்துவத் தாண்டவம், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அடிமுடிதேடும் காட்சி, பிரம்மன், அம்மையப்பன், துர்க்கை, காலபைரவர் போன்ற சிலா வடிவங்கள் வெகுசிறப்புடன் அமைந்துள்ளன. இவை சோழ மன்னர்களின் காலத்தை உறுதி செய்கின்றன.

இது தவிர விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் சன் னிதிகளும் அமைந்துள்ளன. இந்த முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்கிறார்கள். சித்திரகுப்தர், விசித்திரகுப்தர் சன்னிதி சிறிய அளவில் உள்ளது. இவர்கள் எமபயம் போக்கி, உடல்நலம், தருபவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். ஆலய தீர்த்தம் திருக்கோவிலின் ஊறல் குளம். இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், சிக்கலான நோய்கள் கூட விலகி விடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரங்களில் துர்க்கை பூஜை, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் பால்குட விழா என அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

சித்தர் பீடம் :

ஆலயத்தின் ஈசான்ய மூலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமான ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. இவரின் மீது பஞ்சபூதேஸ்வரர் திருமேனியும், ஞானவிநாயகர், நாகங்கள் திருமேனியும், அரசமரமும், வேப்பமரமும் அமைந்துள்ளன. இவரை பவுர்ணமி தினத்தில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவரை வணங்கும் போது பலவித வாசனைகள் வருவதைச் சிலரால் மட்டுமே உணர முடியும் என்று கூறுகிறார்கள். 

அமைவிடம்:

விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சாலையோர ஊராக சிந்தாமணி அமைந்துள்ளது. விழுப்புரம், திண்டிவனத்தில் இருந்து எண்ணற்ற பேருந்து வசதி உள்ளது.

பூலித்தேவனுக்கு அருள் செய்த வேலப்ப தேசிகர்

பூலித்தேவனுக்கு அருள் செய்த வேலப்ப தேசிகர்

ஆதித் திருமுறையை அடித்தளமாக வைத்து திருகயிலாய பரம்பரை என உருவாகியது தான் திருவாவடுதுறை. இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர் திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லையில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தோடு, நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்.

வேலப்ப தேசிகர் தமது அருளாட்சி காலத்தில் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்று, அத்தல இறைவனை மனதார வணங்கி அங்கே முகாமிட்டு தங்குவார். அப்போது ஆலயத்திற்கு வருகைதரும் அனைத்து மக்களுக்கும் உடலில் ஏற்படும் நோய்களை தீர்த்ததுடன், மனதால் ஏற்படும் நோய்களையும் நீக்கிவைப்பார்.

இந்தப் பகுதியை ஆண்டுக்கொண்டிருந்த பூலித்தேவன், வேலப்ப தேசிகரை குருவாக ஏற்றுக்கொண்டார். எப்போதுமே வேலப்ப தேசிகரை வணங்கிய பின்பே, தனது தினசரி காரியங்களை கவனிப்பார். அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டு வந்தார்.

ஒருசமயம் பூலித்தேவருக்கு குன்ம வலி ஏற்பட்டது. இந்த வலியை சுவாமி தனது தவவலிமையால் போக்கினார். எனவே, சுவாமியின் ஆன்மிக பணிக்கு பூலித்தேவன் பல நிலங்களை வழங்கினார். அந்த நிலங்களில் மடம் அமைத்து, சுவாமி அருளாட்சி நடத்தினார்.

காலங்கள் கடந்தது. சித்தர் பெருமக்களுக்கு தன் உடலை துறந்து மறு உடலுக்கு செல்வதில்தான் எத்தனை அலாதி பிரியம் உண்டு. இதுபோலவே வேலப்ப சுவாமி சமாதி கொள்ளத் தீர்மானித்தார். தனது சீடன் பூலித்தேவனிடம் கூறி ‘சங்கரன் கோவில் மேலவீதியில் எனக்கு பூமிக்குள் தவமிருக்க ஏற்பாடு செய்’ என்றார். அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

புரட்டாசி மாதம் மூலநட்சத்திரத்தில் அவர் மடத்தில், பூமிக்கு உள்ளே எழுப்பப்பட்ட குழிக்குள் உயிரோடு சென்று சமாதி நிலை அடைந்தார். அதன் மேலே சமாதி எழுப்பப்பட்டது.

இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வசித்த செல்வந்தர்கள் சமாதியை எப்படியும் இங்கிருந்து அகற்றி விடவேண்டும் என்று துடியாய் துடித்தனர். ‘மக்கள் குடியிருக்கும் இடத்தில் சமாதியா? கட்ட விடமாட்டோம்' என்று திரண்டு நின்றனர்.

பூலித்தேவன் விடவில்லை. தனது உறவினர்களையும், காவலர்களையும் கூட்டி வந்து சுவாமி சமாதியைக் காப்பாற்றினார். செல்வந்தர்களோ, எங்கள் உயிரே போனாலும் பின்வாங்க மாட்டோம் என்று எதிர்த்து நின்றனர். ஆகவே, கலகம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இருபக்கமும் சரி சமமாக மோதும் நிலை. ஒரு பக்கம் பூலித்தேவன் பட்டாளம். மறுபக்கம் செல்வந்தர்கள் பட்டாளம். என்ன நடக்க போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்களை யார் சமாதானம் செய்வார்கள் என்பதும் புரியாத நிலை. அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அடக்க ஸ்தலத்தில் இருந்த சுவாமி ஸ்ரீ வேலப்ப தேசிகர், திடீரென்று பூமிக்கு மேலே வந்து நின்றார்.

இருதரப்பினரும் அதிர்ந்தனர். ‘நான் எங்கே சமாதி ஆகி இருக்கிறேன்..? உயிரோடு தான் இருக்கிறேன். நான் சமாதி ஆனால் தானே பிரச்சினை’ என்று கூறினார்.

இருதரப்பினரும் அதிர்ந்தனர். ஆகா.. இதுவரை சுவாமிகள் அடக்கம் ஆக வில்லை. ஐம்புலன்களையும் அடக்கி தவநிலையில்தான் இருந்துள்ளார் என ஆனந்தம் அடைந்தனர். அதன் பிறகு அனை வரும் சமாதானமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

தற்போது கூட வேலப்ப தேசிகர் ஜீவசமாதியாக உள்ளார் என்று யாரும் நம்பவில்லை. சுவாமி உயிரோடு அமர்ந்து தியானத்தில் இருந்தப்படியே அருளாசி தருகிறார் என்றே நம்புகிறார்கள்.

வேலப்ப தேசிக சுவாமிகள் சமாதி அடைந்தபிறகு, பூலித்தேவனுக்கு ஒரு சூழ்நிலையில் உதவினார். அது பூலித்தேவன் வரலாற்றில் நடந்த பிரமிப்பான ஒரு நிகழ்வு.

1767-ல் பிரிட்டிஷ் தளபதி டொனர்டு பெரும்படை திரட்டி வந்து, நெற்கட்டான் செவல் கோட்டையை தகர்த்தான். மாவீரன் பூலித்தேவனைக் கைது செய்து பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சங்கரநயினார் திருக்கோவிலின் வாசலுக்கு வந்த பூலித்தேவன், ‘இறைவனை வழிபட வேண்டும். எனக்கு அனுமதி தாருங்கள்' எனக் கேட்டார்.

அதன் படி இறைவனை வழிபட பூலித்தேவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன், திடீரென்று ஏற்பட்ட புகையால் காணாமல் போய் விட்டார். அதன்பின் ஆங்கிலேயரால் அவரை பிடிக்கவே முடியவில்லை. இந்த உலகுக்கும் அவர் தென்படாமல் மாயமாக மறைந்து விட்டார்.

எப்படி இது நடந்தது?. இது நடக்க யார் காரணம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு வேலப்ப தேசிகர் மூலமாகவே விடை கிடைத்தது.

பூலித்தேவனை கைது செய்து, ஆங்கிலேயர்கள் இழுத்து வந்தபோது, ஸ்ரீ வேலப்பதேசிகர் கோவில் முன்பு கொண்டு வந்தனர். அங்கே ஒரு நிமிடம் பூலித்தேவன் நின்று, தனது குருவை நோக்கி மனதுருக வேண்டினார். ‘நான் மானத்தோடு வானம் செல்லுதற்கான வரத்தைத் தந்தருளுங்கள்’ என்றார்.

உடனே சூட்சும உடலோடு வெளிவந்த வேலப்பதேசிகர், பூலித்தேவனுக்கு மட்டுமே தென்பட்டார்.

‘சீடனே வா என்னோடு’ என்று முன்னால் சென்றார். பின்னால் நடந்தான் மாவீரன். ஆலய வாசலில் நின்று சாமி கும்பிட அனுமதி பெற்றார். வெள்ளையரும் அனுமதி கொடுத்தார்கள். உள்ளே போன குருவின் பின்னே இவரும் சென்றார். குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றவுடன் தானே அவரது விலங்கு சுக்கு நூறாக உடைந்தது.

சுவாமி சன்னிதி அருகே நாற்சதுர மந்திர வேலியிட்டு, அதனுள் அவரை நிறுத்தி வைத்தார் குரு. ‘பூலித்தேவா! இனி நீ யார் கண்ணிலேயும் படமாட்டாய்! உடலோடு சொர்க்கம் சேர்வாய்’ என்று தியானத்திலே மூழ்கினார் அருவ நிலையில் இருந்த வேலப்பர்.

குரு மொழிக்கு ஏது மறு மொழி...?. அப்படியே நடந்தது. பூலித்தேவன் சொர்க்கத்துக்கே சென்று விட்டார்.

வெள்ளையர் பட்டாளம் ஆலயம் முழுதும் சல்லடை போட்டு சலித்தது. பீரங்கியும், துப்பாக்கியும் பிரணவத்தை வெல்ல முடியுமா என்ன?. ஆங்கிலேயர்கள் தோற்றுப் போனார்கள்.

ஆனாலும் மற்றவர்கள் பயப்படவேண்டும் என்று ஏதோ ஒரு பிணத்தை களத்து மேட்டில் வைத்து தீயிட்டு, இதுதான் பூலித்தேவன் என்று அவரது வழக்கை ஆங்கிலேய நிர்வாகம் முடித்து விட்டது என்பது இப்பகுதி மக்கள் தற்போதும் பேசும் ஒரு வரலாறு ஆகும்.

பிரம்மரிஷி விசுவாமித்திரர் கூட, திரிசங்குக்கு நிரந்தர சொர்க்கத்தை தர முடியவில்லை. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானமாக விளங்கிய வேலப்ப தேசிகர், பூலித்தேவனை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த கலியுகத்தில் இது எவ்வளவு பெரிய விந்தையான செயல்.

சங்கரன்கோவிலில் தற்போதும் சங்கர நாராயணர் கோவில் உள்ளே பூலித்தேவன் அறை என்று ஒன்று உள்ளது. இதுதான் பூலித்தேவன் காணாமல் போன இடம். அதற்கான அறிவிப்பு பலகையுடன் அந்த அறை நமக்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல அற்புதங்களை பழங்காலத்தில் நிகழ்த்திய வேலப்பர் தேசிகர், தற்போதும் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருளாசியை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். இங்கு விளக்கு போட்டு தேசிகரை வணங்கி வருகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பெரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் என பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து விளக்கு ஏற்றி வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது.

ஒருவர் தன் வாழ்வில் பிறவி எடுப்பதே தன்னுடைய கர்ம வினையை போக்கத்தான். வேலப்ப தேசிகரின் சமாதிக்கு வந்து வணங்கி நின்றால், அவர்களுடைய கர்ம வினை போக்கப்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

வேலப்ப தேசிக மூர்த்திகள் ஜீவ சமாதி நிலையிலிருந்து தம்மை வணங்க வரும் அனைவருக்கும் திருவருளும் குருவருளும் வழங்கி அருள்கிறார்கள். இவ்விடத்தில் நாள்தோறும் வழிபாடும், வியாழக்கிழமை தோறும் வார வழிபாடும் நடை பெறுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூலநட்சத்திரம் அன்று குருபூஜையும் நடைபெறும். குருபூஜையில் சாதுக்கள் உள்பட பக்தர்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அன்றைக்கு அன்னதானம் மிக பிரமாண்டமாக நடைபெறும்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ரத வீதியில் சங்கரநாராயணர் கோவிலுக்கு பின்புறத்தில் வேலப்ப தேசிகர் சுவாமிகளின் சித்தர் பீடம் உள்ளது. திரு நெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து நேரடி ரெயில் வசதியும் உள்ளது. 

நோய் தீர்க்கும் ஸ்ரீசக்கரம்

ஆதிசங்கரர் பல ஆலயங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தவர். அவரை பின்பற்றியே வேலப்ப தேசிகர், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம் ஒன்றைப் பதித்து அருளினார். எனவே இவரை ஆதிசங்கரரின் மறு அவதாரம் என பக்தர்கள் போற்றுகிறார்கள். ஸ்ரீ சக்கரம் முன்பு அமர்ந்து வழிபடுவோர் பில்லி, சூனியம், சித்தப்பிரமை போன்றவை நீங்கப் பெறுகிறார்கள்.

பொதுவாக ஸ்ரீ சக்கரம் கோவிலில் மூல ஸ்தானத்துக்கு அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் மேல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படுவது தான் வழக்கம். ஆனால் சங்கரன்கோவிலில் மட்டும் மூலஸ்தானத்தில் வெளியே தரைப்பகுதியில் ஸ்ரீசக்கரத்தினை, வேலப்ப தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இந்த ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால், தன் உடலில் உள்ள எதிர்மறை சக்தி அனைத்தையும் நம்முடைய மூலாதர சக்கரம் வழியாக ஸ்ரீசக்கரம் பெற்றுக்கொள்ளும். சங்கரன்கோவிலில் உள்ள பல பெருமைகளில், வேலப்ப தேசிகர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரமும் ஒன்று. எனவே இந்த சக்கரத்தினை தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். 

திருமணத்தடை நீங்கும் தென் திருப்பதி

திருமணத்தடை நீங்கும் தென் திருப்பதி

காரணம் தெரியாமல் திருமணம் தள்ளி போகிறதா?எவ்வளவோ வரன் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையா? அப்படியென்றால் நீங்கள் வரவேண்டியது துறையூர் பெருமாள் மலைக்கு தான்! இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமணகோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் பெருமாள்மலை அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு பெருமாள் குடதிசை (வடக்கு) பாதம் வைத்து குணதிசை (தெற்கு) சிரம் (தலை) வைத்து பள்ளிகொண்ட பெருமாளாக காட்சி தருகிறார். துறையூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு மலைபாதையில் பயணித்தால் பெருமாள் மலையின் உச்சியை அடையலாம். தரை மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இந்த கோயில் மலைமீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மலைமீது நடந்து சென்றால் 1500 படிக்கட்டுகளையும். 

திருப்பதியை போன்று 7 சிறு மலைக்குன்றுகளையும் கடந்து கோவிலை அடையலாம். திருப்பதியில் உள்ளது போன்று அலமேலுமங்கை கோயிலும் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. அதுமட்டுமல்ல திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் என்ற கிராமம் இருப்பது போன்று இந்த கோவிலுக்கு அருகிலும் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. எனவே இந்த கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. 

இந்த கோவில் சோழ மன்னருள் ஒருவரான கரிகாற் சோழ பெருவளத்தானின் பேரன் ஒருவரால் கட்டப்பட்டதாகும். இவர் தனது குருவின் திருமந்திர உபதேசம் பெற்று திருப்பதி வெங்க டாஜலபதி பெருமாளை சேவித்து இறைவனடி சேருவதற்காக தனது ஆட்சியின் எல்லைக்குட்பட்ட இந்த மலையில் இருந்த ஒரு இலந்தை மரத்தின் அடியில் இருந்து தவம் செய்தார். 

திருப்பதி பெருமாள் அவரது தவ வலிமையை கண்டு இந்த மன்னனின் வேண்டுகோளின் படி இந்த மலையில் அவன் முன்பு சங்ராயுத பாணியாக திருமண கோலத்தில் பிரசன்னமானார். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி என்ற திருநாமத்தோடு திருமணகோலத்தில் பிரசன்னமானதால் கல்யாண பிரசன்ன வெங்கடாஜலபதி என்றும் ஸ்ரீனிவாசன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

பிரசன்ன வெங்கடாஜலபதியை தொடர்ந்து 9 சனிக்கிழமைகளில் பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நீண்ட நாளைய திருமணத் தடை நீங்கும் விரைவில் திருமணம் நடைபெறும் அதோடு வேலை வாய்ப்புகளுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.அரசாங்கம் அரசியலில் நிலைத்து இருக்க மேன்மை பெறலாம். செங்கோலுடன் இருக்கும் பெருமாளை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். இந்த கோவிலை எழுப்பிய மன்னர் பெருமாளுக்கு வலது புறமும் ஸ்ரீ அலமேலுமங்கை தாயாருக்கு இடது புறமும் பாலகனாக வீற்றிருக்கிறார்.

தன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளிக்குமாறு, சொல் உன்னுடையதாகவும். செயல் என்னுடையதாகவும் இருக்க அந்த மன்னருக்கு பெருமாள் அருள் புரிந்ததால் மன்னரே இந்த ஸ்தலநாயகனாக தற்போது ஷேத்திர பாலகன் கருப்பண்ணார். வீர்பசுவாமி இலந்தடியான் போன்ற திருநாமங்களுடன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இந்த ஸ்தல நாயகருக்கு திருப்பதி பெருமாள் பிரசன்னமானதால் திருப்பதி பெருமாளுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இங்கு வரும் பக்கதர்கள் செலுத்துகிறார்கள்.

புரட்டாசி வழிபாடு :- ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் விசேஷ அலங்காரத்துடன் இத்தலத்து பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவோணத்தன்று சிரவண உற்சவம் மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை கிரிவலம் வருகிறார்கள். கிரிவலம் வருவதால் எண்ணிய செயல்கள் சிறப்பாக நடைபெறு வதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

விரதமிருந்து வைகாசி விசாகம் வழிபடும் முறை

விரதமிருந்து வைகாசி விசாகம் வழிபடும் முறை

இன்று (திங்கட்கிழமை) வைகாசி விசாக திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். 

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.
இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம்  விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி  விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். 

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

விசாக நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.  பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் 

சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும் எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும்.  பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை-எளியவர்களுக்கு தானம் கொடுப்பது நல்லது.

முருகனின் முதல் கற்கோயில்



புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு அருகில் கண்ணனுாரில் முருகனின் முதல் கற்கோயிலான பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. 

தலவரலாறு: 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. முருகனின் வாகனமான மயிலுக்கு பதில் யானை இருப்பது இதன் பழமையை உணர்த்துவதாகும். சங்க இலக்கியங்களில் முருகனின் வாகனமாக யானை இடம்பெற்றுள்ளது. 

மூலவர் பாலசுப்பிரமணியர் கிழக்கு நோக்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நான்கு திருக்கரங்களில், வலது மேல் கையில் திரிசூலம் உள்ளது. வலதுகை அபயஹஸ்தமாக பக்தருக்கு அடைக்கலம் அளிக்கிறது. இடது மேல்கை ஆயுதம் ஏந்தியும், இடதுகை இடுப்பில் ஊன்றியும் உள்ளது. இரண்டு தோள்களில் குறுக்காக ருத்ராட்சமாலை, கால்களில் தண்டையும் உள்ளன. 

வாசல் முதல் விமான கலசம் வரை கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் சுற்றளவில் பெரியதாகவும், ஓரடுக்கு கொண்டதாகவும் உள்ளது. நான்கு மூலைகளிலும் யானைகள் உள்ளன. கருவறை சுவரிலுள்ள துாண்கள், பூதகணங்கள், மேற்கூரைகள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் மயில்வாகன முருகன் சன்னதி உள்ளது. இவரது சிலை பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதும். கோயிலுக்கு வெளியே தட்சிணாமூர்த்தி இருக்கிறார். 

வியாழக்கிழமையில் முருகனுக்கு பால், பஞ்சாமிர்த அபிேஷகம் செய்து தினைமாவு படைத்து வழிபட நினைத்தது நிறைவேறும். கருவறைக்கு நேராக பலகணி என்னும் கல் ஜன்னல் இருப்பதால் வாசல் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களை குறிக்கும் விதத்தில் ஜன்னலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. இதன் வழியே முருகனை தரிசிக்க கிரகதோஷம் நீங்கும்.

தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் இக்கோயில், தமிழகத்தின் கலைச்சின்னமாக திகழ்கிறது. போக்குவரத்து, மின் இணைப்பு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

எப்படி செல்வது: புதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22 கி.மீ., அங்கிருந்து துார்வாசபுரம் சாலையில் 2 கி.மீ.,
விசேஷ நாட்கள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, 
நேரம்: காலை 10:30 - 11:30 மணி
தொடர்புக்கு: 94427 62219, 04322 - 221 758