Monday, 2 July 2018

நவக்கிரக தோஷம் நீக்கும் சுதர்சனர்

நவக்கிரக தோஷம் நீக்கும் சுதர்சனர்

சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். 

நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவக்கிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவக்கிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். 

விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. 

மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும். சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்!

thiruvedanthai

வைணவ திவ்யதேச வரிசையில் தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது திரு இடவெந்தை (திருவிடந்தை). காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் உள்ளது.

வெகுகாலத்திற்கு முன் சரஸ்வதி நதிக்கரையில் "குனி' என்ற ரிஷி இருந்தார். அவருக்கு தொண்டுகள் புரிய ஒரு கன்னிப்பெண் இருந்தாள். ரிஷியின் காலம் முடிந்த பிறகு, சுவர்க்கம் வேண்டி அவள் கடுந்தவம் புரிந்தாள். அவள் முன்பு நாரத மகரிஷி தோன்றி, "பெண்ணே! நீ கன்னிப்பெண், எனவே சுவர்க்கம் கிட்டாது, மணம் புரிந்துகொள்க!" என அறிவரை கூறிவிட்டுச் சென்றார்.

நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் தன்னை யாரேனும் மணந்து கொள்ள வேண்டினாள். யாரும் செவிசாய்க்கவில்லை. ஆனால் காலவமகரிஷி என்ற முனிவர் அப்பெண்ணை ஏற்று மணம் புரிந்து கொண்டார். ஒரு வருடத்தில் அப்பெண் மூலம் பெரியபிராட்டியின் அம்சமாய் சுமார் 360 கன்னிகைகள் தோன்றினர். பின்னர் அப்பெண் சுவர்க்கம் அடைந்தாள். அப்பெண்களைக் காப்பாற்றி கரையேற்ற காலவரிஷி பெரிதும் சிரமப்பட்டார்.

ஒரு சமயம், அந்நதிக்கரைக்கு தீர்த்தமாட வந்த யாத்ரீகர்களின் நல்வழிக்காட்டுதலின்படி தன் மக்களுடன் புறப்பட்டு புண்ணிய தீர்த்தங்கள் பல கொண்டதும், நெடிது உயர்ந்த மரங்களும் பல அழகான சோலைகளும், அழகிய குடியிருப்புகள் நிறைந்ததும், பவ்யமாய் யாகம் செய்யும் அநேக மகரிஷிகள் வாசம் செய்வதுமான திருவிடந்தை தலத்திற்கு வந்தடைந்தார் காலவமுனிவர். அவருக்கு ஸ்தலாதிபதியான ஸ்ரீவராக மூர்த்தியின் வரலாற்றை ரிஷிகள் எடுத்துரைத்தனர்.

மேகநாதன் என்று ஓர் அசுரராஜனின் மகனான பலி என்பவன் நீதிமானாய் அரசாண்டான். ஒரு சமயம், மாலி, ஸீமாலி, மால்யவான் என்ற மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய அவனிடம் உதவி வேண்டி வந்தனர். முதலில் மறுத்த பலி பின்பு மனம் மாறி அவர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான். தேவர்களுடன் போரிட்ட சாபம் தீர, இந்த வராஹ தீர்த்தக் கரையில் கடுந்தவம் புரிந்தான். இவனுடைய தவத்திற்கு மெச்சி ஸ்ரீமந்நாராயணன் வராஹ மூர்த்தியாய் காட்சியளித்ததாக வரலாறு.

இத்தலபெருமானை காலவமகரிஷி தினமும் வழிபட்டு தன் மக்களுடன் இன்புற்று இருந்து வந்தார். பெண்கள் திருமண வயதை நெருங்கவும் மிகவும் கவலையுற்றார். அவரின் துயர் தீர்க்கும் பொருட்டு ஸ்ரீமந்நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வேடம் பூண்டு அவர் முன் தோன்றினார். அந்த பிரம்மாச்சாரியைப்பற்றி மகரிஷி விசாரிக்கலானார். திவ்ய தேச யாத்திரையாக, தான் அவ்விடம் வந்ததாகவும் பிரம்மச்சாரி பதிலளித்தான். மகரிஷி அவனிடம் தன் பெண்கள் 360 பேரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். பிரம்மச்சாரியும் சம்மதித்து தினமும் ஒரு பெண்ணாக திருமணம் செய்து கொண்டு கடைசி தினத்தில் எல்லோரின் முன்னிலையில் எல்லாப் பெண்களையும் ஒரு சேர அணைத்து ஒரே பெண்ணாக்கித் தன் இடப்பக்கத்தில் வைத்து வராக ரூபத்துடன் சேவைபுரிந்து அருளினார் என்கின்றது புராண வரலாறு.

திரு(லட்சுமி) வை தம் இடப்பாகத்தில் பெருமாள் கொண்டுள்ளதால் இத்திருத்தலத்திற்கு திருவிடவெந்தை எனப்பெயர் ஏற்பட்டு பின் மருவி திருவிடந்தை ஆயிற்று. மூலவர் ஆதிவராகப் பெருமாள் பூமிதேவி அம்சமான அகிலவல்லி தாயாரை தம் இடப் புஜத்தில் ஏந்திக் கொண்டு, ஒரு காலை பூமியிலும், மற்றொரு காலை ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசிலும் வைத்துக் கொண்டு கிழக்கே திருமுக மண்டலக்கொண்டு ஆறரை அடி உயர திருக்கோலத்தில் அற்புத சேவை. உற்சவருக்கும் மூலவருக்கும் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு இருப்பதால் திருஷ்டி நீக்கம் தரவல்லவர். இது ஒரு திருமண பிரார்த்தனை தலம். ராகு - கேது சுக்கிர தோஷ நிவர்த்தி தலம். திருமங்கையாழ்வார் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். மணவாளமுனிகள் இங்கு வந்து எம்பெருமானை தரிசித்து சென்றிருக்கிறார்.

பழம்பெருமைக்குச் சான்றாக பல கல்வெட்டுக் குறிப்புகளுடன் திகழுகிறது நித்ய கல்யாணப் பெருமாள் ஆலயம். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பிலும், தமிழக இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இருப்பதுமான இவ்வாலயத்தில் மஹாசம்ப்ரோக்ஷண வைபவம் ஜூலை 5 - ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் நடைபெறுகின்றது. பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஜூலை 3 -ஆம் தேதி ஆரம்பமாகின்றது.

தொடர்புக்கு: 044 - 2747 2235

Sunday, 1 July 2018

பசுக்கள் நம் தெய்வம்!


பசு வதை கூடாது என்கிறார்கள். பசுவை தெய்வமாக போற்ற வேண்டியதன் அவசியத்தை ஏன் என புரிந்து கொள்ளுங்கள். பிருகுமுனிவரின் மகன் சியவனர். பெரும் தவசீலர். 12 ஆண்டுகள் ஒரு பெரிய குளத்துக்குள் சமாதி நிலையில் இருந்தார். நீருக்குள் வாசம் செய்யும் ஜீவராசிகள் அனைத்தும் அவரிடம் நட்பு கொண்டு அவரை தெய்வமாகப் போற்றின.

ஒரு நாள் சில மீனவர்கள், சியவனர் தியான நிலையில் இருந்த குளத்தில் மீன் பிடிக்க வலை வீசினர். அந்த வலையில் சியவனர் அகப்பட்டுக் கொண்டார். வலையில் ஏதோ பெரிய மீன் சிக்கி விட்டதாக எண்ணிய மீனவர்கள் வலையை பெரும் சிரமத்துடன் மேலே இழுத்தனர். சியவனர் நீருக்குள்ளேயே 
இருந்ததால், அவர் உடல் முழுவதும் பாசிபடர்ந்து பார்க்கவே அச்சம் தரும் நிலையில் இருந்தார்.

அவரைப் பார்த்ததும், மீனவர்கள் நடுங்கினர். மன்னிப்பு கோரினர். மீன்கள் அனைத்தும் துடிதுடித்து இறந்தன. இதைக் கண்டு சியவனர் மனம் மிக வருந்தினார். தன்னுடன் அன்போடு பழகிய மீன்களைப் பிரிந்த துன்பம் தாளாமல், மனம் வெறுத்து தானும் உயிர்விடப் போவதாகக் கூறினார்.

மீனவர்கள் பதறினர். “மகா தபஸ்வியான இவர் இறந்தால், தங்கள் குலத்துக்கு ஆபத்து வரலாம், பெரிய பாவம் வந்து சேரலாம்,” எனக் கலங்கி, அவ்வூர் மன்னனிடம் முறையிட்டு, சியவனரின் மரணத்தை தடுக்க ஓடினர்.

மன்னன் தன் அமைச்சர்களுடன் குளக்கரைக்கு வந்தான். சியவனரின் பாதங்களில் பணிந்து வணங்கினான். மன்னனிடம் சியவனர், “மன்னா! இந்த குளத்திலிருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் இந்த மீனவர்களுக்கு சொந்தமானது என்றால், நானும் அவர்களுக்கே சொந்தம். இருப்பினும், இந்த மீன்களை நீ விலைக்கு வாங்கி விட்டால், நான் உனக்கு சொந்தமாகி விடுவேன். என்னை வாங்கிக் கொள்,” என்றார்.

மன்னனும் மறுக்காமல் அப்படியே செய்வதாகச் சொல்லி, அவருக்கு மட்டும் விலையாக ஓராயிரம் பொற்காசுகள் மீனவர்களுக்கு கொடுத்தான். “மன்னா! என் விலை ஓராயிரம் பொற்காசு தானா?” என்றார் முனிவர் வருத்தத்துடன்.
மன்னன் ஒரு லட்சம் பொற்காசுகளை அவர்களுக்கு கொடுத்தான்.

இப்போதும் திருப்தியடையாத முனிவர், “உம்...இவ்வளவு தானா என் மதிப்பு?” என்றார். “ஒரு கோடி பொற்காசு கொடுக்கட்டுமா?” என மன்னன் முனிவரிடம் கேட்க அதற்கும் அவர் சம்மதம் தரவில்லை.

மன்னனுக்கு கடும் வருத்தம். என்ன செய்வதென அறியாமல் நின்ற வேளையில், மற்றொரு தவமுனிவர் அவ்வழியே வந்தார். நடந்ததைக் கேட்டார்.

“மன்னா! இதற்கு தீர்வு மிக சுலபமானது. பொன், பொருளை மட்டுமல்ல, உன் ராஜ்யத்தையே விட்டுக் கொடுத்தாலும், ஒரு முனிவருக்கு ஈடாகாது. இவர்களுக்கு ஒரு பசுவை விலையாகக் கொடு. மந்திரங்களின் வடிவம் பசு. அது அந்தணருக்கு சமமானது. இந்த முனிவருக்கு விலையாக ஒரு பசுவை கொடுத்து விடு,” என்றார்.

மன்னனும் அவ்வாறே செய்தான்.  சியவனரும் மகிழ்ந்தார். “மன்னா! இப்போது தான் சரியான விலையை நிர்ணயம் செய்தாய்,” என்றார். பசுவின் பெருமை தனக்குத் தெரிய காரணமாக இருந்த அந்த மீனவர்களுக்கு மன்னன் பொற்காசுகளை வாரி வழங்கினான்.

பாவம் எப்போது தீரும்


கங்கையில் நீராடினால் பாவம் தீருமா என்ற சந்தேகம் பார்வதிக்கு எழுந்தது. இல்லை என சிவன் மறுக்க, பார்வதி குழம்பினாள். இதை உணர்த்த ரிஷி வடிவில் சிவன் பூலோகம் வந்தார். ரிஷிபத்தினியாக பார்வதியும் தொடர்ந்தாள்.

கங்கை நதிக்கரையில் சிவன், இறந்தவர் போல கீழே கிடக்க, இறுதிச் சடங்கு செய்ய யாராவது உதவ வருமாறு ரிஷிபத்தினி வேண்டினாள். இரக்கப்பட்ட சிலர் முன் வர, ''என் கணவர் ரிஷியானதால், கொள்ளி வைப்பவர் பாவம் செய்யாதவராக இருப்பது அவசியம்'' என்றாள் ரிஷிபத்தினி.

''இல்லாவிட்டால் என்னாகும்?'' என அவர்கள் கேட்க, '' பாவம் செய்திருந்தால் தலை சுக்குநூறாக வெடிக்கும்'' என்றாள். இளைஞன் ஒருவன் துணிவுடன் சம்மதிக்க, மற்றவர் விலகினர்.

''கங்கை தாயின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவளருளால் என் பாவம் தீரும்'' என்று சொல்லி ஆற்றில் குதித்தான். மூன்று முறை மூழ்கி அவன் எழுந்தபோது ரிஷியும், ரிஷிபத்தினியும் சிவபார்வதியாக காட்சியளித்தனர். நம்பிக்கையுடன் நீராடுவோருக்கு மட்டுமே பாவம் தீரும் என்பதை அனைவரும் அறிந்தனர்.

அன்னமிட்ட அம்பிகை


ஒரு முறை பார்வதி, தவ வாழ்க்கை மேற்கொள்ள காசிக்கு வந்தாள். அங்கு பஞ்சம் நிலவியதைக் கண்ட அவளது மனம் பொறுக்கவில்லை. தன் தெய்வீக சக்தியால் மாளிகையை உருவாக்கி, அன்ன பூரணியாக அங்கு எழுந்தருளினாள்.அட்சய பாத்திரம், கரண்டி ஏந்திய அவள் மக்களுக்கு உணவளித்தாள். அன்னபூரணியின் புகழ் எங்கும் பரவியது.

இதையறிந்த காசி ராஜன், அரண்மனைக் காவலர்களை அனுப்பி நிலவரத்தை அறிந்தான். காவலர்கள்,“மன்னா! காசி நகர மக்கள் அனைவரும் உணவு பெற்ற பின்னும் அட்சய பாத்திரத்தில் உணவு குறையவில்லை” என்றனர். காசிராஜனும், அவனது அமைச்சரும் மாறுவேடத்தில் வந்து உணவு பெற்றனர். 

அம்பிகையின் முன் நின்ற போது, ''இவள் சாதாரண பெண் அல்ல. ஜகன்மாதாவான பராசக்தி'' என்ற உண்மையை உணர்ந்தான் காசிராஜன். அப்போது அன்னபூரணி, “காசி ராஜனே! வருணனின் உதவியால் காசியில் மழை பொழியும்,” என வாழ்த்தினாள்.

புண்ணியம் தரும் காவிரி நீராடல்

புண்ணியம் தரும் காவிரி நீராடல்

கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம். 

கங்கையை விட உயர்ந்தது 

இந்த காவிரியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ என்று புகழப்பட்டுள்ளது. புண்ணியம் சேர்க்கும் காவிரியின் புனித நீராடலுக்கு, மாதங்களிலேயே சிறப்பு மிகுந்த ஒன்றாக பார்க்கப்படும் ஐப்பசி மாதம்தான் உகந்தது. இந்த மாதத்தில் மயிலாடுதுறையில் ஓடும் காவிரி படித்துறையில் மூழ்கி எழுந்தால், ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரியின் மகிமையை பற்றி அரிச்சந்திர மன்னனுக்கு, அகத்திய முனிவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுபற்றி ஸ்ரீதுலா புராணம் தெளிவாக கூறுகிறது. அகத்திய முனிவர் காவிரியின் சிறப்பு குறித்து கூறியபோது, அதனை அங்கிருந்த பல முனிவர்கள் கேட்டுணர்ந்தனர். அவர்கள் அனைவரும் சாதாரண முனிவர்கள் கிடையாது. தவத்தில் சிறந்து விளங்கிய மகா தபஸ்விகள். அந்த மகா தவவான்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். 

மகா தபஸ்விகள் 

வசிஷ்டர், பிருகு, காச்யபர், வாமதேவர், வீதிஹோத்ரர், துர்வாசர், ஜாபாமலி, வாமதேவர், மங்கணர், காலவர், அத்ரி, விசுவாமித்திரர், கண்வர், யாஜர், மார்க்கண்டேயர், அஸிதா, பரத்வாஜர், கவுதமர், உபயாஜர், பராசரர், பைலவர், சாதாதபர், வியாசர், மவுத்கலர், முக்தர், வால்மீகி, கவஷர், ஜாதுகர்ணர், சுதீஷணர், சதானந்தர், சத்யவிரதர், மதங்கர், ஸத்யதபஸ், நாரதர், காந்தர், மாண்டவ்யர், ஆஸூரி, தவும்யர், கவிமதுஹாச்ரயர், ஹோதா, தூமகேது, ஜலப்லவர், சங்கர், லிகிதர், போதாயனர், யக்ஞகேது, யாக்ஞவல்கியர், மருக்ரது, புலஸ்தியர், புலஹர், கவுரர், ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், மரீசி, யக்ஞராசி, பப்ரு. 

இத்தனை ரிஷி முனிவர்களும் அறியும்படியாக, காவிரியை பற்றி அகத்திய முனிவர் கூறியதை நாமும் தெரிந்து கொள்ளலாம். 

புண்ணிய நதிகளின் சங்கமம் 

ஐப்பசி மாதத்தில், புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் கலக்கின்றன. எனவே அந்த மாதத்தில் காவிரியில் நீராடினால், புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய யோக பலன் கிடைக்கும். முக்தி பேறும் கிட்டும். அதுமட்டுமின்றி ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுபவரையும் சேர்த்து அவரது தாயார் வழியில் ஏழு தலைமுறையினரும், தந்தை வழியில் ஏழு தலைமுறையினரும் வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. 

நீராடும் போது இரண்டு கைகளும் நிரம்ப பூக்களை எடுத்து காவிரிக்கு சமர்ப்பணம் செய்து பூலோக வைகுண்டத்தில் வாசம் செய்து வரும் ரங்கநாதரை நினைத்து வழிபட வேண்டும். ஐப்பசி மாதம் அனைத்து நாட்களும் காவிரியில் நீராடுவதாக ஒருவர் நினைத்துக்கொண்டால், சில காரியங்களை நிறைவேற்றவேண்டியது முக்கியம். 

கடைபிடிக்க வேண்டியவை 

எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. பகல் நேரங்களில் தூங்கக் கூடாது. முகச்சவரம் மற்றும் முடிவெட்டிக்கொள்ளுதல் கூடாது. தாம்பூலம் போட்டுக்கொள்வது, வீண் பேச்சு, பாய், கட்டில்களில் படுப்பது, சாப்பிட கூடாதவற்றைச் சாப்பிடுவது, வெளியிலோ அல்லது ஓட்டலிலோ சாப்பிடுவது, ஆண்–பெண் சங்கமம், தானம் வழங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

இதே போல் உணவில் பூசணிக்காய், மொச்சைக்கொட்டை, கேழ்வரகு, தினை, உளுந்து, துவரை, கத்தரிக்காய், கொள்ளு, முருங்கைக்காய், சிறுகீரை, சுரைக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளக்கூடாது. இரவு உணவு, காலை சந்தி– மாலை சந்தியில் உணவு உட்கொள்ளக் கூடாது. பழைய சாதம், எருமைப்பால் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. 

கடைபிடிக்க வேண்டியவைகளை படித்து விட்டு அயர்ந்து போய்விட வேண்டாம். தங்களால் இயன்றவரை கடைபிடித்தால் கூட புண்ணியம் கிடைக்கும். 

முடவன் முழுக்கு 

ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நீராடினாலும், நீராடாவிட்டாலும், கார்த்திகை முதல் நாள் அன்றும், அதற்கு முந்தைய நாளான ஐப்பசி மாத கடைசி தினத்திலும் ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள். ஐப்பசி மாத கடைசி தினத்தில் நடைபெறும் புனித நீராட்டம் ‘கடை முழுக்கு’ என்றும், கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் புனித நீராட்டம் ‘முடவன் முழுக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது. 

‘ஐப்பசி மாதம் முடிந்து விட்டதே!, என்னால் புண்ணிய பலன்களை அடைய முடியாமல் போய்விட்டதே!’ என்று கூறி வருத்தப்பட்டான் ஒரு முடவன். அந்த வருத்தத்தை மயூரநாதரிடம் முறையீடாகவும் வைத்தான். அவனது வருத்தமான புலம்பலைக் கேட்ட ஈசன், அசரீரியாக தோன்றி, ‘நீ சென்று காவிரியில் மூழ்கி எழு, உனக்கும் முக்தி பேறு கிடைக்கும்’ என்று கூறினார். அதன்படியே முடவனும் கார்த்திகை முதல்நாள் அன்று காவிரியில் புனித நீராடி, முக்தி பேற்றை அடைந்தான். ‘முடவன் முழுக்கு’ நடைபெறுவதற்கு காரணமாக இந்தக் கதை கூறப்படுகிறது. 

இடப தீர்த்த சிறப்பு 

ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் முன்பு உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஏனெனில் இந்தப் பகுதியில் ஓடும் காவிரியே, இந்தத் தலத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்க்கும் தீர்த்தமாக அமையப்பெற்றிருப்பதுதான். இங்குள்ள காவிரி ஆற்று படித்துறை பகுதிக்கு இடப (நந்தி) தீர்த்தம் என்று பெயர். 

எவர் ஒருவரும் கயிலை மலையானை தரிசனம் செய்ய செல்லும் முன்பு வாயிலில் வீற்றிருக்கும் நந்தி தேவரிடம் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல முடியும். அத்தகைய சிறப்பு வாய்ந்தவர் நந்தி பகவான். ஒருமுறை நந்திதேவருக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது. அவரது வாக்கினில் ஆணவம் குடிகொள்ளத் தொடங்கியது. 

இதனால் நந்தி பகவானை, பாதாளத்தில் அழுத்தி தள்ளினார் சிவபெருமான். அப்படி அழுத்தி தள்ளிய இடம்தான் மயிலாடுதுறை காவிரியின் துலாக் கட்டம். இந்த இடத்தின் நடுவில் இன்றும் இறைவனின் திருவுருவை கண்டு பரவசம் அடையலாம். இடப தேவர் அழுந்தப்பட்ட இடம் என்பதால் அந்த தீர்த்தம் இடப தீர்த்தம் என்று பெயர் பெற்றது. 

சிவபெருமானால் பாதாளத்தில் அழுந்தப்பட்டதும், நந்தி தேவர் உண்மையை உணர்ந்தார். பின்னர் சிவஞானத்தை உபதேசம் செய்யும்படி சிவபெருமானை விரும்பி கேட்டுக்கொண்டார். சிவனும் அவ்வாறே நந்திதேவருக்கு சிவஞானத்தை உபதேசம் செய்து அருளினார். இது ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று, காவிரியின் வட பகுதியில் உள்ள வள்ளலார் கோவில் என்னும் இடத்தில் நடந்தது. இதனால் தான் காவிரியில் ஐப்பசி அமாவாசையன்று நீராடி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக மாறியது. 

ஐப்பசி அமாவாசையில் நடுப்பகல் வேளையில் இடப தீர்த்த துறையில் இருந்து காவிரி தீர்த்தத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால், அந்த தீர்த்தம் எத்தனை ஆண்டுகள் ஆயினும், கெட்டுப்போகாது என்பது இன்றும் அனைவராலும் நம்பப்படும் ஐதீகம். இன்றும் பலர் மேலே சொன்ன நேரத்தில் தீர்த்தத்தை பிடிப்பது நடைபெற்று வருகிறது.

கஷ்டங்கள் குறைய உன்மத்த பைரவர் காயத்ரி மந்திரம்

கஷ்டங்கள் குறைய உன்மத்த பைரவர் காயத்ரி மந்திரம்

நவக்கிரகங்களின் வழிபாடு அவசியமானது. நவக்கிரகங்களின் தோஷங்களைப் போக்கும் ஆற்றல் பைரவருக்கும் உண்டு. நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பைரவர் பிராண தேவதையாக இருக்கிறார். புதன் கிரகத்தின் பிராண தேவதை உன்மத்த பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

‘ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோஹ்: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்’ 

என்ற காயத்ரி மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.