Friday, 3 August 2018

முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்

முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்

தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.

தல வரலாறு :

படைப்புக் கடவுளான பிரம்மா, ஒருமுறை பூலோகத்தை வலம் வந்து கொண்டிருந்தார். பூலோகத்தின் இயற்கை அழகில் மகிழ்ந்து பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஓரிடத்தில் காடுகள் அதிகமிருந்த மலைப்பகுதியில் தனியாக ஒரே ஒரு நெல்லிமரம் இருப்பது தெரிந்தது. அந்த நெல்லிமரத்தின் அழகில் மயங்கிய அவர், அதனைப் பார்ப்பதற்காக அருகே சென்றார்.

நெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. மேலும், அந்த இடம் அவருக்கு வைகுண்டமாகத் தோன்றியது. பூலோகத்தில் இறைவன் விஷ்ணுவின் வைகுண்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், மகாவிஷ்ணு சிலையை உருவாக்கி, அவ்விடத்தில் நிறுவி வழிபடத் தொடங்கினார். அதன் பிறகு, பிரம்மன் தினமும் அருகிலிருந்த நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்து, அங்கே மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து வந்து, விஷ்ணு சிலையை அலங்கரித்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒருநாள் அவர் முன்பாகத் தோன்றினார்.

அப்போது பிரம்மன் விஷ்ணுவிடம், ‘இறைவா! இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு நற் பலன்களைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.

அவரது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, ‘பிரம்மனே! இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் நீராடி, என்னை வந்து வழிபடும் பக்தர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும்’ என்று அருள்கூறி மறைந்தார்.

அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மகாவிஷ்ணு கோவில் உருவானதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.

மற்றொரு வரலாறு :

ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளைக் கொண்டிருந்த, மலைப் பகுதிக்குத் தவமிருக்க முனிவர்கள் சிலர் வந்தனர். வந்த இடத்தில் அவர்களுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பகுதியில் இருக்கும் தங்களுக்குத் தேவையான உணவும், நீரும் கிடைக்க உதவும்படி விஷ்ணுவிடம் வேண்டினர்.

விஷ்ணு, அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நெல்லிமரமும், அதனருகில் நீர்நிலை இருப்பதையும் காண்பித்து உதவினார். அவர்கள் அந்த நெல்லிக்கனிகளைப் பறித்துச் சாப்பிட்டு, நீர்நிலையில் இருந்த நீரைப் பருகி, தங்கள் பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொண்டனர்.

விஷ்ணு காட்டிய நெல்லிமரத்தை, ‘அருள்புரிந்த நெல்லி’ என்ற பொருள்படும்படி ‘திருநெல்லி’ என்று போற்றியதுடன், அந்த மரத்தின் அருகில் விஷ்ணுவிற்குச் சிலை நிறுவி கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு, அங்கு தற்போதிருக்கும் விஷ்ணு கோவில் கட்டப்பட்டது என்று மற்றொரு கதையும் இக்கோவிலின் தல வரலாறாகச் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு :

கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் மூலவராக மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் கணபதி, நாகர்கள் உள்ளிட்ட துணைத் தெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்தின் தெற்குப் பகுதியில், ஐந்து புனித ஆறுகளின் நீர் இணைந்திருப்பதாகக் கருதப்படும் ‘பஞ்சதீர்த்தம்’ எனும் குளம் இருக்கிறது. இக்குளத்தினுள் நடுவில் அமைந்திருக்கும் பாறையின் மேற்பகுதியில் விஷ்ணுவின் கால் தடம் பதிந்திருக்கிறது. கால் தடத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. விஷ்ணு இவ்விடத்திலே நின்றுதான் பிரம்மனுக்குக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மன் நீராடிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சியைப் ‘பாபநாசினி’ என்கின்றனர். இங்கிருக்கும் மலை, பிரம்மனின் பெயரால் ‘பிரம்ம கிரி’ என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் விஷ்ணுவுக்குரிய அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் முதல் அமாவாசை நாளில் பாபநாசினி நீர்வீழ்ச்சி அருகில் வாவுபலி எனும் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) நடைபெறுகிறது. துலாம் (ஐப்பசி) மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் புத்தரி கொண்டாட்டம் எனும் கதிர் அறுவடைத் திருநாள் விழா, மேடம் (சித்திரை) முதல் நாளில் விசுத்திருநாள் விழா, தனு (மார்கழி) மாதம் 18-ம் நாளில் சுட்டுவிளக்கு விழா போன்றவை சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த ஆலயம் பித்ருக்கடன் என்று சொல்லப்படும் முன்னோர் வழிபாடு செய்வதற்கு முதன்மையான இடமாக இருக்கிறது. இங்கு முன்னோர் வழிபாட்டுக்குக் கட்டணம் செலுத்தினால், அதற்குத் தேவையான தர்ப்பை, அரிசி, எள், துளசி அடங்கிய பொருட்கள் தரப்படுகின்றன. அதைப் பெற்றுக் கொண்டு, கோவிலில் இருக்கும் இறைவன் மகாவிஷ்ணுவை வழிபட்டுப் பின்பு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ‘பாபநாசினி’ நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிவபெருமான் கோவில் மற்றும் பஞ்சதீர்த்தக்குளம் ஆகியவற்றை வழிபட்டுச் செல்லலாம்.

பாபநாசினி நீர்வீழ்ச்சி நீரில் குளித்துவிட்டு வந்த பின்பு, அங்கிருக்கும் பாறையில் நீண்ட பள்ளமாக அமைந்திருக்கும் ‘பின்னப்பாரா’ என்று அழைக்கப்படும் வாய்க்காலில் அதற்கான சடங்குகள் செய்யப்படுகின்றன. பத்துக்கும் அதிகமானவர்கள் சேர்ந்த பின்பு, குழுவாக இவ்வழிபாட்டுச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இச்சடங்குகள் நிறைவடைந்தவுடன், மீண்டும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து திரும்பலாம்.

ஆலய சிறப்புகள் :

* முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்த இடமாக இருப்பதால், திருநெல்லியைத் தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கின்றனர்.

* ராமரும் லட்சுமணரும் தங்களது தந்தையான தச ரதன் மறைவுக்குப் பின்னர், இங்கு வந்துதான் முன்னோர் வழிபாட்டை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

* இங்கு அமாவாசை, திதி என்று எந்தவொரு குறிப்பிட்ட நாளையும் தேர்வு செய்து முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியதில்லை. எந்த நாளிலும் முன்னோர் வழிபாடு செய்யலாம்.

* இங்கு பெண்களும் முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

* நெல்லி மரத்தின் கீழ் இறைவன் விஷ்ணு இருந்த இடம் என்பதால், இவ்விடம் ‘திருமால் நெல்லி’ என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் ‘திருநெல்லி’ என்று மருவிவிட்டதாக கூறுகின்றனர்.

* இந்த ஆலயம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் பாதியில் நின்றுள்ளது. இன்றும் அப்படியே இருக்கிறது.

* இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காகப் பிரம்மகிரி மலையில் இருந்து பாறைகளில் வாய்க்கால் வெட்டப்பட்டுத் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தற்போதும் அது பயன்பாட்டில் உள்ளது.

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.

அமைவிடம் :

தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது மன்னந்தாவடி. இங்கிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். கண்ணூரில் இருந்து 121 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரில் இருந்து 136 கிலோமீட்டர், ஊட்டியில் இருந்து 165 கிலோமீட்டர், மைசூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. மன்னந்தாவடியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

தஞ்சை, நாகை, திருவாரூரில் களை கட்டிய ஆடிப்பெருக்கு விழா

தஞ்சை, நாகை, திருவாரூரில் களை கட்டிய ஆடிப்பெருக்கு விழா

தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

காவிரி கரையோரங்களில் ஆடி-18 விழா ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உற்சாகப்படும்.

தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது. இந்தாண்டில் மேட்டூரில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் 22-ந் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை பகுதி வரை சென்றுள்ளதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.

திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப் பெண்கள், அங்குள்ள விநாயகருக்கு முன்பு தழை வாழையிட்டு அதில் எள், வெல்லம் கலந்த பச்சரிசி வாழைப் பழம், பேரிக்காய், விளாம்பழம் கொய்யாப் பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவை படையலிட்டு வழிபட்டனர்.

மேலும் செந்நிறப் பனை ஓலையுடன் கருக மணி வளையல் சுற்றிய காதோலைக் கருகமணியுடன் மஞ்சள், குங்குமம், மஞ்சள் இழைக்கயிறுகள் ஆகியவற்றையும் வைத்து தீப, தூபங்கள் காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் வெல்லங் கலந்த பச்சரிசி மற்றும் பேரிக்காய் முதலிய பழ வகைகளை அனைவருக்கும் வழங்கினர்.

கன்னிப்பெண்கள், திருமணமான பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்தனர்.

மேலும் புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் திருமணமாத கன்னிபெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டியும், தங்களது வாழ்வில் மகிழ்ச் சியும், வளமும் நிலைத் திருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

இன்று அதிகாலை முதலே புஷ்ய படித்துறையில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீசார் பெண்கள் மற்றும் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க கோரி ‘மைக்’கில் எச்சரிக்கை செய்த வண்ணம் செய்தனர்.

காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, மற்றும் காவிரி கரையோரங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கரைகளில் பழங்கள், மலர்களை வைத்து பூஜை செய்து காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதில் திருமணமாகாத கன்னிபெண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா ‘களை’ கட்டியது. காவிரி கரையில் பூஜை செய்து விநாயகரை பெண்கள் வழிபட்டனர். காவிரியின் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலா கட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி துலா கட்டத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். பின்னர் படித்துறையில் படையிலிட்டு, ‘‘ பொங்கி வரும் காவிரியே... எங்களது வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பொங்க செய்வாயாக’’ என்று ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

துலா கட்டத்தில் போலீசாரும், மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடாதவாறு பைபர் படகுகளில் சென்று தீயணைப்பு துறையினர் கண்காணித்தனர்.

சீர்காழி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருவாரூர் முள்ளியாறு, ஒடம்போக்கி, கோரையாறு, பாண்டவையாறு, பாமினி ஆற்றின் கரைகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.

Thursday, 2 August 2018

நாளை ஆடிப்பெருக்கு...

நாளை ஆடிப்பெருக்கு...

காவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆடிப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. 

குடகு மலையில் உற்பத்தி ஆகிற காவிரி தமிழகத்தில் ஒகேனக்கல் துவங்கி பூம்புகார் வரை பாய்கிறது. மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, குளித்தலை, முக்கொம்பு, திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை என்று காவிரி கடலில் கலக்கிற பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு களை கட்டும். 

நமது கலாசாரத்தில் நதிகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நதிக்கரைகளில் தான் நாகரிகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் காவிரி வளம் பெருக்கும் பகுதிகளில் சோழ தேசத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. 

கரிகாற்சோழ மன்னன் காலத்தில் இந்த ‘ஆடிப்பெருக்கு’ கொண்டாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் காலத்தில் காவிரியின் இரு கரைகளையும் தொட்டு நீரானது வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருக்கும்.

காவிரிக்கு ‘தட்சிண கங்கை’ என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. ‘காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும்’ என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.

பெண்களின் திருமண தடை நீக்கும் விஷ்ணு துர்க்கை

பெண்களின் திருமண தடை நீக்கும் விஷ்ணு துர்க்கை

சிங்கிரிக்குடி தலத்தில் 16 கை நரசிம்மருக்கு எந்த அளவுக்கு ஆற்றலும், அருளும் உள்ளதோ அதே அளவுக்கு அந்த கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் ஆற்றல் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த விஷ்ணு துர்க்கை சன்னதி 5 நிலை ராஜ கோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் முதலில் இருப்பதை பார்க்கலாம். 

மிக சிறிய சன்னதியான இங்கு விஷ்ணு துர்க்கை நடு நாயகமாக வீற்றிருக்கிறாள். அவளுக்கு பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு கட்டி வழிபடுகிறார்கள். இதன் மூலம் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் விலகி உடனே திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகமாகும்.

விஷ்ணு துர்க்கை சன்னதி முன்பு வேப்பமரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தில் நிறைய பேர் குழந்தை வரம் வேண்டிய துணியால் தொட்டில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். விஷ்ணு துர்க்கை முன்பு மனதார பிரார்த்தனை செய்துவிட்டு தொட்டில் கட்டினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஏராளமான பெண்களின் அனுபவமாகும்.

திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயம்

திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயம்

முன்காலத்தில் திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகித்து வழிபட நீரின்றி தவித்தார், புலிக்கால் முனிவர்.

அந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகித்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான்.

வெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர், வெள்ளை யானையிடம், ‘சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு’ என்று கேட்டார்.

அதற்கு வெள்ளை யானை ‘என்னால் தீர்த்தம் தர முடியாது’ என்று கூறி மறுத்துவிட்டது.

இதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி, அதுவே ‘புலிபாய்ச்சி தீர்த்தம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.

முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ, முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும், தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை.

உடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க, வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி, தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால், கோபத்துடன் இருந்த முனிவர் ‘வேண்டாம்’ என மறுத்து விட்டார். எனவே, வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தைக் கொண்டு தானே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.

இந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ என்று மாறிவிட்டதாக சொல்கின்றனர்.

இங்குள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன்.

ஆலயத்திற்கு தென்முகமாக நுழையும் போது முதலில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அதைக்கடந்து உள்ளே சென்றால், நேர் எதிரே அம்மன் சன்னிதியும், இடதுபுறம் இறைவன் சன்னிதியும் அமைந்திருக்கின்றன.

கிழக்கில் புலிபாய்ச்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. எனவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அதிக அளவில் தெற்கு வாசலையே பயன்படுத்து கின்றனர். கிழக்குப் பக்கம் இறைவன் சன்னிதிக்கு எதிரே பிரகாரத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.

இறைவனின் கருவறைக் கோட்டத்தில் தெற்கே வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. நவக்கிரகங்களின் அதிபதியான சூரியன் தினசரி இங்குள்ள சிவனை வழிபடுவதால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.

ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.

மனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆலயத்தின் சுற்றுப்புற மதில் சுவர்களில் தற்காலத்தில் பார்க்க முடியாத மகரமீன், அன்னப் பறவைகள், டயனோசர் மற்றும் விதவிதமான பாம்பு இனங்கள் சுதை வடிவத்தில் காணப்படுவது வியப்பிற்குரியது. இந்த ஆலயத்தின் உட்பிரகாரம் ஓங்கார (ஓம்) வடிவத்தில் ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் வழக்கமான விசேஷ நாட்கள் தவிர, மாத பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் ஆலய கிரிவலமும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கும் இறைவிக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும்.

இங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பட்டூர் தலம்.

Wednesday, 1 August 2018

தெய்வங்களை வணங்கும் முறை

தெய்வங்களை வணங்கும் முறை

* பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் கைகளை உயர்த்தி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகளைக் குவித்து வணங்கினாலே போதுமானது.

* குருவை வணங்கும் போது, நெற்றிக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

* தந்தையை வணங்கும் போது, வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

* தாயை வணங்கும் போது, வயிற்றிற்கு நேராக கை வைத்து வணங்க வேண்டும்.

* மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல் முறையாகும். அதே போல் பெண்கள் மேற்கண்டவர்களை வணங்கும்போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

முன்னேற்றம் தரும் மொரீசியஸ் முருகன் கோவில்

முன்னேற்றம் தரும் மொரீசியஸ் முருகன் கோவில்

இந்தியாவிலிருந்து அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம் வழியாக உலகின் தென்மேற்கு மூலைக்குச் சென்றால் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டியுள்ள மடகாஸ்கர் தீவுக்கு அருகில் உள்ளது மொரீசியஸ் தீவு.

கடலும், மலையும் கரும்புக் காடுகளும் நிறைந்து, இயற்கை அன்னை தொட்டில் கட்டித் தூங்க வைக்கும் அத்தீவிற்கு, பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் ஆட்சியாளர்களாக இருந்த போது, தமிழகத்திலிருந்து அந்த மண்ணை வளப்படுத்த தமிழர்களும் சென்றுள்ளனர். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றுள்ள தமிழர்கள், இன்றைய மொரீசியஸ் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

அதே போல் மொரீசியஸ் தமிழ் மக்கள் சார்பில், தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழகம் போல பல ஆலயங்களும் அங்கே அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு அந்த ஆலயங்களில் விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மொரீசியசில் பல தமிழக கட்டிட சிற்பக் கலையின் பாணியில் கோவில்கள் இருப்பினும், தலைநகர் போர்ட் லூயிசில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ரோஸ்கில்ஸ் பகுதியில் உள்ள முருகன் கோவில் காண்பவர்களைக் கவரும்படி அமைந்திருக்கிறது. திருத்தணி முருகன் கோவில் என்ற பெயரில் அமைந்த இந்த ஆலயம், நூற்றாண்டு விழா கொண்டாடும் நிலையில் இருக்கிறது.

ஆலய அமைப்பு  :

வண்ணங்கள் பளிச்சிடும் சுதை வேலைப்பாடு நிறைந்த 3 நிலை ராஜகோபுரம் தமிழர்களை தலை நிமிரச் செய்வதாக உள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்தால் பலி பீடம், பளபளவென்ற கொடிமரம், மயில் வாகனம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.

மயில் வாகனத்தின் எதிரே மூலவர் முருகப்பெருமான் தனி விமானத்தின் கீழ், கருவறை உள்ளே காட்சி தருகின்றார். அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த முருகப்பெருமான் மனைவியர் யாரும் இல்லாமல், தனித்து நின்ற கோலத்தில் அருள்கிறார். இடது கையை இடுப்பில் வைத்தபடியும், வலது கையை தூக்கியவாறு அதில் பூங்கொத்து வைத்துக்கொண்டும், வேல் தாங்கியபடி உள்ள இவரது உருவம் கண்களைக் கவருவதாக இருக்கிறது.

முருகப்பெருமானின் சன்னிதிக்கு வலதுபுறம் அமர்ந்த நிலையில் விநாயகர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். முருகனுக்கு இடதுபுறம் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க நான்கு கரங்களுடன் மாரியம்மன் அமர்ந்துள்ள தனிச் சன்னிதி உள்ளது. இந்த இரு தெய்வங்களும் தெற்கு பார்த்து இருக்கிறார்கள். மண்டபத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சித்திரம் வரையப்பட்டுள்ளது.

பெரிய மண்டபத்தின் முன்னே முதலில் திருமால் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே கருடன் வீற்றிருக்கிறார். அடுத்து சிறு கோவிலில் நந்தி வீற்றிருக்க, லிங்க சொரூபமாக சிவபிரான் காட்சி தருகிறார். அதன் எதிரே நவக்கிரகங்களின் கூட்டமைப்பு இருக்கிறது.

விழாக்கள் :

இந்த ஆலயத்தில் தைப்பூசம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்லாது பிற மொழி பேசுவோரும் ஆண், பெண் பாகுபாடின்றி காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பானதாகக் சொல்லப்படுகிறது.

கந்த சஷ்டி விழாவின் ஆறு நாட்களும் அபிஷேகங்களும், ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்திலும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சந்தனக் காப்பில் முருகனை கண்டுகளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று கோவிலிலும், தங்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றுவது தமிழர்கள் மரபு. இங்கும் அதே போன்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மனுக்கு கஞ்சி வார்த்தல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில், குறிப்பாக கடைசி வாரம் ‘கோவிந்தன் விழா’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் நெற்றியில் நாமமிட்டு பெருமாளை வழிபடுகிறார்கள்.

இத்திருக்கோவிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் திரவுபதி அம்மன் ஆலயம் அமைத்து மகாபாரதத்தை நினைவு கூருகிறார்கள். மொரீசியஸ் சுதந்திர தினமான மார்ச் 12-ந் தேதி இந்த ஆலயத்தில் மக்கள் மஞ்சள் ஆடை உடுத்தி தீமிதி உற்சவம் சிறப்பானதாக நடைபெறுகிறது. மொரீசியஸ் முருகப்பெருமான் ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

கடல் கடந்தும், காலங்கள் கடந்தும் தமிழ் தெய்வீகத்தையும் கலாசாரத்தையும் காப்பாற்றி வரும் மொரீசியஸ் தமிழர்களை வாழ்த்துவோம்.