Wednesday, 3 October 2018

நீங்கள் வியாழக்கிழமை பிறந்தவரா?

நீங்கள் வியாழக்கிழமை பிறந்தவரா?

ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அதில் ஐந்தாவது நாளாக வரக்கூடியது வியாழக்கிழமையாகும். இந்த வியாழக்கிழமை அன்று பிறந்தவர்கள் மிகச் சிறந்த பண்புடையவர்களாக விளங்குவர். பெரும் செல்வந்தராக இருப்பர். மனதிற்கினிய சொற்களைப் பேசுபவர்களாகவும் இருப்பர். 

சிறந்த ஆசிரியர்களாகவும், மக்களால் விரும்பப்படுகிறவர்களாகவும், செயல்படுவர். அரசர்களால் மதிக்கப்படுபவர்களாகத் திகழ்வர். இவர்களது யோசனை மற்றவர்களை வெற்றி பெறவைக்கும். எதையும் முன்கூட்டியே யூகித்து உணரும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

குருவைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

குருவைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது

உலோகம்- தங்கம்

நவரத்தினம் - புஷ்பராகம்

வஸ்திரம் - மஞ்சள் நிற வஸ்திரம்

வாகனம் - யானை

சமித்து - அரசு

சுவை - இனிப்பு

அதிதேவதை - பிரம்மா, தட்சிணாமூர்த்தி

குணம் - சாத்வீகம்

ஆட்சி வீடு - தனுசு, மீனம்

உச்ச வீடு - கடகம்

நீச வீடு - மகரம்

நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

குரு திசை - 16 வருடங்கள்

ஒரு ராசியில் தங்கும் காலம் - ஒரு வருடம்

எண்கணிதப்படி எண்- 3

தானியம் - கொண்டக்கடலை

புஷ்பம் - முல்லை, மஞ்சள் நிறப்பூ

காரகத்துவம் - புத்திரப்பேறு

Tuesday, 2 October 2018

கிரிவலத்தால் கிடைக்கும் குருப்பெயர்ச்சி நற்பலன்

கிரிவலத்தால் கிடைக்கும் குருப்பெயர்ச்சி நற்பலன்

தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும், குரு பார்வ பட்டால் அந்த தோஷங்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார். ஜாதகங்களில் குரு சிறப்பாக அமைந்தால் ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை, உயர் பதவி, கல்வி, ஞானம், வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு, செல்வசெழிப்பு முதலியன சிறப்பாக அமையும். திருமணப் பேறு, புத்திரபாக்கியம் உண்டாகும்.

ஜாதகத்தில் குரு பார்வை சரி இல்லாதவர்களுக்கு பெரியோர் சாபம், மறதி, விஷப் பூச்சிகளால் பாதிப்பு, காது மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், பணத்தட்டுப்பாடு, பேச்சு சம்பந்தமான பிரச்சினைகள், கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி துன்பத்தில் தவிப்பவர்கள் குருபகவானை வழிபட்டால் அந்த பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பழமையான சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் வழிபாடு, குருப்பெயர்ச்சி சமயத்தில் பக்தர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது.

குரு பகவான் பரிகாரத் த‌லங்களாக திருச்செந்தூர், திருஆலங்குடி, பட்டமங்கலம், முறப்பநாடு, மதுரை குருவித்துறை, சென்னை திருவலிதாயம், தேவூர், தென்குடி திட்டை, சுசீந்திரம், உத்தமர்கோவில், தக்கோலம், கோவிந்தவாடி என பல திருத்தலங்கள் கூறப்பட்டாலும், குருப் பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

ரமண மகரிஷியை அவரது அடியவர் ஒருவர், திருக்கயிலாய யாத்திரை செய்ய அழைத்தார். உடனே மகரிஷி சிரித்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவர் போல, ‘அங்கே அப்படி என்ன விசேஷம்?' என்றார்.

‘திருக்கயிலாய மலை, சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான், பூதகணங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம்’ என்று ரமணரிடம் பதிலுரைத்தார் அந்த அன்பர்.

அதற்கு ரமணர், ‘அன்பனே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலை என்பதே சிவன் தான். சிவபெருமான் இங்கே இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?' எனக் கூறினார்.

உண்மையை உணர்ந்த அந்த அன்பரும் திருக்கயிலாய யாத்திரையை விடுத்து, திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தொழுதார்.

ஆம்.. இங்கு மலையே சிவபெருமான் தான்.

‘செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே’ என்ற திருநாவுக்கரசரின் திருமுறைப்பதிகமே திருவண்ணாமலையின் வரலாற்றை விளக்கிடும்.

ஒருமுறை விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று வாதிடத் தொடங்கினர். சுவாரசியமாக ஆரம்பித்த வாதம், அனல் தெறிக்க இறுதியில் திருக்கயிலை நாதனான சிவபெருமானிடம் வந்து நின்றனர். கையில் அனல் ஏந்தி, நெற்றிக்கண்ணில் அனலோடு தகதகக்கும் பரம்பொருள் சிவபெருமான், ‘எமது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்' என்று கூறினார்.

அத்தோடு இருவரின் நடுவிலும் பெரும் தூண் போன்ற அருட்பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். உடனே ஈசனின் அடியைத் தேடி பன்றி உருக்கொண்டு விஷ்ணுவும், அன்னப் பறவை உருக்கொண்டு சிவபெருமானின் முடியைத் தேடி பிரம்மனும் புறப்பட்டனர். பூமியைத் தோண்டி பாதாளம் ஏழுக்கும் கீழே சென்றும் ஈசனின் அடியைக் கண்டறிய முடியாமல் விஷ்ணு தோல்வியோடு திரும்பி வந்தார்.

அன்னமாய் மாறி ஆகாயத்தில் பறந்து பல ஆண்டுகள் கடந்தும், ஈசனின் முடியை காண இயலாமல் பிரம்மனும் அயர்ந்து போனார். அப்போது ஈசனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ பல ஆயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவிடம் ‘நான் சிவபெருமானின் முடியை தரிசித்து விட்டதாக பொய் சொல்’ என்றார்.

தாழம்பூவும் அப்படியே பொய் சாட்சி சொன்னது. அப்போது ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், பொய்யுரைத்த பிரம்மனுக்குச் சாபமும், மகாவிஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் செய்தார்.

பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானை தொழுதுநிற்க, ஜோதிப்பிழம்பு அக்னி மலையாய் நின்றது. அக்னிமலையான ஈசனும் உள்ளம் குளிர்ந்தார். அதுகண்ட பிரம்மனும் விஷ்ணுவும், ‘பரம்பொருளே! எங்கள் பொருட்டு இங்கு அக்னி மலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை தான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால் தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என்றனர்.

உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே, இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாச்சலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். உடனே தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.

‘அண்ணுதல்' என்றால் ‘நெருங்குதல்’ எனப்பொருள். ‘அண்ணா' என்றால் ‘நெருங்க முடியாதது’ என்று பொருள்படும். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் ‘திருஅண்ணாமலை’ ஆயிற்று.

திருஅண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலையாகவும், பாமரர்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.

இந்தத் தலத்தில் இறைவனின் உடலில் இடப்பாகம் பெறுவதற்காக பார்வதிதேவி தவம் செய்தார், அப்படி தவம் செய்ததோடு மட்டுமின்றி, கார்த்திகை பவுர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் பிரதோஷ காலத்தில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்ததால், அன்னையின் ஆசை நிறைவேறியது. சிவபெருமான் அம்மனுக்கு தன்னுடைய உடலில் சரிபாதியை வழங்கி அருள்பாலித்தார்.

திருவண்ணாமலையை பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். அதிலும் குறிப்பாக கிரகண காலங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகச்சிறப்பாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வரும் குருப்பெயர்ச்சி நன்னாளில் திருவண்ணாமலையை வலம்வந்து வழிபடுவது தோஷங்களை விலக்கி, அனைவருக்கும் நற்பலன்களை வழங்கும்.

விழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சுமார் 63 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது.

இந்த வார விசேஷங்கள் 2.10.2018 முதல் 8.10.2018 வரை

இந்த வார விசேஷங்கள் 2.10.2018 முதல் 8.10.2018 வரை

2-ந்தேதி (செவ்வாய்) :

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

 * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

3-ந்தேதி (புதன்) :

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

4-ந்தேதி (வியாழன்) :

* குருப்பெயர்ச்சி.
* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் புஷ்பாங்கி சேவை.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (வெள்ளி) :

* சர்வ ஏகாதசி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* வடலூர் வள்ளலார் பெருமாள் பிறந்தநாள்.
* கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (சனி) :

* சனிப் பிரதோஷம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

7-ந்தேதி (ஞாயிறு) :

* மாத சிவராத்திரி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
* கீழ்நோக்கு நாள்.

8-ந்தேதி (திங்கள்) :

* மகாளய அமாவாசை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாட வீதி புறப்பாடு, மாலை ஊஞ்சல் சேவை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா.
* இன்று அனைத்து புண்ணிய தலங்களிலும் பிதுர் கடன் இயற்றுதல் நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.

Monday, 1 October 2018

விஷ்ணுக்குரிய விரதங்கள் - வழிபாடுகள்

விஷ்ணுக்குரிய விரதங்கள் - வழிபாடுகள்

மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. எல்லாவற்றிலும் எல்லாமாக நிறைந்திருப்பவர். அவரை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

ஒரு பௌர்ணமி அன்று, மஹாவிஷ்ணுக்கு முதல் பூஜையை தொடங்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த பூஜையை தொடர வேண்டும். இந்த பூஜை செய்வதால் மகிழ்ச்சி மட்டுமன்று, செல்வம் சேரும், புகழ் கிட்டும், பொருளாதார சிக்கல் தீரும்.

மஹாவிஷ்ணு பூஜைக்கு தேவையான பொருள்கள் :

நிறை நாழி நெல், துளசி தளம், வாசனை திரவியங்கள், இனிப்பு பலகாரங்கள், நெற்பொரி, செங்கதலிப்பழம், பால், தேன், இளநீர், துருவிய தேங்காய், வெல்லம் ஆகியன சேர்த்து பிசைந்த அவல், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் .

பௌர்ணமியன்று, வீட்டிலுள்ள ஓர் அறையை சுத்தம் செய்து, கிழக்கு முகமாக ஒரு பீடம் அமைக்க வேண்டும். அந்த பீடத்தில் துளசி தளம் நிரப்பி அதன் மீது நிறை நாழி நெல் வைக்க வேண்டும்.

துளசி தளத்தால் கட்டிய சரங்களால் நிறை நாழியை அலங்காரம் செய்ய வேண்டும். பின் அதற்கு மஞ்சள், குங்குமம் திலகமிடவும். அதனருகே, நெய் ஊற்றி ஏற்றிய விளக்கை வைக்கவும். தனியாக ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி, அதன் மீது மஞ்சள் தூள் அல்லது சாணத்தால் செய்த விநாயகரை வைத்து, மஞ்சள் குங்கும திலகமிடவும்.

வீட்டில் இருபவருள் எவர் மூத்தவரோ அவரை பூஜை செய்ய சொல்லவும். முதலில் விநாயகரை பூஜித்து கற்பூர தூபம் காட்டி எல்லோரும் வணங்கவும் . அதற்கடுத்து நிறை நாழியிலுள்ள மஹாவிஷ்ணுவிற்கு கற்பூர தூபம் காட்டி, ஸ்ரீ மஹாவிஷ்ணு தோத்திரம், மஹாவிஷ்ணு நாமாவளி கூறி, துளசி தாழ் அர்ச்சனை செய்யவேண்டும். அதற்கு பிறகு கற்பூர தூப தீபம் காட்டி எல்லாரும் வணங்க வேண்டும். 

இறைவனுக்கு படைத்த பிரசாதங்களை, பிறருக்கு கொடுத்து விட்டு பின்னரே வீட்டிலுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இந்த மஹா விஷ்ணு பூஜை செய்தால் மன மகிழ்ச்சியும், குடும்பத்தினர் அனைவர்க்கும் எல்லா நன்மைகளும் கிட்டும்.

பதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை

பதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை

திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. ஞீலி என்பது ஒரு வகை கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. 

இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். 

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப்பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல் 5.30 வரையும் நடத்தப்படும். இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்கிறார்கள்.

ஆலத்தியூர் அனுமன் கோவில் - கேரளா

ஆலத்தியூர் அனுமன் கோவில் - கேரளா

தாங்கள் வேண்டியது நிறைவேற அனுமனுக்கு அவல் படைத்து வழிபடும் சிறப்பு மிக்கக் கோவிலாகத் திகழ்கிறது, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், ஆலத்தியூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் அனுமன் கோவில்.

தல வரலாறு:

‘ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை இருக்குமிடத்தைக் கண்டறிந்து வரத் தகுதியுடையவர் அனுமனே’ என்று முடிவு செய்தார் ராமர். அவர் அனு மனிடம், சீதையைக் கண்டறிவதற்காக, அவரது உருவ அடையாளங்களைத் தெரிவித்து, ராமன் அனுப்பி வைத்த தூதுவனே என்பதைச் சீதைக்குத் தெரிவிக்கும் அடையாளமாகத் தன் கணையாழியைக் கழற்றி அனுமனிடம் கொடுத்தார்.

சீதைக்கு அனுமன் மேல் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத் தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த, சில தனிப்பட்ட நிகழ்வுகளையும் அவரிடம் சொல்லத் தொடங்கினார். அனுமனும் ராமன் சொல்வதை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டார். ராமன், சீதை ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட நிகழ்வுகளைத் தான் தெரிந்து கொள்வது தவறு எனும் எண்ணத்துடன் லட்சுமணன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

ராமாயணத்தில் வரும் இந்த நிகழ்வு நடைபெற்ற இடமாகக் கருதப்படும் இடத்தில், வசிஷ்ட முனிவர், அனுமனின் சிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பி இக்கோவிலை நிறுவியதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு :

இக்கோவிலில் இருக்கும் கருவறையில் ராமபிரான் சீதை இல்லாமல் தனித்து வீற்றிருக்கிறார். அதனை அடுத்துள்ள சன்னிதியில், ராமன், தனக்கும் சீதைக்கும் இடையிலான நிகழ்வுகளைச் சொல்வதை இடதுபுறம் காதைச் சாய்த்துக் கேட்பது போன்ற தோற்றத்தில் அனுமன் அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டுமென்பதற்காக, இங்கிருந்து சிறிது தள்ளியிருக்கும் சன்னிதியில் லட்சுமணன் தனியாக இருக்கிறார்.

இக்கோவில் வளாகத்தில், கணபதி, ஐயப்பன், துர்க்கா பகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகியோருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ராமர், லட்சுமணன், அனுமன் என்று மூன்று பேருக்குமான கோவிலாக இந்த ஆலயம் இருந்த போதிலும், இது ‘அனுமன் கோவில்’ என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள அனுமனுக்கு நெய் பாயசம், அவல், ஒட்டப்பம், கதலிப்பழம், வெல்ல அவல், பனப்பாயசம், சாத்துசாதம் போன்றவைகளைப் படைத்தும், அனுமனுக்குரியதாகக் கருதப்படும் பல்வேறு மலர்களைச் சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

இங்குள்ள ராமசாமி கோவிலில் தினமும் பஞ்சாட்சர பாயசம் படைத்து வழிபாடு நடத்தப் பெறுகிறது. இதே போன்று பாகவதசேவை வழிபாடும் செய்யப்படுகிறது. லட்சுமணசுவாமி சன்னிதியில் கும்பம் (மாசி) மாதத்தில் வரும் கோவில் நிறுவப்பட்ட நாளில் தந்திரி தட்சினா, கேளி, சிறுமேளம் எனும் பெயர்களிலான சிறப்பு வழி பாடுகள் செய்யப்படுகின்றன.

மலையாள நாட்காட்டியின்படி, துலாம் (ஐப்பசி) மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் அனுமனுக்கான பெரும்விழா மிகச்சிறப்பாக நடத்தப்பெறுகிறது. இதே போன்று, மீனம் (பங்குனி) மாதம் அஸ்தம் நட்சத்திர நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் அமாவாசை நாள் ஆகியவற்றிலும் அனுமனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அவல் வழிபாடு :

சீதையைத் தேடிச் செல்லும் அனுமன் பயணத்தின் இடைவெளியில் உண்பதற்காக, ராமன் அவருக்கு அவல் கொடுத்து அனுப்பினார். அதனை நினைவூட்டும் வகையில், இக்கோவிலில் அனுமனுக்கு ஈரமான அவல் படைத்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒரு நாழி, கால் பொதி (25 நாழி), அரைப்பொதி (50 நாழி), ஒரு பொதி (100 நாழி) எனும் அளவுகளில் பக்தர்கள் அனுமனுக்கு அவல் படைத்து வழிபாடு செய்கின்றனர். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

சீதையைக் கண்டறியச் சென்ற அனுமன் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாண்டிக் குதித்ததை நினைவூட்டும் வகையில் கோவில் வளாகத்தில் கல்லில் கட்டிய திடல் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இந்தக் கல் திடலைத் தாண்டிக் குதித்தால், அவர்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களது வாழ்நாள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

இக்கோவிலில் இருக்கும் அனுமனுக்கு, ராமன் சீதையைக் கண்டறிந்து வருவதற்காகச் சீதையின் உருவ அடையாளங்களையும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் சொல்லிய போது, தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அனுமனின் பலத்தையும் சக்தியையும் அதிகரிக்கத் தங்களது சக்தியினை அவருக்கு வழங்கினர். எனவே, இங்கிருக்கும் அனுமனை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் எண்ணிய செயல்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்கின்றனர்.

இந்த ஆலயத்தில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அமைவிடம் :

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர், மலப்புரம் நகரில்இருந்து 32 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திரூர் நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.