Monday, 25 September 2017

இதோ என் செல்வப்பிள்ளை!


திருநாராயணபுரம் கோயில் உற்சவர் செல்வநாராயணரின் சிலை, ஒரு சமயம் டில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருந்தது. பாதுஷாவின் மகள் நாராயணர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். ராமானுஜர் உற்ஸவரை மீட்க வடநாட்டுக்குப் புறப்பட்டார். இளவரசி அரண்மனையில் இல்லை. பாதுஷாவின் அனுமதியுடன் இளவரசியின் அந்தப்புரத்தில் செல்வநாராயணர் விக்ரஹத்தைக் கண்டார். அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. ""இதோ! என் செல்வப்பிள்ளை'' என்று உரக்க அழைத்தார். அந்தச்சிலை சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது. தன் சின்னஞ்சிறு பாதங்களில் சலங்கைகள் ஒலிக்க, ராமானுஜரின் மடியில் வந்து அமர்ந்தார். மீண்டும் விக்ரகமாக மாறிவிட்டார். அதை திருநாராயணபுரம் கோயிலுக்கு கொண்டு வந்தார். அவ்வாறு அவர் திரும்பிய நாளான மாசிகேட்டையன்று "டில்லி உற்ஸவம்' கொண்டாடப்படுகிறது. பாதுஷாவின் மகள் பெருமாளைத் தேடி நாராயணபுரம் வந்துவிட்டாள். செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள். இவள், மூலவரின் பாதத்தில் "வரநந்தினி' என்ற பெயரில் இருப்பதாக ஐதீகம். நாட்டுப்புறங்களில் வரநந்தினியை "பீபிநாச்சியார்' என்று குறிப்பிடுவர்.

ராமாயணம் பற்றிய செய்திகள்


துளசிதாசரின் இனிய நூல்
தமிழில் கம்பராமாயணம், சமஸ்கிருதத்தில் வால்மீகி ராமாயணம் போல, இந்தியில் "ராம் சரித் மானஸ்' (ராமனின் கதை) என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. ஆஞ்சநேயரின் அம்சமான துளசிதாசர் என்பவர் எழுதிய இனிய கதை இது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இந்தியில் இந்த நூல் வெளியான பிறகு தான், வடமாநிலங்களில் ராமபக்தி வேகமாகப் பரவியது. மிக எளிய நடையில் எழுதப்பட்ட நூல் இது. ஆஞ்சநேயர் வழிபாட்டில் மிகவும் பிரசித்தமான "அனுமன் சாலீஸா' இந்த நூலில் சமஸ்கிருத சேர்க்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. துளசிதாசரும் ஆஞ்சநேயரைப் போல மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைதேகி- பெயர்க்காரணம்
சீதைக்கு "வைதேகி' என்று பெயர் உண்டு. விதேகநாட்டில் பிறந்தவள் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகச் சொல்வர். விதேக நாட்டை ஆட்சி செய்தவர் ஜனகர். இவர் ஒரு ராஜரிஷி. பதவியில் இருந்தாலும் அதிகாரம், செல்வத்தின் மீது பற்றில்லாமல் இருந்தார். "விதேகம்' என்ற சொல்லுக்கு "உடல் மீதான ஆசையை விடுத்தல்' என்ற பொருளும் உண்டு. இதன் அடிப்படையில் வைதேகி என்ற சொல்லுக்கு "உடலைத் துறந்தவள்' என்று பொருள் கொள்ளலாம். உடலை உண்மையெனக் கருதி, அதற்கு நகையணிந்து, வாசனைத் திரவியம் பூசும் வழக்கம் இன்று வரை நம்மிடம் விடவில்லை. ஆனால், ராணியாய் பிறந்தாலும், ராஜாவுக்கு வாழ்க்கைப்பட்டாலும், எல்லா இன்பங்களையும் துறந்து காட்டில் வசித்தாள் சீதை. இந்த காரணத்தாலும் இவள் வைதேகியானாள். 

தொந்தரவு செய்பவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
யாராவது உங்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு என்ன பட்டப்பெயர் வைக்கலாம் என்று யோசிக்கவே வேண்டாம். ஏனெனில் "ராவணன்' என்ற பெயர் அவர்களுக்கு பொருத்தமானது. ராவணனின் உண்மைப் பெயர் "தசமுகன்'. "தசம்' என்றால் "பத்து'. பத்து முகங்களை உடையவன் என்பதால் இந்தப்பெயர் வந்தது. இவன் சிவபக்தனாக இருந்தான். ஒரு கட்டத்தில் மமதை அதிகமாகி, சிவன் தங்கியிருந்த கயிலாயமலையையே தன் கையால் பெயர்த்தெடுத்தான். கயிலாயம் குலுங்கியது. தன்னைத் தொந்தரவு செய்த தசமுகனை "ராவணா' என்று அழைத்தார் சிவன். "ராவணன்' என்றால் "தொந்தரவு செய்பவன்' என்று பொருள். தன் பெயருக்கேற்றபடி, அவன் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனுக்கும், மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கும் பெரும் தொந்தரவு செய்து, ராமனின் கையால் மரணத்தை தழுவினான்.

சீதையின் தந்தை சீரத்வஜர்
சீதையின் தந்தை ஜனகர் அல்லவா? சீரத்வஜர் என்கிறீர்களே என்பவர்கள் மேற்கொண்டு படிக்கலாம். மிதிலாபுரியை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் அரசர் ஜனகர். குழந்தையில்லாத இவர், புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்காக, தங்கக்கலப்பை கொண்டு பூமியை உழுது சமன் செய்த போது, ஒரு பெட்டியைக் கண்டெடுத்தார். அதில் இருந்த பெண் குழந்தைக்கு "சீதை' என்று பெயரிட்டார். "ஸுதம்' என்ற சொல்லுக்கு "கலப்பை கொழுவின் நுனி' என்று பொருள். கொழுநுனி மூலம் கிடைத்தவள் என்பதால் "சீதா' என்று பெயரிட்டார். இவரது நிஜப்பெயர் "சீரத்வஜர்'. இவர் "நிமி' என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர். அந்த பரம்பரையில் வந்த அனைவருக்கும் "ஜனகர்' என்ற பொதுப்பெயர் அவரவர் பெயருடன் இணைக்கப் பட்டிருக்கும். "ஜனகர்' என்ற சொல்லுக்கு "தந்தை' என்று பொருள். நாட்டு மக்களுக்கு தந்தை போல் கண்டிப்பும் கனிவும் நிறைந்த சேவை செய்தவர்கள் என்பதால் இந்தப்பெயர் இணைக்கப்பட்டது. சீதையின் தந்தை ஜனகர், மகாலட்சுமிக்கே தந்தையாகும் பாக்கியம் பெற்றார்

அலங்காநல்லூர் பெயர்க்காரணம்


ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்கா நல்லூருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?திருமலை நாயக்க மன்னர் காலத்துக்கு முன்னதாக அழகர் திருவிழா தேனூர் என்ற கிராமத்தில் நடந்தது. அவர் அழகர்கோவிலில் இருந்து தேனூர் வரும் வழியில் ஓரிடத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் அவ்வூர் "அலங்காரநல்லூர்' எனப்பட்டது. அதுவே "அலங்காநல்லூர்' ஆனது. தேனூரில் ஓடும் வைகை ஆற்றில் அழகர் இறங்கிக் கொண்டிருந்தார். ஆற்றுக்குள் இருந்த மண்டபத்தில் தங்கிய அழகர், ஒரு சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக மகரிஷிக்கு விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமலை நாயக்கர் அழகர் விழாவை மதுரைக்கு மாற்றியதும், தேனூரில் இருந்தது போன்ற மண்டபத்தை மதுரை வைகையில் கட்டி, மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் வைபவத்தை நடத்த ஏற்பாடு செய்தார்.

கருப்பு மீது சத்தியம்

Image result for karuppasamy

அழகர்கோவிலில் இருக்கும் காவல் தெய்வம் கருப்பணசாமி வடக்கில் இருந்து வந்ததாகச் சொல்வர். எனவே, வடக்கு நோக்கி நின்று பூஜை செய்வர். பெரியகருப்பு, சின்னகருப்பு, மண்டைக் கருப்பு, தோட்டிக்கருப்பு, கும்மட்டிக்கருப்பு, பழைய கருப்பு என மதுரை வட்டாரத்தை சுற்றியுள்ள அத்தனை கருப்பசாமிகளுக்கும், தலைமைக்கருப்பாக இருப்பவர் பதினெட்டாம்படி கருப்பு. இவரே அழகர்கோவிலில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு உருவம் கிடையாது. கோபுரக்கதவுகளையே கருப்பசாமியாகப் பாவித்து மக்கள் வழிபடுவர். இவருக்கு பொங்கல், வடை, தேங்காய் நிவேதனம். வம்பு,வழக்கு,விவகாரம் தீர்ப்பதில் கருப்பசாமி நிகரற்றவராக விளங்குகிறார். யாரேனும் தவறு செய்ததை மறுத்தால், கருப்பசாமி மீது சத்தியம் செய்யச் சொல்வர். அவ்வாறு அவர் சத்தியம் செய்துவிட்டால் அதை யாரும் மறுத்துப் பேசுவதில்லை. பொய் சத்தியம் செய்தால் கருப்பசாமி கடுமையாகத் தண்டித்து விடுவார் என்பது ஐதீகம். அழகர்கோவில் அழகருக்கு, அபிஷேகத் துக்காக எடுத்துவரப்படும் தீர்த்தத்தை பதினெட்டாம்படி கருப்பசாமியிடம் காட்டியபின்னரே கோயிலுக்குள் கொண்டு செல்வர்.

அபரஞ்சியில் செய்த சிலை


கள்ளழகர் கோயில் மூலவரின் திருநாமம் பரமசுவாமி. நின்றகோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் காட்சிதருகிறார். கையில் சக்கரம் பிரயோக நிலையில் உள்ளது. உற்சவருக்கே அழகர், சுந்தரராஜர் என்ற பெயர்கள் உண்டு. அபரஞ்சி என்னும் உயர்ந்த பொன்னால் செய்யப்பட்ட மூர்த்தியே அழகர். அழகர்கோவிலிலும், திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சி உற்சவமூர்த்திகள் உள்ளன. சித்திரை திருவிழாவுக்காக, மதுரை வரும்போதும், நூபுர கங்கைத்தீர்த்தில் தான், அழகர் சிலைக்கு அபிஷேகம் நடக்கும்.

Sunday, 24 September 2017

பெருமாள் ஏன் துயில்கிறார்?


பெருமாள் சயனத்தில் கண்மூடி நித்திரையில் இருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபன், திருவட்டாரில் (கன்னியாகுமரி) ஆதிகேசவர் ஆகியோரின் அரிய தரிசனத்தைப் பெறலாம். இந்த நித்திரையை "அறிதுயில்' என்பர். கண்ணை மூடியிருந்தாலும் எல்லாம் அறிபவர் அவர். மனிதர்கள் உறங்கும்போது, கனவு காண்கிறார்கள். கனவில் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் வருகிறார்கள். அவர்களுடன் கனவு காண்பவர் உரையாடுவார், விளையாடுவார்...இன்னும் அன்றாட வாழ்வில் என்னென்ன செயல்கள் உண்டோ, அத்தனையும் செய்கிறார். விழித்துவிட்டால் அத்தனையும் கற்பனை போல கலைந்து விடுகிறது. விஷ்ணுவும், கற்பனா சிருஷ்டியாகவே உலகையும், உயிர்களையும் படைக்கிறார். இதனால் தான் கண்மூடியிருப்பது போல நடிக்கிறார். இதற்கு "யோக நித்திரை' என்றும் யெபர். மனிதனின் சாதாரணமான தூக்கம் போல் அல்லாமல், இதை ஒரு தவநிலை என்றும் சொல்லலாம். "அரிதுயில்' என்று சொன்னாலும் தவறல்ல. விஷ்ணுவை "ஹரி' என்கிறோம். இதை தமிழில் "அரி' என்பர். அரியின் தூக்கம் அரிதுயில் ஆகிறது.

ஆற்றங்கரைகளில் கோயில் எழுப்பப்பட்டது ஏன்?


தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் நதிக்கரைகளில் உள்ளன. வயிற்றுக்குத் தேவை உணவு. நதிக்கரைகளில் இருந்த மக்கள், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாததால் தேவையான அளவு பயிர் விளைவித்தனர். உணவுக்கு அவர்கள் கஷ்டப்பட்டதில்லை. எனவே, உயர்ந்த எண்ணங்கள் இயற்கையாகவே அவர்கள் மனதில் எழுந்தது. அதன் விளைவாக இறைவழிபாடு அதிகரித்தது. கோயில்கள் ஏராளமாக எழுப்பப்பட்டன. ஏற்கனவே இருந்த கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டன. உதாரணத்துக்கு காவிரிக்கரையில் தான் கோயில்கள் அதிகம். அன்றைய சோழ ஆட்சியில் தான் கோயில்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. அப்பர், சம்பந்தர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 274ல் 190 காவிரிக்கரையில் உள்ளது. ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 40 காவிரிக்கரையில் இருக்கிறது.