Saturday, 27 January 2018

தந்தைக்காக தவம்

Image result for thirupparamkunram murugan

கயிலாயத்தில் பார்வதிக்கு, சிவன் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். அதை முருகன் மறைவாக இருந்து கேட்டதால் அவருக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க பூலோகம் வந்து தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் தைப்பூசத்தன்று காட்சியளித்தனர். இந்த சிவனுக்கு திருப்பரங்குன்றத்தில் சிவாலயம் அமைக்கப்பட்டது. இதை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்பர். இக்கோவிலை தரிசித்த பின்னரே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என திருப்பரங்கிரி புராணம் கூறுகிறது. இந்தக் கோவில் சன்னிதி தெருவிலேயே அமைந்துள்ளது. தைப்பூசத்தன்று இங்கு வழிபட்டால் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

கேட்டதும் கொடுப்பவர்

Image result for palani murugan

பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் காவடி வழிபாடு மிக சிறப்பானது. காவடி சுமக்கும் பக்தர்கள் மார்கழி முதல் தேதியன்று மாலை அணிந்து, தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வர். பூசத்திற்கு சிலநாள் முன்னதாக பாத யாத்திரையாக புறப்படுவர். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை காவடியில் சுமந்து செல்வர். தைப்பூச விரதமிருந்தால் விருப்பம் எளிதில் நிறைவேறும் என்பர். விரும்பியதைக் கொடுக்கும் தேவலோக சிந்தாமணி போல, பூலோக சிந்தாமணியாக பழநி முருகன் விளங்குகிறார் என அருணகிரிநாதர் கூறுகிறார். 

Friday, 26 January 2018

"ஆஞ்சநேயா' என்று சொல்லலாமா ?

Image result for rama anjaneya

11 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ராமர் தன் அவதாரம் முடிந்து விண்ணுலகம் கிளம்பினார். அப்போது அயோத்தியில் உள்ள அனைவரும் அவருடன் வைகுண்டம் புறப்பட்டனர். ஆனால், அனுமன் மட்டும் அதை விரும்பவில்லை. "சுவாமி! வைகுண்டத்தில் நாராயண நாமம் வேண்டுமானால் கேட்கும். ஆனால், இங்கிருந்தால் ராமநாமம் ஜெபிக்கலாம், கேட்கலாம். எனவே எனக்கு வைகுண்டம் வேண்டாம். பூலோகத்தில் இருந்து எப்போதும் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்,'' என்றார். 

இதனால் "நாராயணா' என்ற நாமத்தை விட "ராம' நாமம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஆஞ்சநேயரை வணங்கும் போது வெறுமனே "ஆஞ்சநேயா' என்று அழைக்காமல் "ராம தாச ஆஞ்சநேயா' என்று அழைத்தால் அவர் மிகவும் மகிழ்வார் என்கிறார்கள் மகான்கள்.

பைரவரின் நாய்க்கு என்ன பெயர் ?

Image result for bairavar

நம் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ஜிம்மி, டாமி என்று பெயர் வைக்கிறோம் இல்லையா! அதுபோல, பைரவரின் நாய்க்கும் சில பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பைரவருக்கு நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. நாய் எந்த ஒரு மோசமான உணவையும் தின்னும் பழக்கமுள்ளது.

நாம் செய்யும் படுமோசமான செயல்களால் ஏற்பட்ட பாவத்தைக் கூட, மனம் திருந்தி இவரை வணங்கி விட்டால் கழுவி விடுவார் என்பதன் அடையாளமே இது. காசியில் காவல் பணியில் இவர் இருப்பதால், காவல் பிராணியான நாயைக் கொண்டுள்ளார் என்பர். நாயை "வேதஞாளி' என்பர். இதை வேதத்தின் அடையாளமாகவும் கொள்வர். இந்த நாய்க்கு "சாரமேயன்' என்று பெயர் இருப்பதாக ரூப மண்டபம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமாவதாரத்தில் நரசிம்மரா ?


கம்பராமாயணத்தை கம்பர் ஸ்ரீரங்கம் கோவில், தாயார் சன்னிதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றம் செய்தார். அப்போது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி குறிப்பிடக்கூடாது என்றனர். 

கம்பர் அவர்களிடம், ""உங்கள் கருத்தை நரசிம்மர் ஏற்பார் என்றால், அதை அவரே நேரில் தோன்றி சொல்லட்டும்!' எனச்சொல்லி திருமாலிடம், "உடனே நரசிம்ம வடிவில் எல்லார் முன்னிலையிலும் எழுந்தருளி, எனது கருத்தை ஆதரிக்க வேண்டும்,'' என வேண்டினார். அப்போது திருமால், நரசிம்ம வடிவில் கர்ஜனையுடன் ஒரு தூணிலிருந்து வெளிப்பட்டார். "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.

இந்த நரசிம்மரை "மேட்டழகிய சிங்கர்' என்பார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது, சக்கரம் இல்லை.

கிரிவல பாதையில் கிருஷ்ணனர்


மகாவிஷ்ணு பூதநாராயணர் என்ற பெயரில் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கிறார். அருணாசலேஸ்வரர் கோவில் அருகில், வடக்கு கிரிவலப்பாதையில் இந்தக் கோவில் உள்ளது. இங்கு சுவாமி, கிருஷ்ணராக பால பருவத்தில் இருந்தாலும், பூதனை என்ற அரக்கியிடம் பால் அருந்தியதால், பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்துள்ளார். தினமும் காலையில் இவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

அண்ணாமலை வரும் சில பக்தர்கள் இவரை வணங்கி கிரிவலம் துவங்கி, இவரது சன்னதியிலேயே நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது, சுவாமியை வணங்கி சன்னதியில் தீர்த்தம் வாங்கி, வாசல் முன் அதை கொட்டுகின்றனர். அதாவது, கிரிவலம் சென்றதால் கிடைத்த பலனை கிருஷ்ணருக்கே சமர்ப்பணம் செய்து, மீண்டும் அதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதாக ஐதீகம்.

மடிசார் அம்பிகை


பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம் பட்டீஸ்வரம். இங்குள்ள துர்க்கை சன்னிதி மிகவும் பிரசித்தமானது. மூன்று கண்களும், எட்டு கைகளும் கொண்ட இவள், புன்னகை ததும்பும் முகத்துடன் காட்சி தருகிறாள். எட்டுகைகளில் ஒன்று அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று இடுப்பில் வைத்த நிலையிலும் இருக்கிறது. மற்ற கைகளில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், வில், அம்பு ஆகிய ஆயுதங்கள் உள்ளன. இங்கு அம்மன் சாந்த நிலையில் இருப்பதால் வலப்புறம் இருக்கும் சிங்கம் இடப்புறமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த துர்க்கை மடிசார் புடவையுடன் காட்சி தருவது சிறப்பு. சாந்தரூபினியான பட்டீஸ்வரம் துர்க்கையை நவராத்திரி காலத்தில் வழிபட்டால் வாழ்வில் நன்மை பெருகும்.