Friday, 27 April 2018

பணமா... பாசமா....


காஞ்சிப்பெரியவரின் பக்தர் ஒருவர் சில மாதத்திற்கு முன் பணி ஓய்வு பெற்றார். வருமானம் நின்று விட்டால் யாரும் மதிக்க மாட்டார்கள் என வருந்தினார். அதை கண்ட சுவாமி பரிவோடு, ''உன் முகத்தில் சந்தோஷம் இல்லையே?'' என கேட்டார். 

கண்ணீர் பெருகிய கண்களுடன் அவர், ''எதை சொல்வது... பிரச்னை ஒன்றா... இரண்டா... காலையில் எழுந்ததும் காபி கிடைப்பதில்லை. வேளா வேளைக்கு சாப்பாடும் வருவதில்லை. வீட்டில் நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை கூட யாரும் கவனிப்பதில்லை. எல்லோருக்கும் வேண்டாதவனாகி விட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன் இல்லையா? இனி என்னால் ஆவது ஒன்றுமில்லை. அதனால் தான் இத்தனை அலட்சியம்! பணியில் இருக்கும் போதே காலமாகி இருக்கலாம். இப்போது நான் உயிரோடிருந்து யாருக்கு லாபம்?'' என புலம்பினார். ஓய்வு பெற்றதால் உண்டான விரக்தி, தனிமை உணர்வால் அனைவரும் அலட்சியப்படுத்துவதாக எண்ணுகிறார் என்பது சுவாமிக்கு புரிந்தது. 

''அலுவலக பணியிலிருந்து தானே ஓய்வு பெற்றாய்? வீட்டு பணியில் இருந்து இல்லையே... நான் சொல்கிறபடி செய். தினமும் குளித்து விட்டு அரைமணி நேரம் ஜபம் செய். அதை பார்க்கும் மருமகள் மரியாதையுடன் காபி கொடுப்பாள். பேரன், பேத்தியுடன் இணக்கமுடன் பழகு. அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல். ரேஷன் கடைக்கு போவது, கரண்ட் பில் கட்டுவது என வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய். நீ இல்லாமல் வீடு நடக்காது, என்றாக்கி விடு. அப்போது எல்லோரும் தாமாகவே மரியாதையளிப்பர்'' என்று சுவாமி சொல்லிய போதே பக்தரின் மகன், தந்தை வர நேரமாகிறதே என தேடியபடி வந்தான். 

சுவாமியும் அதைக் கண்டு சிரித்தபடி, ''பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. உன் மகன் பாசமுடன் உன்னை தேடி வருவதை பார்... இனி மேலாவது நான் சொன்னபடி நடந்து கொள்!'' என்றார். பக்தரும் மனநிறைவுடன் விடை பெற்றார். 

கண்ணகியின் அவதாரமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

கண்ணகியின் அவதாரமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலை போல பெண்கள் மட்டுமே பொங்கலிடும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலும் இங்கு உள்ளது.

இக்கோவில் உலகம் முழுவதும் அறிந்த கோவில் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு காரணம் இங்கு நடைபெறும் பொங்காலை திருவிழா ஆகும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு பொங்காலை இடுவதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இக்கோவில் இடம் பிடித்துள்ளது.

இப்படி சாதனை படைத்த இக்கோவிலின் வரலாறும் புராதன சிறப்பு கொண்டது. குறிப்பாக இக்கோவிலுக்கும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கும் தொடர்பு உள்ளது.

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் பாண்டிய மன்னன் நீதி தவறினான் என்பதற்காக மதுரையை எரித்த கண்ணகியே கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி என்றும் புராணம் கூறுகிறது.

மதுரையை தீக்கிரையாக்கி விட்டு ஆவேசம் பொங்க தெற்கு நோக்கி புறப்பட்ட கண்ணகி, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள கிள்ளியாற்று கரையில் கண்ணகி இளைப்பாறினார். இதன் நினைவாகவே இங்கு பிற்காலத்தில் கோவில் ஒன்று உருவானதாகவும், கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே பகவதி அம்மன் என்றும் இக்கோவிலின் தலப்புராணமாக கூறப்படுகிறது.

இது போல உலகையாழும் பராசக்தியின் பக்தர் ஒருவர் கிள்ளியாற்றில் குளித்து கொண்டிருந்த போது தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருவர் திடீரென பக்தர் முன்பு தோன்றினார். அந்த சிறுமியின் காந்த சிரிப்பில் பக்தர் தன்னை மறந்து நின்றார். அவரிடம் சிறுமி என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விட முடியுமா? என்று கேட்டார். சிறுமியை உடனே அனுப்ப மனம் விரும்பாத பக்தர், சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். இதற்காக சிறுமியின் கையை பிடித்து அழைத்துச் செல்ல திரும்பிய போது சிறுமி திடீரென மாயமாகி விட்டார்.

மனம் நொந்த பக்தர், வீட்டிற்கு சென்று கண்மூடி தூங்கினார். அப்போது மீண்டும் அந்த சிறுமி, பக்தரின் கனவில் தோன்றி, கிள்ளியாற்று கரையில் தென்னை மரங்களுக்கிடையே 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறியபடி மறைந்து போனார்.அதன் பிறகு தான் பக்தருக்கு சிறுமி வடிவில் வந்தது சாட்சாத் பகவதி என்று தெரிந்தது.

அந்த பக்தரின் முயற்சியால் கட்டப்பட்ட கோவிலேஇன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற கதைகள் பல கூறப்பட்டாலும், இக்கோவிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தது ஆதிசங்கரர் ஆவார். இக்கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்களில் மகிஷாசுர மர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதி சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

இது போல கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்று சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் ஆகியவற்றை ஏந்தி, அரக்கியை அடக்கி அவள்மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். கருவறையில் 2 அம்மன் சிலைகள் உள்ளன. மூலவிக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.

மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறையை ஸ்ரீகோவில் என்று அழைக்கிறார்கள். கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் பகவதி அம்மனை வழிபடும் பெண்களுக்கு அம்மை நோய், கண்திருஷ்டி பாதிப்பு, மன அமைதி இல்லாதவர்களுக்கு மன அமைதி கிடைப்பது, எதிரிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட வாய்ப்பு, வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட வழி பிறப்பது, திருமண தடை நீங்கவும் வழி பிறக்கும்.

இதற்காக இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வார்கள். தினமும் வந்தாலும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று நடைபெறும் பொங்காலை விழாவில் பங்கேற்று பொங்கலிட்டால் வேண்டிய காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

கோவிலின் முன்பு பொங்கல் வைக்கும் போது, கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மனான கண்ணகியும், ஒரு பெண்ணாக கோவி லின் முன்பு வந்து, பெண்களோடு பெண்களாக பொங்கலிடுவார் என்பது இக்கோவிலுக்கு வரும் பெண் களின் நம்பிக்கை.

கண்ணகியோடு சேர்ந்து பொங்கலிடும் போது, கண்ணகியான பகவதி அம்மன் பெண் பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்பதும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இதற்காக ஒவ்வொரு பொங் காலை விழாவிலும் பெண்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இவ்வாறு கலந்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.

1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. இது போல 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந்தேதி நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இது இக்கோவிலின் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.

ஆற்றுக்கால் கோவிலில் குடிகொண்ட பகவதியின் மேல் பக்தர்கள் கொண்ட நம்பிக்கையே இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும். இந்த ஆண்டும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய் அந்தஸ்து: ஆற்றுக்கால் பகவதி அம்மனை இந்த ஊரின் தாயாக மக்கள் கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விஷேசமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான் வழங்கப்படுகிறது.

நடை திறப்பு: இந்த கோவிலின் நடை அதிகாலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

போன் நம்பர்: 0471- 2456456, 2463130, 2455600

முருகப்பெருமான் பிரம்மச்சாரியாக அருளும் கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமான் பிரம்மச்சாரியாக அருளும் கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

தமிழ் கடவுளான முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக இருந்து அருளும் தலமாகக் கேரள மாநிலம், கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.

தல வரலாறு :

ராவணனிடம் இருந்து சீதையை மீட்டுக் கொண்டு வரும் வழியில், தன்னைச் சந்திப்பதாகச் சொல்லிச் சென்ற ராமனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார், பிரம்மச்சாரி யான கவுண முனிவர். ஆனால், ராமன் சீதையை மீட்டுக் கொண்டு திரும்பிய போது, அவரைச் சந்திக்காமலேயே சென்று விட்டாராம். ராமன் தன்னை மறந்து ஊர் திரும்பிச் சென்றதற்கு, அவரது இல்லற வாழ்க்கையே காரணமென்று நினைத்த கவுண முனிவர், ராமனிடம் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறாத நிலையில், தான் அதிகம் விரும்பும் கடவுளான முருகப்பெருமானிடம் தன் வேண்டுதலை முன்வைப்பதென்று முடிவு செய்தார்.

தன் எண்ணப்படி முருகப்பெருமானுக்கு கோவில் அமைத்த கவுண முனிவரின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘ஒரு மனைவியைக் கொண்டிருக்கும் ராமனே இல்லற வாழ்க்கைக்கு இடையே நம்மை மறந்து விட்டாரே, இரண்டு மனைவிகளைக் கொண்ட முருகப்பெருமான் நமது வேண்டுதலைக் கவனிப்பாரோ, மாட்டாரோ’ என்று நினைத்தார்.

தன் மனதில் எழுந்த சந்தேகத்தின் காரணமாக, கவுண முனிவர் தான் வடித்த முருகப்பெருமானின் சிலையை பிரம்மச்சாரியாக வடித்து, கோவிலில் நிறுவி விட்டார் என்கிறது தல வரலாறு. இதனால் இத்தலத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் ‘பிரம்மச்சாரி முருகன்’ என்றே அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு :

இந்த ஆலயத்தில் இருக்கும் முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவர் ‘சுப்பிரமணியசுவாமி’, ‘கிடங்கூரப்பன்’ என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறார். முருகன் சன்னிதிக்கு எதிரே மேற்குப் பகுதி யில் மயில் உருவத்துடன் கூடிய உயரமான கொடி மரம் மற்றும் பலிபீடம் அமைந்திருக்கிறது. கேரளக் கோவில்களில், இங்குள்ள கொடிமரமே மிகுந்த உயரமானது என்கின்றனர். கோவில் வளாகத்தினுள் மகாவிஷ்ணு, சாஸ்தா சன்னிதிகளும் அமைந்துள்ளன. இங்குள்ள கூத்தம் பலத்தில் புவனேஸ்வரி அம்மன் இருந்து அருள் செய்கிறார் என்கிற நம்பிக்கையும் உள்ளது.

கூத்தம்பலம்:

இந்தக் கோவிலில் மருத்துவக் குணங்கள் அதிக முடைய ‘குறுந்தொட்டி’ எனப்படும் மரத்தைக் கொண்டு கூத்தம்பலம் என்ற மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ராமாயணக் காட்சிகளும், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திர வடிவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தில் வைத்து, பழமையான ‘கூடியாட்டம்’ எனும் கூத்து நடத்தப்படுகிறது. இக்கூத்தில் முருகப்பெருமானைப் பற்றி நடத்தப்படும், ‘பிரம்மச்சாரி கூத்து’ மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.

வழிபாடுகள் :

இந்தக் கோவிலில் தினசரி காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ‘திரு உற்சவம்’ என்று அழைக்கப்படும் இந்த ஆண்டுத் திருவிழா, 10 நாட்கள் வரை வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழா நாட்களில் மலையாள மரபு வழி, கலை நிகழ்ச்சிகள் பலவும் நடத்தப்படுகின்றன.

அதே போல மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதத்தில் திருக்கார்த்திகைத் திருவிழாவும், மகரம் (தை) மாதத்தில் தைப்பூசத் திரு விழாவும் சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

இவை தவிர இத்தலத்தில் உள்ள மகாவிஷ்ணு சன்னிதியில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதத்தில் வரும் அஷ்டமி மற்றும் ரோகிணி நட்சத்திர நாளில் ‘கிருஷ்ண ஜெயந்தி விழா’ கொண்டாடப்படுகிறது. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் இங்குள்ள சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை செய்யப்படுகிறது.

சிங்கம் (ஆவணி) மாதத்தில் உத்திராடம் நட்சத்திர நாளில் ‘புத்தரிசி நாள் விழா’வும், துர்காஷ்டமி, மகாநவமி மற்றும் விஜயதசமி விழாக்களும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன. இதில் விஜயதசமி நாளில் கல்விப் பயிலப் போகும் பிள்ளைகளுக்கு, ‘எழுத்து நிறுத்து விழா’ நடக்கிறது.

வழிபாட்டுப் பலன்கள் :

உடல்நலம் வேண்டுபவர்கள் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், திருமணத்தடை நீங்க வேண்டுபவர்கள் சுயம்வர அர்ச்சனை செய்தும் வேண்டிய பலன்களைப் பெறலாம். இங்குள்ள விஷ்ணு சன்னிதியில் பக்தர்கள் பால்பாயாசம், அப்பம் படைத்து விஷ்ணுவை வணங்கி வருகின்றனர்.

இங்குள்ள கூத்தம்பலத்தில் இருந்து அருளும் புவனேஷ்வரி அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குருதி பூஜை என்னும் சிறப்புப் பூஜை நடத்தப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெறவும், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும், எதிரிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விரும்புபவர்கள் இந்தப் பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழி பட்டுச் செல்கின்றனர்.

அமைவிடம் :

கேரள மாநிலம், கோட்டயத்தில் இருந்து எட்டுமானூர் வழியாக 14 கிலோமீட்டர் தூரம் பயணித்தோ அல்லது பாலா எனும் ஊரிலிருந்து 9 கிலோமீட்டர் தூரம் பயணித்தோ கூட்டாப்புரம் எனும் கிடங்கூர் சந்திப்பு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்று இக்கோவிலை அடையலாம்.

கோட்டயத்தில் இருந்து மன்னார்காடு வழியாக 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆயர்குன்னம் என்னும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தும் இக்கோவிலை அடையலாம். இக்கோவிலுக்குக் கோட்டயம், பாலா ஆகிய இரு ஊர்களில் இருந்தும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

உழைப்பே உயர்வு


ஒரு இளைஞன் பிறந்தது முதல் காட்டிலேயே இருந்ததால், அவன் பெண்களை பார்த்ததே இல்லை. ஒருமுறை அவன் நாட்டுக்குள் பிச்சை எடுக்க சென்றான். ஒரு வீட்டில் பிச்சை கேட்க ஒரு இளம்பெண்ணை கண்டான். ஆணுக்குரியதைப் போல அங்கங்கள் அவளுக்கு இருந்தாலும், மார்புகள் மட்டும் வித்தியாசமாக இருந்தது, அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தன் சந்தேகத்தை அங்கிருந்த சிலரிடம் கேட்டான்.

“வயதுக்கு வந்த பெண்களுக்கு அவ்வாறு இருக்கும். அவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தால், தானாக எடுத்துச் சாப்பிடும் பருவம் வரை, பால் சுரந்து குழந்தையின் பசி போக்கும். அதற்காகதான் பெண்களுக்கு அவை படைக்கப்பட்டன,” என்றனர்.

இதைக் கேட்டதும், பிச்சை பாத்திரத்தை வீசி விட்டு ''பிறக்கப்போகும் குழந்தைக்காக, மார்புகளைக் கொடுத்துள்ளார். அப்படியிருக்க, வலுவாக இருக்கும் தனக்கும் உணவை இறைவன் தருவார்,” என எண்ணி புறப்பட்டான்.
மனிதனுக்கு உழைப்பு முக்கியம். பிறந்ததிலிருந்து வாலிபப்பருவம் வரையே தாயிடம் உணவை எதிர்பார்க்க வேண்டும். அதன்பின் உழைத்து சாப்பிட வேண்டும். இக்கதை காஞ்சிபெரியவரால் அடிக்கடி சொல்வதுண்டு.

தண்டனை யாருக்கு


ராவணன் சகோதரர் விபீஷணனை காட்டில் சில அந்தணர்கள் சிறை பிடித்ததாக ராமர் கேள்விப்பட்டார். நேரில் சென்ற ராமர், கட்டப்பட்ட நிலையில் விபீஷணன் இருப்பது கண்டு அதிர்ந்தார். ராமரை கண்ட அந்தணர்கள் பணிவுடன் வணங்கினர். பழங்கள் அளித்து உபசரித்தனர். 

விபீஷணரை தேடியே ராமர் வந்திருப்பதை உணர்ந்து, ''சுவாமி! தர்ப்பை சேகரிக்க முதிய அந்தணர் ஒருவர் காட்டுக்கு வந்திருந்தார். எப்போதும் மவுன விரதமிருக்கும் அவரைக் கண்ட விபீஷணன் பேச முயற்சித்த போது, அவர் பொருட்படுத்தவில்லை. கோபம் கொண்ட விபீஷணன் காலால் உதைக்க, அந்தணர் உயிர் துறந்தார். அதனால் இவனைக் கட்டி வைத்த சமயத்தில் உத்தமரான நீங்களே வந்து விட்டீர்கள். இவனுக்கு தண்டனை வழங்குங்கள்'' என்றனர். 

ராமர், “இவன் என் பணியாளன். பணியாளனின் செயலுக்கு எஜமானனே பொறுப்பு என்பதால் இவனுக்குரிய தண்டனையை நான் ஏற்பது தான் சரி” என்றார். அதை கேட்ட அந்தணர்களின் உள்ளம் நெகிழ்ந்தது. 

விபீஷணனுக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை என்பதையும், அந்தணரின் மரணம் தற்செயலாக நடந்தது என்பதையும் உணர்ந்தனர். ராமருடன் விபீஷணனை அனுப்பி வைத்தனர்.

Thursday, 26 April 2018

இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல அருமை

sketch-1524564375508

அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார். ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களைக் கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வருமாறு கூறினார்.

அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார். உரோம மகரிஷியும் அவ்வாறே சிவபூஜை செய்து முக்திபேறு பெற்றார். நவக்கிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன. உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.

இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. நவகைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது "இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்" ஆகும். சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது. இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி 2008-ம் ஆண்டில் பூமி பூஜை செய்து, 2010-ம் ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர். திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர். இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத்தடை போன்றவற்றுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது. இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும். இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.

இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும். நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.

திருச்செந்தூரிலிருந்து - குரும்பூர் - ஏரல் பாதையில், கைலாசநாதர் ஆலயம் புதியதாய் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாலயத்திற்கு இராஜ கோபுரம் எழுப்ப வேண்டும் என்பதை உணர்ந்த, கைலாசநாதர் திருக்கோயில் தலைவர் குரு பாலசுப்பிரமணியம் அவர்களால், கோவில்பட்டி "கைலாஷ் டிரஸ்ட்" ஏற்படுத்தப்பட்டு, திருக்கோபுரப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோபுரம் உயர்வதற்குப் பொருளாதாரம் கருதி பொதுமக்களிடமிருந்தும், வணிகர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும், சிவனடியார்களிடமிருந்தும் உபயம் பெறப்பெற்று வரப்படுகிறது. உபயமும் வந்து சேர்ந்த வண்ணம், ஈசன் அருளிக் கொண்டிருக்கிறான். இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு  
கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி - 628 501
தூத்துக்குடி மாவட்டம்.
தொலைபேசி  98422 63681

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் குரு ஸ்லோகங்கள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் குரு ஸ்லோகங்கள்

வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் ‘குரு வார விரதம்’ ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

‘தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்’

குரு பகவான் காயத்ரி :

‘வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்’