Sunday, 27 May 2018

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்


* பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறப்பது தெய்வத்தன்மை.
* உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* கடவுளின் இருப்பிடமான மனதை துாய்மையாக வைப்பது நம் கடமை. 
* உடம்பு துாய்மையாக இருந்தால் போதாது, உள்ளமும் இருக்க வேண்டும். அதற்கு கடவுளின் திருவடியை எப்போதும் சிந்திக்க வேண்டும். 
* கடலைத் தேடி ஓடும் நதி போல, காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும் ஊசி போல ஆழ்ந்த பக்தியில் ஈடுபடுங்கள்.
* கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக் கொள்ள முயல வேண்டும். 
* கடவுள் எல்லோரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே அவரை வணங்குங்கள்.
* தாயாகிய பூமி, நமது விருப்பம் அனைத்தையும் அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்.
* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.
* எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.
* தியானம் செய்தால் பாவம் நீங்கும். நல்ல செயலில் ஈடுபடும் மனநிலை உருவாகும். 
* நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.
* குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது. 
* எளிமை, உழைப்பு இரண்டும் மனிதனை மனநிறைவோடு வாழ வழிகாட்டும் நற்பண்புகள். 
* ஆசையால் கோபம் உண்டாகிறது. அது பாவம் செய்யத் துாண்டுகிறது.
* பிறருடைய குற்றத்தை அன்பினால் திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.
* தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படுவதற்கான கிரக சேர்க்கைகள்!

sani_bhagavan

மரணம் என்பது இயற்கையாக அதாவது வியாதியின் காரணமாக ஏற்படுவது இயற்கையான மரணம் என்று கூறப்படுகிறது. 

விபத்துக்களால், விரோதத்தில் காரணமாக மற்றவர்களால் கொலை செய்யப்படும் நிலையில் ஏற்படும் நிலைக்கு இயற்கைக்கு மாறான மரணம் அல்லது விபத்தால் மரணம் எனப்படுகிறது. எதிர்பாராத சூழ்நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி கொலை செய்யப்படும் நிலையும், வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களால் மரணமும் விதி செய்கின்ற சதி என்று எடுத்துக்கொள்ளலாம். 

இயற்கைக்கு விரோதமான மரணம் ஏற்படுவதற்கான கிரக சேர்க்கைகள்

1. 8-ம் அதிபதி 12-ல் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும். 

2. லக்னத்தின் 22-வது திரிகோணாதிபதி விருச்சிகத்தில் முதல் திரிகோணமாக சர்ப திரிகோணமாக அமைவது. 

3. 8-ம் அதிபதி மிதுனத்தில் 2-வது திரேக்கோணமாக அமைவதும் சனி ஆயுத திரிகோணத்தில் இருப்பது. 

4. ராகு ஆயுத திரிகோணத்தில் இருந்து சனியினால் பார்க்கப்படுவது. 

5. பாவிகள் 8-ல் இருப்பதும், 8-ம் அதிபதி பாவிகளுடன் இருப்பதும் ஆயுதம், கால்நடை, பாம்பு இவற்றால் மரணம் ஏற்படும். 

6. 6-ம் அதிபதிக்கும், 8-ம் இடம், 8-ம் அதிபதிக்கும் ஏற்பட்டால் பகைவரால் தொல்லைகள் ஏற்படும்.

சந்தனத்தால் நோய் தீர்க்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்

சந்தனத்தால் நோய் தீர்க்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்

கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.

தலவரலாறு :

முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும் அழைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்ற போது, கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பலநாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது அதிசயமாக கடம்பக்கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார்.

ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் ரத்தம் வடிவது நின்று விடும் எனக்கூறி, அந்த வனப்பகுதியில் சந்தனமரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள், அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து சந்தனத்தை ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். சந்தனத்தைப் பூசியதும் ரத்தம் நின்று விட்டது.

உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோவில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். சுவாமியின் அற்புத லீலைகளால் சுவாமியின் பெருமை நாடெங்கும் பரவியது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது.

உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம், விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரைவிசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு, விஜயதசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.

சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.

உவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக் காலம், இரவு 7 மணிக்கு சாயரட்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

அமைவிடம் :

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோ மீட்டர் தூரத்திலும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.

சித்தர்களும்... நட்சத்திரமும்.. பிரச்சனைகளும்

சித்தர்களும்... நட்சத்திரமும்.. பிரச்சனைகளும்

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலரும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.

ஒரு முறையாவது உங்களுக்குரிய சித்தர் ஜீவ சமாதிக்கு நேரில் சென்று, ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதந்தோறும் உபவாசம் இருந்து வணங்கி வந்தால் பல மாறுதலான பலன்களை காண முடியும்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும், பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நலம் காணுங்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி, சிவாலயமாகவே இருக்கும்.

* அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய சித்தரின் பெயர் காளங்கிநாதர். இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்கு பெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ‘ஓம் குருவே சரணம்’ என மூன்றுமுறை கூறி, ‘ஓம் ஸ்ரீ காளங்கிநாதர் சித்த குருசுவாமியே சரணம்.. சரணம்..’ என முடிந்தளவு கூறலாம்.

மற்ற நட்சத்திரக்காரர்களும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தருக்கான பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

* பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருக்கு பழனி முருகன் சன்னிதியில் சமாதி உள்ளது.

* கார்த்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தருக்கு உரியது. இவருக்கு சமாதியும் இல்லை. இவரது உடல் அழியவும் இல்லை. நேரடியாக கயிலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கட்கிழமை வெள்ளை ஆடை அணிந்து, வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

* ரோகிணி நட்சத்திரத்திற்கு உரியவர் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

* மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரியவராக இரண்டு சித்தர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பாம்பாட்டி சித்தர். மற்றொருவர் சட்டமுனி சித்தர். இதில் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் சமாதி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

* திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடாருக்கு உரியது. இவரது ஜீவசமாதி, நெருப்பு பிழம்பாக ஈசன் நின்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.

* புனர்பூச நட்சத்திரத்திற்குரியவர் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

* பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தருக்கு உரியது. இவர் திருவாரூரில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

* ஆயில்யம் நட்சத்திரத்திற்கான சித்தர் அகத்தியர். இவரது ஒளிவட்டம் குற்றாலப் பொதிகை மலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.

* மகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

* பூரம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ராமதேவ சித்தர். இவரது ஜீவ சமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை. நம் நாட்டினர் இவரை வழிபட அழகர் மலைக்குத் தான் செல்வார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்டாளையும் வழிபடலாம். அவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிபட வேண்டும்.

* உத்திரம் நட்சத்திரம் சித்தர் காகபுஜண்டருக்கு உரியது. இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

* ஹஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூராருக்கு உரியது. இவர் சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

* சித்திரை நட்சத்திரத்திற்கு உரியவர், சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

* சுவாதி நட்சத்திரத்திற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் இருக்கிறது.

* விசாகம் நட்சத்திரத்திற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

* அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகிக்கு உரியது. இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

* கேட்டை நட்சத்திரம் பகவான் வியாசருக்கு உரியது. இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

* மூலம் நட்சத்திரத்திற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

* பூராடம் நட்சத்திரத்திற்குரியவரும் ராமேதவர் சித்தரே. இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

* உத்திராடம் நட்சத்திரத்திற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

* திருவோணம் நட்சத்திரம் சித்தர் தட்சிணாமூர்த்திக்கு உரியது. இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

* அவிட்டம் நட்சத்திரம் சித்தர் திருமூலருக்கு உரியது. இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.

* சதயம் நட்சத்திரத்திற்கு உரியவர் கவுபாலர். இவரின் சமாதி எங்கிருக்கிறது என்பதற்கான தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

* பூரட்டாதி நட்சத்திரத்திற்கான சித்தர் ஜோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

* உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவர் சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையின் ஒலியாக வந்து, இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

* ரேவதி நட்சத்திரத்திற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மட்டும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்

மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

ஸ்ரீதேவி துதி

பொதுப் பொருள்:

மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.

இந்தத் துதியை தினமும் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வர, குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.

அர்ச்சனை பூக்களின் அற்புத பலன்

அர்ச்சனை பூக்களின் அற்புத பலன்

இறைவனுக்கு மிகப்பெரிய செலவில் எதையும் செய்யத் தேவையில்லை. மனதில் பக்தியோடு, மலர்களை அர்ப்பணித்தாலே போதுமானது. பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை விட சிறப்பான வழிபாடு எதுவும் இல்லை. அதே நேரத்தில் பழைய பூக்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சனை செய்யக்கூடாது.

அர்ச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை காலில் மிதிபடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம். கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது கூடாது.

திருமாலுக்கு, பவளமல்லி, மரிக்கொழுந்து, துளசி ஆகிய மலர்களும், சிவனுக்கு வில்வ இலை, செவ்வரளிப் பூ ஆகியவையும் சிறப்பு வாய்ந்தவை. முருகப்பெருமானுக்கு முல்லை, செவ்வந்தி, ரோஜா சூட்டலாம். அம்பாளுக்கு வெள்ளை நிறப் பூக்களை சாத்தி வழிபடுவது மகத்துவம் வாய்ந்தது.

எந்தெந்த மலர்கள் என்ன சிறப்புகளைத் தரும் என்பதைப் பார்க்கலாம்.

அல்லிப்பூ - செல்வம் பெருகும்

பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்

வாடாமல்லி - மரணபயம் நீங்கும்

மல்லிகை - குடும்ப அமைதி கிடைக்கும்

செம்பருத்தி - ஆன்ம பலம் கூடும்

காசாம்பூ - நன்மைகள் சேரும்

அரளிப்பூ - கடன்கள் அகலும்

அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை

ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்

கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை

ரோஜா பூ - நினைத்தது நடக்கும்

மரிக்கொழுந்து - குலதெய்வம் அருள்

சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்

செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு

நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்

சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு சிறந்தது

சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது

மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை

தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்

நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம்

முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்

பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்

தங்க அரளி (மஞ்சள் பூ) - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.

பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள் மற்றும் ரிஷிகளின் அருளும், ஆசியும் கிடைக்கும்.

திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் விரதம்

திருமண வரம் அருளும் வைகாசி திருநாள் விரதம்

28-5-2018 வைகாசி விசாகம்

வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் ‘வைசாக' மாதம் என்றிருந்து, பின்னாளில் ‘வைகாசி’ என்றானதாக சொல்லப்படுகிறது. இந்த மாத பவுர்ணமி நாளை ‘வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். விசாகம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். தேவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைவித்த சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானின் சக்தியாக ஆறுமுகங்களுடன் தோன்றியவர் முருகப்பெருமான். இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத் திருநாள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

‘வி' என்றால் ‘பட்சி' (மயில்), ‘சாகன்' என்றால் ‘சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் ‘விசாகன்' என்றும் முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். இதன் மூலம் பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.

இந்த நாளில், முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால், அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. 

திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும். வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலன் கிடைப்பதுடன், எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். 

வைகாசி மாத அஷ்டமிக்கு ‘சதாசிவாஷ்டமி’ என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதம் இருப்பர். வெ றும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

விரதம் இருக்கும் முறை

வைகாசி விசாகம் அன்று பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரம், ‘ஓம் சரவணபவாய நம’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும். 

திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம். முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோவிலுக்கு குழுவாகச் செல்லலாம். முருகன் கோவில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.