Monday, 25 June 2018

இறைத்தொண்டு செய்பவர்களுக்கு கர்வம் வரலாமா?

இறைத்தொண்டு செய்பவர்களுக்கு கர்வம் வரலாமா?

கயிலாயத்தில் ஒரு நாள் நந்தி பகவானுக்கு தன் மீதும் தன் சிவ பக்தியின் மீதும் அதிக கர்வம் ஏற்பட்டது. உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமானுக்கு இது தெரியாதா என்ன. நந்தியின் கர்வத்தை அடக்க நினைத்த ஈசனும், நந்தியின் மேல் அமர்ந்தபடி ஒரு முறை பூமியை வலம் வந்தார். 

அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனையே நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். இறை தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நந்தியின் கர்வத்தை அடக்கும் நேரமும் வந்தது. இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார்.

அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஏனென்றால் இறைவன் அப்போது நந்தியுடன் இருந்தார். ஆனால் ஆணவம் உண்டாகி, இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியின் பாரம் கூட தாங்க முடியவில்லை.

தனது வல்லமையின் மீது கர்வம் கொண்டிருந்த நந்தீஸ்வரரும் தனது தவறை உணர்ந்து கர்வம் நீங்கினார். அவனன்றி இவ்வுலகில் எது அசையும்!

உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்

உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்

ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்:

1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

2. பரணி: நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

3. கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

4. ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

5. மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

6. திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

7. புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

8. பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

9. ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

10. மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

11. பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

12. உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

13. அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

14. சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

15. சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

16. விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

17. அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

18. கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.

19. மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

20. பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

21. உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

22. திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

23. அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

24. சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

25. பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

26. உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

27. ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

நட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்.

பஞ்சம் போக்கும் பட்டீஸ்வரர்

பஞ்சம் போக்கும் பட்டீஸ்வரர்

கற்காலம் கடந்து, கணிப்பொறி யுகத்தின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், எப்பொழுதும் மனிதர்களுக்கும், வாழும் உயிர்களுக்கும் இன்றியமையாத தேவை உணவு. மனிதர்களுக்கு அந்த உணவு பெரும்பாலும் விவசாயத்தில் இருந்தே கிடைக்கிறது.

திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை சம்பாவும், திருமணத்துக்குப் பிறகு கவுனி அரிசியும், மகப்பேற்றின் போது பூங்காரும், பிறந்த குழந்தைக்குச் சாதம் ஊட்ட வாரன் சம்பாவும், குழந்தை பிறந்த பிறகு பால் குடவாரையும் என நெல் வகைகள் தமிழகத்தில் நீண்ட காலமாக அக்காலத்தில் பயிரிடப்பட்டு வந்துள்ளன. கிச்சிலிச் சம்பா, கைவரகுச் சம்பா, சிங்கினிச் சம்பா, மடுமுழுங்கி, இலுப்பைப்பூ சம்பா, குழியடிச்சான், கொட்டாரச் சம்பா, தூயமல்லி, ஆரக்குறுவை, காட்டுயானம், குடவாழை இப்படி இன்னும் நெல் வகைகள் நிறைய உண்டு.

தற்போது இப்படிப்பட்ட நெல் வகைகள் இல்லை. கிடைக்கும் நெற்பயிரை வயலில் பயிரிடலாம் என்றால் தற்போது வயல்களும் இல்லை. நகர மயமாக்கல் என்ற பெயரில் விவசாய நிலங்கள் எல்லாம் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டன. இயற்கை வளங்களை அழித்து, மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டனர். விளைவு.. மழை பொய்த்து விவசாயம் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. விவசாயிகள் செய்வது இன்னதென்று தெரியாமல் கையறு நிலையில் தவிக்கிறார்கள். விவசாயத்தை பயிர்த்தொழிலாக நினைக்காமல், ஒட்டுமொத்த உலகத்துக்கே உணவு கிடைக்கச்செய்யும் உயிர் தொழிலாகக் கருதிடவேண்டும்.

அப்படிப்பட்ட உயிர்காக்கும் பயிர் தொழிலின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு, அக்காலத்தில் சிவபெருமான் விவசாயியாகவும், அன்னை பார்வதி தேவி விவசாயப் பெண்ணாகவும் வந்து சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து, நாற்று நட்டு விவசாயம் புரிந்த நிகழ்வு நடந்துள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

கோயம்புத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பேரூர். இங்கு மேலைச் சிதம்பரம் எனும் பச்சை நாயகி சமேத பட்டீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ஒருமுறை மகாவிஷ்ணுவிடம் பிரம்மனின் படைப்புத்தொழில் ரகசியத்தை காமதேனு கேட்டது. அதற்கு விஷ்ணு, தட்சிண கயிலாயமாக விளங்கும் பேரூர் ஆலய ஈசனை வழிபட்டு வர பணித்தார். காமதேனுவும் தனது கன்று பட்டியுடன் பேரூர் வந்து அங்கே காஞ்சி நதி என்னும் நொய்யல் நதிக்கரையில் இருந்த புற்று சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.

ஒருநாள் விளையாட்டாய் காமதேனுவின் கன்று பட்டி, புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தை கலைத்துவிட்டது. கன்றின் குளம்படி ஈசனின் திருமுடியில் அழுத்தமாகப் பதிந்து விட்டது. பதறிப்போன காமதேனு வருந்தியது. காமதேனுவின் வருத்தத்தைப் போக்க ஈசன் அங்கு தோன்றி, ‘பார்வதியின் வளைத்தழும்பை எம் மார்பினில் ஏற்றதுபோல, உன் கன்று பட்டியின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்றார்.

மேலும், ‘பேரூர் முக்தித் தலம் என்பதால், நீ வேண்டும் படைப்பு ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதனைக் கருவூர் (கரூர்) திருத்தலத்தில் அருள்கிறேன். இங்கு பேரூரில் எமது நடன தரிசனத்தை கண்டிடுக' என்றருளி மறைந்தார்.

இத்தலத்தில் சுந்தரருக்கும் ஈசன் தமது ஆனந்த நடனத்தை காட்டியருளி உள்ளார். கோமுனி எனும் பசுவாக பிரம்மனும், பட்டி முனி என்னும் இடையனாக மகாவிஷ்ணுவும் பேரூரில் ஈசனை வழிபட்டு அவரது ஆனந்த திருநடனத்தை கண்டு தரிசித்து பேறுபெற்றுள்ளனர். அதற்கேற்றாற்போல் பேரூர் வெள்ளியம்பலத்தில் நடராஜரின் இரு புறமும் பிரம்மனும், விஷ்ணுவும் இருப்பது சிறப்பு.

தில்லை சிதம்பரத்தில் தாம் ஆடும் ஆனந்த திருத்தாண்டவத்தை, மேற்கிலுள்ள பேரூரில் ஈசன் காட்டியருளுவதால் இத்தலத்தை ‘மேலைச் சிதம்பரம்' என்கிறார்கள்.

ஆதிசங்கரர் எழுதிய சங்கர பாஷ்யத்தில் இக்கோவில் சிறப்பு கூறப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலையை ஈசனின் சிரசாகவும், பேரூர் திருத்தலத்தை திருப்பாதமாகவும் குறிப்பிடு கிறார்கள். இங்கு ஆலயத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரு சன்னிதிகளும் உள்ளது. பரசுராமர், பஞ்சபாண்டவர்களும் இத்தலம் வந்து ஈசனைப் பணிந்து அருள்பெற்றுள்ளனர். இங்குள்ள காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு நடுவில் பால தண்டாயுத பாணியாக மேற்கு நோக்கியவண்ணம் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கொண்டவர் இவர்.

இத்தல அருணாச்சலேஸ்வரர் சன்னிதியில் திருக்கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் அமாவாசை, மூல நட்சத்திர நாட்களில் பச்சைநாயகி அம்மனின் வெளிப் பிரகாரச் சுவற்றில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இங்கு நாய் வாகனம் இல்லாத ஞானபைரவர் தெற்கு பார்த்தக் கோலத்தில் அருள்கிறார். இவரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனிடம் திருப்பணிக்காக பொருள் வேண்டி, பேரூர் திருத்தலம் வந்தார். அப்போது சுந்தரரிடம் விளையாட விரும்பிய ஈசன், அம்பிகையுடன் விவசாயி வேடம் பூண்டு அருகிலுள்ள வயலுக்குச் சென்று நாற்று நட்டுக் கொண்டிருந்தார். பேரூர் ஆலயத்தில் சுவாமியையும், அம்பாளையும் காணாது திகைத்தார் சுந்தரர். அவரது திகைப்பைக் கண்ட நந்தி, ஈசன் வயலில் நாற்று நடும் இடத்தைக் காட்டிக்கொடுத்தார். சுந்தரர் வயலுக்குச் சென்று அங்கு ஈசனும், அம்பாளும் விவசாயி கோலத்தில் சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து நாற்று நட்டுக் கொண்டிருப்பதையும், கூடவே இந்திரன், பிரம்மன், விஷ்ணுவும் வயலில் நீர் பாச்சி, வரப்புகளை சீர்செய்வதையும் கண்டார்.

அப்போது பார்வதி தேவி பச்சை ஆடை உடுத்தி இந்திராணி, சரஸ்வதி, லட்சுமியுடன் சேர்ந்து கும்மியடித்து நாற்று நடவுப் பாடல்கள் பாடி நாற்று நட்டுக்கொண்டிருப்பதையும் கண்டு துதித்து நின்றார். விநாயகரும், முருகரும் விவசாயக் குழந்தைகளாய் வந்து அங்கே வயலில் உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத் தெடுத்து வயற்புறத்தில் வீசி குறும்பாக விளை யாடிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

பின்னர் சுந்தரரும் வயலினுள் இறங்கி நாற்று நட்டுக்கொண்டிருந்த பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் அருகில் சென்று வணங்கி மீண்டும் ஆலயத்திற்குள் அழைத்துவந்தார். பின்பு ஈசனை துதித்து பதிகம் பாடி பொன், பொருள் வேண்டி நின்றார்.

அப்போது ஈசன், ‘சுந்தரா! இத்தலத்தில் உனக்கு எமது ஆனந்த திருநடனம் காட்டுகிறேன். சேரமான்பெருமான் உனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறான். நீ வேண்டும் பொன், பொருளை அங்கு அவன் உனக்கு அளித்திடுவான்' என்று அருளி மறைந்தார்.

இந்த நிகழ்வு பேரூர்ப் புராணத்தின் 19-வது படலமான பள்ளுப்படலம் பகுதியில் விரிவாக கூறப்பட்டு உள்ளது. விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு ‘பச்சை நாயகி’ என்று பெயர். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் செழிப்பாக வளரவும் இவளது சன்னிதியில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். இங்கு சுந்தரருக்கும், சேரமான் பெருமாளுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. அன்று சுந்தரர் பொருட்டு ஈசன் வயலில் இறங்கி நாற்று நட்ட நிகழ்வு அதன் தொடர்ச்சியாய் இன்றும் பேரூர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம் நாளின் முந்தைய தினம் நடைபெற்று வருகிறது.

அன்றைய தினம் மாலையில் ஆலயத்தின் அருகில் உள்ள வயலில் ‘நாற்று நடும் விழா' எனும் பெயரில் பத்துநாள் திருவிழாவாக நடைபெறுகிறது. மறுநாள் காலையில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஈசனும், அம்பாளும் நாற்றுநடும் வயலில் உள்ள மண்ணெடுத்து வந்து வயலிலோ, தோட்டத்திலோ சிறிது தூவினால் மகசூல் நிறையக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அம்மண்ணில் சிறிது எடுத்துவந்து வீட்டின் முகப்பில் ஒரு பச்சை நிறத் துணியில் கட்டித் தொங்கவிட்டால் தீய சக்திகள், வாஸ்து கோளாறுகள் யாவும் நீங்குகிறது என்கிறார்கள். 

பிறப்பில்லாத தலம்

இங்கு தல விருட்சமாக சித்தேச மரம் எனும் பன்னீர் மரம் உள்ளது. இந்த மரம் தவிர ‘பிறவாப் புளி’, ‘இறவாப் பனை’ ஆகிய மரங்களும் இத்தலத்தில் சிறப்புக்குரியவை. இங்குள்ள புளிய மரத்தின் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது என்பதால், ‘பிறவாப் புளி’ என்று பெயர். இந்த புளியமரத்தின் மூலமாக, இத்தல ஈசனை பணிந்தால் மறு பிறப்பில்லை என்பதை ஈசன் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இங்கு இறப்பவர்கள் காதுகளில், ஈசனே ‘நமசிவாய’ மந்திரம் சொல்லி சிவலோகம் அழைத்துச் செல்வதாக ஐதீகம். 

100 ஆண்டுகளாக சுடர்விடும் தீபம் - ஜுவாலா முகி கோவில்

100 ஆண்டுகளாக சுடர்விடும் தீபம் - ஜுவாலா முகி கோவில்

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இறைத் தலங்களில் அறிவியலின் பார்வைகளுக்கு புதிர்களாக பல நிகழ்ச்சிகள் நடந்ததை செய்திகளில் படித்திருப்போம். இன்றைய நவீன யுகத்தில், எந்த ஒரு விஷயத்தையும் விஞ்ஞானம் மூலம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே உண்மை என்று ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், விஞ்ஞானத்தால் விடை காண முடியாத ஆன்மிக விஷயங்களை புதிரான மன நிலையில்தான் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கோவிலின் தீபம் அணையாமல் தொடர்ச்சியாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பது அந்த புதிரை இன்னும் சிக்கலாக மாற்றுகிறது.

ஜுவாலா முகி :

இறை சக்தியின் ஆற்றல் நிறைந்த இடம் என பக்தர்களால் வணங்கப்படும் அந்த ஜுவாலா ஜி கோவில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கங்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தர்மசாலா நகரிலிருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் குடி கொண்டுள்ள ஜுவாலாமுகி தேவியின் அருளைப் பெற ஆண்டு முழுவதுமே மக்கள் கோவிலுக்கு வருகின்றனர். அந்த கோவிலில் உள்ள தீபச்சுடர்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டே இருக்கிறது.

51 சக்தி பீடங்கள் :

தனது தந்தையான தட்சன், கணவர் சிவபெருமானை யாகத்துக்கு அழைக்காமல் அவமானப்படுத்திய காரணத்தால், மனமுடைந்த பராசக்தி தன்னையே அழித்துக்கொண்டதால், அவளது உடலை சுமந்து கொண்டு ருத்ர தாண்டவமாடிய சிவபெருமானை சாந்தப்படுத்த, மகாவிஷ்ணு தன் சக்ராயுதம் மூலம் பராசக்தியின் உடலை 51 பாகங்களாக வெட்டி 51 இடங்களில் விழச்செய்தார். அவ்வாறு விழுந்த பகுதிகள்தான் 51 சக்தி பீடங்களாக புகழ் பெற்று விளங்குகின்றன. அவ்வகையில் பராசக்தியின் நாக்கு விழுந்த இடமே ஜுவாலா ஜி கோவில் ஆகும் என்பது ஐதீகம். அந்த கோவிலில் எரியும் அணையாத சுடரானது, பராசக்தியின் நாக்கு விழுந்த நாள் முதலாக எரிவதாக புராண குறிப்புகள் உள்ளன. இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன.

தங்கக்குடை பரிசு :

பொதுவாக, நெருப்பு எரிவதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு நிலையில் எரிபொருள் தேவை என்ற நிலையில், இக்கோவிலில் எரிந்துக் கொண்டிருக்கும் தீபத்துக்கு அப்படி எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் எரிவது எல்லா காலத்திலும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. முகலாய அரசர் அக்பர் அந்த ஜோதியின் மகத்துவம் பற்றி அறிந்து தங்கக்குடை ஒன்றை பரிசு அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

விஞ்ஞானிகள் ஆய்வு :

அணையாத தீபம் பற்றி கேள்விப்பட்ட பிற்கால விஞ்ஞானிகள் சிலர் அப்பகுதியில் பூமிக்கடியில் எரி மலைகள் இருக்கலாம் என்றும், இயற்கை எரிவாயு அத்தீபம் எரிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்கள். 1970-ம் ஆண்டுகளில் இந்திய அரசு அப்பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்ய புவியிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்பியது. பல காலம் ஆராய்ந்த குழுவினர், அப்பகுதியில் எங்குமே இயற்கை எரிவாயு இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று தெரிவித்தனர். 

ஆனால், ஜுவாலா ஜி கோவிலில் அணையாமல் எரியும் ஜோதிக்கு என்ன காரணம் என்று தங்களால் அறிவியல் ரீதியான விடை காண முடியவில்லை என்றும் அறிக்கை அனுப்பியதாகவும் தகவல்கள் உள்ளன. அந்த கோவில் அமைந்துள்ள பகுதிகளில், சமஸ்கிருதம், தேவநாகரி, மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் 1158, 1745 மற்றும் 1802 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகளும் காணப்படுகின்றன.

நவ துர்க்கைகள் :

அங்கு சுடர் விடும் ஜோதி வடிவத்தின் ஏழு ஜுவாலைகளாக தெரிவது சப்த கன்னியர்கள் என்றும், 9 ஜுவாலைகளாக தெரிவது நவ துர்க்கைகள் என்றும் பக்தர்களால் குறிப்பிடப்படுகிறது. சுடர் நீலநிறத்தில் பிரகாசமாக எரிவதால் அதற்கான எரிபொருள் முழுமையாக பயன்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இயற்கை வாயு அல்லது வேறு ஏதேனும் இயற்கையான எரிபொருளுக்கான மூலம் எதுவும் அறியப்படாத நிலையில் ஜுவாலா ஜி கோவிலில் இன்று வரை அணையாமல் ஜோதி சுடர் விடுகிறது.

மழலைச் செல்வம் தரும் ஐய்யனார்

மழலைச் செல்வம் தரும் ஐய்யனார்

விருதுநகர் அருகே “ஏழாயிரம்பண்ணை’ என்ற பகுதியை சிதம்பரபாண்டியன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். தனது குலதெய்வமான மதுரையில் உள்ள கோச்சடை ஐய்யனார் கோயிலுக்கு குதிரையில் சென்று வழிபட்டு வந்த பின்புதான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பார் சிதம்பர பாண்டியன். 

அவரால் தனது முதுமை காலத்தில் ஐய்யனாரை வழிபட முடியாமல் போனது. இதனால் மனம் வருந்தி சோர்வுற்று இருந்தார். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய ஐய்யனார், “நான் உன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் குளத்தின் கரையில் தென் மேற்கில் கருவேலமரத்தின் கீழ் காட்சியளிப்பேன்’’ என்றார். 

இதையடுத்து தனது பரிவாரங்களுடன் “ஏழாயிரம் பண்ணை’ அருகில் உள்ள திருவேங்கடம் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு சென்று தேடினார் சிதம்பர பாண்டியன். அப்போது மலையின் அடிவாரத்தில் உள்ள குளத்தின் கரையில் ஒரு மயில் பறந்து சென்றது. அதை மன்னரின் கண்கள் நோக்க, அப்போது ஐய்யனார் எலுமிச்சை கனியின் வடிவில் காட்சியளித்தார். மயில் மூலம் தன்னைக் காண்பித்த ஐய்யனாருக்கு அங்கே கோயில் எழுப்பினார் மன்னர். அங்கே பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் இருளாண்டி ஆகிய சுவாமிகளையும் பிரதிஷ்டை செய்தார். 

சிதம்பர பாண்டியனுக்குப் பிறகு பராமரிப்பு இல்லாமல் இருந்தது இவ்வாலயம். கோயிலின் முன் குதிரைகள் மற்றும் வீரபத்திரன், லாடசன்னாசி, தவசி, தம்பிரான்,சனீஸ்வரர் மற்றும் பல்வேறு சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பப்பட்டு கடந்த 2007ஆம் வருடம் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது முறையாக பராமரிக்கப்பட்டு, இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது. 

இக்கோயிலின் சிறப்பு ஸ்ரீராமபுலி ஐய்யனார் தவக்கோலத்தில் உட்கார்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். மேலும் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஐய்யனாரை வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

அமைவிடம்: ராஜபாளையத்தில் இருந்து திருவேங்கடம் வழியாக 43 கி.மீ. தொலைவு. கோவில்பட்டியில் இருந்து 14 கி.மீ தொலைவு.

Sunday, 24 June 2018

தாமரை தந்தால் தீரும் திருமணத்தடை


ராமாயணத்தில் ராமனின் தம்பி பரதனின் பங்கு இணையில்லாதது. 'பரதாழ்வார்' எனப்படும் இவர் கேரளா, இரிஞ்ஞாலக்குடாவில் 'கூடல்மாணிக்கம்' என்னும் பெயரில் மூலவராக அருள்கிறார்.இவரை வழிபட திருமணத்தடை நீங்கும். 

விஷ்ணுபக்தரான 'வக்கேகைமால்' என்பவர் கிராமத் தலைவராக இருந்தார். ஒருநாள், அவரது கனவில் வானுலக தேவர் ஒருவர் தோன்றினார். திடுக்கிட்டு கண் விழித்த போது, அவரது எதிரில் நின்றிருந்தார். ''கைமால் என்னுடன் வா கடற்கரையில் புதையல் இருக்கிறது ''என்று கூறி அழைத்துச் சென்றார். குறிப்பிட்ட இடத்தில் தோண்டியபோது, நான்கு சிலைகள் இருந்தன. பார்ப்பதற்கு ஒன்று போல இருந்த சிலைகள் தசரத சக்கரவர்த்தியின் பிள்ளைகளான ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கன் என்பது தெரிந்தது. விஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதாயுதம், ஜபமாலை ஏந்திய நிலையில் நான்கு கைகளுடன் இவர்கள் காட்சிஅளித்தனர். திரிப்பறையார் என்னுமிடத்தில் ராமர், இரிஞ்ஞாலக்குடாவில் பரதர், மொழிக்குளத்தில் லட்சுமணர், பாயம்மாளில் சத்ருக்கனுக்கு கோயில்கள் அமைத்தார்.

ராமர் காட்டுக்குச் சென்றதை அறிந்த பரதன் தாய் கைகேயியை வெறுத்ததோடு, ராமபாதுகையை சிம்மாசனத்தில் அமர்த்தி, ராமராஜ்ஜியத்தை நடத்தினார். துறவி போல வாழ்ந்த அவர், 14 ஆண்டுகள் பாதுகையை பூஜித்து வந்த தியாகசீலர். ராமர், பரதர், லட்சுமணர், சத்ருக்கன் அருள்புரியும் தலங்களை ஒரேநாளில் தரிசிக்கலாம். அனைத்தும் இரிஞ்ஞாலக்குடாவைச் சுற்றி இருப்பது சிறப்பு.

பழங்காலத்தில் இரிஞ்ஞாலக்குடா காடாக இருந்தது.அங்கு கபிலினி என்னும் மகரிஷி தவத்தில் ஈடுபட்டார். ரிஷியின் தவக்கனல் வைகுண்டத்தை அடைந்தது. மகரிஷியின் பக்தியை மெச்சிய விஷ்ணு, 'கபிலினி! என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்டார். அவரோ, “சுவாமி! உம் அருளால் எனக்கு குறையொன்றுமில்லை. எனக்கென எதுவும் வேண்டாம். என்றென்றும் உம்மை வணங்கும் பாக்கியம் இருந்தால் போதும்' என்றார். ஆனாலும் விஷ்ணு மீண்டும் வற்புறுத்த, தருவதாக இருந்தால் என்றென்றும் இவ்விடத்தில் இருந்து அருள்புரியுங்கள்'' என்று கேட்டார். அதன்படி பெருமாளும் அங்கு தங்குவதாக சம்மதித்தார். 

இரிஞ்ஞாலக்குடாவில் சுவாமிக்கு பரதர் என்னும் பெயரை விட 'கூடல் மாணிக்கம்' என்ற பெயரே பிரபலமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஒரு நாள் சுவாமியின் நெற்றியில் பேரொளி கிளம்பியது. அது எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. இதையடுத்து பக்தர் ஒருவர் காயங்குளம் ராஜாவுக்குச் சொந்தமான மாணிக்கக் கல்லுடன் கோயிலுக்கு வந்தார். சிலையில் இருந்து வரும் ஒளியோடு, மாணிக்கத்தை ஒப்பிடும் நோக்கத்தில் மூலவர் அருகில் சென்ற போது அதிசயம் நிகழ்ந்தது. அவர் கையில் இருந்த மாணிக்கம் அப்படியே பரதரின் நெற்றிக்குள் மறைந்தது. அது முதல், 'மாணிக்கம்' என பெயர் பெற்றார். கோயில் உள்ள பகுதி 'கூடல்' என்பதால் 'கூடல் மாணிக்கம்' என அழைக்கப்படுகிறார்.

இங்குள்ள குளம் குலிபினி தீர்த்தம். மீனைத் தவிர மற்ற தவளை, பாம்பு போன்ற உயிர்கள் இருப்பதில்லை. மீன்களுக்கு பொரியிட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர். இதற்கு 'மீனுாட்டு' என்று பெயர். மூலவருக்கு வாசனை திரவியம் ஏதும் சாத்துவது கிடையாது. தாமரை, துளசி, தெற்றிப்பூக்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. 101 தாமரை மலர்களை மாலையாகத் தொடுத்து மூலவர் கூடல்மாணிக்கத்திற்கு சாத்தி வழிபட திருமணத்தடை நீங்கும்.

எப்படி செல்வது: திருச்சூரிலிருந்து 22கி.மீ.
விசேஷ நாட்கள்: சித்திரையில் பிரம்மோற்ஸவம் 
நேரம்: அதிகாலை 3:00 - பகல் 11:30 மணி; மாலை 5:00 - இரவு 08:30 மணி 
தொடர்புக்கு: 0480 - 282 6631, 282 2631

ராஜா ராணி சிவன்!


ஹோய்சாள மன்னர்கள் கட்டிய கோயில்களில் கர்நாடக மாநிலம் ஹளபேடுவிலுள்ள ஹோய்சாளேஸ்வரர் கோயில் மிக பெரியது. கலைநயம் மிக்க இங்கு ராஜா பெயரிலும், ராணி பெயரிலும் இரு கருவறைகளில் சிவன் காட்சியளிக்கிறார். 


தல வரலாறு: தங்களை துவாரகாபுரியைச் சேர்ந்தவர்கள் என ஹோய்சாள மன்னர்கள் குறிப்பிடுவர். இருப்பினும், இவர்கள் கிருஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின்பற்றினர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு, மீண்டும் வேத சமயத்தைப் பின்பற்றினர். அதன்பின், சிவன், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நுாற்றாண்டில் ஹளபேடு ஹோய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் வம்சத்தின் பெயரால் 'ஹோய்சாளேஸ்வரர்' என பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டுமான பணி 1207ல் நிறைவு பெற்றது. மன்னர் விஷ்ணுவர்த்தனின் அமைச்சரில் ஒருவரான 'கெட்டுமல்லா' வின் தலைமையில் இப்பணி தொடர்ந்தது. 

வரவேற்கும் விநாயகர்: இந்தக் கோயிலின் வாசலில் விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேல் இரு கைகளில் பாசம், அங்குசம் உள்ளன. வலதுகை அந்நியப் படையெடுப்பில் (மாலிக்காபூர் படையெடுப்பு) உடைக்கப் பட்டது. இடதுகையில் மோதகம் உள்ளது. துதிக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. 
விநாயகரின் கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடு மிக்கவை. கால்கள் இரண்டும் மடித்த நிலையில் உள்ளன. கழுத்தில் இருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே கிடக்கிறது. வெயிலுகந்த விநாயகராக வெளியில் காட்சியளிக்கிறார். 


ராஜா ராணி சிவன்: கோயிலில் இரண்டு பிரதான சன்னதிகள் உள்ளன. முதல் சன்னதியில் 'ஹோய்சாளேஸ்வரர்' என்னும் பெயருடன் சிவன் வீற்றிருக்கிறார். எளிமையாக காட்சி தரும் சிவலிங்க பாணத்தின் மீது நாகாபரணம் குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரு கண்கள் அழகு செய்கின்றன. இதன் முன்னுள்ள நவரங்க மண்டபம் வேலைப்பாடு மிக்கது. ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனனின் மனைவி சாந்தளாதேவி பெயரால் 'சாந்தளேஸ்வரர்' என்றொரு சிவன் சன்னதி உள்ளது. வடநாட்டுப்பாணியில் இவர் மீது தாராபாத்திரம் உள்ளது.

இரு சன்னதிக்கும் கிழக்கு நோக்கி வாசல் இருந்தாலும், வடக்கு, தெற்காகவும் வாசல் உண்டு. வாசலுக்கு அருகில் அரண்மனை இருந்ததாக கூறுகின்றனர். வெளியில் எவ்வளவு வெயில் இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்ததும் குளிர்ச்சியாக இருக்கும். பிரசாதமாக தீர்த்தம் வழங்கப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சன்னதியில் உற்ஸவர் சிலைகள் உள்ளன. 


ஒய்யார துவாரபாலகர்: மகாகாளர், நந்தி, என்னும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன் உள்ள துவாரபாலகர்கள், கையில் திரிசூலம், உடுக்கை ஏந்தி சிவன் போல காட்சியளிக்கின்றனர். கைகளை லாவகமாக வளைத்தும், கால்கள் சற்று சாய்ந்தும் ஒய்யாரமாக காட்சி தருகின்றனர். சிவனைச் சரணடைந்தால் நாமும் இவர்கள் போல ராஜாவீட்டு கன்றுக்குட்டியாக வாழலாம். 


நந்தி மண்டபம்: ஹோய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் சன்னதிக்கு நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும், மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு போல கலைநயம் மிக்க துாண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல் நந்தி நடுவில் உள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. கழுத்து சிறிது வளைந்திருக்கிறது. 


சித்திர வேலைப்பாடு: பிரகார சுவர் முழுவதும் யானை, சிங்கம், குதிரைவீரர்கள், பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் நுாற்றுக்கணக்கில் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் ஒரு தேர் போலவும், அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர், கோவர்த்தனகிரியைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர், ராம லட்சுமணர், அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என்று ராமாயணம், மகாபாரதம் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. இக்கோயில் தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. அந்நியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 120 கி.மீ., தொலைவில் ஹாசன். அங்கிருந்து 39 கி.மீ.,
விசேஷ நாட்கள்: மகாசிவராத்திரி, திருக்கார்த்திகையன்று தேர்
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 098803 19949