Wednesday, 19 September 2018

பாலுக்கு பொன் கொடுத்த படிக்காசுநாதர் கோவில்

பாலுக்கு பொன் கொடுத்த படிக்காசுநாதர் கோவில்

புராணக் காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்களும், மண்மலை குன்றுகளும் அதிக மாக இருந்தன. பல்வேறு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை பூஜித்து வந்த, சகோதரர்கள் இருவர் இந்த தலத்திற்கு வந்தனர். பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்று பெயர் கொண்ட அவர்கள், அசுரர்களாக இருப்பினும் சிவபெருமானின் பக்தர்களாக விளங்கினர்.

பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம், வழிபாட்டிற்காக காசியில் இருந்து புனித லிங்கம் எடுத்து வரும்படி கூறினான். அண்ணன் சொன்ன சொல்லை தட்டாமல் தம்பி காசிக்கு சென்றான். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிரஞ்சீவி வந்து சேரவில்லை. இதனால் பெருஞ்சீவி மண்ணால் சிவலிங்கம் ஒன்றைச் செய்து, உரிய நேரத்தில் சிவ வழிபாடு செய்து முடித்தான்.

இந்த நிலையில் பூஜை முடிந்து வந்த சிரஞ்சீவி, ஏற்கனவே மண்ணால் ஆன லிங்கம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அண்ணன் ஏற்கனவே பூஜையை முடித்து விட்டதை அறிந்த சிரஞ்சீவி, ‘நான் கொண்டு வந்த லிங்கத்தையும் வைத்து வழிபடுங்கள்’ என்றான்.

பெருஞ்சீவி, ‘தம்பி! ஈசனுக்குரிய பூஜை காலம் முடிந்து விட்டது. எனவே நீ கொண்டு வந்த லிங்கத்தை வைத்து பூஜை செய்ய இயலாது’ என்றான். ஆனால் சிரஞ்சீவி விடுவதாக இல்லை. இதனால் கோபம் கொண்ட பெருஞ்சீவி, ‘நீ! லிங்கத்தை தாமதமாகக் கொண்டு வந்துள்ளாய். அதை விட இப்போது அடம்பிடிக்கிறாய். இது தவறு’ என்றான். இதையடுத்து அண்ணன்- தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தம்பி சிரஞ்சீவி, ‘நீ மண்ணால் செய்த இந்த லிங்கத்தையும், இந்த மலையையும் அழிக்கிறேன்’ என்று அண்ணனிடம் சபதம் செய்து விட்டு, கயிலாயநாதனை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினான். இதனைப்பார்த்த பெருஞ்சீவி கலங்கிப் போனான். இருப்பினும் தனது தம்பியைத் தடுப்பதற்காக, அவனும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான்.

அண்ணன்- தம்பி இருவரின் தவத்தால், அவர்கள் இருக்கும் தலத்திற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று நினைத்த திருமால், சிரஞ்சீவிக்காக ஆதிசேஷனையும், பெருஞ்சீவிக்காக கருடனையும் அனுப்பி வைத்தார்.

ஆதிசேஷன் பூலோகம் வந்து, பெருஞ்சீவி அமைத்த மண் லிங்கத்தை அசைக்கத் தொடங்கியது. கருடன் அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும், ஆதிசேஷன் அங்கிருந்து அகன்று விட்டது. கருடனும் தன் இருப்பிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்களுக்கு திருமால் காட்சியளித்தார்.

அப்போது அவர், ‘உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப்புரிந்து கொண்டு நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து ஈசனை வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இத்தலம் புகழ்ப்பெற்று திகழும். காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தையும் இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்’ என்று கூறி மறைந்தார்.

அதன்படியே மண் லிங்கத்தின் பின்னால் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இத்தல சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியை தரிசித்தனர். அந்த லிங்கத்திற்கு தினமும் ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வந்தனர்.

அப்படி முதல் நாள் அபிஷேகம் செய்யப்படும் பாலுக்கு, மறுநாள் இறைவனின் சன்னிதியில் அதற்குரிய விலையாக சிவலிங்கத்தின் அருகில் பொற்காசுகள் இருக்குமாம். இதனால் இத்தல இறைவனுக்கு ‘படிக்காசுநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பெருமை மிகுந்த இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை, ஜடாய்வர்ம வல்லவ சுந்தர பாண்டியன் என்பவர் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 13-ம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதி எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் காசியிலும், கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தல இறைவனின் பெயர் கயிலாயநாதர், அம்மனின் திருநாமம் பிரசன்ன நாயகி என்பதாகும்.

பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதுபோல, இக்கோவிலிலும் கிரிவலம் நடக்கிறது. அடிவாரத்தில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி, சுவாமியை தரிசித்தால் நன்மைகள் வந்து சேரும். பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர், இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்ப நதியில் நீராடி, தேரோடும் வீதிகளில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும் கயிலாசநாதருக்கும் அர்ச்சனை செய்தால் மகப்பேறு உண்டாகும். அதேப் போல் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள பத்மபீடத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும் அப்படி செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழா, சுவாதி நட்சத்திரத்தில் தேரோட்டம், ஆனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் லட்சார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, கார்த்திகை முதல் சோமவாரம் சங்காபிஷேகம், நந்தி பகவானுக்கு பிரதோஷ நாட்களில் அபிஷேகம், திருவிளக்கு பூஜை, ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், மகா சிவராத்திரி என பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தோஷம் நீக்கும் சிறப்பு பூஜை :

ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதி அன்றும் மாத சங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள், மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷம் உள்ளவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் அம்மனுக்கும், சுவாமிக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி ஒரு மனதுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்படுகிறார்கள். இவ்வாறு செய்வதால், சகல தோஷங்களும் நீங்கி சுப மங்கலம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

அமைவிடம் :

புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் வழியாக 30 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து புதுவயல் வழியாக 25 கிலோமீட்டர் தூரத்திலும், அறந்தாங் கியில் இருந்து தேனிப்பட்டி வழியாக 26 கிலோமீட்டர் தொலைவிலும் கீழாநிலைக்கோட்டை உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் நெடுங்குடியை அடையலாம். கோவில் அருகில் செல்லவும் நகரப் பேருந்துகள் உள்ளன.

Tuesday, 18 September 2018

சாய்பாபாவின் அருள் கிடைக்கும் துனி விரத பூஜை

சாய்பாபாவின் அருள் கிடைக்கும் துனி விரத பூஜை

நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். அதாவது தன்னிடமிருந்த சட்கா எனும் குச்சியால் பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21, 48, 54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம். 

பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் (தேங்காய் துருவல், அவல், சர்க்கரை) கலந்த இனிப்பை நிவேதிக்க வேண்டும். 

9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.

மேற்காணும் வழிபாட்டு முறைகளில் அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை செய்து சகல வளங்களும் பெறலாம். நாம் தினமும் பார்த்து அதன்படி திட்டமிட உதவும் காலண்டர் வேறு; பாபா வைத்திருக்கும் காலண்டர் வேறு. 

நம் பிரார்த்தனைகள் நம் காலண்டர்படி இன்ன தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். ஏனென்றால் நமக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அவர் தன் காலண்டர்படி தீர்மானித்து அப்படித்தான் நமக்கு அருள்வார்.

இந்த வார விசேஷங்கள் 18.9.2018 முதல் 24.9.2018 வரை

இந்த வார விசேஷங்கள் 18.9.2018 முதல் 24.9.2018 வரை

18-ந்தேதி (செவ்வாய்) :

* திருப்பதி ஏழுமலையப்பன் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம். பின்னர் யானை வாகனத் தில் புறப்பாடு கண்டருளல்.

 * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை, மாலை மோகன அவதாரம்.
* நாட்டரசன்கோட்டை சிவபெருமான் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

19-ந்தேதி (புதன்) :

* உப்பிலியப்பன் கோவிலில் சீனி வாசப் பெருமாளுக்கு மாலை சூர்ணாபிஷேகம், இரவு வெள்ளி சூரிய பிரபையில் சுவாமி பவனி வருதல்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், இரவு புஷ்ப விமானத்தில் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம், புஷ்பக விமானத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

20-ந்தேதி (வியாழன்) :

* சர்வ ஏகாதசி.
* திருப்பதி பெருமாள் ரத உற்சவம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் உலா.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆகிய தலங்களில் வெண்ணெய் தாழி சேவை.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன காட்சி.
* மேல்நோக்கு நாள்.

21-ந்தேதி (வெள்ளி) :

* முகரம் பண்டிகை.
* அனைத்து விஷ்ணு ஆலயங்க ளிலும் பெருமாள் கருட வாகனம்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் பல்லக்கு உற்சவம்.
* அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் 8-ம் நாள் திருவிழா. மாலை 6.30 மணிக்கு இனிப்பு வகைகள், பலகாரங்கள், பழங்களால் திருக்கல்யாண சுருள் வைத்து மேளதாளத்துடன் பக்தர்கள் பதிவலம் வரும் நிகழ்ச்சி.
* மேல்நோக்கு நாள்.

22-ந்தேதி (சனி) :

* சனி மகாப் பிரதோஷம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வெட்டி வேர் சப்பரத்தில் பவனி.
* சகல சிவன் கோவில்களிலும் மாலை நந்தீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

23-ந்தேதி (ஞாயிறு) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் பவனி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் 10-ம் நாள் திருவிழா. மாலை 5.30 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி.
* மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (திங்கள்) :

* உமா மகேஸ்வர விரதம்.
* பவுர்ணமி
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி கருட வாகனத்திலும் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள். 

கண்ணன் வெண்ணெய் திருடியது ஏன்?

கண்ணன் வெண்ணெய் திருடியது ஏன்?

ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர்.

கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, ஆடைகளைத் திருப்பி கொடுத்தான்.

ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணையினைத் திருடி ஆசை தீர உண்பார். ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான். பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.

அதன் பயனாக அவர்கள் உவகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.

ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களி லெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

Monday, 17 September 2018

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் 108 போற்றி

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் 108 போற்றி

ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்' என்று தொடங்கி `போற்றி' என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். அந்த 108 போற்றி வருமாறு:-

ஓம் ஆஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி

ஓம் ஆஞ்சநேயனே எங்கள் இதய தெய்வமே போற்றி
ஓம் இன்னலைத் தீர்க்க வந்த இறைவா போற்றி
ஓம் ஈடு இணையில்லாத வீரதீர இளமையே போற்றி
ஓம் உன்னத வாலை உச்சி உகந்தவா போற்றி

ஓம் ஊறிலா வண்ணம் காக்கும் உத்தமா போற்றி
ஓம் எண்ணரும் கலைகள் வல்லாய் எளிமையே போற்றி
ஓம் ஏற்றமே அருளும் செல்வ மாருதி போற்றி
ஓம் ஐந்தெனும் புலனை வென்ற ஆண்டவா போற்றி
ஓம் ஒண்ணதி வழங்க வல்ல உயர்குணமே போற்றி

ஓம் ஓங்காரம் செய்து துள்ளும் உரிமையே போற்றி
ஓம் ஓளடதம் தேடிச் சேர்ந்த அதிசயம் போற்றி
ஓம் கண்ணுதல் கருதும் செல்வ கண்மணி போற்றி
ஓம் காற்றிகை அருளால் வந்த கடமையே போற்றி
ஓம் கிண்கிணி தண்டை கொண்ட கிளர்ச்சியே போற்றி

ஓம் கீசகன் பகையின் அண்ணன் அனுமனே போற்றி
ஓம் குரக்கினத் தலைமைகொள் துணைவா போற்றி
ஓம் கூரிய சொல்லின் செல்வ சுந்தர போற்றி
ஓம் கெடுதியை களையும் எங்கள் இறைவனே போற்றி
ஓம் கேடுகள் நீக்கும் ஆஞ்சநேயனே போற்றி

ஓம் கைவரு ராம பக்த அனுமனே போற்றி
ஓம் கொடுமையை நீக்க வந்த குமுதமே போற்றி
ஓம் கோடி சூரியப்பிரபை கொண்ட இறைவா போற்றி
ஓம் கௌவையைக்களையும் செல்வ மாருதி போற்றி
ஓம் சங்கடம் நீக்க எண்ணும் சத்தியம் போற்றி

ஓம் சாத்திரம் எல்லாம் கற்ற சற்குணா போற்றி
ஓம் சிந்தனை சிறந்த செல்வ அனுமனே போற்றி
ஓம் சீரிய ஞானதீப மாருதி போற்றி
ஓம் சுந்தரமுகம் கொள்ஞான சூக்குமம் போற்றி
ஓம் சூரியன் மணியான சுடரொளி போற்றி

ஓம் செந்தமிழ் கம்பன் போற்றும் கீர்த்தியே போற்றி
ஓம் சேய்மையில் அண்மையாம் துணைவரே போற்றி
ஓம் சைலமே உறையும் எங்கள் சற்குணா போற்றி
ஓம் சொர்ணமே மேனியான சுந்தரா போற்றி
ஓம் சோகமே தீர்ப்பாய் எங்கள் அனுமனே போற்றி

ஓம் சௌகரியம் சேர்ப்பாய் எங்கள் சஞ்சீவி போற்றி
ஓம் கடாயெனும் பெயர் கொண்ட கண்மணி போற்றி
ஓம் காட்டினில் மலையில் வாழும் கற்பகம் போற்றி
ஓம் கிளிபயில் சோலை எல்லாம் திரிகுவை போற்றி
ஓம் கீண்டினை அசுரர் மாளக் கீர்த்தியே போற்றி

ஓம் குறைவறு கல்வி ஞானம் படைத்தனை போற்றி
ஓம் கூறு சொல் தன்னின் செல்வன் சுந்தரன் போற்றி
ஓம் கெடுதியைச் சாய்த்து நீக்கும் அனுமன் போற்றி
ஓம் கேடறியாத தூத இறைவனே போற்றி
ஓம் கைநகம் வஜ்ரமான கண்மணி போற்றி

ஓம் கொள்கையில் உறுதி வாய்ந்த மாருதி போற்றி
ஓம் கோட்டையைத் தாண்டும் செல்வ மாருதி போற்றி
ஓம் கௌபீன் இறைவன் போற்றும் கனகமே போற்றி
ஓம் தண்ணிழல் ஆன எங்கள் புண்ணியா போற்றி
ஓம் தாங்கரும் துயரும் தீர்க்கும் தருநிழல் போற்றி

ஓம் திண்ணிய உரம்கொள் தேகா மாருதி போற்றி
ஓம் தீமையை நீக்கும் செல்வ அனுமனே போற்றி
ஓம் துணிவினில் சிறந்த எங்கள் அனுமனே போற்றி
ஓம் தூய்மை வாய்மை வாய்ந்த மெய்ம்மையே போற்றி
ஓம் தெளிவுறு கேள்வி ஞானம் கிளர்த்துவை போற்றி

ஓம் தேடியே சஞ்சீவி நல்கும் கீர்த்தியே போற்றி
ஓம் தையலாம் சீதை போற்றும் தூதனே போற்றி
ஓம் தொழில் நலம் வலிமை நல்கும் தூயவா போற்றி
ஓம் தோள்வலி மிக்க ராம தூதனே போற்றி
ஓம் தௌமியன் போற்றும் ஞான அனுமனே போற்றி

ஓம் நற்குண சீலரே மாருதி வீர போற்றி
ஓம் நாடிய தரவே வல்லாய் நாயக போற்றி
ஓம் நிச்சயம் பிரம்மச்சரியம் காத்தனை போற்றி
ஓம் நீடிய பகையை நீக்கும் நிறைகுணம் போற்றி
ஓம் நுண்மைகொள் அறிவு கொண்ட மாருதி போற்றி

ஓம் நாலறி புலவ ஞான பானுவே போற்றி
ஓம் நெற்றியில் நாமம் காட்டும் நெறியதே போற்றி
ஓம் நேர்ந்தனை ராம நாமம் தூதனே போற்றி
ஓம் நைந்திடும் நிலைமை நீக்கும் நாயகா போற்றி
ஓம் நொந்திட வண்ணம் காக்கும் நோக்கமே போற்றி

ஓம் நோயினை அண்டா வண்ணம் காக்க நீ போற்றி
ஓம் நௌவிபின் சென்ற இராம தூதரே போற்றி
ஓம் பலநலம் கொண்ட எங்கள் பரமனே போற்றி
ஓம் பாலக வஜ்ர தேகா அனுமனே போற்றி
ஓம் பிலமதில் சென்று வெற்றி சேர்த்தனை போற்றி

ஓம் பிழைகள் நீக்கும் செல்வ மாருதி போற்றி
ஓம் புன்மைகள் தன்னை நீக்கும் புனிதமே போற்றி
ஓம் பூவுடைக் கானம் வாழும் பூரண போற்றி
ஓம் பெருமைக்கொள் உரமே பெற்ற பரமனே போற்றி
ஓம் பேசரு வியாகரணம் பிறவெலாம் கற்றாய் போற்றி

ஓம் பைம்பொழில் திரியும் அன்பே அனைத்தும் போற்றி
ஓம் பொறுமை கொள் அறத்தின் தூத புண்ணியா போற்றி
ஓம் போயினை வென்றாய் நன்றாய் பூரண போற்றி
ஓம் பௌவமே தாவிப் பாயும் பரமனே போற்றி
ஓம் எக்குலத் தாரும் போற்றும் இறைவனே போற்றி

ஓம் எங்ஙணும் நீயே உள்ளாய் இறைவனே போற்றி
ஓம் அச்சரத்தால் வாலி அழிந்திடச் செய்தாய் போற்றி
ஓம் அஞ்சனை செல்வ அரிய செம்மணியே போற்றி
ஓம் திட்டமாய் செயல் செய்யும் தினகரன் தூத போற்றி
ஓம் திண்ணமாய் வெற்றி தரும் ஆஞ்சநேயனே போற்றி

ஓம் எத்திறம் தனிலும் வல்ல இனிய மாருதியே போற்றி
ஓம் எந்தையர் சிந்தை வாழும் இறைவ மாருதியே போற்றி
ஓம் எம்மருங்கினிலும் வாழும் இறைவா போற்றி
ஓம் எப்பரம் பொருளும் வாழ்த்தும் இனியவா போற்றி
ஓம் எவ்வனம் செலினும் உய்வன சொல்வாய் போற்றி

ஓம் எய்திடும் இனிமை எல்லாம் இயற்றுவை போற்றி
ஓம் இல்லற ராம தூதன் எங்கள் மாருதியே போற்றி
ஓம் நள்ளிரா தன்னில் காக்கும் காலசஞ்சீவி போற்றி
ஓம் ஆழ்கடல் கடந்த வஜ்ர தேகனே இறைவா போற்றி
ஓம் பாற்கடல் பிறந்த மாது பரிவுறும் கடமை போற்றி

ஓம் மார்பினை பிளந்து மாயன் மகத்துவம் அளித்தாய் போற்றி
ஓம் பன்னலம் சேர்க்கும் எங்கள் பத்ம தேகனே போற்றி
ஓம் நன்னயம் சேர்க்கும் எங்கள் இராம தூதனே போற்றி
ஓம் பொன்னவிர் அஞ்சனை தந்த புதுமையே போற்றி

ஓம் நூற்கடல் கடந்த எங்கள் நுண்மையே போற்றி
ஓம் நாற்பயன் விளைக்கும் எங்கள் நாயகா போற்றி
ஓம் பாற்படு பொருளில் எல்லாம் படர்ந்தனை போற்றி
ஓம் போற்றியே அனும போற்றி
பூரணா போற்றி போற்றி.

Sunday, 16 September 2018

திருமணத்தடை நீக்கும் குலசேகர விநாயகர் திருக்கோவில்

திருமணத்தடை நீக்கும் குலசேகர விநாயகர் திருக்கோவில்

அகத்திய முனிவரை ‘குறுமுனி’ என்பார்கள். அதுபோல விநாயகரை ‘வாமன ரூப' என்பார்கள். ‘வாமன' என்றால் ‘குள்ளமான’ என்று பொருள். ஆம்! விநாயகரும் அகத்தியரும் குள்ள வடிவம் தான். ஆனால் அன்பர்களுக்கு அருளுவதில் முதன்மையானவர்கள். தம் மீது ‘விநாயகர் அகவல்’ பாடியதற்காக அவ்வை பாட்டியை இமைக்கும் நொடியில், விஸ்வரூபமெடுத்து தமது துதிக்கையாலேயே தூக்கி திருக்கயிலாயம் சேர்ப்பித்தவர் விநாயகப்பெருமான்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். அவரது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அயிராவணம் (ஐராவதம் அல்ல) எனும் வெள்ளை யானையை சிவபெருமான் அனுப்பினார். அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார் சுந்தரர். இதை அறிந்த சுந்தரரின் தோழரான சேரமான் பெருமான், தனது குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, சுந்தரர் ஏறிச் சென்ற யானையைச் சுற்றி வந்து அவரும் திருக்கயிலாயம் புறப்பட்டார்.

சுந்தரரும், சேரமான் பெருமானும் சேர்ந்து வானில் கயிலாயம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருக்கோவிலூர் பெரியநாயகி சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை, அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார். மேல் இருந்து கீழே பார்த்த சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?’ எனக் கேட்டனர்.

கயிலாயம் சென்று பரமேஸ்வரனை தரிசிக்க, யாருக்குத் தான் ஆசை இருக்காது. அவ்வைப் பாட்டி ‘நானும் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, விநாயகர் பூஜையை விரைவாக முடிக்க எண்ணி பதற்றத்துடன் செயல்பட்டார்.

அப்போது அங்கு ஒரு அசரீரி கேட்டது. அந்தக் குரல் பெரிய யானைக் கணபதிக்குரியது. ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம் போல் நிதானமாகவே செய்! ‘திருக்கயிலாயம் செல்ல முடியாதோ’ என்ற கவலை வேண்டாம். சுந்தரரும், சேரமானும் கயிலை மலையை அடைவதற்கு முன்னதாகவே, உன்னை அங்கு சேர்த்து விடுகிறேன்’ என்றது அந்த அசரீரி.

தன்பால் விநாயகப்பெருமான் கொண்ட அன்பை எண்ணி மகிழ்ந்த அவ்வை, ‘சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசைபாட...’ எனத் தொடங்கி பாடினார். அந்த பாடல் தான் ‘விநாயகர் அகவல்’ என்று அழைக்கப்படுகிறது.

அவ்வை தனது வழிபாட்டை முடித்ததும், விநாயகப்பெருமான் அவர் முன் தோன்றினார். அடுத்த நொடியே துதிக்கையால் அவ்வைப் பாட்டியை தூக்கி, கயிலாயத்தில் சேர்த்தார். விநாயகர், அவ்வையை திருக்கயிலையில் சேர்த்த பிறகு தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் கயிலையை அடைந்தார்கள்.

ஒரு குறிக்கோளை மனதில் இருத்தி, அச்செயல் வெற்றிகரமாக நிறைவேற ‘விநாயகர் அகவல்’ பாராயணம் செய்வது நல்லது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள குலசேகர விநாயகரை, சங்கடஹர சதுர்த்தி நாளில் 11 முறை விநாயகர் அகவல் பாராயணம் செய்வது சிறப்பான பலனைத் தரும். மேலும் தொடர்ச்சியாக 8 சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் சாத்தி, நெய் தீபம் ஏற்றி விநாயகர் அகவல் பாடினால் நன்மைகள் பல வந்து சேரும்.

உலகை சமன் செய்ய அகத்தியர் தென்திசை வந்தபோது, தென்குமரியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த அந்த சிவலிங்கம் ‘அகஸ்தீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. அகத்தியர் பூஜித்த திருத்தலம் ‘அகஸ்தீஸ்வரம்’ எனப்படுகிறது. இப்படி குறுமுனி அகத்தியர் பூஜித்த அகஸ்தீஸ்வரத்தில் ‘வாமன ரூபன்-மகேஸ்வர புத்திரன்' என அழைக்கப்படும் விநாயகர் விரும்பிக் கோவில் கொண்டார். அவரே குலசேகர விநாயகர் ஆவார்.

தமிழ் மாதப் பிறப்பு, வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில், இத்தலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று அந்திப்பொழுதில் குலசேகர விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவுலா வரும் பெருநிகழ்வு நடைபெறுகிறது. குலசேகர விநாயகர் ஆலயத்தில் கருவறை தீபத்தில் நெய் சேர்த்து வழிபட்டு வந்தால் திருமணத்தடைகள் அகல்கிறதாம். குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் புதன்கிழமைகளின் அந்திப்பொழுதில் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டுவந்தால் குலம் தழைக்க குழந்தைச்செல்வம் கிட்டும் என்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் குலசேகர விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, சிதறுகாய் உடைத்து கருவறையில் நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வந்தால் வறுமை, தரித்திரம் அகலும். செய்தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். இத்தல விநாயகருக்கு அவல், கொழுக்கட்டை, மோதகம் படைத்து வழிபடுவது சிறப்பு. கல்வி அறிவில் சிறக்க அனுதினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்து அருகம்புல், எருக்கு சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தி நாட்களில் தேன், பால் அபிஷேகம் செய்து வழிபடுவதும் நல்ல பலனைத் தரும்.

ஓர் இரவில் கட்டப்பட்ட ஆலயம்

அகஸ்தீஸ்வரத்தில் குலசேகர விநாயகருக்கு ஆலயம் எழுப்பியபோது, அப்போதைய திருவிதாங்கூர் மன்னன் தடை விதித்தானாம். இதனால் ஆலயம் எழுப்பிய அடியவர்கள், ஒரேநாள் இரவில் குலசேகர விநாயகர் ஆலயத்தைக் கட்டிமுடித்தனர். இதனை அறிந்த மன்னன் இரவோடு இரவாக தம் படைவீரர்களை அனுப்பி ஆலயத்தை இடித்துவிட உத்தரவிட்டான். உடனே புறப்பட்டு வந்த படைவீரர்கள், இத்தலத்தை நெருங்கும் போது ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பூஜைகள் ஆரம்பமாகியதால், படைவீரர்கள் கோவிலை இடிக்காமல் சென்று விட்டதாக ஒரு செய்தி உள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்திலும், சுசீந்திரம் அடுத்துள்ள கொட்டாரத்தில் இருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் திருக்கோவில் அமைந்து உள்ளது.

Saturday, 15 September 2018

8 வகையான கிருஷ்ணர்கள்

8 வகையான கிருஷ்ணர்கள்

1. சந்தான கோபால கிருஷ்ணர்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.

3. காளிய கிருஷ்ணன்:காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

4. கோவர்த்தனதாரி:கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5. ராதா-கிருஷ்ணன்(வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

6. முரளீதரன்: இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

7. மதன கோபால்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

8. பார்த்தசாரதி: அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.