Wednesday, 17 October 2018

விநாயகருக்கு உகந்த பரிகாரங்கள்

விநாயகருக்கு உகந்த பரிகாரங்கள்

செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.

சுக்ல சதுர்த்தசி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும்.

வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.

மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.

நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.

வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.

சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

குழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும்.

நாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

Tuesday, 16 October 2018

துன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்

துன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்


செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி
மநோக்ருஹ மந்மத மத
ஜிஹ்வாபிஸாசீருத்
ஸாதயோத் ஸாதய
ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி
பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி
சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய
ஹூம் பட் ஸ்வாஹா

திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம் கோவில்

திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம் கோவில் - இலங்கை

தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருத்தலம், வாயு பகவானால் உடைத்து வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்றான மலை, அகத்தியர் தவமியற்றிய பூமி, திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தேவாரத்தலம், திருப்புகழ் பாடல்பெற்ற கோவில், ராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம்.

புராண வரலாறு :

இத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு, இத்தலம் குறித்து கிடைத்துள்ள புராணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் உள்ளிட்டவை சான்றாக அமைந்துள்ளன. இலங்கையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரமும், மேற்கு கரையில் உள்ள திருக்கேதீஸ்வரமும் ஆகும். இதில் திருகோணேஸ்வரத்தின் காலத்தை கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனுநீதி கண்ட சோழனே இத்திருக்கோவிலைக் கட்டினான் எனக் கூறப்படுகிறது. இவனது மகன் குளக்கோட்டு மகாராஜன் தன் தந்தை விட்டுச் சென்ற கோவிலின் திருப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளான்.

சிவபெருமானின் பூர்வீகத் தலமாகிய கயிலாச மலையின் தென்பகுதியில் சற்றும் பிசகாத நேர்க்கோட்டிலே திருக்கோணேஸ்வரம் அமைந்திருப்பதால், தட்சண கயிலாயம் (தென்கயிலாயம்) என பெயர் பெற்று விளங்குகின்றது. ஆதியில் இத்திருக்கோவில் திருவீதிகள், மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டது.

திருக்கோணமலை திருக்கோவிலின் அமைப்பினால் கவரப்பட்ட இலங்கை மன்னன் கஜபாகு, சிவன் கோவிலை அகற்றி பவுத்த ஆலயம் அமைக்க முடிவு செய்தான். இதற்காக திருக்கோணமலை அருகே முகாமிட்டிருந்தான். அன்று இரவு அவனின் கண் பார்வை பறிபோனது. பயந்துபோன அவனுக்கு மறுநாள் ஆலய அர்ச்சகர்கள் திருநீறு இட்டனர். மறுநொடியே மன்னனின் பார்வை திரும்பியது. இறைவனின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலை இடிப்பதற்கு மாறாக, கூடுதல் திருப்பணி செய்து நன்றி தெரிவித்தான். அவன் நீராடிய தீர்த்தம் ‘கண்தழை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

போர்ச்சுக்கீசியரின் அராஜகம் :

இந்நிலையில் 1624-ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய ஆட்சியின் போது, தளபதி கொன்ஸ்தந்தைன்டீசா ஆலய செல்வங்களை கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட அடியார்கள், மூலவர் சிலைகள், உற்சவ சிலைகளை ஆலய அடிவாரத்தில் உள்ள தம்பலகாமத்தில் மறைத்து வைத்து அங்கேயே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இது இன்றும் ஆதி திருக்கோணேஸ்வரமாகப் போற்றப்படுகிறது.

திட்டமிட்டபடி போர்ச்சுக்கீசிய தளபதி டீசா, திருக்கோணேஸ்வரம் அமைந்திருந்த மலை, மலை நடுப்பகுதியில் இருந்த மாதுமை அம்மன் கோவில், மலை அடிவாரத்தில் இருந்த விஷ்ணு கோவில் என மூன்று கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தான். இடித்த கற்களைக்கொண்டு இம்மலையில் ஓர் கோட்டையை அமைத்தான் என்பது வரலாறு. அதுவே இப்போது ‘பிரட்றிக் கோட்டை’ என அழைக்கப்படுகிறது.

1950-ல் திருக்கோணமலை நகராண்மைக் கழகத்தால் நகர எல்லையில் ஓரிடத்தில் கிணறு தோண்டும் போது, நான்கடி ஆழத்தில் சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பல்வேறு சோழர் காலத்து தெய்வ வடிவங்கள் கிடைத்தன. இதன்பின் கி.பி. 1963-ம் ஆண்டில் புதிய சிவாலயம் எழுப்பப்பட்டது.

கொணா- மாடு, கணா -காது. காதுகளுடைய மாடு என்பது காளையைக் குறிக்கும் சிங்களச் சொல்லாகும். ‘கொணாகணா’ என்பதே கோகண்ணம் என்றாகி, மருவி கோகர்ணமானது.

ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட மோதலில், வாயு பகவான் தன் காற்றின் பலத்தால், மூன்று சிகரங்களைப் பிடுங்கினார். அதில் ஒன்று திருக்கோணேஸ்வரமாக மாறியதாக, ‘தட்சிணகயிலாய மான்மியம்’ கூறுகிறது.

ஆலய அமைப்பு :

மூன்றுபுறம் இந்து மகாசமுத்திரம் சூழ்ந்திருக்க, உயரமான மலை உச்சியில், திருக்கோணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையேறவும், வாகனங்கள் சென்றுவரவும் நல்ல சாலை வசதி உள்ளது. ஆலயத்தில் வலதுபுறம் பிரமாண்ட சுதை வடிவ சிவபெருமான் நம்மை வரவேற்க, கிழக்குநோக்கிய சிறிய ராஜகோபுரம் கடலை நோக்கி காட்சி தருகின்றது. உள்ளே மகாமண்டபம், கருவறை முன்மண்டபத்தை அடுத்து மூலவர் கோணேஸ்வரர் அருள்காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் தெற்குமுகமாய் மாதுமைநாயகி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.

கருவறை வெளிப் பிரகாரத்தில், விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தலமரம், உற்சவர் சபை உள்ளது. கருவறை விமானத்தில் பத்து தலை ராவணன் எழிலாக காட்சி தருகிறார். ஆலயச் சுவர்களில் தலம் தொடர்பான பதிகங்கள், திருப்புகழ், பட்டினத்தார் பாடல்கள் நிறைந்துள்ளன. ஆலயத்தின் வெளியே, கோபுரத்திற்கு எதிரே, ராவணன் சிலை கோவிலை வணங்கியபடி நிற்கிறது. அங்கிருந்து கடல் காட்சி நம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.

இறைவன் திருக்கோணேஸ்வரர், கிழக்கு முகமாய், மலையின் உச்சியில் அமைந்த கோவில் கருவறையில் எழிலான காட்சி தருகின்றார். துன்பங்களுக்கே துன்பம் தந்து, அடியார்களின் துயர் தீர்ப்பவர் இவர். மாதுமை அம்மாள், தென்முகமாக எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். மாதுமை அம்பாளை சங்கரிதேவி எனவும், திருக்கோணேஸ்வரத்தை 18 மகா சக்தி பீடங்களில் ஒன்று எனவும் கொண்டு, மாதந்தோறும் இந்தியாவிலிருந்து அடியார்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஆலயத்தின் தல விருட்சம் கல்லால மரம். தலத்தீர்த்தம் ‘பாபநாசம் தீர்த்தம்’ ஆகும்.

இவ்வாலயத்தில் பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம் செய்து 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது. சிவராத்திரியில் திருக்கோணேஸ்வரர், திருக்கோணமலை நகரில் 5 நாட்கள் வீதியுலா வருவது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசையில் சுவாமி கடலில் நீராடும் போது, திருக்கோணமலை நகரில் உள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் தீர்த்தமாட வருவது மற்றுமொரு சிறப்பு.


வெந்நீர் ஊற்றுகள்

விஷ்ணு உருவாக்கிய வெந்நீர் ஊற்று :

திருக்கோணமலைக்கு அருகில் ‘கன்னியாய்’ என்ற இடம் உள்ளது. இங்கு வெந்நீர் ஊற்றுகள், ஏழு சிறுசிறு கிணறுகளாக அமைந்துள்ளன. இவற்றின் தொன்மைக்காக, இதனைத் தொல்லியல்துறை பராமரித்து வருகிறது. இதற்கு ஒரு புராணம் உண்டு.

திருக்கோணநாதரிடம் இருந்து லிங்கத்தைப் பெற்ற ராவணனைத் தடுக்க நினைத்த விஷ்ணு, அடியவர் வேடத்தில் அங்கு வந்தார். பின்னர் ராவணனின் தாய் இறந்து விட்டதாகவும், அவருக்கு இத்தலத்தில் கிரியை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் கூறினார்.

இதையடுத்து ராவணன் விஷ்ணுவுடன் கன்னியாய் பகுதிக்கு வந்தான். அங்கு விஷ்ணு ஏழு இடங்களில் தன்னிடம் இருந்த தண்டினால் நீரூற்றுகளை ஏற்படுத்தினார். அவையே வெந்நீரூற்றுகளாய் இருப்பதாக நம்பப்படுகிறது.

இலங்கைவாழ் மக்களின் புனிதத் தலமாகவே கன்னியாய் பகுதியில் இருக்கும் நீரூற்றுகள் போற்றப்படுகின்றன.

ராவணன் வெட்டு :

ராவணின் தாய், தன் தலைநகரான இலங்காபுரியில் இருந்து நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். அன்னையின் பக்தியை உணர்ந்த ராவணன், தன் தாயின் சிரமத்தைப் போக்க திருக்கோணேஸ்வர மலையையே வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டான். ஆனால் அது இயலவில்லை என்று தலபுராணம் சொல்கிறது.

ராவணன் சிவலிங்கம் ஒன்றைப் பெறுவதற்காக, திருக்கோேணஸ்வரம் வந்து இறைவனை வணங்கி நின்றான். ஆனால் இறைவன் உடனடியாக ராவணனுக்கு காட்சி தரவில்லை. இதனால் கோபம் கொண்ட ராவணன், திருக்கோணேஸ்வர மலையை தன் வாளால் ஓங்கி வெட்டினான். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளானான். இதைஅடுத்து தன் பத்து தலைகளில் ஒன்றை கொய்து, தசை நார்களால் வீணை செய்து சாம கானம் இசைத்தான். இதனால் மகிழ்ந்த இறைவன், ராவணனுக்கு சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்தார் என்றும் மற்றொரு வரலாறு சொல்கிறது. 

திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட முக்கிய நகரம் திருக்கோணமலை. கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இலங்கையின் பெரிய நதியான மகாவலி கங்கை இங்கு தான் கடலுடன் கலக்கிறது. இம்மலை இலங்கையின் சுவாமிமலையாக போற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 303 கி.மீ., யாழ்ப்பாணத்தில் இருந்து தென்கிழக்கே 232 கி.மீ. தொலைவில் திருக்கோணமலை இருக்கிறது.

Monday, 15 October 2018

கலியுக கடவுள் கல் கருட பகவான் திருக்கோயில் - நாச்சியார்கோவில்

DSC_0074_1

நாச்சியார் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நிவாஸ பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலம். பெருமானின் வலப்பக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத வகையில் இத்திருக்கோவிலில் தரிசனம் தருகிறார். ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு வலப்பக்கத்தில் நான்முகப்பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும் இடது பக்கத்தில் வரிசையாக அநிருநத்தன் ப்ரத்யும்னன் (இவர் மட்டும் சற்றுக் குட்டையான திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார்). சாம்பன் என்ற புருஷோத்தமன் என்பவர் மிடுக்காக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும்.

இது நாச்சியாருக்கு சிறப்புள்ள தலமாகும். ஆஸ்தானத்திலும், திருவிழாக் காலங்களிலும் பெருமாளுக்குச் சற்று முன்னிட்டிருப்பர். நாச்சியாருக்குத் தனிச் சன்னதி இல்லை. ஆண்டாளுக்கு தனிக் கோயில் இல்லை. 

தேரோடும் தெரு முதல் கருவறை முடிய சேர்த்து ஏழு சுற்றுகள் எல்லாத் தலங்களிலும் வடக்கில்தான் பரமபதவாசல் இருக்கும். ஆனால் இத்தலத்தில் திருவுண்ணாழி தெற்கு சுற்றில் தெற்கு நோக்கி பரமபதவாசல் உள்ளது. இத்தனை சிறப்புகள் பெற்றிருக்கும் இத்தலத்தில் மேலும் மெருகூட்டும் விதமாக இறைவன் அருளோடு அனைவருக்கும் அருளாசி வழங்கி வரும் கல் கருட பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.

கல்கருடன்

நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கோயில் கருவறைக்குக் கீழே மகாமண்டபத்தில் வடபால் தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பக்ஷிராஜன், பெரிய திருவடி, வைநதேயன், புள்ளரசர் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். மற்றைய திருப்பதிகளில் இல்லாத தனிச்சிறப்பு இவ்விடத்தில் இவருக்கு உண்டு. இவர் சிலை வடிவானவர். சாளக்கிராம வடிவானவர் என்றும் கூறுவார்கள். இத்தலத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கல்கருடன் தரிசனம் மிகவும் புகழ் பெற்றது. பெருமாளுக்கும் திருவாராதனம் கண்டருளப் பண்ணியவுடன் அவர் செய்த அமுதுபடியை இவருக்கும் சமர்ப்பிக்கும் ஆராதனம் நடைபெறும். இவர் மிகவும் வரப்பிரசாதி. இவருக்கு ஆடி மாதம் சுக்கில பஞ்சமியில் ‘அமுதகலசம்” என்ற கொழுக்கட்டைப் பணியாரம் செய்து சமர்ப்பித்தால் நினைத்த காரியம் உடனே கைகூடும்.

பக்ஷிராஜன் கருடனுக்குத் தனிச்சிறப்பு இத்தலத்தில் உள்ளதுபோல் எங்கும் காண இயலாது. இத்தலத்தில் கருடனின் தனிக் கோயில் மூலஸ்தானத்திற்கு கீழே மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. உள்ளே பக்ஷிராஜன், கருடன் வைநதேயன், பெரிய திருவடி, புள்ளரசு, மங்களாலயன் என்றெல்லாம் புனிதப்பெயர் கொண்டு அழைக்கப்படும். கருடன் சாளக்கிராமச் சிலைவடிவில் வாகன அமைப்பில், நீள் சிறகும், நீள் முடியும் நீண்டு வளர்ந்த திருமேனியும் கொண்டு பெருந்தோளுடனும், மிகவும் மிடுக்குடனும், வீரத்துடனும், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் எழுந்தருளியுள்ளார்.

இவர் எழுந்தருளி உள்ள இடம் 10½ அடி சதுரம் உள்ளது. இவர் வாகன மண்டபத்துக்குப் புறப்பாடு கண்டருளும் காலத்து, ஸ்ரீபாதம் தாங்குவோர் மொத்தம் நால்வராகவும், வாரைகள் சேர்த்தபின் மூலை ஒன்றுக்கு நால்வராகவும், (16 பேர்கள்) பின் எண்மர், பதின்மார்களாகவும் படிகளில் இறங்கியருளும் போது கணக்கற்றவர்களும் ஸ்ரீ பாதம் தாங்கிச் செல்வது காண கண்கோடி வேண்டும். இத்தலத்தில் கருடன் எழுந்தருளியது பற்றி மற்றோர் வாய்வழிக் கதையும் கூறப்படுகிறது.

ஒரு சிற்பி ஆகம முறைப்படி கருட வடிவம் ஒன்றைச் செதுக்கி வந்தார். முடிவில் இரு பக்கங்களிலும் சிறகுகளைச் செதுக்கிப் பிராணப் பிரதிஷ்டை செய்தார். அப்பொழுது திடீரென்று உயிர்பெற்ற கருடன் வானத்தில் எழும்பி பறந்ததைக் கண்டு அச்சமுற்ற சிற்பி உடனே தன் கையில் இருந்த கல் உளியை எடுத்துக் கருடன் மேல் வீசி எறிந்தார். அதனால் அக்கருடன் மூக்கில் அடிப்பட்டு அதன் பின்பு கலியுக வரதராய் அவர் இறங்கி வந்து அமர்ந்தது நாச்சியார்கோயில் எனும் இத்தலமே ஆகும் என்பது புராண வரலாறு.

இவர் கச்யபருக்கும் விநதைக்கும் இரண்டாவது குமாரராக அவதரித்தார். ‘தானாகவே முட்டையிலிருந்து வெளி வந்தார்” எனச் சிலரும், அவசரப்பட்டு தாய் முட்டையைக் குத்தியதால் மூக்கில் சிறிது காயத்துடன் வெளிவந்தார் எனவும் கூறப்படுகிறது. அதனால் தான் இன்றும் பெருமாள் ஆலயங்களில் உள்ள வாகன ‘கருடன்கள் மூக்கின் அடியில் சிறுபுள்ளி அமைந்திருக்கும்” என்றும் சிலர் கூறுவார்கள்.

சூரியனுடைய தேரோட்டியான அருணன் இவரது தமையன் ஆவார். இவருக்கு இரு மனைவிகள் ஒருவர் ருத்ரா மற்றொருவர் ஸுகீர்த்தி. இவர் ஐந்து பிராணன்களின் அதிஷ்டான தேவதை. இவரது பலத்தையும், பக்தியையும் கண்டு திருமால் இவர் வேண்டுகோளின்படியே இவரை வாகனமாகவும் கொடியின் சின்னமாகவும் ஏற்றுக் கொண்டார். இவரைப் பற்றிய ‘கருட பஞ்சாஷரீ” மந்திரம் மிகவும் சிறந்தது. இவரது தரிசனமும் குரலும் என்றும் சிறப்புடையது. வியாழன் மாலையிலும், சனி காலையிலும் ஸ்ரீ கருட வழிபாடு மிகவும் சிறப்புள்ளன என்பார்கள்.

ஸ்ரீகருட வழிபாட்டுச் சிறப்பு

இவரை நினைத்தால் விஷ ஜந்துக்கள் குறிப்பாக பாம்பு இவைகளின் துன்பம் ஏற்படாது. இவரது பெயர் கொண்ட ‘கருடோத்காரம்” என்ற பச்சை மரகதம் மிகவும் சிறப்புடையது. அமுதம் கொண்டு வந்து தாயின் அடிமைத்தனத்தை நீக்கியவர். பாம்புகளில் ஆதிசேஷனுடன் நட்பு கொண்டவர். வைகுந்தத்தில் உள்ள அணுக்கத் தொண்டர்களான நித்திய சூரிகளில் இரண்டாமவர். முற்காலத்தில் நகர அமைப்பில் மக்களுக்கு விஷ பீடை உண்டாகாமல் இருக்க கருடன் பறப்பது போல் நகர் அமைப்பதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக முற்காலத்திய தஞ்சை நகரம் அமைக்கப்பட்டு ‘கருடபுரி” என்று அழைக்கப்பட்டது. 
இவரது திருமேனியில் உள்ள சர்ப்பங்களில், பட்டு முதலிய சித்திர வஸ்திரங்களை சமர்ப்பிப்போர்களுக்கு எண்ணிய நலன்கள் கைகூடும்.

ஆடி சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்குகிறவர்களுக்கு (பிள்ளையே இல்லாதவர்களுக்கு) நல்ல பிள்ளை பிறக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிட்டுவான். இவரது திருநட்சத்திரம் சுவாதியானதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது.

கல் கருடன் வருடம் இருமுறை ஸ்ரீநிவாஸ பெருமானுடன் எழுந்தருள்வது காணத் தக்கதொரு காட்சியாகும். ஒன்று மார்கழிப் பெருந்திருவிழாவில் நான்காம் திருநாளும், மற்றொன்று பங்குனிப் பெருந்திருவிழாவில் நான்காம் திருநாளுமாகும்.

இத்தலத்தில் உறைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமானையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் கருட பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது திண்ணமாகும்.

தாமிரபரணி புஷ்கரம் வரலாறு

தாமிரபரணி புஷ்கரம் வரலாறு

குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி, 11.-10-.2018 அன்று இரவு 7.17 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதாவது தாமிரபரணி நதியில் குருபகவான் பிரவேசிக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புண்ணிய நதியில் நீராடக் கூடாது என்பதால், 12-10-2018 (வெள்ளி) அன்று காலை தாமிரபரணி புஷ்கர விழா நெல்லையில் தொடங்கியுள்ளது.

கி.பி. 1874-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆண்டு “மஹா புஷ்கரம்” என்ற மகோன்னத நிலையை, பெரும் மகிமையை தாமிரபரணி நதி அடையவிருக்கிறது. ‘மஹா’ என்றால் ‘பெரிய’ என்று பொருள். அகில ரூபமாக விளங்கும் இறைவனின் சொரூபமாகவே இந்நதி மாறி விடுகின்ற காலம் இது.

இதனால் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்ணும் மகா பவித்திரம் (தூய்மை) ஆகிறது. அதை நெற்றியில் பூசிக் கொள்வதாலேயே கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது. தாமிரபரணியிலிருந்து வீசும் காற்று தன் தேகத்தில் படுவதாலேயே ஆத்மா புனிதமடைகிறது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.

சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நதி :

சிவபெருமான், பார்வதி தேவியாரைக் கைலாய மலையில் திருமணம் செய்த பொழுது, தேவர் முதலியோர் வடதிசையில் வந்து குவிந்ததால் தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த எண்ணிய சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து, “தென்நாடு செல்க” எனக் கட்டளையிட்டார். அக்கட்டளைக்கு அடிபணிந்த அகத்தியர் சிவபெருமானிடம், “அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தமக்குத் தெரியாது. ஆகவே அதை எமக்கு சொல்லித் தருக” எனக் கேட்டனர்.

உடனே சிவபெருமான் அகத்தியரை தம் அருகில் அமர வைத்து அவருக்கு தமிழ் மொழியைக் கற்பித்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். சூரியபகவான் அவர் முன் தோன்றி தமிழ் இலக்கணங்களையெல்லாம் கற்றுக் கொடுத்தார். முருகப் பெருமானும் அவ்வப்போது அகத்தியர் முன் தோன்றி தமிழ் மொழியின் பல சிறப்புக் கூறுகளை உபதேசித்ததாக கந்த புராணம் சொல்கிறது.

முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் முதல்வராய் இருந்து தமிழை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார் அகத்தியர். பொதிகை மலையில் தங்கி அகத்தியரால் இயற்றப்பட்ட எழுத்துச் சொற்பொருள், யாப்பு, அணி முதலிய அடங்கிய இலக்கணத் தமிழ் நூல் “அகத்தியம்” எனப்படும். கலியுகத்திற்கு 4573 வருடங்களுக்கு முன் பிறந்தவர் அகத்தியர். கி.மு. 7673-ம் ஆண்டு கும்ப மாதத்தில் (மாசி மாதத்தில்) கும்ப ராசியில், கும்ப லக்னத்தில், ஒரு கும்பத்தில் பிறந்தவர் அகத்தியர். எனவே, இவருக்கு ‘கும்பமுனி’ என்ற பெயர் ஏற்பட்டது.

அகத்தியரின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது அவரால் இயற்றப்பட்ட ‘அகத்தியம்’ என்ற தமிழ் இலக்கண நூல் 9600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது. அகத்தியர் பொதிகை மலையில் தங்கி தமிழ்ப்பணி செய்யும் போது சிவபெருமான் அவர் முன் தோன்றி “உனக்கு இங்கே என்ன வேண்டும்? கேள். தருகிறேன்” என்றார். 

“எனக்கு நீராட நதி ஒன்று வேண்டும்” என்றார் அகத்தியர். உடனே, பொதிகை மலையில் நதி ஒன்றை உருவாக்கி அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார் சிவபெருமான். இந்நதி உருவான போது, அது தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் சூட்டினார் ஈசனார். காலப் போக்கில் அது தாமிரபரணி என்று மாற்றம் பெற்றது.

தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானம் பாண தீர்த்தம் எனப்படும். இது பொதிகை மலையில் உள்ளது. இதை அடைவது மிகக் கடினம். 1730 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக 125 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே புன்னைக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமமாகிறது தாமிரபரணி.

வற்றாத ஜீவ நதியாக வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியில் தான் நடராஜப் பெருமானின் நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ளது.இந்நதிக்கரையில் ஏராளமான திருக்கோயில்கள் உள்ளன. ‘நவகைலாயம்’ என்று புகழ் பெற்ற ஒன்பது கைலாயங்கள் இந்நதிக்கரையில் உள்ளன. நவதிருப்பதி என்று புகழ் பெற்ற ஒன்பது வைணவ தலங்களும், தாமிரபரணி நதிக்கரையின் அருகிலேயே அமைந்துள்ளன.

சைவமும், வைணவமும் ஞான சுகங்களை பிறப்பிக்கும் இடமாக தாமிரபரணி நதிக்கரை விளங்குகிறது. இத்தகைய புனித நதியான தாமிரபரணி நதியில் படைப்புக் கடவுளான பிரம்மனின் புஷ்கரம் வரும் 12-10-2018 அன்று முதல் கலந்து கரைந்து போகவிருக்கிறது. இதன் மூலம் தெய்வீகமான இன்னியல்பு தாமிரபரணிக்கு அதிகரிக்கவிருக்கிறது. புதிய புனிதம் ஒன்று அதற்கு வந்து சேரவிருக்கிறது.

12-10-2018 முதல் 23-10-2018 வரை மஹா புஷ்கரம் என்ற பெயரோடு முற்றிலும் புனித நிலையில் 12 நாட்கள் பரமானந்த சொரூபமாய் நிலைத்திருக்கவிருக்கிறது தாமிரபரணி. பரம புண்ணியமயமாகும் இந்நதியில், எல்லாவற்றின் ஆத்மாவாகவும் விளங்குகின்ற பிரம்ம தேவர் அமர்ந்து அந்த நதியைத் தன்மயமாக்கிக் கொண்டு சகல ஜனங்களுக்கும் நன்மை உண்டாகும் பொருட்டு அருள்பாலிக்கின்றார்.

இந்த தீர்த்தத்தில் பிரம்மாவோடு விஷ்ணுவும், ருத்திரரும் சகல தேவர்களுடன் வசிக்கிறார்கள். இந்த புஷ்கர தீர்த்தத்தில் (தாமிரபரணியில்) பலகோடி தீர்த்தங்கள் சங்கமமாகின்றன. அதனால் சகல தீர்த்தங்களிலும் நீராடிய பலனை இந்த புஷ்கர தீர்த்தமே அளிக்கிறது. புஷ்கர தீர்த்த ஸ்நானம் செய்பவரை அவருடைய பித்ருக்கள் எல்லோரும் மற்றும் தேவர்களும் வாழ்த்துகிறார்கள்.

ஏனென்றால் அது பித்ருக்களுக்கும் மோட்சம் அளித்து தேவ கணங்களுக்கும் பிரீதி, சந்தோஷம் அளிக்கிறது.இதனால் தரித்திரம் நீங்கி சிறப்பான பலன்களை அடைய முடியும். மந்திரதந்திரங்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தோஷங்கள் உங்களை நெருங்காது.

சரி, இந்த 12 நாள் நீராடல் என்ற கணக்கு எப்படி வந்தது?

ஜோதிட சாஸ்திரப்படி ராசிகள் மொத்தம் 12. ஒவ்வொரு ராசிக்கு ஒரு நாள் வீதம் 12 ராசிக்காரர்களுக்கு 12 நாள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

வ.எண்.  - தேதி -  கிழமை ராசி

1.    12.10.2018     (வெள்ளி)     விருச்சிகம்
2.    13.10.2018 (சனி)     தனுசு
3.    14.10.2018 (ஞாயிறு)     மகரம்
4.    15.10.2018 (திங்கள்)     கும்பம்
5.    16.10.2018     (செவ்வாய்) மீனம்
6.    17.10.2018 (புதன்)     மேஷம்
7.    18.10.2018     (வியாழன்) ரிஷபம்
8.    19.10.2018     (வெள்ளி)     மிதுனம்
9.    20.10.2018 (சனி)     கடகம்
10.    21.10.2018 (ஞாயிறு)     சிம்மம்
11.    22.10.2018 (திங்கள்)     கன்னி
12.    23.10.2018 (செவ்வாய்) துலாம்

ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும்.

மலர் தூவி வழிபடுதல் :

நல்ல மனதுக்குப் புறச்சின்னமாய் அமைந்திருப்பது மலர். அதனிடத்துப் புதுமையும், எழிலும், மணமும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனது என்றென்றும் மலர் போன்று இருத்தல் வேண்டும். அத்தகைய மனதைக் கடவுளிடத்து ஒப்படைப்பதற்கு அறிகுறியாகக் கையால் மலரை எடுத்துக் கடவுளுக்குத் தூவுகிறோம். அச்செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல் ஆகிறது.

தாமிரபரணி நதியில் நீராடி முடித்தவுடன் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர்களை நதியில் விடுவதும், மஞ்சள் துண்டுகளைப் போடுவதும், மஞ்சள் தூளைக் கொட்டுவதும் சிறந்த செயலாகும். பொருள் வசதி கொண்டோர் தங்கக் காசுகளை நதி நீரில் விடலாம். தாமிரபரணி நதிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து பூஜை செய்வது சிறப்பு.

சிரார்த்தம் (திதி) கொடுத்தல் :

“புஷ்கரம் எனும் புனித நதிக்கரையில் செய்யப்பட்ட சிரார்த்தம், ஜபம், ஹோமம், தபசுகள் அட்சயமான (அழிவற்ற) பலனைக் கொடுக்கின்றன” என்று வியாச முனிவர் கூறுகின்றார். இங்கே திதி கொடுப்பது காசி, கயாவில் கொடுப்பதற்குச் சமம். இங்கே பிண்ட தானம் செய்பவர் தனது பித்ருக்கள் அனைவருக்கும் திருப்தியளித்தவர் ஆகிறார். அவருடைய பித்ருக்கள் பிரளய காலம் வரையிலுமே மிகவும் திருப்தியுடன் இருப்பார்கள். இங்கே பித்ரு காரியம் செய்பவர் தனது மூதாதையர் அனைவரும் விமோசனம் அடைவதற்கு வழி செய்தவராவார்.

நதிக்கரையில் பித்ரு காரியம் செய்பவர்கள் ஒரு சிறிய துணிப் பந்தல் அமைத்து அதனடியில் அமர்ந்து இதைச் செய்ய வேண்டும். வெட்ட வெளியில் செய்யக்கூடாது என்பது தர்ம சாஸ்திர விதி.

தாமிரபரணியில் எங்கே நீராடலாம்? :

தாமிரபரணி நதிக்கரை யில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை மொத்தம் 143 படித்துறைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
இதில் எந்த படித்துறையில் வேண்டுமானாலும் நீராடலாம்; திதி கொடுக்கலாம்; தானம் செய்யலாம் என்றாலும் நவகைலாயம் அமைந்துள்ள ஒன்பது சிவ திருத்தலங்களில் நீராடுவது அதிக மகிமை உடையதாகும்.

நடராஜமூர்த்தியின் ஐந்து நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ள திருநெல்வேலி தாமிரபரணி நதி “பிரம்ம தீர்த்தம்” எனப்படும். ஆகவே, திருநெல்வேலி நகர் முழுமையும் உள்ள தாமிரபரணி நதியில் நீராடுவதும் அதிகமான நற்பலனைத்தரும். ஆலயம் உள்ள தலத்தில் ஓடும் நதி அதிக சுபகரமானதாகும். அது அதிக சுகத்தையும் மங்களத்தையும் கொடுக்கும். ஆகவே ஆலயம் உள்ள இடங்களில் நீராடுவது நல்லது.

யாகம் நடத்துதல் :

உலக மக்கள் நலன் கருதி புஷ்கர தீர்த்தக் கரையில் 12 நாட்களும் யாகம் நடத்த வேண்டும் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.தாமிரபரணி நதி பாய்கின்ற ஊர்களில் வசிக்கின்ற மக்கள் எல்லாம் ஒன்று கூடி யாகம் நடத்தினால் ஊர் செழிக்கும், ஒற்றுமை மேலோங்கும் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ராசிக்காரர்கள் ஒன்று கூடி நிதி திரட்டி இந்த யாகத்தை நடத்தி நன்மை பெறலாம்.

12-10-2018 அன்று விருச்சிக ராசிக்காரர்களும், அதன் பின்னர் தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களும் என வரிசையாக 12 நாட்கள் யாகம் நடத்தலாம். ‘புஷ்கர்’ என்றால் தாமரை. பிரம்மாவின் கையிலிருந்து தாமரை ரசாதலத்தின் மேல் விழுந்ததின் காரணமாக புஷ்கர தீர்த்தம் உண்டாயிற்று என்று பத்ம புராணம் கூறுகிறது. பிரம்மம் என்று சொல்லப்படுகின்ற பரம்பொருளே யாகங்களுக்கு தலைவரான சாஸ்வதப் பிரபு ஆவார்.

யாகங்களை நாம் நடத்துவதன் மூலம் பிரம்மன் முதலான அனைத்து கடவுளர்களும் அந்த யாகங்களில் தோன்றி நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.
அந்தக் காரணத்தினால் இவ்விடத்தில் சிரத்தையோடு வேத பாடங்களை உச்சரிப்பவர்களும், விதிமுறைப்படி மந்திரங்களை உச்சரிப்பவர்களும் குரு பகவானின் கிருபையால் பல நன்மைகளை அடைவார்கள்.

ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திக் கச்சேரிகள், கர்நாடக இசை நிகழ்ச்சிகள், வில்லிசை, நாதஸ்வர கச்சேரிகள், நாட்டியாஞ்சலிகள் என நாளும் ஒரு பக்தி நிகழ்ச்சி நடத்தி அன்னை தாமிரபரணியிடம் சிரத்தை, பக்தி, விசுவாசம் கொண்டு அத்யாத்மிக அன்போடு உங்களை பரிபூரணமாக்கி ஒருவிதமான கசப்பும் இல்லாமல் ஊர் முழுக்க ஒற்றுமையோடும் வளமோடும் ஆயுள் ஆரோக்கியத்தோடும் வாழப் பிரார்த்திக்க வேண்டும்.

பஜனை, தியானம் :

இறைவன் ஆட்சி புரியும் உன்னதமான தாமிரபரணி நதிக் கரையில் விடியற்காலை சாத்வீகமான நேரத்தில் பிரார்த்தனை, தியானம், காயத்ரி ஜபம், பிராணாயாமம், பஜனை, ஜபம், நாம சங்கீர்த்தனம் இவைகளைச் செய்வதால் சாந்தி, ஆனந்தம், விவேகம், வைராக்கியம் எல்லாம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் 15 நிமிடம் தியானம் செய்தால் வேறு காலத்தில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்கு சமமாகும்.

எல்லா மொழிகள் பேசும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சாதுக்கள், ஞானிகள், தபஸ்விகள், ஆன்மீகப் பெரியவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வருகை தர விருப்பம் கொண்டு அதற்கான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தாமிரபரணி நதி தீரம் இப்போதே தீபங்களால் சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கி விட்டது.

144 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நீராடும் நல்லதோர் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இனி 2162 ஆம் ஆண்டில்தான் இந்தப் பெரும் பாக்கியம் நமக்குக் கிட்டும். எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதை மனப் பூர்வமாகச் செய்தால் பகவான் அதற்குப் பரிபூரணமாக அனுக்கிரகம் புரிவார்.

இந்த நதி நீராடல், சிரார்த்தம், தானம் இவைகளை மனப் பூர்வமாகச் செய்து ஒவ்வொருவரும் பேரானந்தத்தையும், தெய்வீக சாந்தியையும், வாழ்வில் வெற்றியையும் அடைய வேண்டும். மண்ணையும் மனிதனையும் வளமாக்கும் அன்னை தாமிரபரணியின் அருள் எப்பொழுதும் உங்கள் மேல் இருக்கட்டும்.

புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் தாமிரபரணி நதியில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்களை செய்தால் பன்மடங்கு பலனையும் தரும், இந்த மகா புஷ்கரமானது எல்லா ராசிக்கும் உகந்தது என்றும், இந்த குருப்பெயர்ச்சியின்போது மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

புஷ்கர காலங்களில் தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். பித்ருக்களுக்கு தர்பணம், திதி முதலிய சடங்குகள் செய்து முன்னோர்களை வழிபட்டால் பிதிர்சாபம் நீங்கி வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறுவார்கள். 

தாமிரபரணி மகாத்மியம் :

வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரையூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம். 

தாமிரபரணியில் கல்கி அவதாரம் :

தாமிரபரணி நதிக்கரையில்தான், தசாவதாரத்தில் நிறைவான அவதாரமான கல்கி அவதாரம் நிகழப்போவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் உலகத்திலேயே மிக அரிதான விலை உயர்ந்த முத்துக்கள் விளைந்ததாக இலக்கியங்களும் வரலாறும் பேசுகின்றன. தொன்மை வாய்ந்த இந்தத் தாமிரபரணி நதியானது, கடல்கோள் நிகழ்வதற்கு முன்னதாக இன்றைய இலங்கை வரை சென்று செழுமை சேர்த்திருக்கிறது. இதுபற்றிய குறிப்புகள் வரலாற்று நூல்களிலும், இலக்கியங்களிலும் நிறையவே காணப்படுகின்றன. 

தாமிரபரணி பொதிகை மலையில் இருந்து சமவெளி பகுதியில் பாயும் முதல் இடமான பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் ஒருங்கிணைப்பில் தமிழ் ஆகம முறைப்படி 16 வகை தீப ஆராதனைகள் தாமிரபரணிக்கு வழிபாடு செய்ய உள்ளனர்.  மேலும் அகத்தியர் மாமுனிவரின் 10 அடி உயர திரு உருவச் சிலை விழா மேடை அருகே வைக்க பட உள்ளது.

வாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு

வாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பது நம் முன்னோர் வாக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக இருப்பது போல, உள்ளம் சீராக இருக்க வள்ளல் முருகனின் வழிபாடு நமக்கு கைகொடுக்கின்றது. அப்படிப்பட்ட முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பலன்கள் இதயம் மகிழும் விதத்தில் நமக்கு வந்து சேருகின்றது.

மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுவது இரண்டு விழாக்கள். ஒன்று திருமண விழா, மற்றொன்று வாரிசு பிறக்கும் திருநாள். அங்ஙனம் வாரிசு உண்டாக, வள்ளல் முருகனை விரதமிருந்து வழிபட வேண்டிய திருநாள் ‘கந்தசஷ்டி’ விழாவாகும்.

முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதமாகும். அதுவும் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டியை ‘கந்த சஷ்டி’ என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கந்தனுக்குரிய சஷ்டி ‘கந்தசஷ்டி’ ஆகும். முரு கனுக்குரிய திதி, விரதங்களில் முக்கியமானது இது.

‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப் பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. திருமண வீடுகளில் பரிமாறும் பொழுது சாம்பார், கூட்டு போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும். அப்பொழுது ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று சிலர் சொல்லிக் கொண்டிருப்பர்.

ஆனால் அதன் உண்மையான விளக்கம், ‘சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால் ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும்’ என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வார்கள்.

பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும். வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என்று, விதியை இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும், அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணாவிரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் மகாத்மா காந்தி. உண்மையாக நாம் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால், சுகங்களை வழங்குவார் முருகப்பெருமான்.

கந்த சஷ்டி விழா காலத்தில் ஆறுநாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டியன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது. அந்தத் திருநாள் ஐப்பசி மாதம் 27-ந் தேதி (13.11.2018) செவ்வாய்க்கிழமை வருகின்றது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில் வருவது சிறப்பு வாய்ந்தது. அன்றையதினம் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகப்பெருமானை வழிபட்டு, இனிப்பு பொருள் உண்டு விரதத்தை பூர்த்தி செய்வது நல்லது.

முருகப்பெருமான் செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், அன்றைய தினம் திருச்செந்தூரில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை வழிபடச் செல்கின்றனர். ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம், தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்’ என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

எனவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்குக் கிடைக்க, திருவருள் கைகூட, குரு பீடமாக அமைந்த திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்குச் சென்றும் வழிபடலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கூடிய தெய்வப்படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு போன்ற பதினாறு பேறுகளும் பெற்று, செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கின்றது.

‘முருகா’ என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப் படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலன் எனப்படும் பிரம்மாவைக் குறிக்கும்.

கந்தன்பேரை எந்தநாளும் சொல்லிப் பாருங்கள்
கவலையெல்லாம் தீரும் இது உண்மைதானுங்க!
செந்தில்வேலன் புகழ்படித்தால் செல்வம் சேருங்க!
தேசமெல்லாம் கொடிபறக்கும் வாழ்வைப் பாருங்க!

என்று கவிஞர் பெருமக்கள் வள்ளி மணாளனை வர்ணித்து கவசம் பாடியிருக்கின்றார்கள்.

மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துகளை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் கிடைக்கும்.

‘நாளென் செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோளென் செயும்
கொடுங்கூற்றென் செயும்
குமரேசர் இரு தாளும் சிலம்பும்
சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்வந்து தோன்றிடினே!

என்ற பாடல் மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

Sunday, 14 October 2018

மணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்

மணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்

பண்பாட்டின் சான்றாய், புண்ணியவான்களின் புகலிடமாய், வேதங்களின் விளைநிலமாய், ஆன்மிகத்தின் ஆதாரமாய், அவதாரங்களின் பிறப்பிடமாய், புராண இதிகாசங்களின் நிகழ்விடமாய்த் திகழ்ந்த பாரதநாடு முழுவதும் எண்பது சதவீத மக்கள் தீண்டாமை, தோன்றாமை, காணாமை போன்ற சாதீயக் கொடுமைகளால் முடக்கப்பட்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம். பின்னாளில் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டதுபோல் ஜாதியும் வர்க்கமும் ஒன்றான கொடுங்காலம்.

இந்தக் கொடுமைகளின் உச்சமாக விளங்கியது, தென் திருவிதாங்கூர் சமஸ்தானம். அன்று, இன்றைய கன்னியாகுமரி மாவட்டமும், தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தாய் வேறு சேய் வேறாக அடிமைகளாக விற்கப்பட்டார்கள். உயர் ஜாதி என்று தம்மைத்தாமே சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சொக்கத் தங்கத்திற்கு இணையான சுவர்னர் என்ற மேட்டுக்குடியினராகவும், வசதி வாய்ப்பற்ற பதினெட்டு ஜாதி மக்கள், அவர்னர்கள் என்று தீண்டத்தகாதவர்களாகவும் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த இரண்டாம் தர மக்களான அவர்னர்கள் காலனி அணியவோ, ஓடுவேய்ந்த வீட்டில் வாழவோ குடை பிடிக்கவோ, பசுமாடு வளர்க்கவோ, மேட்டுக்குடியினர் ஏவும் வேலையைச் செய்துவிட்டு அதற்கான கூலி கேட்கவோ கூடாது. பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் ஏந்தவோ, நகை அணியவோ கூடாது. போதாக்குறைக்கு தாலிக்கு வரி, ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி, முதியோரின் ஊன்றுகோலுக்கு வரி, மண்வெட்டி, அரிவாள், ஓலைப்பெட்டி போன்ற உபகரணங்களுக்கும், வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, கிளி, புறா, தாவரங்கள் அனைத்துக்கும் வரி இப்படி நூற்றுக்கு மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதுமட்டுமின்றி, தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள் தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்ற கொள்கைப்படி பள்ளிக்கூடம், நீதிமன்றம், கோவில், மேட்டுக்குடியினர் வசிக்கும் தெரு, அவர்கள் பயன்படுத்தும் குளம், கிணறு ஆகியவற்றின் அருகில் கூட செல்லக்கூடாது. யாரிடமும் ‘நான் தூங்கப் போகிறேன்’ என்று சொல்லக்கூடாது. ‘தரையில் விழப்போகிறேன்’ என்றே சொல்லவேண்டும். எல்லாவற்றிற்கும் உச்சமாக இந்த ஒடுக்கப்பட்ட பதினெட்டுச் ஜாதியினரும் ஆன்மிக நூல்களை தொடவோ, பார்க்கவோ கூடாது. மேற்காணும் விதிமுறைகளை மீறுகின்ற ஒரு அவர்னரை எந்தச் சுவர்னர் வெட்டிக்கொன்றாலும் கேட்பாரில்லை.

இப்படியெல்லாம் மேட்டுக்குடியினர் மற்றும் அதிகார வர்க்கத்தினரால் வஞ்சிக்கப்பட்ட பதினெட்டு ஜாதி மக்களும், தமக்கு நேர்ந்துள்ள இந்த இழிநிலையை எண்ணி எண்ணி ஏங்கினர். ‘இறைவா எங்களை ஏன் இப்படியெல்லாம் வதைக்கிறாய்?. இதைவிட எங்களை மிருகங்களாகப் பிறப்பித்திருக்கலாமே?’ என்று வாய்விட்டு அழுதனர். கண்ணீர் விட்டுக் கதறினர். அந்தக் குமுறல்கள் ஏகமும் படைத்து எங்கும் நிறைந்த இறைவனுக்கு எட்டியது.

‘எங்கே அதர்மம் ஆட்சிபுரிகிறதோ, அங்கே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன்’ என்ற கீதா உபதேசத்திற்கிணங்க இறைவனின் மனம் கசிந்தது. இதுவரை நிகழ்ந்த, எந்த யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இத்தகையக் கொடுமைகளை எந்த அரக்கனும் செய்ததில்லை. இது கலியுகம் ஆகையால்தான் இத்தகைய கயமைத் தனம் அரசாட்சி செய்கிறது.

இச்செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டுமானால் முன்புள்ள யுகங்களைப் போல் மும்மூர்த்திகளில் ஒரு மூர்த்தி மட்டும் மண்ணகத்தில் அவதரித்தால் போதாது. ஆயுதங்களால் அழிக்க முடியாத இந்த மாயையாகியக் கலியை மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாகி சாதாரண மனிதனைப்போல் அவதரித்து நீதிபோதனை செய்ய வேண்டுமென இறைவன் நிச்சயித்தார்.

அதன்படி திருச்செந்தூர் கடலினுள் மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி ‘வைகுண்டம்’ என்ற பெயரோடு உதித்தார். மண்ணகத்தில் வந்து மனு சொரூபம் எடுத்தார். மணவைப் பதியாம் சாமிதோப்பில் வந்து ஒரு தபோதனனைப் போல் அமர்ந்தார்.

தெய்வமும் அவராய், திருவுள்ளமும் அவராய் மக்கள் மனம் மகிழ மனிதனைப் போலும் காட்சியளித்த அந்த மாயாதி சூட்சனை நாடி, மக்கள் வெள்ளம்போல் குவிந்தனர். சாமிதோப்பு அன்றைய தினம் ஜன சமுத்திரம் போல் காட்சியளித்தது. தம் எதிரே குழுமிய மக்களைப் பார்த்து மகிழ்ந்த வைகுண்டர், ‘இன்று முதல் இகாபரா தஞ்சமென ஒன்றுபோல் எல்லாரும் ஒரு புத்தியாய் இருங்கோ, அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்து ஆண்டிருங்கோ, எவனெவனுக்கும் பதறி இனி மலைக்க வேண்டாம்’ என்று கன்றுக்கு மாதா இரங்கி கற்பித்தது போல் கற்பித்து, அனைத்து ஜாதி மக்களையும் அரவணைத்து மகிழ்ந்தார்.

ஜாதிக்கொரு கிணறு என்றிருந்த அந்தக் காலகட்டத்தில் சகலருக்கும் ஒரே கிணறு என்றொரு சமத்துவக் கிணற்றை உண்டாக்கினார். அந்த அரிய கிணற்று நீரை, அனைத்துச் ஜாதி மக்களும் ஒருமித்துக் கூடிநின்று குளித்தும், குடித்தும் மகிழ்ந்தனர். இன்றும் மகிழ்கிறார்கள். எல்லா நோய்களுக்கும் அரிய மருந்தாகத் திகழும் நீரைத் தரும் அக்கிணறு தான் சாமிதோப்பிலுள்ள ‘முத்திரிக்கிணறு’ ஆகும். இந்தக் கிணற்று நீரை பாத்திரங்களில் எடுத்துவைத்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அந்நீர் கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் கர்மவியாதி, செவிடு, கண்குருடு, ஊமை போன்ற அனைத்து வியாதிகளையும் முத்திரிக்கிணற்று நீரால் அய்யா வைகுண்டர் தீர்த்து வைக்கிறார் என்ற செய்தியும், ஆண்- பெண் என்ற இரண்டு ஜாதிகளைத் தவிர அய்யா வைகுண்டரின் முன் அடுத்தொரு ஜாதியில்லை என்ற செய்தியும் ஆங்காங்கே பரவியது. இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் திருவிதாங்கூர் மன்னன், வைகுண்ட சுவாமியை சிறைப்பிடித்து திருவனந்தபுரம் சிங்காரத் தோப்பில் சிறைவைத்து சுண்ணாம்புக் கால்வாய், நெருப்பு குண்டம், காய்ந்த மிளகாய்ப் புகைமூட்டம், பசித்த புலியிருக்கும் கூண்டுக்குள் அடைத்தல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினான்.

எல்லா சோதனைகளையும் இன்முகத்தோடு ஏற்று வென்று திரும்பிய வைகுண்டர், அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தல்களால் ஆலய வழிபாடுகளும், ஆன்மிக நுகர்வுகளும் இல்லாமல் அடிமைத் தழும்பேறித் தவித்த பதினெட்டு ஜாதி மக்களுக்கும் ஆன்மிக அறிவை எளிமையான பயிற்சி மூலம் வழங்கவேண்டுமென முடிவெடுத்தார். அதன்படி கன்னியாகுமரிக்கு வடக்கில் கடற்கரையைச்சார்ந்த ஆமணக்கன் விளை என்ற ஊரில் நின்ற நான்கு வாகை மரங்களை நடுநாயகமாகக் கொண்டு தவம் செய்யும்படி ஏழுநூறு குடும்பத்தை அனுப்பிவைத்து, ஆத்மஞானம் பெறுவதற்கான துவையல் தவசு செய்ய வைத்தார்.

துவையல் தவசில் ஈடுபட்டிருந்த மக்கள் காலையிலும் மாலையிலும் இறைநாமத்தை ஜெபிப்பதற்காக உகப்படிப்பு என்ற மகா மந்திரத்தையும், உச்சிவேளையில் ஜெபிப்பதற்காக உச்சிப்படிப்பு என்ற மகா மந்திரத்தையும், சதாகாலமும் இறைநாமத்தை ஜெபிப்பதற்காக அகண்டநாமம் என்ற மகாமந்திரத்தையும் அந்த மக்களுக்கு தமிழில் ஞானபோதகமாக அருளினார். அந்த மந்திரங்களை முறைப்படி தமிழில் உச்சரித்து அடிமை உணர்வற்று அந்த மக்கள் ஆன்மிகத் தெளிவு பெற்றனர்.

எல்லா மக்களும் எளிமையாகச் சொல்லவும், எளிமையான முறையில் வழிபடவும் வழிவகுத்த அய்யா வைகுண்டர் இவ்வுலகத்தில் எவ்வாறு வாழ்ந்தால் கலியுகத்திலிருந்து கடைத்தேற முடியும் என்பதற்கான அறிவுரைகளை அன்று தம்மிடம் வந்த அன்பர்களுக்கு நேரடியாகவும், எதிர்கால மக்கள் அறிவதற்காக அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் என்ற இருபெரும் ஆகமங்களின் மூலமாகவும் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்விரு நூல்கள் கூறும் உபதேசங்களையெல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் ஆறாயிரத்திற்கும் மேல் உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரமும் பற்பல மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப் பெற்ற ஆலயம், சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் அமைந்துள்ள தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்புப் பதியைப் போல் நித்த வாகன உலா இங்கும் நடைபெறுகிறது. அதே போல் எங்கும் இல்லாத வகையில் நித்திய அன்னதானமும் இங்கே நடைபெறுகிறது. இந்த ஆண்டு 500 நபர்கள் அமர்ந்து அன்னம் அருந்த வசதியாக நவீன அன்ன மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

அய்யா வழிபாட்டு ஆலயங்களில் முதல் ராஜகோபுரம் கண்ட மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் கடந்த 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் திருக்கொடியேற்றத்துடன் திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், இரவு பட்டாபிஷேகத் திருஏடு வாசிப்பும், பல்லக்கு வாகனப் பவனியும், திருக்கொடி அமர்தலும் நடைபெறும்.

மூன்று மந்திரங்கள்

தமிழ்மொழியிலான உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அகண்டநாமம் ஆகிய மூன்று மந்திரங்களையும், பக்திப் பெருக்கோடு தினசரி படித்து வந்தால் ஊழ்வினை அகலும். வல்லமை சித்திக்கும். அருள்ஞானம் பெருகும். வைராக்கியம் உண்டாகும். ஆபத்துகள் அகலும் என்பது அனுபவ ரீதியான நம்பிக்கையாகும். இம்மூன்று மந்திரங்களிலும் சிவதோத்திரம், விஷ்ணு தோத்திரம், பிரம்ம தோத்திரம், சக்தி தோத்திரம், லட்சுமி தோத்திரம், சரஸ்வதி தோத்திரம், இந்திர தோத்திரம், சூரிய தோத்திரம், கந்த தோத்திரம், கணபதி தோத்திரம், மகாலிங்கம், சிவலிங்கம், குருலிங்கம், திருலிங்கம், ஏகலிங்கம், ஏக்காலிங்கம், அரிலிங்கம், லிங்காலிங்கம், சொக்கலிங்கம், சுகாலிங்கம், ஆதிலிங்கம், அருள்லிங்கம், அடங்காலிங்கம் ஆகிய லிங்கதோத்திரங்களும் இடம்பெற்றுள்ளதால் இம்மந்திரங்கள் காயத்திரி மந்திரத்திற்கு இணையான தமிழ் மந்திரம் என்று ஆன்மிகச் சான்றோர்கள் ஆராதிக்கிறார்கள்.