Saturday, 31 August 2019

இத்தனை வாகனங்களா விநாயகருக்கு ?


விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள் புரிந்திருக்கிறார்.

கிருதயுகத்தில் இவரது வாகனம் சிங்கம். திரேதா யுகத்தில் மயில். துவாபர யுகத்தில் மூஷிகம். கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் இவரை தரிசிப்பது அரிதாகும். விநாயகருக்கு ரிஷபம், யானை ஆகியவையும் வாகனமாய் இருந்திருக்கின்றன.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர், சிம்ம வாகனத்தில் காட்சி அளிக்கிறார். திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங்களுடன் சிம்மத்தில் அருள்புரிகிறார்.

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும் அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் உள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார்.

கோயம்புத்தூர் குருபதேசக் கவுண்டர் ஆலயத்திலும் கடலூர் வட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார்.

திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில் உள்ள அரசாள்வார் விநாயகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ள விநாயகருக்கும் யானை வாகனமாக உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலுள்ள விநாயகர் முன்பும் நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் அருள்புரியும் விநாயகப்பெருமானின் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது.

சனி தோஷம் இனி இல்லை


சனி தோஷத்தில் இருந்து விடுபட மதுரை மாவட்டம் திருவாதவூர் வேதபுரீஸ்வரரை தரிசியுங்கள். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த தலமாகும்.

தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களையும், அசுரகுருவான சுக்ராச்சாரியாரின் தாயாரையும் மகாவிஷ்ணு கொன்றார். இப்பாவத்தைப் போக்க ஒரு குளமாக மாறி சிவனை வழிபட்டார். அங்கிருந்த தாமரை மலரின் நடுவில் வேத நாதம் ஒலிக்க சிவன் தோன்றி பாவம் போக்கினார். இவரே 'வேதபுரீஸ்வரர்' என்னும் பெயரில் இங்குள்ளார். பிரம்மா ஒருமுறை யாகம் நடத்த, அம்பிகை காட்சியளித்து படைப்புத் தொழில் சிறக்க அருளினாள். அவளே 'ஆரணவல்லி' என்னும் பெயரில் உள்ளாள்.

மதுரை அரிமர்த்தன பாண்டியரின் அவையில் முதலமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். இவர் வாழ்ந்த வீடு தனி கோயிலாக உள்ளது. ஆவணி மாதத்தில் மதுரையில் நடக்கும் புட்டுத்திருவிழாவில் பங்கேற்க மாணிக்கவாசகர் மதுரைக்குச் செல்வார்.

மகரிஷியான மாண்டவ்யர், ஏழரைச்சனியால் துன்பபட்டதால் சனியின் கால் முடமாகும்படி சாபமிட்டார். இங்கு வழிபட்ட பின்னரே சனி பகவான் விமோசனம் பெற்றார். இதனால் சுவாமிக்கு 'வாதபுரீஸ்வரர்' என்றும் பெயர் உண்டு. இவரை வழிபட்டால் ஏழரை, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். முடக்குவாதம், கை, கால், உடல் வலி உள்ளவர்கள் அபிஷேகம் செய்கின்றனர். கோயிலின் பின்புறம் விஷ்ணு தீர்த்தம் உள்ளது. வாகனத்தை தொலைத்தவர்கள் பைரவருக்கு நெய் தீபம் ஏற்ற பலன் கிடைக்கும்.

விசஷே நாட்கள்: மாணிக்கவாசகர் குருபூஜை, ஆவணி புட்டுத் திருவிழா, மகாசிவராத்திரி, சனி பிரதோஷம்

நேரம்: காலை 6:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி 

எப்படி செல்வது: மதுரையில் இருந்து 24 கி.மீ., 

மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்


தலச்சிறப்பு : மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், 'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள், "தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்". பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும்.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.

தல வரலாறு : வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோயில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோயில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள். அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது. 

அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர். கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது. அய்யனார் கோயிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.

ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள். ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்.

பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார். அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோயிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோயில் தோன்றி வளர்ந்த வரலாராக கூறப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.

கோயில்முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
வலங்கைமான் - 612 804, 
திருவாரூர் மாவட்டம்.

Friday, 30 August 2019

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுவது ஏன் ?


பொதுமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாகக் கொண்டு, நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று பின்பற்றப்பட்டு வருகிறது. 

கோவில்களில் இருந்து கும்பாபிஷேகம் வரை அனைத்திலும் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் நமது முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். ஊர் நடுவில் இருக்கும் கோவிலின் கலசங்கள் இடிதாங்கியாக பலனளித்து வந்திருக்கிறது. 

கலசமும் அதனுள் இருக்கும் தானியங்களும் இந்த நலனை அளித்து வந்துள்ளது. இவற்றின் சக்தி 10 லிருந்து 12 ஆண்டுகளுக்குள் குறைந்து விடும். அதனால்தான் இந்த இடைப்பட்ட காலம் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் என்ற பெயரில் அவற்றை மாற்றி வந்துள்ளனர். 

அதேபோலத் தான் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பதும். ஆற்றில் நீர் தங்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர் ஆதாரம் பெறுக வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் தான் இது. ஆடிபெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை கரைத்துக்கொண்டு போய்விடும். அதனால் அவ்விடத்தில் நீர் நிலத்தில் இறங்காமல் ஓடி கடலை சென்றடைந்துவிடும். அதனால் தான் குறிப்பிட்ட ஆடி மாதம் முடிந்து அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர் வந்துள்ளனர் நம் முன்னோர்கள். 

ஆற்றில் நீர் தங்கிடவும், களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும் நோக்கதுடனும் செய்யப்பட்டது தான் களிமண் விநாயகர் சிலைகள். அதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஆனால் ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்க வேண்டும். 

ஈரமான களிமண் சீக்கிரமாக கரைந்து நீரின் வேகத்தோடு அடித்துச் செல்லப்படும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிய தங்கிவிடும். நிலத்தடிநீர் அதிகரிக்கும். இதனால் ஆற்றில் வரும் நீரானது, பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்கும். இதனால்தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளனர். 

ஆனால் இன்று ஏன்? எதற்கு? என்று தெரியாமல் கடலில் விநாயகர் சிலைகளை வீணாய் கரைத்து வருகின்றனர். மேலும், இப்பொழுது சாயம் வண்ணங்கள் சேர்த்து உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடுகிறது. மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு காரியம் இன்று அந்த மக்களுக்கே தீங்காக அமைகிறது என்பது வருத்தத்திற்குரியது.

தங்கையுடன் வீற்றிருக்கும் நரசிம்மர்


தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள அங்கமங்கலத்தில் புகழ்பெற்ற நரசிம்ம சாஸ்தா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார். இந்தியாவிலே நரசிம்மர் தன் தங்கையுடன் வீற்றிருக்கும் ஒரே தலம் இதுதான்.  

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் நரசிம்மருக்கு வடைமாலை சாற்றியும், அவரது உக்கிரத்தைப் போக்க வெட்டிவேர் மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

இந்த ஆலய பிரகாரத்தில் மகாகணபதி, பாலசுப்ரமணியர், அகத்தியர், பேச்சியம்மன் மற்றும் பிரம்மசக்தி ஆகியோர் உள்ளனர்.   

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் ஐஸ்வரியம் கிடைக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.  இந்த ஆலயம் 1500 ஆண்டுக்கு முற்பட்டது. இத்தல வரலாறு வருமாறு:-

மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர்போக்க தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார். சந்தியாகால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி தன் தொடையில் இருத்தி, கூரிய நகத்தால் தொடையையும், மார்பையும் பிளந்து வதம் செய்தார்.

அதன் பின்னரும் நரசிம்மருக்கு கோபம் குறையவில்லை. மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு, தேவர்களும் அஞ்சினர். முனிவர்களும், தேவர்களும் ஒன்றுகூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக் கனலுடன் காட்சியளித்தார்.

தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர். பிரம்மாவோ, என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார்.

நரசிம்மர் தோன்றியதற்கு காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்தமாறு யாவரும் வேண்டினர். தன்னைப் போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர். ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாகக் குறையவில்லை.

நரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடுமோ என எல்லோரும் அஞ்சினர். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு அவரது சினத்தினைப் போக்க உதவினாள். சினம் தணிந்தார் சிங்கவேள். இதுவரை புராணங்கள் சொல்கின்றன.

அதன் பின்னரும் சிறிதளவு சினம் நரசிம்மருக்கு இருந்ததாகவும், அதனைப் போக்க அவரது தங்கையான அன்னபூரணி உதவியதாகவும் சொல்கிறது. இக்கோவிலின் தலபுராணம். தேவர்கள் வேண்டுகோளின்படி அன்னபூரணி, நரசிம்ம மூர்த்தியிடம் சினம் தணிந்திட வேண்டினாள். தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார், நரசிம்மர். பின்னர் சரப தீர்த்தத்தில் நீராடி, லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாந்தமானார்.

இதனால் இவ்வூரில் உள்ள லிங்கம் நரசிங்க நாத ஈஸ்வரன் என்றும்; இங்குள்ள சிவாலயம் நரசிங்க நாத ஈஸ்வரன் கோவில் கோவில் என்றும் பெயர் பெற்றது. ஒரு சமயம் தென்காசியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நரசிம்ம சாஸ்தாவுக்கு நாய் வாகனத்தை நேர்த்திக்கடனாக செய்து கொண்டு வந்தார். கோவிலில் வைத்து திறந்து பார்த்த போது அது நந்தி வாகனமாக மாறியிருந்தது.

அப்போது அருகில் புறையூர் கிராமத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயனாதீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யவிருந்தனர். இந்த நந்தியை அங்கு பிரதிஷ்டை செய்தால் நல்லது என பலரின் ஆலோசனைப்படி புறையூருக்குக் கொண்டு சென்று உரிய முறையுடன் பிரதிஷ்டை செய்தனர்.

தினமும் இந்த ஆலயத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலேயே முறைப்படியான பூஜைகள் தொடங்கி விடுகின்றன. புரட்டாசி மாத நவராத்திரி பூஜையின் போது 1008 தீபம் இலுப்பை எண்ணெயில் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் துன்பங்கள், தடைகள், எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.
ஆடிப்பூரமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஆவணி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் போது நரசிம்மருக்கு பானக அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது.

ஆழ்நிலை தியானம் எப்படி செய்யலாம் ?


மூலாதார சக்தியானது உடலின் செயல்பாடுகளைச் செம்மையாகச் செயல்படுத்தவும், உடலில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படவைக்கவும் முக்கிய காரணமாக அமைகிறது.

பிராண வாயுவை மூலாதாரத்தில் நிறுத்தி மூலாதார சக்தியை வலுவடையச் செய்ய வேண்டும். அதற்குச் சிறந்த வழி ஆழ்நிலை தியானமே சிறந்தது. இந்த ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போதுதான் பிராண வாயு மூலாதாரத்தையடைந்து மூலாதார சக்தியைத் தூண்டி உடலெங்கும் செயல்பட வைக்கின்றது.

ஆழ்நிலை தியானம் எப்படி செய்யலாம் ?

ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட அமைதியான காற்றோட்டம் மிகுந்த இடம் வேண்டும். நன்கு சுத்தமான சிறிய அறைகூட போதுமானது. அல்லது கடற்கரை, பூங்கா, மலைவாசஸ் தலங்களில் உள்ள இடங்களில் தனித்து தியானம் செய்யலாம்.

பொதுவாக தியானம் காலை மற்றும் மாலை நேரங்களில் செய்வது மிகவும் நல்லது. இப்படி ஆழ்ந்த தியான நிலையில் சுவாசம் மூலம் பிராணன் உட்சென்று மூலாதாரத்தை அடையும். அங்கே மூலாதார சக்தியானது வலுவடையும். இதனால், உடலானது பிரபஞ்ச சக்தியோடு தன்னை இணைந்துகொள்ளும்.

பிரபஞ்ச சக்தியோடு இணைந்து கொண்ட உடல், ஆன்ம சக்திக்கு கட்டுப்படும். இப்படி கட்டுப்பட்ட உடலை ஆன்ம சக்தி பரிபூரணமாக ஆட்கொண்டு முதன்மையான சக்தியாக விளங்கும். ஆன்ம சக்தி ஆட்கொண்டதால் உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணையும். இந்த நிலையே ஒருவரை சாந்த சொரூபியாக மாற்றும். இதைத்தான் ஆன்மீக சக்தி என்று அழைக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை அடைந்தவர்கள் எப்போதும் புன்முறுவலோடும் நிதானத்தோடும் காணப்படுவார்கள். இவர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தி பெறுவார்கள். இவர்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் ஈடேறும். மேலும் இவர்கள் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துபவராக இருப்பார்கள்.

இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் தான் சிவயோகிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் போற்றப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஆன்ம சக்தி கிடைக்காதவர்கள் உடல் என்ற சக்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். 

இவர்களிடம் ஆன்மீக சக்தி பலமிழந்தே காணப்படும். இதனால் இவர்கள் அடிக்கடி தங்களின் எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எதிலும் நிதானமின்றி காணப்படுவார்கள். எத்தகைய முடிவையும் இவர்களால் எடுக்க முடியாது. ஒருசில நேரங்களில் ஆன்மீக சக்தி இழந்தும் காணப்படுவதுண்டு. உலக சஞ்சாரங்களில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள்.

இவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்காது. இவர்களின் மனம் ஒருநிலைப்படாது. இவர்களால் மூலாதார சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் ஒருங்கிணைக்க முடியாது. ஆன்மிக சக்தியை பெற்றவர்கள்தான் சித்தர்கள். ஆன்மீக சக்தியை ஆட்கொண்டவர்களின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து இருக்கும். மனம், புத்தி, காமம், குரோதம், அகங்காரம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக வலம் வருவார்கள்.

இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் பெற்ற ஆன்ம சக்தியின் பலத்தையும், ஆசியையும் பெறுவதுதான் ஞானத்திற்கு சிறந்த வழி. பிராணவாயுவை உள்வாங்கி மூலாதார சக்தியை தூண்ட தவம் செய்வதே சிறந்த வழியாகும். தவநிலையில்தான் சரசுவாசம் நடைபெறும். 

இந்நிலையில் தான் ஆன்மீக சக்தியைப் பெற முடியும். இதைத்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே என்றும், ஊன் உடம்பே ஆலயம், என்று திருமூலரும் கூறுகிறார்கள். உள்ளத்தை கோவிலாக எண்ணி வழிபட்ட மகான்கள்தான் சித்தர்கள். அமைதியாக சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து பிராண வாயுவை உள் வாங்கி வெளியிட்டாலே இவர்கள் ஆன்மீக சக்தியை பெறலாம்.

சரசுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையை அடையும். இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத்தரும். இந்நிலையை அடைந்தவர்களே சித்தர்கள்.

Thursday, 29 August 2019

இன்றும் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா ?


இந்த உலகில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாய் வாழ தகுதி பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். சுயநலமற்ற சேவை செய்த அனுமன், அண்ணன் என்றும் பாராமல் நியாத்தின் பக்கம் நின்ற விபீஷணன், மகாவிஷ்ணுவுக்கு தானம் அளித்த மகாபலி, சிவபக்தியால் எமனையே வென்ற மார்க்கண்டேயர், மகாபாரதம் எழுதிய வியாசரும், தந்தை சொல்லுக்காக தாயையே கொன்ற பரசுராமர், கடைசி வரை கட்சி மாறாமல் கவுரவர்களுக்காக போர் புரிந்த துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சிரஞ்சீவி என்னும் நிலை பெற்று இன்றும் வாழ்வதாக புராணங்கள் கூறுகின்றன.