Monday, 10 July 2017

மனீஷா பஞ்சாங்கம்


அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்னும் ஒப்பற்ற அத்வைத தத்துவத்தைப் போதித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர். எந்த ஜீவனிடத்தும் வேற்றுமை காணாதவர். ஆனால், அவருடைய அந்த மனப் பக்குவத்தைப் பலரும் விமர்சித்தனர். அவர்களுக்கு ஒரு படிப்பினையைத் தரும் நிகழ்ச்சியாக ஒரு சம்பவத்தை நிகழ்த்த திருவுள்ளம் கொண்டார் ஆதிசங்கரர்.

ஒருநாள் அவர் தன் சீடர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, ஜகத்குருவின் திருவுள்ளப்படி எதிரில் ஒரு புலையன் தன் மனைவி மற்றும் நான்கு நாய்களுடன் எதிர்ப்பட்டான். அவனுடைய மனைவி கையில் ஒரு மதுக்குடுவையும் காணப்பட்டது.
எதிர்வந்த அந்தப் புலையனைக் கண்ட ஆதிசங்கரர், ‘`சண்டாளா, சற்றே விலகிச் செல்’’ என்று கூறினார்.

ஆதிசங்கரர் அப்படிக் கூறியதைக்கேட்ட அந்தப் புலையன், ‘’ஐயனே, தாங்கள் விலகிப் போ என்று சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலில் உள்ள ஆன்மாவையா? எதை விலகிச் செல்லச் சொல்கிறீர்கள்?’’ என்ற பொருள்படும் வகையில் கேட்டான்.

``நீங்கள் யார் என்று சொல்லுங்கள். அதன்பிறகு தங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்’’ என்று ஏதும் அறியாதவர்போல் கூறினார் ஆதிசங்கரர்.

உடனே புலையனாக வந்தவன் சிவபெருமானாகவும், அவன் மனைவி பார்வதி தேவியாகவும், அவள் கையில் இருந்த மதுக்குடம் அமிர்தகலசமாகவும், நான்கு நாய்களும் வேதங்களாகவும் மாறிக் காட்சி அளித்தன.

சிவசக்தியரைப் பணிந்து வணங்கிய ஜகத்குரு, அற்புதமான ஐந்து பாடல்களை இயற்றினார். அந்த ஐந்து பாடல்களே மனீஷா பஞ்சகம்.     

அதில் ஒரு ஸ்லோகம்...
சச்வன் நச்வரமேவ விச்வமகிலம்
    நிச்சித்ய வாசா குரோ
நித்யம் ப்ரும்ம நிரந்தரம் விம்ருசதாம்
    நிர்வ்யாஜ சாந்தாத்மனாம்
பூதம் பாவிச துஷ்க்ருதம் ப்ரதஹதாம்
    ஸமவின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்ப்பிதம் ஸ்வபுரித்யேஷா மனிஷா மம

கருத்து: அனைத்து உலகங்களும் எப்போதும் அழியக்கூடியவையே என்பதை குருவின் வாக்கினால் உணர்ந்து, அழிவற்றதான பரப்பிரும்மத்தை எப்போதும் தியானிக்கிறவரும், கபடமற்ற அடக்கமுள்ள மனதை உடையவரும், செய்வதும் செய்யப்போவதுமான புண்ணிய பாப கர்மங்களை ஞானமாகிய அக்னியில் எரிப்பவரும், தன்னுடைய சரீரம், பலனைக் கொடுக்கிற கர்மத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைப்பவருமான புருஷன்தான் எனக்கு குரு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

No comments:

Post a Comment