எப்போதும்போல் அந்தக் கூட்டம் திருக்கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தது. இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லி துதித்துக் கொண்டு போகும் அந்தக் கூட்டத்தின் ஆரவாரம் வெகு தூரம் வரை முழங்கியது. அந்த அடியார்களின் கால்களில் விழுந்து சிலர் வணங்கி எழுந்தனர். வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து அவர்கள் தம்மைக் கடந்து போகும்வரை கைகூப்பி நின்றனர். சிலர் அந்தக் கூட்டத்தின் அருகே நின்று அவர்கள் சொல்லும் நாமாக்களைத் தாமும் சொன்னார்கள். வேறு சிலர் கூட்டத்துடனே இணைந்து சிறிது தூரம் சென்றார்கள்.
இது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிதான். அடியவர்கள் கூட்டமாக, பக்திப் பரவசத்துடன் இறைவனின் நாமாக்களை ஒருசேரப் பாடிக்கொண்டு நான்கு வீதிகளிலும் வலம் வந்து பின் திருக்கோயிலை அடைவார்கள். இக்கூடத்தினருடன் சேராமல் ஒரு திண்ணையில் நான்குபேர் உட்கார்ந்து வம்பளந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் காதில் அடியார்களின் பாட்டொலி விழுகிறது. இருந்தாலும் அதை உணர்ந்து அனுபவிக்காமல் கேலி செய்தனர். இவர்களுக்கு அந்த அடியார்கள் சோம்பேறிகளாகத் தெரிகிறார்கள்.
உண்மையான திண்ணை சோம்பேறிகளில் ஒருவன், ‘ஏன் இப்படி காட்டுக் கத்தல் கத்துகிறார்கள்? நாகரிகமாக இருக்கவே தெரியவில்லையே?’ என்று கூறினான். ‘பைத்தியங்கள். கத்திக்கொண்டு போகின்றன!’ என்று தன் பங்குக்குச் சொல்லி சிரிக்கின்றான் ஒருவன். ‘இவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையோ? மனைவி, வீடு, குடும்பம் என்று கிடையாதோ? பொழுது எப்பொழுது விடியும் என்று காத்திருந்து வீதிக்கு வந்துவிடுகிறார்களே!’
மூன்றாமவன் சொன்னான். இதுவும் தினமும் காணப்படும் நிகழ்ச்சிதான். இந்த வம்பர்களின் வேலையே நல்லவர்களைப் பற்றி வம்பு பேசி அவர்களைப் பைத்தியம் என்றும், சோம்பேறி என்றும் பரிகாசம் செய்து பட்டம் கொடுப்பதுதான். ஆனாலும், அடியார்கள் ஒன்றிணைந்து கோயிலுக்குச் செல்வதும், அவ்வாறு செல்லும் பொழுது இறைவன் திருநாமங்களைப் பாடிக்கொண்டு போவதுமான செயல், வெவ்வேறு மக்களுடைய உள்ளத்தில் வெவ்வேறு நல்ல உணர்ச்சிகளையும் உண்டாக்கின.
ஆமாம், அந்தத் திண்ணை வம்பர்களில் ஒருவர், கேலி பேசுவதில் தயக்கம் காட்டினார். ‘உண்பதும், உறங்குவதுமே நமக்குச் சிறந்தனவாக இருக்கின்றனவே! இந்த இரண்டையும்கூட நம்மால் முறையாக உரிய காலத்தில் செய்ய முடியவில்லையே! ஆனால், இவர்கள் நாள் தவறாமல் ஒரே மாதிரியாக கூட்டமாகச் செல்வதும் பாடுவதுமாக இருக்கிறார்களே, இவர்களுக்கு அலுக்கவே அலுக்காதா? நம் பரிகாசம் பாதிக்காதா? இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும்.
இவ்வளவு சிரத்தையாக ஒரு நாளைப்போல இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்றால் ஏதேனும் லாபம் இல்லாமலா இருக்கும்?’ என்று சிந்தித்தார் அவர். இந்த எண்ணம் உண்டானது முதல் வம்புச் சபையின் சுவை அவருக்குக் குறையத் தொடங்கியது. அன்றும் அடியார் கூட்டம் வழக்கம் போல் போய்க்கொண்டிருந்தது. வம்பிலிருந்து மீண்ட நண்பர் தம் வீட்டிலிருந்து புறப்பட்டார். கூட்டத்தைப் பின்தொடர்ந்தார். ஆங்காங்கே அன்பர்கள் அடியார்களை வலம் வந்து வணங்கினார்கள். சிலர் அடியார்கள் அடியைக் கழுவி அந்த நீரைத் தங்கள் தலையில் தெளித்துக் கொண்டார்கள். நண்பர் ஆச்சரியப்பட்டார்.
‘அட, இந்த அடியார்களுக்கும் அடியார்கள் பலர் இருக்கிறார்களே!’ என்று வியந்தார். அவருக்கு ஏதோ புரிவது போலிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் அடியார்கள் கூட்டத்துடன் இணையாமல், சில அன்பர்கள் அவர்களை வலம் வருவதுபோல தாமும் ஏதோ உந்துதலால் அவ்வாறே செய்தார். அடியார்களை உன்னிப்பாகக் கவனித்தார். அவர்கள் யாரிடமிருந்து எதையுமே எதிர்பார்க்காமல் இறைவன் நாமத்தை மட்டுமே சொல்லிக் கொண்டு சென்றார்கள்.
இறைவன் நாமத்தைச் சொல்லும் பொழுதே சிலருக்குக் கண்ணில் நீர் பெருகியது கண்டு ஆச்சரியம் அடைந்தார். தன் மகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு தாய் வீடு வந்தபொழுது அவர் மனைவி கண்ணீர் சொரிந்தாள். அது பாசம் சரி, ஆனால், இந்த அடியார்களின் கண்ணீர் எதற்காக? ‘இறைவனைக் காணச் செல்வதனால் உண்டாகும் உணர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். தாய் மகளைக் காணும்போது உண்டாகும் உணர்ச்சி போல! ஓ, கண்ணீர் விடுவதுதான் ஒருவருக்குக் கடவுளிடம் இருக்கும் அன்புக்கு அடையாளம் போலும்!’ என்றெல்லாம் நினைத்தவருக்கு அவரறியாமல் மனம் நெகிழ்ந்தது.
அடியார்கள் தாங்கள் அறியாமலேயே கைகூப்புகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு பாடுகிறார்கள். பின் கண்களைத் திறந்து நெடுந்தூரத்தில் தெரியும் கோபுரத்தைப் பார்க்கிறார்கள். கண்ணில் அருவி போல நீர் வழிகின்றது! நண்பரும் உணர்ச்சிவசப்பட்டார். இவர்களைப் பழித்து, இழிவாகப் பேசியதை நினைத்து வெட்கப்பட்டார். ‘பெறுதற்கு அரிய பேற்றைப் பெற்றவர்கள் இவர்கள்!’ என்ற எண்ணம் மனதில் உதிக்க ஆரம்பித்தது. உடனே அந்தக் கூட்டத்தோடு ஒன்றி நடக்கத் தலைப்பட்டார்.
அவருடைய கைகளும் தானாகவே தலைக்கு மேல் குவிந்தன. அடியவர்கள் இடும் ‘ஹர ஹர மஹாதேவா!’ கோஷத்தில் அவருடைய குரலும் இணைந்தது. தன் இதயத்தில் நெடுநாளாக இருந்த சுமை குறைந்தது போல உணர்ந்தார். கூட்டத்தோடு இறைவன் சந்நிதானம் அடைந்தார். அடைந்தது தான் தாமதம் அந்த அடியவர்கள்தான் எப்படி அலறுகிறார்கள்!
‘என் துன்பமெல்லாம் தீர்க்கும் பெருமானே!’ என்றார் ஒருவர். மற்றொருவர், ‘என் பிறவி நோய்க்கு அரு மருந்தே!’ என்றார். ‘என் களை கணே’ என்றார் ஒருவர். இப்படியே அவர்கள் இடும் ஓலத்தினூடே புதிய அன்பரும் தம்மை அறியாமலே கண்ணீர் விட்டு ஏதேதோ அரற்றினார். அங்கே தான் என்ற தலையெடுப்பு இல்லை. மிடுக்கு இல்லை, வெடிப்பாகப் பேசும் பேச்சு இல்லை, உலகியல்பிலே நினைவு செலுத்துபவரும் இல்லை, எல்லோரும் இறைவன் அருளிலே கரைந்து நிற்கின்றார்கள்.
அவர்களது அன்பு கூடக் கரைந்துவிட்டனவோ என்றுதான் எண்ணத் தோன்றியது. அங்கே செருக்கு இல்லை. தருக்கு இல்லை, ஆணவத்தின் நிழலே இல்லை! இந்தப் புதிய அனுபவம் நண்பருக்குப் புதிய மனநிலையை உண்டாக்கியது. இனி அவரும் அடியார் கூட்டத்தில் ஒருவராகி விட்டார். அந்தக் கூட்டத்தில் இணைந்து இறைவனுடைய அன்பு உணர்ச்சியிலே கனிந்த அவருக்குக் கண்கள் பனித்தன. கைகள் தாமே குவிந்தன. இறைவன் திருமுன் ஓலமிட்டார். அவர் பேச்சும், பார்வையும், செயலும், எண்ணமும் குழைந்து வந்தன.
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்தில் சேர்ந்துவிட்டார். விளைவு? வம்பர் கூட்டத்தை அடியோடு மறந்தார். ஒருநாள் தனியே அமர்ந்து யாவற்றையும் எண்ணிப் பார்த்தார். தாம் முன்பு வம்பர் கூட்டத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது. அடியவர்களைச் சோம்பேறிகள் என்றும் பொறுப்பற்றவர்கள் என்றும், பைத்தியக்காரர்கள் என்றும் எண்ணியதை நினைத்துத் தாமே சிரித்துக் கொண்டார். உடனே அவர் கண்களில் குபுக்கென்று நீர் சுரந்தது.
‘இறைவனே! எப்படி இருந்த என்னையும் அன்பர் கூட்டத்தில் சேர்த்து விட்டாயே! உன் கருணையை என்னென்று சொல்வது!’ என்று எண்ணி மாய்ந்து போனார். இதே நிலையில் இருந்தவராகத் தன்னைப் பாவித்துக் கருவூர்ச் சித்தர் பாடுகிறார்:
கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்து என்களைகணே! ஓலம் என்று ஓலிட்டு என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன்! இவ்வாறு கருணை புரிபவனுடைய இருப்பிடம் இன்னது என்று பின்னர் சொல்ல வருகிறார், சித்தர். நடராஜப் பெருமான் இப்படிச் செய்தானாம். சிதம்பரமாகிய பெரும்பற்றப்புலியூரில் உள்ளது திருச்சிற்றம்பலம். அது பொன்னால் வேய்ந்த அம்பலம் ஆகும். அதைப் பார்த்தாலே லட்சுமிகரமாக விளங்குவதைக் காணலாம். திரு வளர்கின்ற இடம்.
பொருட் செல்வம் கிட்டும். அதுமட்டுமன்று அருட் செல்வமாகிய திருவும் அங்கே வளர்கின்றது அல்லவா? அதனால்தானே அன்பர்கள் வந்து குவிகின்றார்கள்! நடராஜப் பெருமானுக்கு அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்ற திருநாமம் வழங்கப் பெறுகிறது. பெரும்பற்றப்புலியூரும் அழகு மலிந்த இடமாகும். அந்த அழகைப் பற்றியும் சொல்கிறார் கருவூர்ச் சித்தர்:
ஊரைச் சூழ்ந்து பல சோலைகள் மிளிர்கின்றன. சோலை நிழல் தருகிறது. மலர்கள் மலர்ந்து எங்கும் நறுமணத்தைப் பரப்புகின்றன. மலர்களில் மணத்தினூடே தேனும் சேர்ந்து பெருமையை மிகுதிப்படுத்துகின்றது. பனிமலர்ச் சோலை சூழ்ந்த ஊர் பெரும்பற்றப்புலியூர். நடராஜப் பெருமானாகிய தேனை நுகர்வதற்காக அடியார்கள் பல இடங்களிலிருந்து வருவது போல, இந்தச் சோலையிலுள்ள மலர்களில் உள்ள தேனைச் சுவைக்க வண்டுகள் வருகின்றன!
அவற்றுக்குத் தெரியும் இந்தச் சோலையில் உள்ள மலர்களில் நல்ல தேன் கிடைக்கும் என்று. வந்து ஆனந்தமாக மலர்களிலுள்ள தேனைப் பருகுகின்றன. உண்டபின் களிப்பினால் இசை பாடுகின்றன. ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்குத் தாவுகின்றன. இயற்கையை ரசிக்க வருபவர்கள் இந்த வண்டுகளையும் கவனிக்கிறார்கள். அவற்றின் ரீங்காரத்திலும், ஆட்டத்திலும் தம்மையே மறந்துவிடுகிறார்கள்.
‘இது விளரிப் பண்ணைப்போல் இருக்கிறதே!’ என்கிறார் ஒருவர். மற்றொருவர், ‘இப்போது காந்தாரப் பண்போல் தெரிகிறதே!’ என்கிறார். இவ்வாறு பலவகையான பண்களை நினைத்து ஒப்பு நோக்கும்படியாக வண்டுகள் முரல்கின்றன. இத்தகைய சோலைகள் வளர்ந்து திகழும் இடத்தின் வாசலில் அழகாகக் கொடி வீடு அமைத்திருக்கிறார்கள். அதில் செண்பகக் கொடி படர்ந்திருக்கிறது. கொடி முழுதும் அரும்புகளைப் பார்க்கலாம். என்ன கண்கொள்ளாக் காட்சி!
இவ்வாறு கருவூர்ச்சித்தர் பாடுகிறார்: ‘அன்பர் கூட்டத்தில் என்னையும் புணர்ப்பவன் கோயில் இத்தனை வளமும் அழகும் உடைய பெரும் பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலம்.’ கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்து என்களைகணே ! ஓலம் என்று ஓலிட்டு என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில், பண்பல தெளிதேன் பாடிநின்று ஆடப்பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற் செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே!
பொருள்: கண்ணில் நீர்த்துளி தோன்றக் கைகளைக் குவித்து, ‘என் துன்பத்தை நீக்கும் பெருமானே!’ என்று கதறி எலும்பெல்லாம் உருகும்படி நெகிழும் அன்பர்கள் கூட்டத்தில், சிறிதும் தகுதியில்லாத என்னையும் சேர்த்து வைத்தவனுடைய கோயில் இது. இங்கே நல்ல தேன் கிடைக்கும் என்று தெரிந்து வந்த வண்டுகள் பல பண்களைப் பாடி நின்று ஆடும் குளிர்ச்சியுடைய மலர்களைப் பெற்ற சோலைகள் சூழ்ந்த முகப்பில் செண்பகம் அரும்புகின்ற பெரும்பற்றப்புலியூரில் உள்ள செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமாகும். இது கருவூர்ச்சித்தர், ஒன்பதாம் திருமுறை, எட்டாவது பதிகமாகிய கோயிலில் பாடிய, ஐந்தாம் பாடல் ஆகும்.
No comments:
Post a Comment