குறுக்கும், நெடுக்குமாக, கைகளைப் பின்புறம் கட்டியவாறு, ஏதோ ஒரு தவிப்பிற்கு ஆட்பட்டவராய் நடந்துகொண்டிருந்தார் இயற்பகை. கொஞ்சம் விவகாரமான ஆள்தான், பெயருக்கு ஏற்றாற்போலவே தான் செய்கைகளும்! ‘எல்லோரும் சொல்கிறார்கள்’ என்றோ ‘உலக வழக்கம்’ என்றோ எதையாவது சொல்லி, அவரை எதையும் செய்ய வைக்க முடியாது. ‘அந்தப் பக்கம் போகாதே’ என்று யாராவது எழுதி வைத்திருந்தால், ‘ஏன்? அந்தப் பக்கம் போனால் என்ன?’ என்று யாரையும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்; போகக்கூடாது என்று சொன்ன திசையில் போவார். போனால் என்ன நடக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, எழுதி வைத்தவனை அழைத்துத் தட்டிக்கொடுப்பார்.
‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு’ என்ற திருக்குறள் வாக்கிற்கேற்ப நடந்துகொள்வார். அப்பேர்ப்பட்டவர்க்கு இன்றைக்கு நடப்பது பெரும் புதிராக இருந்தது. அதிகாலையில் எழும் இயற்பகையார், இறைவனைத் தொழுது, பிறகு காலைக் கடன்கள் முடித்துக் குளித்து, நீறு பூசி, உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனை பூஜை செய்யத் தொடங்குவார். ஒரு தேர்ந்த, கிரமமான பூஜையாக இருக்காது அது. அவரின் கண்ணீரால் அபிஷேகம், ததும்புகிற அன்பால், ‘ஐயா, என் அரனே, தேசனே, தேனார் அமுதே, மகாதேவரே...’ என்பதான அரற்றலாக மந்திரங்கள்... வெறும் அன்பு மட்டுமே பேரன்பிற்காக பூஜை செய்வதை இயற்பகையாரின் பூஜையிலே, வழிபாட்டிலே மட்டும்தான் காண முடியும்.
அடியார்க்கும், ஆண்டவர்க்கும் அன்பு செய்வதிலே பெரும் போட்டி இருக்கும் - இதுநாள்வரை யாரும், யாரையும் ஜெயிக்கவே முடியாமல்! ஆனந்தம், அவரின் வீடெங்கும் பரவியிருக்கும். அவரின் துணைவியாருக்கும், பூஜை முடிவதற்குள் ஆனந்தத்தில் கண்ணீர் கரைபுரண்டோடுவதும் நிச்சயமே. வாழ்வதே சிதம்பர தேவரின் உமையொரு பாகனின் பூஜைக்காகத்தான் என்பதான வாழ்க்கை அவர்களுடையது. இதிலே பூஜை முடித்ததும், அவ்வூரில் தென்படுகிற சிவனடியாரை இல்லத்திற்கு அழைத்து வந்து பாதபூஜை, அதாவது மகேஸ்வர பூஜை செய்வது. அவருக்கு தெண்டனிட்டு வணங்குவது.
அவருக்கு அமுது படைத்து, வேண்டுவன நல்கி, இறைவனே இதுகாணும் எங்களோடு இருந்தார் என்பதாக அவர்கள் காட்டும் ஞானத்தால் உண்டான பக்தி கேள்விப்படுகையிலேயே இத்தனை ஆனந்தம் என்றால், அனுபவிப்பவர்கள் எத்தனை பேறு பெற்றவர்கள்! ஆக, இயற்பகையார் தினமும் முதல் வேலையாக, ஒரு சிவனடியாரைத் தேடிப் பிடிப்பார். அவருக்கு வேண்டிய எல்லாப் பணிவிடைகளையும் செய்து, அவருக்கு அமுதிட்டு, அவருக்கு மிகவும் வேண்டிய ஏதேனும் ஒன்றைத் தானமாக ஈதல் என்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார். மற்றபடி எல்லோரையும்போல உழைப்பது, வாழ்வது எல்லாம் சிவனடியாருக்கு அன்னமிட்ட பின்பே. அது மட்டும் நடக்கவில்லையென்றால் ஒரு வாய்ச்சோறு இறங்காது அவருக்கு.
அவருக்கு மட்டுமல்ல; அவர்தம் துணைவியாருக்கும் கூடத்தான். மொத்தத்தில் சிவனடியாருக்குச் சேவை செய்யாத நாள் அவருக்குப் பெருந் துக்கம், வேதனைப் பெருக்கம்! வாழ்வே கேள்விக்குறி ஆகிப்போகிற துயரம்! ஆனால், இதுகாறும் அதுமாதிரி நடந்ததில்லை, யாரையாவது, எங்காவது காட்டி விடுவார் எம்பெருமான். ஆனால், இன்றைக்குச் சோதனையாய் எவரும் காணோம். அயர்ச்சி மேலிட்டது. லேசாக அச்சம் பிறந்தது. இன்றைக்கு எவருமே வராமல் போய்விடுவார்களோ என்ற கிலேசத்தில் உடல் வியர்த்தது. மனைவியைப் பார்த்தார். அவரும் இவரைப் பார்க்க, இருவர் கண்களிலும் நீர். கணவரின் வேதனை பொறுக்க மாட்டாமல் அவர் தம் மனைவி கண்ணீர் வடிக்க, சோதனை பொறுக்க மாட்டாமல் அவர் கண்ணீர் வடிக்க...
வெளியில் குரல் கேட்டது. மெல்லிய குரல்தான். ஆனால், தீர்க்கமான அழுத்தமான குரல். ‘தில்லை அம்பலவா போற்றி! திருச்சிற்றம்பலமே போற்றி’ என்பதான, சொல்வதற்கு மகா மதுரமாகிய சிவநாமத்தை யாரோ சொல்லிக்கொண்டு வீதியோடு செல்ல... பாய்ந்தார் இயற்பகை. விழிகள் வெறிகொண்டு தேடின. குரல் வந்த திக்கில் குவிந்தன. கண்களில் மழையாய் கண்ணீர் கொட்டியது. ‘சம்போ, சங்கரா! சாம்பசிவா’ என அரற்றிக்கொண்டே அங்கு நடந்துசென்றுகொண்டிருந்தார் ஒரு சிவனடியார். வாலிபப் பிரயம் முடிகிற தருணம் நல்ல சிவப்பு. ஓங்கு, தாங்கான தேகமெங்கும் வெண்ணீறு! சாந்தமான முகம்! உலகத்துக் கருணையை எல்லாம் ஒன்று தேக்கிய விழிகள்.
எப்போதும் புன்னகை, கண்டத்தில் உருத்திராக்கம், ஒற்றையாய், மேலாடையாய் ஒரு வெள்ளுடை கணுக்கால் தெரிகிறார்போல் ஒற்றைச் சுற்றாய்க் கட்டிய வேட்டி. இயற்பகை எட்டிக் கைபிடித்து, நிறுத்தினார் அந்தச் சிவனடியாரை. அவர் கால்களில் வேரற்ற மரமாய் விழுந்தார். நட்ட நடுத்தெருவில் போவார், வருவோரெல்லாம் பார்க்க, ஒரு நாய் திடுக்கிட்டு ‘வவ்‘வென்று குரல் கொடுத்து, ஒடுங்கி ஓரமாய் ஓடிப்போய் நின்றது. “ஐயா, என்ன இது’’ பதறிப் போனார் அச்சிவனடியார். “யாது செய்கிறீர்... யார் நீவிர்?’’ சிறிதாய் விகசித்த அதிர்ச்சியோடு அவர் குனிந்து இவரைத் தூக்கி நிறுத்த முயற்சித்தார்.
இயற்பகை முழந்தாளிட்டார். “தங்களைப் பார்த்தது பெரும்பாக்கியம். எந்தையும், நுந்தையுமாகிய ஏகன் அருள்! அடியேன் பெற்ற பாக்கியம் முழுமையாக வேண்டுமானால்...’’ என்று முச்சிரைக்க நிறுத்தினார். அடியார் புன்னகையோடு ஏறிட்டார். ‘எதுவாயினும் கேளப்பா‘ என்று அனுமதி தருகிற புன்னகை. “தேவரீர், எனது இல்லம் எழுந்தருளி, திருவமுது செய்தருள வேண்டும்.’’ “ஓ உனது வீட்டில் அடியேன் அன்னம் ஏற்க வேண்டுமா?’’ சிறிதே யோசித்து, இரு நிமிடங்கழித்து சம்மதமாய்த் தலையாட்டினார் அவர். உடம்பெங்கும் பூரிப்பு, அவரைத் தலைகுனிந்து தம் இல்லத்திற்குள் அழைத்துச் சென்று, இருப்பதிலேயே உயர்ந்ததோர் ஆசனத்தைத் தேர்வு செய்து அதில் அவரை அமர வைத்ததும், வளைக்கரம் நீண்டது, குடிநீர்க் குவளையோடு.
வேய்ங்குழல் ஒலியாய் இயற்பகையாரின் மனைவியும் “சிவனடிச் சீர்பரவும் பெருந்தகையீர் வருக’’ என்றழைத்து, காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்று சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய புகுந்தார். ஆயிற்று, சிவனடியார் மிகுந்த திருப்தியோடு, அன்னம் ஏற்று, முடிக்க, அவர் கை, வாய் கழுவப் பாத்திரமும், நீர்க்குவளையும் தந்தார் அம்மையார். அவர் படுக்கப் பாயும், தலையணையும், விசிறியும், நீர்ச் செம்பும் வைத்தபிறகே, இவர்கள் சாப்பிட்டனர். “ஐயா, அமுதமென இனிக்க, மணக்க உணவு படைத்தீர். தில்லை அம்பலவாணர் எப்போதும் உமைக் காப்பார்’’ என்று அந்தச் சிவனடியார் கிளம்ப எத்தனிக்கையில், “பெரியீர்! சற்றே பொறுமையாய் இரும்’’ என்ற இயற்பகை மனைவியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினார்.
பிறகு “அடியார் பெருமகனே! அன்னம் ஏற்றது மட்டும் போதாது. ஏதேனும் தாங்கள் அடியவனைக் கேட்க வேண்டும் நான் சர்வ நிச்சயமாக தருவேன்’’ என்று இயற்பகை திடமாக உரைத்தார். மனைவியும் கைக்கூப்பி ஆமோதித்தார். புருவம் சுருங்கிற்று வந்தவருக்கு, “யாம் கேட்பதையெல்லாம் உம்மால் தரமுடியாது இயற்பகையாரே.’’ “அப்படி இல்லை ஐயா, எப்பாடு பட்டேனும் தருவோம்.’’ “முடியாது, இயற்பகை, வீணாக அவஸ்தைப்படாதே.’’ சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவர், இயற்பகையின் மனைவியையும் பார்த்து சிரித்தார், கண்கள் மின்னி அடங்கின. “இல்லை அய்யா. அப்படிச் சொல்லக் கூடாது, நீங்கள் கண்டிப்பாக...’’ துடிப்போடு இயற்பகை சொல்ல... “உன் மனைவியை எனக்குத் தானமாக கொடு,’’ சிவனடியார் குரலில் நெருப்பு.
அவர் அமர்ந்திருந்த வீட்டுக் கூடமெங்கும் நெருப்பை அள்ளிக்கொட்டினாற்போல இருந்தது. இயற்பகையின் மனைவியின் முகம் நிறம் மாறிற்று. அவரின் பேச்சு கேட்ட மாத்திரத்திலேயே ‘இடி’யென முழங்கினார் இயற்பகை. “எம்பெருமானின் பெயரால் எமது மனைவியாகிய இவரை இப்போதே தத்தம் செய்கிறோம்.’’ சிவனடியாரின் உள்ளங்கைகளில் நீர் வார்த்து, மனைவியை அவருடைமை ஆக்கினார் இயற்பகை. ஒரு சலனமும் இல்லாமல், சொல்லப்போனால் ஆனந்தம் வழிகிற முகத்தோடு, அம்மையார் இயற்பகையை ஏறிட்டு நோக்க, அவர் கைக்கூப்பி வணங்கி, “சிவனடியாரொடு செல்வீராக’’ என்றவாரே வழியனுப்பினார். கணவன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? அந்த அம்மாள் சிவனடியாரின் பக்கத்தில் சென்று நின்றார். சிவனடியார் திகைத்துப் போனார்? என்ன இது அநியாயம்?
இது என்ன மாதிரியான பக்தி? பக்தியா அல்லது பைத்தியக்காரத்தனமா? அடக் கடவுளே! இவன் என்ன செய்கிறான் என்பதை அறிந்துதான் செய்கிறானா? எத்தனையோ பித்தர்களை பார்த்தாகி விட்டது. இது சித்தத்தை சிவன் பால் வைத்த பித்தம் போலும்... சிவனடியார் “ஐ...யா...நீங்கள் செய்வது என்னவென்று...’’ என்று தயங்கியபடியே கேட்டார். “அறிந்து தான் செய்கிறோம்’’ இயற்பகை சிறிதும் சலனமில்லாமல் திடமாகத் தெரிவித்தார்! தெரிந்து செய்வது என்பது மனதின் பதிவுகளின் எல்லைக்கு உட்பட்டது. புத்தியோடு சம்பந்தப்பட்டது. அறிந்து செய்வது அனுபவத்தினால் உண்டாவது. ஒரு காரியத்தை பலகோணங்களிலும் அனுபவித்து உணர்வது.
“அறிந்து செய்ததா..?’’ சிவனடியாரின் வியப்பு இன்னமும் குறையவில்லை, இருப்பினும், சுதாரித்த வராய்க் கேட்டார் அவர். “எல்லாம் சரி, ஆனால், இந்த வீட்டை விட்டு நான் உன் மனைவியோடு போனால் உன் ஊர்க்காரர்களும், சுற்றத்தாரும் என்னை வெட்டிப்போட்டு விடுவார்கள் தெரியுமா?’’ இயற்பகையின் புருவம் உயர்ந்தது. “இந்த இயற்பகை இருக்கும் வரை அது நடவாது. அச்சம் வேண்டாம் அடியவரே. உருவிய வாளுடன் இயற்பகை ஊரெல்லை வரை உம்முடன் வருவான்.’’ பயணம் துவங்கியது. வானம் இருட்டியது. இனம் புரியாத இறுக்கம் சூழலில் படர்ந்தது. விஷயம் அறிந்து வந்த ஊர்க்காரர்கள், சுற்றத்தார்கள் வாள், வேல், ஈட்டியுடன் சிவனடியார் மீது பாய, இயற்பகையின் வாள் சீற்றம் கொண்டது. பெரும்புயலெனச் சீறியது.
எதிர்த்தோரின் தலைகள் உருண்டன. கை, கால்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. குருதி வெள்ளம் எங்கும் சிதறிற்று. சாலையின் ஓரங்களில் நின்ற ஊர் மக்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு, கதறலும், கண்ணீருமாய் அலறினர். “என்ன காரியமடா செய்கிறாய் இயற்பகை, பெயருக்கேற்றாற்போல, இயல்புக்கே பகையானாயே பாதகா’’ - எனும் கூக்குரல்கள், வீறிடல்கள். “எங்கே நடக்குமடா இந்த அநியாயம்? உன் வளர்ப்பில் எங்கே தவறு நடந்தது’’ என்பதாய் சுற்றத்தார் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தனர். சண்டமாருதமாய், வெறி கொண்ட வேங்கையாய் நிற்காமல் போரிட்டு... ஊரின் எல்லை வந்தது. மயான அமைதி. சிவனடியார் மெல்லத் திரும்பினார். இயற்பகையைப் பார்த்தார்.
உடலெங்கும் குருதிக் கோலங்கள், வியர்வை ஆறுகள், புழுதிப்படலம்... கூற்றுவன் போன்ற கோலம்... சொன்ன சொல் காப்பாற்ற எதுவரினும் அஞ்சாத நெஞ்சம்.
திடுமென சிவனடியார் இரண்டடிப் பின் நகர்ந்தார். நின்ற நிலையில் அவரின் பிரகாசம் கூடிற்று. பேரொளியில் பிழம்பாகி நின்றார் அந்தச் சிவனடியார். ஒன்றாய் இருந்த ஒளிப்பிழம்பிற்குள் மகாதேவரும், உமையம்மையும், இடப வாகனத்தில்... எல்லாம் மலர்ந்தன. மலைத்தன. கருணை மழை வெள்ளம்போல் பொழிந்தது. அனுபவித்தறியாத ஒரு பேரன்பு எல்லோரையும் தாக்கிற்று. “இயற்பகை உமது பக்தியின் தீவிரத்தை உலகறியச் செய்யவே யாம் வந்தோம்.
உன் அன்பின் தன்மை ஈடில்லாதது. எப்போதும் எம்மோடு நீயும், நின் மனைவியும் இருக்கவே வருக.’’ என்றழைத்தது சிவம், எங்கும் சிவமயம், எல்லாம் சிவமயம்... அருள்மழை... இயற்பகை தயங்கினார். “ஐயனே! பிழை பொறுப்பீர். யான் வெட்டியெறிந்த சுற்றங்கள், ஊரார்கள் இவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதானால் சரி... இல்லையெனில் உம் புகழ்பாடித் துதித்து இங்கேயே வாழ்கிறேன்,’’ என்றார். “நீ பிடிவாதக்காரனாயிற்றே, சரி ஆகட்டும்’’ என்று பிடிவாதத்தை இயற்பகைக்குள்ளே விதைத்த பெருந்தகை திருவாய் மலர்ந்து அருளினார். ஜோதிப்பிழம்பு பிரமாண்டமாய் மாற, இயற்பகையால் வெட்டி எறியப்பட்ட ஊரார், உறவினர், இயற்பகை, அவரது அருமை மனைவி எல்லோரும் அப்பிழம்பினுள் கலக்க...
மேற்சொன்ன இயற்பகை என்பவர் சிவனையே எண்ணி, சகலமும் சிவமாய்ப் பார்க்கும் மகா ஞானி. அவர் தம் மனைவி என்பது அவரது மனதைக் குறிக்கும். சிவனடியாராக வந்த கோலம் மெய்ஞானியான, சத்குருவைக் குறிக்கும். ஆக, ஞான குருவாய் எழுந்தருளி, நம்மையும், இறைவனையும், பிரிக்கிற மனதை, துவைதத்தில் இருக்கிற மனதை தனக்கு தந்துவிடுமாறு கேட்கிறார். (குருநாதருக்கு உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் நற்சீடன் தத்தம் செய்தல் வேண்டும். இங்கே ‘பொருள்’ என்பது எல்லாவற்றையும் பொருளாகக் காட்டும் மனமே ஆகும்.) ஆக ஒவ்வொருவருடைய மனமே அவருடைய மனைவி. அதை, மனதை, தம்மிடம் கொடுக்குமாறு இறைவன் கேட்க மெய்யடியாராகிய இயற்பகை, ‘தன் மனம்’ என்கிற மனைவியை இறைவன் வசம் அளிக்கிறார்.
அவ்வாறு அளிப்பதை ஏற்காத மனதின் விருத்திகளாகிய கோபம், லோபம், மத, மாச்சர்யம், குரோதம், பாசம், அகங்கார, மமகாரங்களே இயற்பகையாரின் ஊர் மக்களாகவும், சொந்தக்காரர்களாகவும் இங்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. அவற்றை விவேகம், வைராக்கியம் எனும் வாளால் வெட்டி வீசுகிறார் இயற்பகை. எல்லாம் அறிந்த இறைவன், தன்னோடு சேர வருமாறு இயற்பகையும், அவரின் மனைவியையும் அழைக்க... “இயற்பகை மனதின் விருத்திகளாகிய 96 தத்துவங்களுக்கும் அருள்செய்து அவற்றையும், உன்னோடு சேர்ப்பாய் ஆயின் வருவேன்’’ என்கிறார். எல்லாம் சிவமயம் என்பதாகிறது இறைவனின் பெருங்கருணையால். இதுவே, ஞான அர்த்தம். இதை உணர்த்துவதே அடியார். நாயன்மார் வரலாறு. இதை ‘அத்யாத்ம பெரியபுராணம்’ என்பர்.
No comments:
Post a Comment