சோழர் காலப் புராதனக் கோயில்களுள் ஒன்று, முடிகொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ள சேதானிபுரம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்.
தேவதத்தன் என்ற அரசன், ஈசன் மீது மிகுந்த பக்தி கொண்டு சிவவழிபாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தான். ஒரு நந்தவனத்தை உண்டாக்கி, அதில் விளையும் மலர்களைக் கொண்டு இறைவனுக்கு அன்றாட அலங்காரம் செய்வித்து வழிபட்டு வந்தான் அரசன். அருகில் உள்ள கானகத்தில் வசித்து வந்த மான் ஒன்று அந்த நந்தவனத்திலுள்ள செடிகளின் தளிர்களையும் மலர்களையும் பிறர் அறியாமல் உண்டு வந்தது. அதனால், இறைபணிக்கு வேண்டிய மலர்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோயில் பணியாளர்கள் இது சம்பந்தமாக அரசனிடம் தெரிவிக்கவே காரணத்தை அறிய விரும்பிய அரசன் காவலாளிகளுடன் மாறுவேடத்தில் நந்தவனத்தில் காவல் இருந்தான்.
மான் வந்து மலர்களைத் தின்பதைக் கண்டுவிட்டான். அதனை விரட்ட அம்பு செய்தான். மான் தப்பிச் சென்று ஒரு புதரில் மறைந்தது. புதருக்குள் அரசன் மானைத் தேடிய சமயத்தில் வேடன் ஒருவன் புதரிலிருந்து வெளிப்பட்டான்.
அந்த வேடன் அரசன் மீது பாய்ந்து சண்டையிட்டான். இருவரும் மற்போர் புரிந்தனர். பி்ன்னர் வேடனும் புதரில் சென்று மறைந்தான். அவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.
மான் வடிவில் வந்து மலர், தளிர்களை உண்டதும், பிறகு வேடன் வடிவில் வந்து போர் புரிந்ததும் ஈசனின் திருவிளையாடல்களே என தேவதத்தன் உணர்ந்தான்.
சிவலிங்கம் தோன்றிய இடத்தைச் சுற்றியுள்ள புதரை நீக்கி அவ்விடத்தில் அழகிய ஆலயம் ஒன்றை உருவாக்கினான். பிறகு தனது எஞ்சி வாழ்நாட்களை தேவதத்தன் அந்தக் கோயில் வழிபாட்டிலும் திருப்பணிகளிலுமே செலவிட்டான்.
வட நாட்டில் வாழ்ந்து வந்த வேதியன் ஒருவன், தனது குலவழக்கப்படி வேதம் ஓத வேண்டியதைத் தவிர்த்துவிட்டு உல்லாச கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். அதனால் மறுபிறவியில் அவன் ஓர் ஆந்தையாகப் பிறந்து ஒரு மரத்தில் தங்கியிருந்தான்.
ஒருமுறை அந்த மரத்தின் அடியில் அமர்ந்து சிவபெருமான் உமையவளுக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தபோது, ஈசன் உரைத்த ஞானமொழிகள் அந்த ஆந்தையையும் எட்டியது. பின்னர், அது மரத்திலிருந்து தவறி கீழே ஈசன் முன் விழுந்து இறந்தது. அதன் விளைவாய் பூவுலகில் யாக்ஞவல்கியர் என்னும் முனிவராக அவதரித்து, ஈசன் உமைக்குக் கூறிய உண்மைகளை மக்களுக்குப் போதிக்குமாறு ஈசன் அருளினார்.
அவ்வாறே முனிவராக வதரித்த யாக்ஞவல்கியர், பல தலங்களில் ஈசனைத் தொழுதவாறே சேதானிபுரம் எனும் திருத்தலம் வந்தார். இங்கேயே தங்கி சிவநெறி சித்தாந்தங்களை மக்களுக்க உபதேசித்தார். யாக்ஞவல்கியரைக் குருவாகக் கொண்ட குடும்பத்தினர் இன்னமும் பலர் இவ்வூர் அக்ரஹாரத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
கோயில் அமைப்பு
ஆலயம், சிறிய கிராமத்தில் கிழக்கு நோக்கி உள்ளது. ராஜகோபுரம் முன்னொரு காலத்தில் பெரிதாக இருந்து, பின்னர் கவனிப்பாரற்று காலப்போக்கில் சிதிலமடைந்து சிதைந்து விட்டதாம். சமீப காலத்தில்தான் இதன் பழம் பெருமையை உணர்ந்த சிவ பக்தர்கள் பலர் சேர்ந்து திருப்பணி செய்துள்ளனர். அக்காலத்தில் ஆலய நிலங்கள் யாவும் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாம். அந்தக் குத்தகைக்காரர்களும் உபயம் செய்து, இப்போது கோயிலைப் புனர் நிர்மாணம் செய்து இரண்டு கால பூஜையும் செய்து வருகின்றனர். தற்போது சிறிய கோபுரம் உள்ளது.
ஒரே பிராகாரம்தான். ஆனால் ரொம்ப விசாலமானது. நுழைவாயிலின் வழியே நுழைந்தால் உள்ளே நேரே அம்பாள் சந்நதியே தெரிகிறத. அழகிய மதில் சுவர், கோயிலைச் சுற்றியுள்ளது. கிழக்குப் பக்கம் போய் நந்தி, பலிபீடத்தைக் கடந்து உள்ளே மண்டபத்திற்குள் நுழைந்தால் எதிரே கருவறை, சுந்தரேசுவரர் எனும் பெயருக்கு ஏற்ப அழகிய திருக்கோலத்தில் ஈசனின் அருள்தோற்றம் சிறிய லிங்கத் திருமேனி.
கருவறையின் வெளிச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், கன்னிமூல கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியரை அடுத்து, மாரியம்மன் தனிச் சந்நதி கொண்டு விளங்குவது ஓர் ஆச்சரியம். மன்னர் காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டபோது இங்கு மாரியம்மன் இருந்த இடத்திலேயே அவளுக்கு தனிச் சன்னதி எழுப்பி அதன் பிறகு கோயில் எழுப்பினாராம். பிரம்மா, துர்க்கை, திருவுருவங்கள் உள்ளன. சண்டிகேஸ்வரர் வழக்கம் போல ஈசனை நோக்கியவாறு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
நவகிரகங்கள் வடகிழக்கு மூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அருகில் சற்றே தெற்கே தள்ளி பைரவர் சன்னதி, கிழக்கு வாயிலில் உட்புறமாக பிராகாரத்தில் தலவிருட்சம் வில்வம் உள்ளது.
பிராகாரத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் பிரதான நுழைவாயிலான தெற்கு வாயிலுக்கு வந்தால், நமக்கு தரிசனம் தருவது அம்பாள் மீனாட்சியின் அழகு உருவம்தான் நின்ற திருக்கோலம் நாற்கரம் மேலிரு கரங்களில் தாமரை மலர்கள். கீழிரு கரங்கள் அபய, வரத தோற்றம்.
தருமை ஆதீனப் புலவர் சிதம்பர முதலியார் எழுதிய சேதானிபுர அந்தாதி எனும் நூலொன்று உண்டாம். சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி தினங்களில் இங்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. மாதப் பிரதோஷம் வெகு சிறப்பாக வழிபடப்படகிறது.
எங்கே இருக்கு: கும்பகோணம் - நாகை பஸ் மார்க்கத்தில் வௌ்ள மண்டபம் எனும் ஊர் அருகே இத்தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 22 கி.மீ.
No comments:
Post a Comment