சோழநாட்டின் காவிரி வடகரைத் திருத்தலங்களுள் 12வது தலம், கீழை திருக்காட்டுப்பள்ளி.
இத்தலத்திற்கு ஆரண்யஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ளது, அகிலாண்டேஸ்வரி சமேத ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சம்பந்தரால் பாடப் பெற்றது.
மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலய முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரம் நடுவே பலிபீடமும் நந்தியும் இருக்க இடதுபுறம், இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர், முனிஸ்ரீசர் என்ற அந்த சிவலிங்கங்களை அடுத்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் தனிச்சன்னதியில் அருள்கிறார். தலவிருட்சம் பன்னீர் மரம்.
வடக்கு பிராகாரத்தில் சண்டீஸ்வரரும், கிழக்கு பிராகாரத்தில் பைரவர், சனீஸ்வரர், சூரியனும், தெற்கு பிராகாரத்தில் ஆறு முனிவர்கள் சூழ தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகிறார்கள். அவர் அருகே சுவரில் மன்னன் ஒருவன் சிவ பூஜை செய்யும் சிற்பம் அமைந்துள்ளது.
மேற்குச் சுற்றில் நண்டு பூஜித்த கற்கட மகா கணபதி உள்ளார். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் அவர்கள் பற்றியிருக்கும் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
அடுத்து, ஒரே ஆவுடையில் இரட்டை லிங்கங்கள் அமைந்த வித்தியாசமான சன்னதி காணப்படுகிறது. இந்த இரட்டை லிங்கத்துக்கு அபிஷேகம், ஆராதனை செய்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை. சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலர் இங்கே வந்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது.
ஆலய கிழக்கு திருச்சுற்றில் உள்ள பிரமேசரை பூஜை செய்து வழிபடுபவர்கள் நூறு அசுவமேத யாகம் செய்த பலனை அடைவர் என்பது நம்பிக்கை.
பிரமன் இத்தலத்தில் வியாக்ரபாதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், முனீசர், சக்ரேசுவரர், பிரமேசுவரர் உட்பட பத்து சிவலிங்கத் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது.
இது ஆரண்ய முனிவர் வழிபட்டு, அருள் பெற்ற தலம், இம்முனிவர், தமது சிவ பூஜை முடியுமளவும் காவலாக இருக்கமாறு மகா காளம்மையை வேண்டினாராம். அவ்வாறே தேவியும் காவல் இருந்ததாக தல வரலாறு கூறுகிறது.
இந்திரன், தேவகுருவாகிய வியாழனை அவமதித்தான். அதனால் தேவலோகத்தில் இருந்து மறைந்தார். பிரகஸ்பதி, யாகம் ஒன்றைச் செய்ய நினைத்த இந்திரன், அசுர குருவாகிய துவட்டாவின் மகன் விசுவரூபனை தங்களது குருவாகக் கொண்டு வேள்வியைத் தொடங்கினான். விசுவரூபனோ தேவர்கள் அழியுமாறு வஞ்சகமாக வேண்டி வேள்வி செய்ய, அதைக் கண்ட இந்திரன், விசுவரூபனைக் கொன்றான்.
அவன் தந்தை துவட்டா, இந்திரனைக் கொல்வதற்கு வேள்வி செய்தான். வேள்வியில் தோன்றிய விருத்திராசுரனை, ததீசி முனிவரின் முதுகுத் தண்டை இநதிரன் ஆயுதமாகப் பெற்று அழித்தான் குருவாக வந்த விஸ்வரூபனைக் கொன்ற பாவம், ததீசி முனிவரை உயிர் துறக்கச் செய்த பாவமும் தோஷமாக இந்திரனைப் பற்றியது.
அந்த தோஷம் நீங்க இந்திரன் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டான். முடிவாக இத்தலம் வந்து இறைவனை வணங்கி தோஷம் நீங்கப் பெற்று தேவலோக ஆட்சியை மீண்டும் பெற்றான்.
ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம், அன்னை அகிலாண்ட நாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.
கருவறையில் சதுரபீட ஆவுடையாரில் மேல் திசை நோக்கி இறைவன் அருள்பாலிக்கிறார். அனைத்து பேறுகளையும் அளிக்கக்கூடிய மகாவல்லமை படைத்தவர்.
சிவபெருமான் பலாசவனம் என்றும், மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக பன்னிரண்டு பீடங்களில் எழுந்தருளியுள்ளார்.
இந்தப் பன்னிரண்டு ஆலய தெய்வங்களும் வைகாசி மாதம், ரோகிணி நட்சத்திர நாளில் ஒனறாகக் கூடிவந்து திருநாங்கூரில் அமைந்துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் தரிசனம் தருவர். ஆண்டுதோறும் பல ஆயிரம் பக்தர்கள் சூழ சிறப்பாக நடைபெறும். இந்த வைபவத்தில் கீழை திருக்காட்டுப்பள்ளி இறைவன் இறைவியும் கலந்து கொள்கின்றனர். இத்தலம் அகோர பீடம் எனவும் அழைக்கப்படுகிறது.
புதன் தலமான திருவெண்காடு செல்பவர்கள் அருகே உள்ள கீழை திருக்காட்டுப் பள்ளி கோயிலுக்கும் சென்று தரிசித்து வரலாமே
எங்கே இருக்கு: நாகை மாவட்டம், திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கீழை திருக்காட்டுப்பள்ளி.
No comments:
Post a Comment