கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான். இவருடைய சந்நிதானத்திலேயே காட்சி தருகிறார் ராமபிரான். (ஆனால், எத்தனை பக்தர்களால் இந்த ராமரை தரிசித்திருக்க முடியும்? வெங்கடாசலபதிப் பெருமாளை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் போகும்போது, ‘ஜரகண்டி’ அவசரத்தில் பெருமாளையே திருப்தியாக தரிசிக்க முடிவதில்லை, அப்படியிருக்க அந்த கர்ப்பக் கிரகத்திற்குள்ளேயே இருக்கும் ராமரையும், கிருஷ்ணரையும் எப்படி தரிசிக்க முடியும் என்பது நியாயமான ஏக்கம்தான்.) பிற தலங்களில் நாம் பார்ப்பதுபோல இங்கே ராமர் நிமிர்ந்து நிற்கவில்லை. தன் தலையைச் சற்றே சாய்த்தபடி அழகுக் கோலம் காட்டுகிறார். கூடவே சீதை, லட்சுமணன். எதற்காக இந்த சாய்ந்த திருக்கோலம் ராமனுக்கு?
சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியாகிவிட்டது. அனுமனும் இலங்கைக்கு ஒரு தூதுவனாகச் சென்று அங்கே சீதை சிறைபட்டிருக்கும் உண்மையை அறிந்து கொண்டான். தன் உயிரைப் போக்கிக் கொள்ளவிருந்த அன்னை சீதையை அவ்வாறு செய்வதினின்று தடுத்து நிறுத்தினான். அதோடு இலங்கை முழுவதுமாக சுற்றிப் பார்த்து அந்நாட்டின் அமைப்பு, பாதுகாப்பு பலம் ஆகியவற்றையும் உறுதி செய்து கொண்டான். ராவணனுடைய இழிச்செயலை பிற தம்பிகள் பாராட்டினாலும் விபீஷணன் மட்டும் அந்த நடவடிக்கை அதர்மமானது என்று வாதிட்டான் என்ற உண்மையையும் தெரிந்து கொண்டான். ஆனால், ராவணனோ தன் தவறை உணர்ந்ததாகவே தெரியவில்லை.
யார் இடித்துச் சொன்னாலும் அதை ஏற்காதபடி காமம் அவன் கண்களை கட்டிப் போட்டிருந்தது. ஆகவேதான் சீதையை திருப்பி அனுப்பும் உத்தேசம் சிறிதும் இல்லாதவனாக, என்றேனும் ஒருநாள் தனக்கு அவள் இணங்கி விடுவாள் என்று அநியாயமாக எதிர்பார்த்தான். இப்படிப்பட்டவனை ஒரே ஒரு வழிமுறையால் தான் வீழ்த்த வேண்டும்; சீதையையும் மீட்க வேண்டும் என்று முடிவு செய்தார் ராமன். ஆமாம், போர் ஒன்றுதான் அவனை அடிபணிய வைக்கும் ஒரே வழி என்று அவர் தீர்மானித்தார். போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோதுதான் ராமனுக்கு ஒரு தகவல் வந்தது. அதாவது, ராவணனின் தம்பியும், அவனுக்கு நேர் எதிரான குணமும் கொண்டவனுமான விபீஷணன் ராமனிடம் சரணடைய விருப்பம் தெரிவித்திருந்தான்.
‘‘அசுர மன்னனான ராவணனின் தம்பி எப்படி நற்குணம் கொண்டவனாக இருக்க முடியும்? அவனுடைய சரணாகதியை ஏற்கக்கூடாது’’ என்பது லட்சுமணனின் வாதம். ஆனால், ‘‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’’ என்றபடி, நல்லவனாவதும், தீயவனாவதும் பிறப்பில் இல்லை, வளர்வதில்தான் இருக்கிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்தவர் ராமன். அதனால்தான் அவர் விபீஷணனை தன்னோடு ஒருவனாக ஏற்க விரும்பினார். அப்படி ஏற்க முடிவெடுத்ததற்கும் ஒரு உறுதியான காரணம் இருந்தது. அது, அனுமனின் சிபாரிசுதான். விபீஷண சரணாகதியை ஏற்றுக் கொள்ளும் ராமனுடைய இந்த விருப்பம் நியாயமானதுதான் என்றும், அதில் எந்தவிதத் தயக்கமும் வேண்டாம் என்றும் அனுமன் தன்னுடைய கருத்தைச் சொன்னான்.
விபீஷணன் பூரண குணத்தவன். நாகரிகம் தெரிந்தவன். அதர்மத்துக்கு அஞ்சுபவன். அண்ணனே ஆனாலும், அநீதியைத் தட்டிக் கேட்பவன் என்றெல்லாம் அனுமனுக்கு விபீஷணனைப் பற்றித் தெரிந்திருந்தது; அதை அப்படியே ராமனிடமும் சொல்லியிருந்தான் அவன். ராமனுக்கும் விபீஷணனைப் பற்றிய நல்லெண்ணம் மனதுக்குள் வளர்ந்தது. அப்படி ராமனுக்கு, அனுமன் விபீஷணனின் நற்குணங்களை விளக்கியபோதுதான், அதைத் தலை சாய்த்து உன்னிப்பாக ராமன் கேட்டார். நல்ல விஷயங்களை நல்லவன் ஒருவன் சொல்லும்போது அதற்கு உரிய மதிப்பு கொடுக்கும் வகையில், தலை சாய்த்து கேட்கும் பண்பு மிகுந்தவர் ராமன். அதனால்தான் அப்படி ஒரு திருக்கோலம் காட்டுகிறார் இத்தலத்தில்.
ராமனுடைய இந்தத் தோற்றத்துக்கு இப்படி ஒரு விளக்கத்தை அளித்தவர் பெரிய திருமலை நம்பி என்ற மகான். யாருக்கு அளித்தார்? தன் சீடனான ராமானுஜருக்கு! அடுத்த முறை திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிக்கும்போது, உங்கள் கண்கள் இந்த ராமரையும் தேடும், இல்லையா? அப்படி ராமரை தரிசிக்க விரும்புபவர்கள், புனர்பூச நட்சத்திர தினத்தன்று திருமலையில் இருந்தால், வெளி பிராகாரத்தில் ஊர்வலமாக வருவார் திருமலை ராமர். அப்போது எந்த நேர நெருக்கடியும் இல்லாமல் நிம்மதியாக அவரை தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment