Sunday, 16 July 2017

ஆனந்த தாம்பத்யம் அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி


திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால், நான்முகன், இந்திரன் என அனைத்தும் தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார்.  அனைவரும் பார்வதி தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி, வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர்.  பின்னர் வந்த முனிகுமாரர்களில்  ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை அலட்சியப்படுத்திவிட்டு சிவபெருமானை மட்டுமே வணங்கிச் சென்றார். இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி, அவரது உடலிலுள்ள சதையை  தனது மூச்சுக் காற்றால் இழுத்துக் கொண்டார்.  இதனையும் பொருட்படுத்தாத பிருங்கி முனிவர் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். 

சிவபெருமான் தன்னை மட்டும் வணங்கியதால் பார்வதிதேவி புரிந்த திருவிளையாடல் என்பதை உணர்ந்து, மூன்றாவதாக ஒரு காலை முனிவருக்கு வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி வினாயகன், முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது நின்றவாறு தவம் இயற்றினார். கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு வந்தார். ‘‘தேவி  உனக்கு என்ன வேண்டும், கேள்?’’ என்றார். உடன் தேவி ‘‘இறைவா, நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால்தானே இந்தப் பிரச்னை! எனவே தங்களது இடப் பாகமாக நானிருக்கும்படியான வரத்தைத் தாருங்கள்,’’ என்று கேட்டாள். 

சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்திக்கொண்டார். வலப்பக்கம் சிவனும், இடப்பக்கம் பார்வதியுமாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தியாகும். கணவன்-மனைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்  கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்தத் துதியை கேதார கெளரி விரத தினத்தன்று சேஷமாக ஜபம் செய்து வணங்கினால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். வில்வம், தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும் செய்து, திங்கள்கிழமை, பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் இத்துதியை பாராயணம் செய்து வர  பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது பல ஆன்மிகர்களின் அனுபவ நம்பிக்கை.

சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய
கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
நம:சிவாயை ச நம:சிவாய
ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
நம:சிவாயை ச நம:சிவாய  
விசால நீலோத்பல லோசனாயை
விகாஸி பங்கேருஹ லோசனாய
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
நம:சிவாயை ச நம:சிவாய
மந்தார மாலா கலிதாலகாயை
கபால மாலாங்கித கந்தராய 
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம:சிவாயை ச நம:சிவாய
அம்போதர ச்யாமல குந்தலாயை
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய 
நிரீச்வராயை நிகலேச்வராய
நம:சிவாயை ச நம:சிவாய
ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய
காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய 
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
நம:சிவாயை ச நம:சிவாய
ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய 
சிவான்விதாயை ச சிவான்விதாய
நம:சிவாயை ச நம:சிவாய
ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம்
யோ பக்த்யா ஸ மான்யோ
புவி தீர்கஜீவீ  ப்ராப்னோதி
ஸெளபாக்ய மனந்தகாலம்.

மேற்கண்ட அர்த்தநாரீஸ்வர துதி மிகவும் சக்தி மிக்கது. குடும்பத்தில் மகிழ்ச்சியை தரக்கூடியது.  கணவன்-மனைவி இடையே அன்பையும், பாசத்தையும், ஒற்றுமையையும் தரக்கூடியது. இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன்-மனைவியிடையே பிரிவினை என்பதே வராது. இருவரிடையே மன ஒற்றுமையை அர்த்தநாரீஸ்வரர் பலமாக உண்டாக்குவார்.

No comments:

Post a Comment