தஞ்சை மாவட்டம், ஆடுதுறை அருகே சூரியனார் கோயில் திருத்தலம் உள்ளது. தென்னகத்தில் சூரியனுக்கு என தனிக்கோயில் அமைந்துள்ள தலம் இது மட்டுமே. (ஒடிசா மாநிலத்தில் கோனார்க் கோயில் உள்ளது. அங்கு உருவ வழிபாடு கிடையாது). சூரியனார் கோயிலில் சூரியனை முதன்மையாகக் கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலத்தில் மற்ற 8 கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவசூரியநாராயண கோயில், கிரகங்களின் கதிர்களை உட்கொள்ளும் தன்மை கொண்டது. இக்கோயில் 11ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.
இதன் கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரியதீர்த்தம் என்னும் புனித நீர்நிலை இங்கு உள்ளது. முதலில் சூரியனார் கோயிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பின்னரே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும். சூரியன் என்றால் வெப்பம், ஒளி. இவற்றைத் தாங்க இயலாது என்பதால் சூரியபகவானின் ஒளி, வெப்பத்தை சாந்தப்படுத்தி மனிதர்கள் வழிபட ஏதுவாக குரு பகவான் அவருக்கு எதிரில் அமர்ந்து அவரை சாந்த சொரூபியாக மாற்றுகிறார். சூரியபகவான் தனது துணைவியர்களான உஷாதேவி, சாயாதேவியுடன் திருமண கோலத்தில் அருள் பாலிப்பது சிறப்பு. நவக்கிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடியதும், நவக்கிரகமே மூலஸ்தானமாக அமையப்பெற்றதும் இந்தத் தலம் தான்.
காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டதால் தன்நோய் நீக்கி அருள் புரிய நவக்கிரகங்களை வேண்டினார். அதை ஏற்று நிவர்த்தி செய்த தலம் இது. இதையறிந்த பிரம்மா கோபம் கொண்டு, ‘அவரவர் பாவ புண்ணியங்களின் பலன்களை மட்டுமே கொடுக்குமாறு ஆணையிட்டு இருந்தோம். அதை நீங்கள் மீறி வரம் தந்து செயல்பட்டு விட்டீர்கள். எனவே அனைவரும் பூலோகத்தில் தொழுநாய் பிடித்து திரிவீர்களாக’ என சாபம் கொடுத்தார்.அந்த சாபத்தின் பலனாக இவர்கள் இங்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து தங்களுக்கு விமோசனம் தர வேண்டினர். சிவனும் விமோசனம் தந்து அவர்களிடம் இந்த தலத்தை கொடுத்து ‘இனி இது உங்களின் அருளிடமாக விளங்கும். உங்களை நாடி வருவோருக்கு அனுக்கிரகம் செய்யுங்கள்’ என்றார். இதுவே இந்த தலத்தின் புராணப்பின்னணி.
இது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில். ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவசூர்ய பெருமானுக்கு விசேஷமாக அபிஷேகங்களும், பூஜைகளும், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, ஜென்மசனி, வேறு பிற நவக்கிரக தோஷம் உடையவர்களும் இக்கோயிலுக்கு வந்து ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் அதிகாலையில் தீர்த்த குளங்களில் நீராடி விரதம் இருந்து அர்ச்சனை செய்ய அனைத்து தோஷங்களும் விலகும், உடல் நலம் காக்கப்படும் என்பது நம்பிக்கை. 12 ஞாயிறு இங்கு தொடர்ந்து வந்து வழிபட்டால், குடும்பத்தினர் அனைவருக்கும் எந்த தோஷமும் வராது.
காரியத்தடை நீங்கும். சூரியனாருக்கு அரச்சனை செய்து அவருக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல் அபிஷேகம் படைத்தல் தான் நேர்த்திக்கடன். பக்தர்கள் துலாபாரம், கோதுமை, வெல்லம், வயலில் விளைந்த தானியங்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் தூளிகட்டி வேண்டிக்கொள்கின்றனர். கோயில் அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் மயிலாடுதுறை செல்லும் வழியில் ஆடுதுறை உள்ளது. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சூரியனார் கோயில். மயிலாடுதுறை, கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஆடுதுறையில் இருந்து ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.
குரு பகவானின் அருட்பார்வையும் கிடைக்கும்
நவநாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின் ஒன்பது முறை வலம் வரும் அமைப்பு கொண்டது சூரியனார் கோயில். சூரியபகவானை அவர் சன்னதியில் தரிசிக்கும் பொழுது குரு பகவானின் அருட்பார்வையும் ஒரு சேர கிடைக்கும் தலம். தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 வரையும், மாலை 4 முதல் இரவு 8 வரையும் கோயில் திறந்திருக்கும்.
No comments:
Post a Comment