கர்நாடகாவில் உள்ள பல புண்ணிய ஸ்தலங்களில் மேல்கோட்டை செல்வநாராயணசாமி கோயிலும் ஒன்றாகவுள்ளது. அதை தரிசனம் செய்ய தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அக்கோயில் வளாகத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள கணபதி சிலை (ஏகஷிலா கணபதி) உள்ளது. அந்த சிலை தினமும் கண்ணுக்கு தெரியாமல் சுற்றி வருகிறது. மூல முதல்வன், மூத்த கணபதி முப்பத்து மூவர்களுக்கெல்லாம் முதல்வன் என்று போற்றப்படும் விநாயக பெருமானுக்கு வைணவ திருத்தலமான மேல்கோட்டையில் கோயில் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் மாநிலத்தின் மண்டியா மாவட்டம், பாண்டவபுரா தாலுகா, மேல்கோட்டையில் செல்வநாராயணசாமி கோயிலை ஸ்தாபித்தார். அக்கோயில் வளாகத்தில் இருக்கும் பழமையான தெப்பகுளம் பக்தவர்கள் வந்து புனித நீராடும் பகுதியாகவுள்ளது.
இக்குளத்தின் வடக்கு பகுதியில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள கணபதி சிலை உள்ளது. இந்த சிலையின் சிறப்பு என்னவெனில் பக்தர்களின் கண்ணுக்கு தெரியாமல் சுற்றி வருவதாகவும், இச்சிலை பிரதீஷ்டை செய்யப்பட்ட நாளில் சிலையின் நிழல் இருந்த இடம் மாறிக்கொண்டே வருவதாகவும். இந்த கலியுகத்தின் எதிர்காலம் அக்கணபதி சிலையில் இருப்பதாகவும், கணபதி கோயில் மூலவரான செல்வநாராயணசாமிக்கு நேரெதிராக மேற்கு பக்கமாக திரும்பும்போது இந்த கலியுகம் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. இந்த கோயில் குறித்து ஆன்மிக வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வபிள்ளை அய்யங்கார் கூறும்போது, மேல்கோட்டை செல்வநாராயணசாமி கோயில் தெப்பகுளத்தின் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்துள்ள கணபதி சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது., சாளுக்கிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் இச்சிலை வடிவமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சுமார் 12 முதல் 15 அடி உயரமும், 8 முதல் 10 அடி அலகத்தில் உள்ள சிலையாகும். கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு பசவனகுடியில் உள்ள தொட்டகணபதி, பல்லாரி மாவட்டம், ஒசபேட்டை தாலுகா, ஹம்பியில் உள்ள கடலகாளு கணபதி மற்றும் சாசிவேகாளு கணபதி சிலைகள் பழமையானது. அந்த வரிசையில் மேல்கோட்டையில் உள்ள ஏகஷிலகணபதியும் பழமையானதாகவுள்ளது. மேல்கோட்டையில் உள்ள யோகாநரசிம்மசாமி கோயில் ஹொய்சலா மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அவர்களுக்கு பின் விஜயநகர பேரரசர்கள் காலத்தில் கோயிலின் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. அந்த ராஜகோபுரம் அமைத்தபோது அடிக்கடி கட்டிடம் இடிந்து விழுந்தது. என்ன காரணத்திற்காக எப்படி நடக்கிறது என்று யோசித்தபோது, ஏகஷில கணபதியை பூஜிக்காமல் கோபுர கட்டுமான பணி தொடங்கியது காரணம் என்று தெரியவந்தது. அதன்பின் கணபதிக்கு பூஜை செய்தபின், கோபுரத்தின் கீழ் பகுதியில் சிறிய கணபதி சிலை பிரதீஷ்டை செய்தனர்.
சிறயதாக பிரதீஷ்டை செய்துள்ள கணபதியை நூல் கணபதி என்று அழைக்கிறார்கள். இதற்கு காரணம் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கணபதியை தரிசிக்கும் போது, தாங்கள் அணிந்துள்ள ஆடையில் இருந்து ஒரு நூலை பிரித்து காணிக்கையாக செலுத்துகிறார்கள். மேல்கோட்டை சன்னதி முழுக்க முழுக்க வைணவ திருத்தலமாக இருந்தாலும், அதை சுற்றி மூன்று கணபதி கோயில்கள் உள்ளது. இதில் தெப்பகுளத்தில் உள்ள ஏகஷிலா கணபதி, யோகநரசிம்மசாமி கோயில் ராஜகோபுரத்தில் கீழுள்ள நூல் கணபதி மற்றும் கோயில் கோபுர கம்பத்தில் உள்ள சாவி கணபதியாகும். இந்த சாவி கணபதிக்கும் புராணத்தில் வரலாறு உள்ளது. கோயிலுக்கு பயன்படுத்தும் எண்ணை, கற்பூரம், மூலவருக்கான ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடர்கள் பறித்து சென்றபோது, அதை பாதுகாக்கும் பணியில் கணபதி ஈடுபட்டதால் அவரை சாவி கணபதி என்று அழைக்கிறார்கள். இந்த கணபதியை வணங்கினால், கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது என்றார்.
No comments:
Post a Comment