சென்னை - வியாசர்பாடி
சென்னை மாநகரத்தில் வடசென்னை பகுதியிலுள்ள வியாசர்படியில் தரணி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அறுபது ஆண்டுகள் பழமையானது. ஒரு காலகட்டத்தில் ஏரிக்கரையாக இருந்த இப்பகுதி, துணி துவைக்கும் குளமாய் இருந்துள்ளது. பின்னர், கரையின் மேற்புறத்தில் மக்கள் குடியேறத் துவங்கினார்கள். அவ்வாறு குடியேறிய மக்களின் கைகளில் சுட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலை கிடைக்கப்பெற்றது. அதையே அப்பகுதி மக்கள் பக்தி சிரத்தையோடு பூஜித்து சிறு ஓலைக் குடிலுக்குள் அமர்த்தினார்கள். பல்வேறு பக்தர்களின் கைங்கரியத்தால் மிகச் சிறப்பான ஆலயமாக வளர்ந்தும், இன்றளவில் எல்லாவிதமான பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. கோயில் 31.05.2015 அன்று கும்பாபிஷேகம் கண்டிருக்கிறது. 2012ம் ஆண்டு முதலே ஆலய முக்கியஸ்தர்களின் முயற்சியால் இந்த அருட்சேவை மூன்றரை ஆண்டுகளில் நிறைவேறியிருக்கிறது.
தென்திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் தரணி விநாயகர் மூலவராகத் திகழ்கிறார். ஆச்சரியமாக கோயிலின் கோபுரமாகவே 65 அடி உயர விநாயகரை சித்தி புத்தியோடு அமர்ந்த நிலையில் நிர்மாணித்திருக்கிறார்கள். சிலையையே கோயிலின் கோபுரமாக்கிய அற்புதம் வேறு எந்தக் கோயிலிலாவது காணக்கிடைக்குமா என்பது சந்தேகமே! கோபுர தரிசனம் கோடி புண்ணியம் எனில் தெய்வத்தையே கோபுரமாக்கியது வியப்பான விஷயம்தானே! முன் மண்டபத்தில் காலபைரவர், ஆஞ்சநேயர் இருவரும் நின்ற நிலையில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்கள். விநாயகரின் சுற்று பிராகாரத்தில் கிழக்கு நோக்கி பிரத்தியங்கராதேவி, சரபேஸ்வரர், சக்தி தரணீஸ்வரியம்மா, வள்ளி-தெய்வானை சமேத முருகன், மகாலட்சுமி, ஐயப்பன், தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும், மூலவரின் நேர் பின்புறம் வடக்கு நோக்கி துர்க்கை, மேற்கு பார்த்த சூரியன்-நவகிரகங்கள், கிழக்கு பார்த்த தரணீஸ்வரர் என்று அனைத்து தெய்வங்களும் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள்.
இத்தனை தெய்வங்களும் அமைந்த இவ்வாலயத்தில் அனுதினமும் மூன்று காலபூஜைகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி அந்தந்த தெய்வங்களுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், பெளர்ணமி, அமாவாசை தினங்கள் மற்றும் பொதுவான இந்துக்களின் ஆலய ஆன்மிக முக்கிய தினங்களையும் இங்கு சிறப்புற கொண்டாடுகிறார்கள். ஆலய திருவிழாவாக விநாயக சதுர்த்தி அன்று இப்பகுதி மக்கள் அதிகாலையிலேயே புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு, விநாயகருக்கு சிறப்புற அபிஷேகமும், அலங்காரமும் செய்து ஆராதித்து மகிழ்கிறார்கள். பின்னர் பகலில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்குகிறார்கள். மாலையில் விநாயகரை ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள். அச்சமயம், வாணவேடிக்கையும், இன்னிசை கச்சேரியும் விழாவை மேலும் களைகட்டச் செய்யும். தங்களது பொதுவான எந்த பிரச்னைகளுக்கும் நல்வழிகாட்டி தீர்வும், நிம்மதியான வாழ்வையும் அமைத்துக்கொடுத்து உலகையே உய்விக்கிறார் இந்த தரணி விநாயகர்.
சென்னை, வியாசர்பாடி பகுதியிலுள்ள மேல்பட்டி பொன்னப்பன் முதல் தெருவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் பூக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment