Wednesday, 9 August 2017

ஷேத்திரபாலபுரம் ஆனந்தகால பைரவர் கோவில்


வீரச்செயல்களை செய்யும் காலத்தில் சிவபெருமான், பைரவர் வடிவம் எடுப்பதாக புராணங்கள் கூறுகின்றன. காவல் தெய்வமான இவரின் சன்னிதியில் நாய் வாகனமாக இருப்பதை காணலாம். பைரவருக்கு பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ளது. 

இங்கு ஆனந்த கால பைரவராக வீற்றிருக்கும் பைரவர் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அவருக்கு நாய் வாகனம் இல்லை. கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாக காட்சி தருகிறார்.

பைரவருக்கு ஷேத்திரபாலர் என்ற பெயரும் உண்டு. அவருடைய பெயரால் இவ்வூர் ஷேத்திரபாலபுரம் என்று அழைக்கப்படுகிறது. பைரவருக்கு, தொலைந்து போன ஆனந்தம் இத்தலத்தில் கிடைக்கப்பெற்றதால் ‘ஆனந்தகால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் காசியில் உள்ள காலபைரவருக்கு மேலானவர் என்று கூறுகிறார்கள்.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். தினந்தோறும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, ஒருகால பூஜை நடக்கிறது. சித்ரா பவுர்ணமியில் காவடி உற்சவமும், கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்காப்பு வைபவமும் நடைபெறும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்தத் தலத்தில் உள்ள காலபைரவரை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும்.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி தினங்களில் காலை 8 மணிமுதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருக்கும்.

No comments:

Post a Comment