சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என சிறப்பு பெற்ற இக்கோயிலில் உமையவள், ஆனந்தவல்லி அம்மனுடன் சோமநாதராக சிவன் காட்சி தருகிறார். வெள்ளை நிறத்தில் சுயம்புலிங்கம் பக்தர்களை பரவசப்படுத்துகிறது. சிவனுக்கு மேற்குப் பகுதியில் ரிஷபம், சூலத்துடன் கூடிய சிலை உள்ளது. சதாசிவ பிரம்மேந்திரர் வாயு வடிவில் காட்சி தந்த நான்கு தலங்களில் இதுவும் ஒன்று. கோயிலின் எதிரே சந்திரபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது.
கோயிலின் தல வரலாறு
மூலவர்: சோமேஸ்வரர் (திருபதகேசர்).
உற்சவர்:சோமநாதர்.
அம்மன்:ஆனந்தவல்லி.
தலவிருட்சம்: வில்வம்.
தீர்த்தம்: மதுகூபம், சந்திரபுஷ்கரணி.
ஆகம வழிபாட்டு முறை பூஜை:
காரண ஆகமம், புராண பெயர்: ஸ்தூல கர்ணபுரம், சந்திரப்பட்டினம் 27 நட்சத்திரங்களும் தேவதைகளாக இருந்த போது, அவர்களின் தந்தையான தட்சன், அவர்களை சந்திரனுக்கு மணம் முடித்து கொடுத்தார். சந்திரன் ரோகிணியின் மீது மட்டும் கூடுதலான அன்பு காட்டி, மற்றவர்களை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள், தந்தை தட்சனிடம் முறையிட்டனர். கோபமடைந்த தட்சன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு ஷயரோகம் (தொழு நோய்) பீடிக்கும் படி சாபம் கொடுத்தான். நோயால் பாதிக்கப்பட்ட சந்திரனின் அழகு சிறிது, சிறிதாக தேயத் தொடங்கியது. சந்திரன், அகத்திய முனிவரிடம் சாப விமோசனம் கேட்டான். அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதியின் மேற்கு கரையில் அமைந்த வில்வவனத்தில் சுயம்பு லிங்கத்திற்குத் தனியே கோயில் எழுப்பி தினமும் வழிபட்டால், நோய் நீங்கும் என்று கூறினார்.
மதுரையில் இருந்து நடந்து வந்த போது வில்வ மரங்கள் சூழ்ந்த இடத்தில் லிங்கம் இருந்ததை கண்ட சந்திரன், அங்கேயே தீர்த்தம் அமைத்து நீராடி, சிவனை வழிபட்டான். இதில் அகம் மகிழ்ந்த சிவன், சந்திரனின் நோயை போக்கினார். பக்தனின் வேண்டுகோளை ஏற்று அவரே இத்தலத்தில் உமையவள், ஆனந்தவல்லி அம்மனுடன் சோமநாதராக காட்சி தருகிறார். சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது, மாணிக்கவாசகருக்காக இந்த தலத்தில் நரிகளைப் பரிகளாக (குதிரை) மாற்றிக் கொள்ள கயிறு கொடுத்தார் என்றும், அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இங்கு வந்து சோமநாதரை பூஜித்து, அதன் பின்னர் இலங்கைக்கு பாலம் அமைத்தார் என்றும் கூறப்படுகிறது. ராமாயணப் போரில் வானரச்சேனைகளின் பசியை போக்கிய தலம் என்றும், சூரனை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை, பலராமர் இத்தலத்தில் வந்து வழிபட்டு நீக்கிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்த அற்புத சம்பவங்கள் கோயிலின் ராஜகோபுரத்தில் இன்றும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. தொழுநோய் நீங்கிய சந்திரன் தனி சன்னதியில், தனது மனைவியரில் இருவருடன் ஒரே கல்லில் காட்சி தருகிறார். இங்குள்ள சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடினால் தொழுநோய் குணமாகும் என்று கூறப்படுவதால், 19ம் நூற்றாண்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மானாமதுரையில் குவிந்துள்ளனர். இதனால் ஆங்கிலேயே அரசு மானாமதுரை-சிவகங்கை சாலையில் கட்டப்பட்ட தொழுநோய் மருத்துவமனை இன்றும் சாட்சியாக உள்ளது. ஆடித்தபசு தினத்தில் சுவாமிக்கு அணிந்த மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்றும், குழந்தை இல்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது.
திருவிழா
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை போல இங்கும் சித்திரை திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், பிரதோஷ நாட்களிலும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment