பிரபஞ்சத்தையே தனது திருவாய்க்குள் அடக்கிய திருமாலின் அற்புதங்கள் எந்தக்கட்டுக்குள்ளும் அடங்காதவை. காக்கும் தெய்வமான விஷ்ணு உலகில் பல ஷேத்திரங்களில் அருள்பாலிக்கிறார். அந்த வகையில் 108 திவ்ய தேசங்களில் 53வது தலமாகவும், நடுநாட்டு திருப்பதிகளில் இரண்டாவது தலமாகவும், தமிழ்வேதம் எனப்படும் நாலாயிர திவ்யபிரபந்தம் அவதரித்த தலமாகவும் விளங்குவது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர். இங்கு உலகளந்த பெருமாளாக வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரத்தையும் பிடித்தபடி வலது காலை ஆகாயம் நோக்கி தூக்கி நின்று திருவிக்கிரம அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வலது காலின் மேல்புறம் லட்சுமி எழுந்தருளி உள்ளார். கீழே இடது காலில் நமச்சு முனிவர், மகாபலிச்சக்கரவர்த்தி, சுக்கிராச்சாரியார். ஆண்டாள், கருடன் ஆகியோர் பூஜை செய்கின்றனர். முதலாழ்வார்களான பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.
இந்த தோற்றம் வேறு எங்கும் காணாத அளவிற்கு இக்கோயிலில் கருவறையில் உள்ளது. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடனான தேகளீச பெருமாள் ஆவார். இக்கோயில் ஒரு கால கட்டத்தில் வேணுகோபால சன்னதியாக இருந்து படிப்படியாக உலகளந்த பெருமாள் கோயிலாக உருவெடுத்தது. சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில் பல்லவர்கள், விஜயநகரபேரரசு, இரண்டாவது நரசிம்மவர்மன், பாண்டியர்கள், திருமலைநாயக்கர், திருமங்கை மன்னன், மலையமான் சக்கரவர்த்தி ஆகியோர்களால் ஒவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக இக்கோயில் நிறுவப்பட்டது. திருவிக்கிரமசுவாமி சன்னதிற்கு பின்புறம் வாமனர் கையில் குடையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கேரளாவிற்கு அடுத்த படியாக வாமனருக்கு இங்கு தான் சன்னதி உண்டு. அதேபோல் ஓணம் பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவது வெகு சிறப்பு. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பிரம்மேற்சவமும், வேணுகோபாலஜெயந்தி உற்சவமும் நடைபெறுகிறது.
உற்சவர்கள் புஷ்பவல்ண தாயார் மற்றும் தேகளீச பெருமாள். திருவிக்கிரம சுவாமி சன்னதிக்கு செல்வதற்கு முன்பாக கொடிமரத்தில் இருந்து இடதுபுறத்தில் உள்ளது பூங்கோவல்நாச்சியார் சன்னதி. தென்பெண்ணை ஆற்றின் வலதுபுறத்தில் உள்ள இந்த தலத்திற்கு அடிக்கடி பேருந்து வசதியும், விழுப்புரம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் ரயில்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரே கோயிலுக்குள் அடங்கி இருப்பதால் திருக்கோவிலூர் என்று அழைக்கப்பட்டது. திருவிக்கிரம சன்னதிக்கு பின்புறம் உள்ள வாமணரை தரிசனம் செய்தால் திருமணம், செல்வம், குழந்தைபேறு, கல்வி போன்ற குருவால் கிடைக்கும் அனைத்து பலன்களும் இங்கு கிட்டும். திருவோண நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
திருவிக்கிரம சன்னதிக்கு நுழைவு வாயிலின் இடப்பக்கம் பெருமாள் சன்னதிக்கு அருகில் உள்ளது விஷ்ணுதுர்கை சன்னதி. பெருமாளின் சகோதரியான இவர் எல்லை காவல் தெய்வமாகவும், வனதேவதையாகவும் விளங்குகிறார். விந்தியமலைக்கு புறப்பட தயாராக இருந்தபோது பெருமாள் தன்அருகில் இருந்து வரும் பக்தர்களுக்கு துயர் போக்க வேண்டும் என்று தன் அருகிலேயே இருக்க செய்தார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ராகுகாலத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை , செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் விஷ்ணுதுர்கைக்கு புடவை மற்றும் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி வழிபட்டால் செவ்வாய்தோஷம் நீங்கி திருமண யோகம் கிடைக்கும்.
சர்ப்பதோஷங்கள் நீங்கும்
பூங்கோவல் நாச்சியார் சன்னதிக்கு இடதுபுறம் சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார். இவருக்கு சனிக்கிழமை கல்கண்டு அர்ச்சனை செய்தால் தீமைகள் அகன்று நன்மைகள் கிட்டும். திருவிக்கிரமசுவாமி கருவறையின் முன்பு நாக ராஜாக்களான அனந்தன், வாசுகி ஆகியோரை ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வழிபாட்டால் கால சர்ப்பதோஷங்கள் நீங்கும். திருவிக்கிரமசுவாமி கருவறையில் உள்ள சுக்கிராச்சாரியாரை நினைத்து வழிபட்டால் சங்கீதம், வாத்தியம், நாட்டியம், போகபாக்கியம், இளமை, லட்சுமி கடாட்சம், போன்ற பலன்கள் கிட்டும்.
No comments:
Post a Comment