திருச்சி மாவட்டம் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநெடுங்களம். இங்குள்ள நித்திய சுந்தரேஸ்வரர்(நெடுங்களநாதர்) கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இங்குள்ள இறைவன் நித்திய சுந்தரர், இறைவி ஒப்பிலாநாயகி. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் எட்டாவது சிவத்தலம் இது. கோயில் இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி உள்ளது. கோயில் முன்பு திருக்குளம் உள்ளது. முதல் வாயிலில் கோபுரம் கிடையாது. 2வது நுழைவு வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது. உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளன. தென் பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கின்றனர். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கும், மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகனுக்கும் தனி சன்னதி உள்ளது. தெற்கில் உபயநாச்சியார்களுடன் வரதராஜப் பெருமாள் சன்னதியும், வடக்கில் அகஸ்தியர் சன்னதியும் உள்ளது.
இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. எக்காலத்திலும் இங்கு தீர்த்தம் வற்றவே வற்றாது. வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. சிவன் தனது இடப்பாகத்தை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இதனால், இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், இத்தலத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவரும் இருப்பதாக ஐதீகம். தவம் செய்த அம்பிகையை இறைவன் வேறு வடிவில் தோன்றி கந்தர்வ மணம் செய்ய முற்பட, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம் என்பதால் ஒளிமதிச் சோலை என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
வங்கிய சோழன் என்ற மன்னனுக்கு சிவபெருமான் தரிசனம் தந்த திருத்தலம். இத்திருத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் மூலம் ஆதித்த சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விஜயநகர பேரரசின் மன்னர்கள், படைத்தலைவர்கள் முதலானோர் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்தது அறியப்படுகிறது. இத்தலத்திலுள்ள வெண்கலக் குதிரை விந்தையான அமைப்புடையது. மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர் கால கல் உரல் சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடல் கருத்துகள் அனைத்தும் ராஜகோபுரத்தில் முன்னும் பின்னும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானம் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது.
உற்சவர் சோமாஸ்கந்தரின் வலது கை கட்டை விரல் இல்லை. காரணம் ஒரு அடியவருக்காக மாறுவேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறி காப்பாற்றினார். இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜை செய்துள்ளார். இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது. யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்க காட்சி தருகிறார். இக்கோயிலின் நவக்கிரக சன்னதியில் (பதினொன்று திருவுருவங்கள்) சூரியனாரின் திருவுரு தமது இரு மனைவியரோடு மேற்கு திசை நோக்கியும் ஏனைய எட்டு கிரகங்களின் திருவுருவங்கள் சூரியனாரை நோக்கியும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
சிவபெருமான் மீது படும் சூரிய கதிர்கள்
ஆண்டுதோறும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பு கொண்டது. சிவபெருமான் மீது ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 மணி வரை சூரிய பூஜை சிறப்பாக நடக்கும்.கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப்பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. பழமையான ராஜகோபுரம் பகைவர்களால் இடிக்கப்பட்டுவிட்டதால் உழவாரப்பணிக் குழு அமைத்து பக்தர்களால் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பு. நடராஜருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன் நிறைவேற்றலாம்.
No comments:
Post a Comment