Monday, 10 July 2017

அடகுக் கடையில் கேதார ராகம்


‘வைஷ்ணவ ஜனதோ தேநே கஹியே ஜேபீட பராயி ஜானேரே, பரதுக்க உபகாரு கரே தோயே மன அபிமானந அநேரே...’ எனத் தொடங்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தமது தேன்குரலில் பாடிய பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?          

‘பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்...’ எனத் தொடங்கி, பல உயரிய கருத்துகளை எடுத்துரைக்கும் இந்தப் பாடல், மகாத்மா காந்திக்குப் பிடித்தமானது. மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டங்களில் தவறாமல் ஒலிக்கும் பாடல்! பக்தி, ஒழுக்கம்,  மனிதாபிமானம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்திய இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை இந்தப் பூமிக்குத் தந்த அந்தப் பக்தர், ஸ்ரீநரஸி மேத்தா.

ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பாடிய நரஸி மேத்தாவின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை, குஜராத் மக்கள் இன்றைக்கும் கதை கதையாகச் சொல்லிப் பூரிக்கின்றனர். அவற்றில் ஒரு சம்பவம்...

அப்போது, ஜூனாகாத் பகுதியை மான்லித் என்பவர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். நரஸி மேத்தாவையும் அவரின் கிருஷ்ண பக்தியையும் அறிந்த மான்லித், நரஸியின் மகத்துவத்தைச் சோதிக்க நினைத்தான். நரஸியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தான்.

‘‘உன் மகளுக்குத் திருமணம்; உன்னிடம் காசு இல்லை. ஆனால், நீயோ எந்தக் கவலையுமின்றி, கடவுள் சந்நிதியிலேயே காலத்தை ஓட்டுகிறாய்? உன்னுடைய தாமோதரனின் கழுத்தில் ஜொலிக்கிற ஆரம், சிறையில் இருக்கிற உன் கைக்கு வந்துவிட்டால், தாமோதரனையும் உன் பக்தியையும் ஏற்றுக்கொள்கிறேன். தவிர, தாமோதரனுக்கு அடிமையாகிறேன். உம்மையும் விடுதலை செய்கிறேன்’’ என்றான் எகத்தாளமாக.  

இதைக்கேட்டதும், மெய்யுருகி தாமோதரனைப் போற்றிப் பாடினார் நரஸி மேத்தா. ‘`மணிவண்ணா! என்னை உன் காலடியில் இருந்து பிரித்துவிட்டாயே... நான் என்ன தவறு செய்தேன்?’’ என அழுது புலம்பினார். பக்தனின் கதறலைக் கேட்டுச் சும்மா இருப்பாரா தாமோதரன்?!         

நரஸி மேத்தாவுக்குத் திருக்காட்சி தந்தார். ‘‘ஸ்ரீநரஸி, கேதார ராகத்தில் என்னைப் பற்றிப் பாடு.என் கழுத்து ஆரத்தை உனக்குத் தருகிறேன்’’ என்று பகவான் சொல்ல, நிலைகுலைந்தார் நரஸி மேத்தா. ‘`ஐயோ... கேதார ராகத்தில் பாட முடியாதே! அதனை அடகு வைத்து, வீட்டுச் செலவுக்கு ஏற்கெனவே பணம் வாங்கிவிட்டேனே!’' என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார் நரஸி மேத்தா.

உடனே கண்ணன், அடகுக் கடைக்காரரிடம் சென்று, நரஸி மேத்தா தரவேண்டிய தொகையை வட்டியுடன் தந்தார்; கேதார ராகத்தை மீட்டெடுத்தார்; அதற்குச் சாட்சியாகக் கடைக்காரரிடம் இருந்து கடிதம் ஒன்றையும் வாங்கிவந்து, நரஸியிடம் கொடுத்தார். ‘‘இப்போது பாடலாமே!’’ என்றார் புன்னகையுடன். உடனே நரஸி மேத்தா, ‘ஹரி ஹார் தேகா, ஹரி ஹார் தேகா’ எனத் தொடங்கும்  பாடலை, கேதார ராகத்தில் மெய்யுருகப் பாடினார். அப்போது, சந்நிதியில் ஸ்ரீதாமோதரனின் கழுத்தில் இருந்த ஆரம், அதுவாகவே கழன்று, மெள்ளக் காற்றில் மிதந்துவந்து, நரஸியின் கழுத்தில் மாலையென விழுந்தது. 

இதைக்கண்ட அரசன் சிலிர்த்தான். நரஸியின் காலில் விழுந்து பணிந்தான். அவரை விடுதலை செய்ததுடன், நரஸியின் மகளது திருமணத்தையும் சிறப்புற நடத்திவைத்தான்.

No comments:

Post a Comment