மனிதருள் மாணிக்கமாய் போற்றப்படும் ஸ்ரீ ராமரிடமிருந்து என்ன கற்கலாம்? சத்குருவின் வித்தியாசமான பார்வையில் விரிகிறது இந்தக் கட்டுரை…
இந்திய மக்கள்தொகையின் பெரும்பான்மைப் பகுதி ராமனை போற்றி வணங்குகிறது, ஆனால் அவர் வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் பார்த்தால், வாழ்க்கை அவருக்கு நிகழ்ந்த விதத்தைப் பார்த்தால், தொடர்ந்து அவருக்கு பேரிழப்புகள் நிகழ்ந்துகொண்டே இருந்தது போலத் தோன்றும். தனக்கு சேரவேண்டிய ராஜ்ஜியத்தை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது. போர் தொடுக்க விருப்பமில்லாத போதும் மனைவியை அபகரித்துச் சென்றதால் போர்செய்ய நேர்ந்தது. மனைவியை மீட்டுவந்த பிறகு, சுற்றியுள்ள அனைவரும் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசுவதைக் கேட்க நேர்ந்தது. அதனால் மிகவும் பிரியமான மனைவி கர்ப்பிணியாய் இரண்டு குழந்தைகளை சுமந்திருந்த போதும் அவளை காட்டில் விட்டுவர நேர்ந்தது. பிறகு அறியாமலே தன் பிள்ளைகளுக்கு எதிராகவே போரிட்டு மனைவியை தொலைக்க நேர்ந்தது. அவர் வாழ்க்கை முழுவதும் இழப்புகள் மட்டுமே. அப்படியிருந்தும் ஏன் அவரை இவ்வளவுபேர் வழிபடுகிறார்கள்?
ராமரின் மகத்துவம்
ராமரின் மகத்துவம் அவர் வாழ்க்கையில் சந்தித்த சூழ்நிலைகளில் இல்லை. அவர் சந்தித்த அத்தனை இழப்புகளிலும் அவர் தன்னை எவ்வளவு மேன்மையாக நடத்திக்கொண்டார் என்பதுதான் அவருடைய மகத்துவம்.
அவர் வாழ்க்கை முழுவதும் இடைவிடாமல் பேரிழப்புகள் நிகழ்ந்தும், ஒருமுறைகூட அவர் நேர்மை பிறழவில்லை, அவருக்கென அவர் அமைத்துக்கொண்ட அடிப்படைகளிலிருந்து நெறி தவறவில்லை
முக்தியையும் மேன்மையான வாழ்வையும் நாடுபவர்கள் ராமரை நாடினார்கள். எவ்வளவு தூரம் நாம் கட்டுக்கோப்பாக வாழ முயன்றாலும், எந்நேரத்திலும் வெளிச் சூழ்நிலைகள் தவறாகப் போகலாம் என்பதைப் புரிந்து கொள்ளும் விவேகம் அவர்களுக்கு இருந்தது. அனைத்தையும் நீங்கள் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு சூறாவளி வந்து சென்றால் எல்லாம் அழிந்துவிடும். இவை அனைத்தும் இப்போதும் நம்மைச் சுற்றி நிகழ்ந்தபடிதான் உள்ளன. நமக்கு நிகழாமல் இருக்கலாம், ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
'இல்லை, இது எனக்கு நடக்காது’ என்று நினைப்பது முட்டாள்தனம். 'எனக்கு இப்படி நடந்தாலும் நான் மேன்மையாக வாழ்ந்துசெல்வேன்,’ என்பதே புத்திசாலித்தனம். இந்த வியக்கத்தக்க விவேகத்தைப் பார்த்து மக்கள் ராமரை வழிபட்டார்கள். வாழ்க்கை அவருக்கு பேரிழப்பின் தொடராக மாறியபோதும், ஒரு முறைகூட அவர் நேர்மை தவறவில்லை, அவருக்கென அமைத்துக் கொண்ட வாழ்க்கை அடிப்படைகளிலிருந்து பிறழவில்லை. அவர் செய்யவேண்டியது மட்டுமே நோக்கமாக இருந்து, தன் வாழ்க்கையை சமநிலையாக நடத்திச் சென்றார்.
சோதனைகளை நாடும் பாரம்பரியம்!
ஆன்மிகப் பாதையில் இருப்பவர்கள் பேரிடர்களை தேடிச்செல்லும் பாரம்பரியம் ஒன்று உள்ளது. பல ஆன்மீக சாதகர்கள் அவர்கள் வாழ்வில் ஏதொவொன்று தவறாகவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். சாவதற்கு முன் அவர்கள் தங்களை முழுவதுமாக பரிசோதித்துப் பார்த்துவிட விரும்புவார்கள். “தரம் பரிசோதிக்கப்பட்டது” என்று உறுதி செய்துகொள்ள விரும்புவார்கள். என்ன நிகழ்ந்தாலும் சரி, அவர்கள் மேன்மையாக அதைக் கடந்துவர விரும்புவார்கள், ஏனென்றால் உடலை விட்டுச்செல்ல வேண்டிய நேரம்தான் ஒருவர் சமநிலையை இழக்கக்கூடிய நேரம். எல்லாம் நன்றாகவே இருந்தாலும், இதுவரை உண்மை என்று நீங்கள் நம்பிய அனைத்தும் கைநழுவிப் போகவிருக்கும் தருணம் நீங்கள் சற்று சமநிலையை இழக்கும் தருணம். அதனால் மக்கள் பேரிடர்களை தேடிச் சென்றார்கள். உதாரணத்திற்கு, அக்கமஹாதேவி ஓர் அரசரை மணம் முடித்திருந்தார். ஆனால், அவர் சிறு வயதிலிருந்தே தன்னை முழுவதுமாக சிவனுக்குக் கொடுத்திருந்தார். அவர் சிவனிடம் கூறுகையில், “சிவனே! என்னை பசியாக்கி உணவு கிடைக்காமல் செய். அப்படி கிடைத்தால், நான் வாயில் வைக்கும்முன் தரையில் விழும்படி செய். தரையிலிருந்து எடுக்கும்முன் ஒரு நாய் அதனைக் கவ்விச் செல்லும்படி செய். என்னை எல்லாவற்றையும் சந்திக்கச்செய். வெளிச் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் என்னை நான் மேன்மையாக நடத்திக் கொள்வதை நான் கற்றுக்கொள்ள வழிசெய்,’ என்றார். இது பக்தியின் உச்சநிலை.
நீங்கள் தயாராக இருக்க விரும்புகிறீர்கள். போகவேண்டிய நேரம் வரும்போது, சிறிதளவு கூட தடுமாறாமல் இருக்க விழைகிறீர்கள். ஏனென்றால், அதுதான் நீங்கள் சரியாக கையாளவேண்டிய தருணம். அதற்கு சற்று பயிற்சி தேவை. திடீரென ஒருநாள் அது நடந்துவிட்டால், அதை உங்களால் கையாள முடியாது. அதனால், தொடர்ந்து அவர்கள் வாழ்வில் சோதனைகளையும் வேதனைகளையும் விழிப்புணர்வாக நாடுகிறார்கள். ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்தால், முதல் படியாக ஏழ்மையை தேர்ந்தெடுப்பது உலகின் எல்லா பகுதிகளிலும் பாரம்பரியமான வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஏழ்மையில் மேன்மையாக உங்களை நடத்திச்செல்வது சாதாரண விஷயமல்ல, அது எல்லா விதங்களிலும் உங்களை சோதிக்கும். பசியாக இருக்கும்போது மனிதனாய் இருக்கும் உணர்வையே தொலைத்து மிருகம் போல மாறிவிடுவீர்கள். பசியாக இருக்கும்போது உங்களை மேன்மையாக நடத்துவது சுலபமான விஷயமல்ல. இந்தியாவில் யோகிகளைப் பார்த்தால், அவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள், தொடர்ந்து நடந்து சென்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் பசியாக இருக்கிறார்கள், சில நாட்களாக உணவருந்தவில்லை என்பது பார்த்தாலே தெரியும், ஆனாலும் அவர்கள் தங்களை மேன்மையாக நடத்திக்கொள்வார்கள்.
ஒருவேளைக்கான உணவைக் கொடுத்தால் எடுத்துக்கொள்வார்கள். அடுத்தவேளை உணவிற்கு பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் அந்த சவால் எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். இரண்டு வேளை சாப்பாட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டால், நாளை பத்து வேளைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று உங்களை சமாதானப்படுத்த முயற்சிப்பீர்கள். ஒன்றை சேர்த்துவிட்டால், இன்னுமொன்று தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மெது மெதுவாக உங்கள் வாழ்க்கை முழுவதையும் ஒருங்கிணைக்க முயன்று அது முடிவில்லாமல் போய்விடும். நம் பிழைப்பை நாம் எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றுள்ளோம் என்று சற்று நிதானித்துப் பாருங்கள். நம் பிழைப்பிற்கான செயல்முறையை வானம் வரை வளர்த்துள்ளோம், அப்போதும் நமக்குப் போதவில்லை. அதனால், ஒருவேளை உணவு கொடுத்தால் இந்த யோகிகள் பெற்றுக்கொள்வார்கள், ஆனால் அடுத்தவேளைக்கு பணம் கொடுத்தால் மறுத்துவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் அந்த சோதனை எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.
ராமர் – மேன்மையின் திருவுருவம்
மக்கள் ராமரை வழிபடக் காரணம், அவர் வாழ்க்கையின் வெற்றியால் அல்ல, மிகவும் கடினமான சூழ்நிலைகளையும் அவர் மேன்மையாகக் கையாண்ட விதத்தால்தான். அதுதான் ஒருவரது வாழ்க்கையில் மிக மதிப்பானது. உங்களிடம் எவ்வளவு இருக்கிறது, என்ன செய்தீர்கள், என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பது ஒரு பொருட்டல்ல. என்ன நடந்தாலும் உங்களை எப்படி நடத்திக்கொண்டீர்கள்? அதுதான் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன் தரத்தை நிர்ணயிக்கிறது.
பங்குச்சந்தை நிலவரம் நன்றாக இருந்தால், நீங்கள் 100 கோடி டாலர் சம்பாதிக்கலாம், ஆனால் அதில் அர்த்தமிருக்காது. அது ஒரு சமூக சூழ்நிலை மட்டுமே. உங்கள் சமூகத்தில் நீங்கள் கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் இன்னொரு சமூகத்தில் நீங்கள் தோற்றுப்போனவராகத் தெரிவீர்கள், அர்த்தமில்லாது போவீர்கள். சூழ்நிலையோடு சேர்ந்து வரும் வசதிகளை அனுபவிப்பதில் தவறில்லை, ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் உங்களால் எந்த அளவு மேன்மையாக அதைக் கையாள முடிகிறது? பல மனிதர்களுக்கு இது நிகழ்வதை நீங்கள் கவனிப்பீர்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய சவால் வரும்வரை அவர்கள் நன்றாகவே இருப்பதுபோல் தெரியும். சவால் வந்தபிறகு அவர் யாரென்று தெரியும். ஏதோவொன்று அவர்கள் நினைக்கும்விதமாக நடக்கவில்லை என்றால் சிதறிப்போவார்கள். மக்கள் எப்போதும் அவர்களுக்குக் கிடைக்கும் பொருட்கள் அனைத்திற்கும் நன்றி சொல்கிறார்கள். உங்களுக்குக் கிடைக்கும் பொருட்கள் உங்கள் வாழ்க்கைக்கு எதையும் சேர்க்காது. இந்தியாவில் இதை கவனிப்பீர்கள். குப்பத்திற்கு அருகே பெரிய மாளிகை இருக்கும். நீங்கள் எவ்வளவு பெருமையுடன் இருக்கிறீர்களோ அதே பெருமையுடன் அந்த குப்பத்து மனிதரும் இருப்பார். இது நல்ல விஷயம். பெருமையில் மட்டுமல்ல, யார் எப்படி இருந்தாலும் ஒரு மனிதர் தன்னை மேன்மையாக வைத்துக்கொண்டால், அவர் தன்னை நன்றாக சுமந்து கொள்கிறார் என்று அர்த்தம். தூக்குமேடைக்கு நடந்து செல்வதானாலும் நீங்கள் மேன்மையாக நடக்க முடிந்தால், இதுதான் ஒரு மனிதனின் தன்மை. மற்றதெல்லாம் சூழ்நிலையின் தன்மைகள் மட்டுமே.
அப்படியானால் நம் வாழ்க்கையை நாம் சரியாக நடத்தக்கூடாதா? அப்படியில்லை, நம்மைச் சுற்றியிருப்பதை சரியாக நடத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும். சூழ்நிலையை நன்றாக நடத்திக்கொண்டால் எனக்குள் நான் அற்புதமாக உணர்வேன் என்று கிடையாது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னை என்னால் மேன்மையாக நடத்திக்கொள்ள முடிந்தால்தான் நான் அற்புதமாக உணர்வேன். ஆனால், நீங்கள் சூழ்நிலையையும் கையாள வேண்டும், காரணம், நீங்கள் அனைவரின் நல்வாழ்வைக் குறித்தும் அக்கறை கொண்டுள்ளீர்கள்.
ராமர் தன் வாழ்க்கையின் சூழ்நிலைகளை சரியாகக் கையாள முயன்றார், ஆனால் எப்போதும் அவரால் விரும்பியதை செய்ய முடியவில்லை. கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்தார், எல்லாம் கைமீறிப் போனது, ஆனால் அவர் தன்னை எப்போதும் மேன்மையாக நடத்திக்கொண்டார் என்பதுதான் மகத்துவமானது. ஆன்மீகப் பாதையில் செல்வதன் அடிப்படை சாரம்சமே இதுதான். ஓர் அழகான நறுமணமான மலராக உங்கள் உயிர் மலர்வதற்கான சூழ்நிலையை உருவாக்க விரும்பினால், தொடர்ந்து உங்களுக்குள் மேன்மையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும்.
No comments:
Post a Comment