பிரம்மன் தோற்றுவித்த உயிர்களானது தனது பாவ புண்ணிய கணக்குகளுக்கு தக்கவாறு மரணத்தினை சம்பவிக்கின்றன. அவ்வாறன்றி ஏதோ ஒருவித காரணத்திற்காக நம் முன்னோர்களோ, நாமோ உயிர்களைக் கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோஷமானது நம்மைப் பற்றிக்கொள்கிறது. இத்தோஷமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளைக் கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?
பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார். அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்தபிறகு இறைவனே எடுத்துக்கொள்வார். இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படிப் பழிவாங்கும்போது சொத்துக்காவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும், இரக்கமின்றி ஒரு உயிரைக் கொன்று விடுகின்றனர். ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விடுமா என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்தப் பாவம் சும்மாவிட்டு விடுமா என்ன? இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களைத் தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே பிரம்மஹத்தி தோஷம் என்பதாகும்.
ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் குருவுடன் இணைந்தாலோ, குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பது அர்த்தம்.
பிரம்மஹத்தி தோஷத்தினால் என்னென்ன துன்பங்கள் நேரும்?
இந்தத் தோஷத்தினால் காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை, கல்வித்தடை, சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய வருமானம் கிடைக்காத நிலை, கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்ளை ஏற்படுத்தும்.
பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விலக பரிகாரம்:
பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்றால் திருவிடைமருதூர் கோயிலில், பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோயிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக்கோயிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சொல்வது இக்கோயிலின் பரிகார முறையைத்தான். இதைத்தவிர வேறு சில எளிதான பரிகாரமுறைகளும் சொல்லப்படுகிறது.
கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க:
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்குத் தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த
பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அங்குச் சென்று செய்ய முடியாத ஏழைகளுக்கும் வழி இருக்கிறது. அமாவாசை தினத்தன்று மாலை 5 மணிக்கு சிவன் கோயிலுக்குச் சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவர வேண்டும்.
இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கினால், சிவபெருமான் அருள்பாலித்து பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார்.
எனவே அவரவர் வசதிக்கேற்ப பரிகாரம் செய்து வழிபாடு செய்தால், இந்த பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடலாம். குடும்பத்தில் எல்லோருக்கும் சுபிட்க்ஷம் உண்டாகும். வீட்டில் வறுமை அகன்றோடிவிடும்.
No comments:
Post a Comment