Saturday, 17 November 2018

சீதாஎலியா திருத்தலம் - இலங்கை

சீதாஎலியா திருத்தலம் - இலங்கை

ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், சீதை நீராடி தவமியற்றிய தலம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், தொல்லியல் சான்றுகள் நிறைந்த தலம், ராவணன் கோட்டைக்கு எதிரே அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.

தல வரலாறு :

தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இரண்டு இதிகாசங்கள், ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். இவை இரண்டும் உண்மையே என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள், இந்தியாவிலும், இலங்கையிலும் நிறைந்துள்ளன. அந்த வகையில்.. சீதையை சிறைபிடித்த ராவணன், அவளை காவலில் வைத்த இடமே, சீதாஎலியா என்ற தலம். இங்கு அமைந்துள்ள கோவிலே, சீதை அம்மன் திருக்கோவில் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

கைகேயின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, மன்னன் தசரதன் தந்த வரங்களின் படி, ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. ராமபிரானுடன் சீதையும் லட்சுமணனும் வனம் சென்றனர்.

ராமன் தண்டகாவனம் சென்று தங்கியபோது, ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு மயங்கினாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினாள். சீதை இருக்கும் வரை ஏக பத்தினி விரதனான ராமன் தன்னை மணம்புரிய மாட்டான் என்று எண்ணிய சூர்ப்பனகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயன்றாள். இதைக் கண்ட லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தான்.

ராவணன் அரசபைக்குச் சென்ற சூர்ப்பனகை, தனது அண்ணனிடம் புலம்பித் தீர்த்தாள். ‘அழகுமிக்க சீதையை உனக்காக கொண்டுவர முயன்று இந்த கதி ஏற்பட்டது’ என்று பொய் கூறினாள். சீதையின் பேரழகு, ராவணனின் கண்ணை மறைத்தது.

மாரீசன் என்ற தன் மாமனோடு, சீதை தங்கி யிருந்த பஞ்சவடிக்கு வந்தான். ராவணனுக்காகப் பொன் மான் வடிவம் எடுத்த மாரீசன், லட்சுமணனின் அம்பு பட்டு இறந்தான். என்றாலும், சந்நியாசி வடிவில் வந்த ராவணன், சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான்.

தன் அரண்மனையில் வைத்துப் பார்த்தால் சீதையின் கோபம் குறையும் என்று நினைத்த ராவணனின் எண்ணம் ஈடேறவில்லை. வேறு வழியின்றி அசோக வனத்தில் சிறை வைத்தான் என்கிறது இந்த ஆலயத்தின் புராணக் கதை.

சீதை சிறைவைக்கப்பட்ட தலமே, சீதாஎலியா என்ற ஊராக விளங்குகிறது. அவ்வூரில் தான் சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

ராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கலா, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா இன்றும் காணப்படுகிறது. இதேபோல, ராவணன் குகை, ராவண எல்லா எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. ராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.

சீதா எலியா ஆலயத்தின் எதிரே பிரமாண்ட மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் ராவணன் கோட்டையும், அரண் மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலையின் முன்பகுதியைப் பார்த்தால் அது அனுமனின் முகம் போல் காட்சி தருவது வியப்பாக உள்ளது.

ஆலய அமைப்பு :

இவ்வாலயம் கண்டி - நுவரெலியா நெடுஞ்சாலையை ஒட்டி, சீதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த இடமே சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும். சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளன. எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருள்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. பிரார்த்தனை செய்வோர் கட்டிய ஏராளமான துணி முடிச்சுகள் அதில் காணப்படுகின்றன.

ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடு கள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி, சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.

ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது.

கோவில் நிர்வாகம் தனியார் வசம் இருக்கிறது. இங்குள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து வந்து செல்பவர்களாக உள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ராமாயணத்தைக் கதையாகப் படித்து, படமாகப் பார்த்த நமக்கு, அசோக வனத்தையும், சீதை அம்மன் திருக்கோவிலையும் கண்டு வணங்கி, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் பார்த்து திரும்பும் போது, நம் மனதிற்குள்ளும் ராமாயண காலத்தில் வாழ்ந்த பிரமிப்பு ஏற்படும். அந்த மெய்சிலிர்ப்பை அங்கு செல்லும் எவராலும் தவிர்க்க இயலாது.

தேங்காய் எப்படி உடைபட வேண்டும்?:

வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியும் உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடிப் பார்க்க கூடாது. ஆனால் சிதறு காய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான் நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.

வாழ்வில் வசந்தம் உருவாக... 

சூரியனுடைய அருளைப் பெற விரும்புபவர்கள் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய வழிபாட்டைத் தினமும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கு ஏழு கைப்பிடி கொள்ளும் தானம் கொடுத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

அமைவிடம் :

இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், கண்டி- நுவரெலியா நெடுஞ்சாலையில் உள்ளது சீதாஎலியா என்ற ஊர். இந்த ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டியே சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. நுவரெலியா, இலங்கை நாட்டின் மலைவாசத் தலம் ஆகும். கண்டியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சீதா எலியா என்ற ஊர் அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment