Sunday 31 December 2017

காதல் கலப்புத் திருமணமும், தோஷ அமைப்புகளும் ?

Image result for hindu god marriage

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. பருவ வயது வந்தவுடன் இந்தக்கால அமைப்பின்படி ஒரு தொழில் அல்லது வேலையில் சேர்ந்தவுடன் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தையைப் பெற்றோர்கள் தொடங்குகிறார்கள். இதில் நல்ல ஜாதகம் பார்த்து நாள், நட்சத்திரம், முகூர்த்தம் வைத்து பெரியோர்கள் ஆசியுடன் நடக்கும் திருமணங்கள் ஒருவகை. 

ஆண், பெண் இருவரும் காதலித்து பெரியவர்கள் சம்மதத்துடன் நடக்கும் திருமணங்கள் ஒருவகை. இரண்டு குடும்பங்களின் சம்மதம் இல்லாமல் அவர்களே செய்துகொள்ளும் திருமணமும் உண்டு. பஞ்சாயத்து, போலீஸ், கோர்ட் என்று திசைமாறிய திருமணங்கள் உண்டு. இப்படி பலவகைகளில் அவரவர் கல்யாண வாழ்க்கையை கிரக சேர்க்கை அமைப்புகள் நடத்தி வைக்கின்றன என்றாலும் சமீபகாலமாக அதிக சதவிகிதத்தில் கல்யாணங்கள் பல இடையூறுகள், வழக்குகள், பிரச்னைகளில் சிக்கி நிம்மதி இழப்பது அதிகரித்துள்ளது. இதில் காதல், கலப்புத் திருமணங்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பருவம் வந்த அனைவருமே காதல் செய்வதில்லை.
காதல் செய்த அனைவருமே மணம் முடிப்பதில்லை.
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை.

இந்த ஆழமான அர்த்தமுள்ள வரிகள் இன்றைய இளம் நெஞ்சங்களின் இருபாலர்கள் இடத்திலும் கிரக நிலைகள் என்ற அமைப்பில் கோள்களின் கோலாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காதல், கலப்புத் திருமணங்கள் என்பது மிகவும் வினோதமானது. கண்டதும் காதல் அல்லது பல வருட காதல். மாணவ பருவத்திலேயே காதல். பணி செய்யும் இடங்களில் காதல். முதலாளி, தொழிலாளி இடையே காதல் என்று பலவகையாக காதல் உணர்வுகள் அமைகின்றன. அந்தஸ்தில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருக்கும் இருவர் காதல் மூலம் இணைகிறார்கள். இதில் ஜாதி, இன, மத, மொழி, கலாசாரம், ஏன் வயது வித்தியாசம்கூட காதல் திருமணம் செய்யும்போது அந்த பருவ உணர்ச்சியும், கோள்களின் நிலையும் எதையும் சிந்திக்க விடாமல் அவசர கோலத்திலேயே முடிவு எடுக்கச் செய்துவிடுகின்றன.

தாய், தந்தையர் தம் மகன், மகள் பற்றி பல மனக்கோட்டைகளை கட்டி வைத்திருப்பர். அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், பெரிய படிப்பு, வசதியான இடம் என்று ஏதோ பெரிய கற்பனையில் இருப்பார்கள். ஆனால், திடீரென்று ஒருநாள் பெற்றோரிடம் வந்து தாம் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் இளைஞர்கள் தெரிவிப்பார்கள். இன்னும் சிலர் பதிவுத் திருமணம் செய்துவிட்டு வந்து சொல்வார்கள், பெற்றோர்களின் கனவுகளை சிதைப்பார்கள். இதைத்தான் வினைப்பயன், கர்மா, கிரகாசாரம் என்று குறிப்பிடுகிறோம். காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அமைப்புகள், சார பரிவர்த்தனைகள் என்பனவற்றை ஜோதிட சாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது. சில கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. 

அதேநேரத்தில் காதல் திருமணம் செய்யும் அமைப்பு இருந்தும் அவர்கள் காதலில் ஈடுபடாமல் இருக்கலாம் அல்லது காதலிப்பது ஒருவரை, மணந்துகொள்வது வேறொருவரை என்றும் இருக்கலாம். நிறைவான மணவாழ்க்கைக்கு நம் நடத்தைதான் முக்கிய காரணம். இந்த நடத்தை என்ற குணத்தை தருவதில் கிரகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதேநேரத்தில் தாய், தந்தை வளர்ப்பு முறையும் உள்ளது. தற்காலத்திய சமூக சூழ்நிலைகள், ஆண், பெண் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும், பழகுவதும், ெதாலைத்தொடர்பு சாதனங்களின் விஞ்ஞான வளர்ச்சியும் பக்குவமற்ற நிலையும், இனக்கவர்ச்சியும் இதுபோன்ற காதல் விவகாரங்களில் சிக்குவதற்கு காரணமாக அமைகின்றது.

காதலிப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் வயதுதான் முக்கிய காரணம். அந்தக் காலகட்டத்தில் கிரக அமைப்புகள், தசா புக்திகள், கோச்சார நிலை போன்றவை பாதகமாக இருந்தால் காதல் வயப்பட வைக்கும், மனம் சிந்திக்கும் திறனை இழக்கும். தன்னுடைய கட்டுப்பாட்டை இழப்பார்கள். தாய், தந்தை, உடன் பிறந்தோர், சொந்த பந்தம் என்று எல்லாவற்றையும் துறந்து, துச்சமென தூக்கி எறிந்துவிட்டு காதல் திருமணம் செய்துகொள்வார்கள். ஜாதகக் கட்டத்தில் 12 வீடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. அந்த வகையில் 2, 7, 8 ஆகிய இடங்களும் சுக்கிரன், செவ்வாய், சந்திரன், புதன் போன்ற கிரக அமைப்புச் சேர்க்கையும் திருமண வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுகின்றன. இந்த விஷயத்தை நாம் ராசி சக்கரத்தில் மட்டும் பார்க்காமல் அம்சம் என்று சொல்லக்கூடிய நவாம்ச சக்கர அமைப்பையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். நவாம்ச அமைப்பில் நிறை, குறைகள் ஒருவரின் இல்லற வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்து விடுகின்றது.

காதல் கலப்பு திருமண அமைப்புகள் :

திருமண வாழ்க்கையில் குழப்பங்கள், சிக்கல்கள், மனமுறிவு, வழக்கு, விவாகரத்து போன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணம். இந்த விஷயத்தில் குரு இருக்கும் இடம், சனி பார்க்கும் இடம் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.

(1) எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் தனித்து இருப்பது.

(2) இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது, ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது.

(3) களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது இருப்பது.

(4) ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து, லக்னாதிபதி, சுக்கிரன் நீசம் அல்லது மறைவுஸ்தானத்தில் இருப்பது.

(5) ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் சேர்க்கப்பெற்று இருவரில் யாராவது கேது சாரம் பெறுவது.

(6) பன்னிரண்டாம் இடத்தில் குரு இருப்பது

(7) ஏழாம் இடத்தில் செவ்வாய், ராகு அல்லது கேதுவுடன் இருப்பது.

(8) லக்னத்திற்கு 6ம் அதிபதி 7ல் இருப்பது, 8ம் அதிபதி 7ல் இருப்பது.

(9) லக்னாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் இந்த மூவரும் ராசி அல்லது அம்சத்தில் சம்பந்தம் பெறுவது.

(10) லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சந்திரன், சனி சேர்க்கை, சம்பந்தம் பெறுவது, உடன் சுக்கிரன் சேருவது.

(11) லக்னத்திற்கு ஏழுக்குடையவன் நவாம்சத்தில் குருவின் வீட்டில் இருப்பது.

(12) சனி, சுக்கிரன், கேது ஆகியோர் ஏழாம் இடத்திற்கோ, ஏழாம் அதிபதிக்கோ சம்பந்தம் பெறுவது.

(13) ஏழாம் அதிபதி ஆறு, எட்டுக்குடையவருடன் சேர்க்கை பெறுவது.

(14) லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் நீச்ச கிரகம் இருப்பது.

(15) பொதுவாக 5ம் இடம், 5ம் அதிபதி, சந்திரன், புதன், ஆகியவை நல்ல நிலையில் இல்லாதிருப்பது, இவற்றிற்கு நீச்ச கிரக சேர்க்கை, பார்வை இருப்பது.

(16) சந்திரன் ஏழில் இருப்பது.

(17) களத்திரகாரகன் சுக்கிரன், ஆன்மகாரகன், சூரியன், மனோகாரகன் சந்திரன் ஆகிய மூவர் 2, 7, 8 ஆகிய இடங்களில் சம்பந்தம் பெற்றிருப்பது.

(18) பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4ல் சனி, சுக்கிரனுக்கு 4ல் ராகு, சுக்கிரனுக்கு 10ல் சனி என்ற அமைப்பு இருப்பது. 

(19) பெண் ஜாதகத்தில் 4, 7, 8, 12ல் செவ்வாய்கேது சேர்க்கை இருப்பது.

(20) பெண் ஜாதகத்தில் 4, 7, 8, 12ல் சுக்கிரன்செவ்வாய் சேர்க்கை.

(21) பெண் ஜாதகத்தில் செவ்வாய், கேதுவும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவும் சேர்ந்து இருந்தால் மனக்கசப்பு, இருதார யோகம்.

(22) நான்காம் இடம் என்பது சுகஸ்தானம், வசிப்பிடத்தைக் குறிக்கும். வயிற்றையும் குறிக்கும். இந்த வீட்டில் பெண் ஜாதகத்தில் நீச்ச கிரகங்கள் இருப்பது சரியல்ல. நான்காம் வீட்டை 6, 8, 12க்குடையவர்கள் பார்ப்பதும், சனி, தேய்பிறைச் சந்திரன் பார்ப்பதும் நடத்தை, சந்தேக குணத்தால் இல்லறம் கசக்கிறது.

(23) லக்னாதிபதி எந்தக் கிரகமாக இருந்தாலும் நீசம் அடையாமல் இருப்பது நல்லது. லக்னாதிபதி சனி அல்லது சுக்கிரன் வீட்டில் இருந்தாலும் அல்லது சார, பரிவர்த்தனை தொடர்பு இருந்தாலும் அந்த ஜாதகர், ஜாதகிக்கு சிற்றின்பத்தில் இச்சை அதிகம் இருக்கும்.

(24) ஆண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி, புதன் சேர்க்கை, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றால் விதவைக்கு வாழ்வு கொடுப்பான் அல்லது விதவைப் பெண்ணின் தொடர்பு ஏற்படும்.

(25) பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் முதுமை தோற்றம் கொண்ட கணவர் அமைவார். அல்லது இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வேண்டியிருக்கும்.

(26) லக்னத்திற்கு 12ம் இடமான அயன, சயன, போகஸ்தானத்தில் நீச்ச கிரகம் இருந்தாலும் தீய ஸ்தான கிரகங்கள் பார்த்தாலும் இல்லறம் இனிக்காது.

(27) பொதுவாக லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டை புத்திரஸ்தானம் என்று சொல்வார்கள். இது தவிர அந்த வீட்டிற்கு பல முக்கியமான காரக அம்சங்கள் உள்ளன. இந்த வீட்டில் தீய, நீச கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சனி 5ல் இருப்பது திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. 

குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி, குரு பார்த்த இடம் விருத்தி, சனி பார்த்த இடம் பாழ் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். சனி 5ம் வீட்டில் இருந்தபடி களத்திர ஸ்தானமான 7ம் வீட்டையும், தன, குடும்ப, வாக்குஸ்தானமான 2ம் வீட்டையும் பார்ப்பதால் திருமண உறவில் சிக்கல், வெறுப்பு, கசப்பு, நெறி தவறிய வாழ்க்கை, விவாகரத்து, ஜீவனாம்ச வழக்கு, தன் வாயாலே கெடுவது, அற்ப சிநேகிதம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு இந்த 5ம் வீட்டில் இருக்கும் சனி காரணமாகின்றது. மேலும் 2, 7 ஆகிய வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிறது. இந்த அமைப்பு பல்வேறு ஜாதகங்களில் மிகச்சரியாக ஒத்துப் போகிறது. ஆகையால் இந்த சனி பார்வை உள்ள ஜாதகங்கள் காதல் கலப்புத் திருமணத்தில் ஈடுபடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

சூட்சுமமான விஷயங்கள் :

நம் வாழ்க்கையில் நடைபெறுகின்ற சம்பவங்கள் எல்லாம் நம்முடைய முன்ஜென்ம கர்ம வினை காரணமாகவே நடைபெறுகின்றது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்த விஷயங்களை நமக்கு ஜோதிடக்கலை மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால், ஜோதிட சுவடிகள் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய பெரும்பாலான விஷய ஞானங்கள் நமக்கு கிடைக்கவில்லை. காரணம் நாம் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவித்தே தீரவேண்டும் என்பது தர்ம சாஸ்திர வழிமுறையாகும். இருந்தாலும் பெற்றோர் பார்த்து செய்கின்ற திருமணமாக இருந்தாலும், காதலித்து செய்துகொள்கின்ற திருமணமாக இருந்தாலும் வாழ்க்கை பிரச்னை என்பது ஒன்றுதான். இதில் கிரகங்கள் நம் மனதை மாற்றி ஆட்டுவிக்கின்றது என்பதில் ஐயமில்லை. 

பள்ளி பாடக்கணக்கில் விடை காணுவதற்கு பல சூத்திர முறைகள் உள்ளதுபோல், வாழ்க்கை பாடக்கணக்கில் வெற்றி பெறுவதற்கு ஜோதிட சாஸ்திரம் பல்வேறு சூத்திர முறைகளை நமக்கு தந்துள்ளது. அதை சரியான சாஸ்திர, அனுபவ ஞானம் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து பெரிய சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

ஆண், பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடமாகும். இந்த இடம் ஆயுள், மாங்கல்யம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை பற்றி அறிந்துகொள்ளும் இடமாகும். இந்த எட்டாம் இடத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ, அந்த நட்சத்திர அதிபதி எந்தக் கிரகமோ அந்த கிரகத்தினுடைய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்த்து விடுவது நல்லது. 

உதாரணமாக ஒருவர் கன்னி லக்னத்தில் பிறந்தால் அவருக்கு எட்டாம் அதிபதியாக செவ்வாய் அமைவார். இந்த செவ்வாய் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் இருப்பதாக எடுத்துக்கொண்டால், இந்த திருவாதிரை நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரமாகும். அதன்படி இந்த ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்ப்பது நன்மை தரும். இந்த விஷயம் பல்வேறு ஜோதிட சூத்திரங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பு அனுபவ பூர்வமாக பல்வேறு ஜாதகங்களில் பொருந்தி வருகின்றது.

கிரக தோஷ அனுபவ ஜாதகங்கள் :

ஜாதகம் (1): கன்னி லக்னம், ஏழில் தனித்த குரு, எட்டில் சந்திரன்கேது, பதினொன்றில் சனி. திருமண தோஷ அமைப்பு உள்ளதால் காதல் வலையில் சிக்கி, அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் புரிந்து பல துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதகம் (2): தனுசு லக்னம், எட்டாம் அதிபதி சந்திரன் ஏழில். ஏழுக்குடைய புதன் நீச்சம். மூன்றில் சனி இருந்து ஐந்தாம் வீட்டைப் பார்ப்பது  இந்த அமைப்பு வீட்டை விட்டுச்சென்று காதல் திருமணம் செய்ய வைத்தது.

ஜாதகம் (3): ரிஷப லக்னம். ஆறு, ஏழுக்குடைய சுக்கிரன், செவ்வாய் குடும்பஸ்தானத்தில் இரண்டாம் அதிபதி புதன்கேது சாரம் பெற்று கேதுவுடன் இணைந்து இருப்பது. மேலும் நவாம்சத்தில் சுக்கிரனுடன் கேது சம்பந்தம். இந்த அமைப்பால் காதலித்து, திருமணம் செய்து, விவாகரத்து ஆகிவிட்டது.

ஜாதகம் (4): மீன லக்னம் ஆறாம் அதிபதி சூரியன் ஏழில், ஏழாம் அதிபதி புதன் எட்டில். சனி பதினொன்றில் இருந்து ஐந்தாம் வீட்டைப் பார்ப்பது. மேலும் சில பாதக அமைப்புகளால் காதல் திருமணம் செய்து வழக்கில் பிரிந்து வாழ்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதைப்போன்ற பல்வேறு ஜாதகங்களை அனுபவ பூர்வமாக பார்க்கின்றபோது கிரக தோஷ அமைப்புகள் அதனதன் வேலையை செய்வது தெளிவாகத் தெரிகிறது. ஆகையால் பெற்றோர்கள் அதற்குரிய பருவ வயது காலகட்டத்தில் ஜாதக கட்ட அமைப்புகளை தெரிந்துகொண்டு அதற்குரிய கிரக சாந்தி பரிகாரங்களை செய்வதுடன் பிள்ளை களின் செயல்பாடுகள், நடைமுறைகளில் கவனம் செலுத்தி அவர்களின் நடவடிக்கைகளை தெரிந்து அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.app.tntemples&hl=en

No comments:

Post a Comment