ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.
‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.
பைரவர் தோற்றம் :
பைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.
அந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.
இதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
காளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.
அசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.
இதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.
இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
மூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
அகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.
பிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடத்தப்பெறுகிறது.
அமைவிடம் :
விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.
No comments:
Post a Comment