Monday, 17 December 2018

கரூர் தான்தோன்றிமலை பாதாள லட்சுமி நரசிம்மர்

கரூர் தான்தோன்றிமலை பாதாள லட்சுமி நரசிம்மர்

கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சின்ன திருப்பதி என அழைக்கப்படும் தான்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி திருக்கோவிலின் மிக அருகாமையில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. 

இந்த கோவிலின் முன்பு ஜல நரசிம்மர் ஆலயமும் இருக்கிறது. வெங்கடரமண சுவாமி கோவில் உருவான அதே கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் ஜல நரசிம்மர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. 

லட்சுமி நரசிம்மர் பாறையில் சுயம்புவாக காட்சி அளிக்கிறார். வாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணிக்குள் 5 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்த நேரம் குரு மற்றும் ராகுவுக்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீடு, வாசல் போன்ற அனைத்து தேவைகளையும் லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி தருகிறார். 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஒருவர் ரூ.17 லட்சம் பணத்தை மற்றொருவர் ஏமாற்றி விட்டதாக கூறி நெய் விளக்கேற்றி மனமுருகி வேண்டினார். அடுத்த சில நாட்களில் ஏமாற்றியவர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். இவ்வாறு எத்தனையோ அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

மேலும் நின்ற நிலையில் இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதியையும், உட்கார்ந்த நிலையில் இருக்கும் நாமக்கல் நரசிம்மரையும், ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் இருக்கும் பெருமாளையும் ஒரே நாளில் தரிசித்தால் சிறப்பு என்று சொல்வார்கள். இது சாத்தியமில்லை. ஆனால் இங்கு சின்னதிருப்பதி என அழைக்கப்படும் தான் தோன்றி வெங்கடரமண சுவாமி கோவிலில் பெருமாளை நின்ற நிலையிலும், அருகில் உள்ள பாதாள லட்சுமி நரசிம்மரை உட்கார்ந்த நிலையிலும், ஜல நாரசிம்மரை படுத்த நிலையிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வழிபடும் பாக்கியம் கிடைக்கிறது.

No comments:

Post a Comment