Friday 28 December 2018

வழிபட்டால்.... வாழ வைக்கும்.... வக்கிர காளியம்மன்

வழிபட்டால்.... வாழ வைக்கும்.... வக்கிர காளியம்மன்

“சந்திர சேகரனே அருளாயென்று தண்விசும்பில்
இந்திரனும்முதலா இமையத்தவள் தொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத்தான் இடம் வக்கரையே”

-திருஞானசம்பந்தர்

தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.

இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.

பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது. 

ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 

காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது. 
கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார். 

இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.

Friday 21 December 2018

பரசுராமரிடம் போர் தந்திரங்களைக் கற்ற துரோணர்

பரசுராமரிடம் போர் தந்திரங்களைக் கற்ற துரோணர்

தவ வலிமை மிகுந்த பரத்வாஜர்- கிருதசி தம்பதியரின் மகன் துரோணர். பரம ஏழையாக இருந்த துரோணரால் தன் மகன் அசுவத்தாமனுக்கு பசும்பால் கூட கொடுக்க முடியவில்லை. தன்னோடு குருகுலத்தில் பயின்ற சத்ரியனான துருபதனிடம் சென்று, நட்பின் அடிப்படையில் பசு ஒன்றை தரும்படி துரோணர் கேட்டார். ஆனால் துருபதன், அவரை அவமதித்து அனுப்பினான். 

இதையடுத்து துரோணர், பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். தன்னுடைய போர் முறையை சத்ரியர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று பரசுராமர் பெற்ற வாக்குறுதியை மறந்து, அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களும், கவுரவர்களுக்கும் குருவாக இருந்து போர் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார் துரோணர். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.

இவர் பாண்டவர்கள், கவுரவர்களின் குரு. கண்ணுக்குப் புலப்படாத போர் வீரர். குருஷேத்ர யுத்தத்தில் கவுரவர்களுக்காக போரிட்ட இவர் பாண்டவர் படையில் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தார். போரில் தன் மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலால் மனம் நொறுங்கிய துரோணர் ஆயுதங்களை வீசி எறிந்தார். அப்போது திரவுபதியின் சகோதரர் திருஷ்டத்துயும்னன், துரோணரை கொன்றான்.

Tuesday 18 December 2018

ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல். 

ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார். அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார். அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், “நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்“ என்றனர். அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும். அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார். “என்னோடிருப்பீர்களாக” என்று பக்தர் களுக்கு அருளை அளிக்கிறார்.

ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி. ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம். 
ஏகாதசி- என்றால் பதினொன்று நாள் என்று பொருள். ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் -5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்று படுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி. இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடை பெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும். மார்கழியில் வரும் வளர் பிறை ஏகாதசி தான் சிறப்பானது. இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.

பரமபதம்

வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.

வைகுண்ட ஏகாதசி அன்று படிக்க வேண்டிய ஸ்லோகம்

வைகுண்ட ஏகாதசியான இன்று படிக்க வேண்டிய ஸ்லோகம்

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.

ஓம் வாஜுஸூதேவம்
ஹ்ருஷீகேஸம் வாமனம்
ஜலஸாயினம் ஜனார்தனம் 
ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் 
கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் 
ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
அவ்யக்தம் ஸாஸ்வதம்
விஷ்ணும் அனந்த 
மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம்
கோவிந்தம் கீர்திபாஜனம்
கோவர்தனோத்தரம் தேவம்
பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம்
யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
சக்ரபாணிம் கதாபாணிம்
ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம்
துஷ்டதமனம் பூகர்பம்
பீதவாஸஸம் த்ரிவிக்ரமம்
த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம்
நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம்
ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம்
ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம்
மங்கலாயுதம்
தாமோதரம்
தமோபேதம் கேஸவம்
கேஸிஸ¨தனம் வரேண்யம்
வரதம் விஷ்ணுமானந்தம்
வஸூதேவஜம்
ஹிரண்யரேதஸம்
தீப்தம் புராணம்
புருஷோத்தமம் ஸகலம்
நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம்
குணஸாஸ்வதம்
ஹிரண்யதனுஸங்காஸம்
ஸூர்யாயுத
ஸமப்ரபம்மேகஸ்யாமம்
சதுர்பாஹம் குஸலம்
கமலேக்ஷணம்
ஜ்யோதீ ரூமரூபம் சஸ்வரூபம்
ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம்
ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம்
ஸர்வதோமுகம்
ஜ்ஞானம் கூடஸ்தமசலம்
ஜ்ஞானதம் பரமம்
ப்ரபும்யோகீஸம் யோக
நிஷ்ணாதம் யோகினம்
யோகரூபிணம்
ஈஸ்வரம் ஸர்வபூதானாம்
வந்தே பூதமயம் ப்ரபும்இதி
நாமஸதம் திவ்யம்
வைஷ்ணவம் கலுபாபஹம்
வ்யாஸேன கதிதம் பூர்வம்
ஸர்வபாப ப்ரணாஸனம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸ
பவேத் வைஷ்ணவோ நர:
ஸர்வ பாப விஸூத்தாத்மா:
விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
சாந்த்ராயண ஸஹஸ்ராணி
கன்யாதான ஸதானி ச
கவாம் லக்ஷஸஹஸ்ராணி
முக்திபாகீ பவேந்நர:
அஸ்வமேதாயுதம் புண்யம்
பலம் ப்ராப்னோதி மானவ: 
விஷ்ணு ஸதநாம
ஸ்தோத்திரம்.

Monday 17 December 2018

முத்தங்கி சேவையை விசேஷமாக சொல்வது ஏன்?

முத்தங்கி சேவையை விசேஷமாக சொல்வது ஏன்?

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து தெய்வீக லயத்தை எழுப்பும். ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருவார் பெருமாள்.

மார்கழி மாத ஏகாதசி ஆயிற்றே! எம்பெருமான் திருமேனி மீது பனி விழுமே! அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருகிறார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலித்த அரங்கன், சேனை முதலியார் சன்னதிக்கு வந்து நிற்கிறார். அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படுகிறது.

இதற்கு என்ன பொருள் தெரியுமா?

அரங்கன் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகிறது.

நாழி கேட்டால் வாசல், கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்கிறார். அங்கே யஜூர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்று மறையாகிறது.

அதைத் தொடர்ந்து மற்ற வேதங் களையும் சொல்கிறார்கள். வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருளிவிட்டார். இதோ, ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கிறது. பரமபத வாசலின் மணிகள் ஒலிக்கின் றன. கதவுகள் திறந்து கொள்கின்றன.ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கிறது. பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிக்கிறான்.

அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக வீற்றிருக்கிறான் அரங்கநாதன். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுகிறார்கள்.

அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறான் பெருமான். மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார். எப்போது யோக நித்திரையிலேயே காட்சி தருபவர், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார்.

வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!

வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும்.

கரூர் தான்தோன்றிமலை பாதாள லட்சுமி நரசிம்மர்

கரூர் தான்தோன்றிமலை பாதாள லட்சுமி நரசிம்மர்

கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சின்ன திருப்பதி என அழைக்கப்படும் தான்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி திருக்கோவிலின் மிக அருகாமையில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. 

இந்த கோவிலின் முன்பு ஜல நரசிம்மர் ஆலயமும் இருக்கிறது. வெங்கடரமண சுவாமி கோவில் உருவான அதே கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் ஜல நரசிம்மர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. 

லட்சுமி நரசிம்மர் பாறையில் சுயம்புவாக காட்சி அளிக்கிறார். வாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணிக்குள் 5 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்த நேரம் குரு மற்றும் ராகுவுக்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீடு, வாசல் போன்ற அனைத்து தேவைகளையும் லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி தருகிறார். 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஒருவர் ரூ.17 லட்சம் பணத்தை மற்றொருவர் ஏமாற்றி விட்டதாக கூறி நெய் விளக்கேற்றி மனமுருகி வேண்டினார். அடுத்த சில நாட்களில் ஏமாற்றியவர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். இவ்வாறு எத்தனையோ அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

மேலும் நின்ற நிலையில் இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதியையும், உட்கார்ந்த நிலையில் இருக்கும் நாமக்கல் நரசிம்மரையும், ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் இருக்கும் பெருமாளையும் ஒரே நாளில் தரிசித்தால் சிறப்பு என்று சொல்வார்கள். இது சாத்தியமில்லை. ஆனால் இங்கு சின்னதிருப்பதி என அழைக்கப்படும் தான் தோன்றி வெங்கடரமண சுவாமி கோவிலில் பெருமாளை நின்ற நிலையிலும், அருகில் உள்ள பாதாள லட்சுமி நரசிம்மரை உட்கார்ந்த நிலையிலும், ஜல நாரசிம்மரை படுத்த நிலையிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வழிபடும் பாக்கியம் கிடைக்கிறது.

மகத்துவம் நிறைந்த மார்கழி

மகத்துவம் நிறைந்த மார்கழி

‘மாதங்களில் நான் மார்கழி” என்று கூறினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. கடவுளே தம்முடையதாகப் பெருமிதப்படுகிற மாதம் இந்த மாதம்.

மிருகசீர்‌ஷ நட்சத்திரம் சந்திரனுடன் சேர்வதால் மார்கசீர்‌ஷம் என்றும் (மார்கசீர்‌ஷம் என்பதே மிருகசீர்‌ஷம் என்றழைக்கப்படுகிறது; இதுவே மார்கழி என்றும் சுருங்கிவிட்டது), சூரியன் தனுசு ராசியில் இணைவதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிற இம்மாதத்தில்தான் சிவபெருமானுக்கு உரித்தான ஆருத்ரா தரிசனப் பண்டிகையும் (திருவாதிரைத் திருநாள்) திருமாலுக்கு உரித்தான வைகுண்ட ஏகாதசியும் வருகின்றன. தவிரவும், குருசேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் வைகுண்ட ஏகாதசியன்றுதான் கீதோபதேசம் செய்தார். ஆகவே, இதே நாள், கீதா ஜயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.

மும்மூர்த்திகளின் ஒட்டுமொத்தமாகக் கருதப்படுகிற தத்தாத்ரேயர் அவதாரம் செய்த தத்தாத்ரேய ஜயந்தியும், பார்வதி தேவி அன்னபூரணியாகத் திருவதாரம் செய்த அன்னபூரணி ஜயந்தியும் இம்மாதத்திலேயே வருகின்றன. இந்த மாதத்தில்தான், ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்ததாக வடநாட்டவர்கள் நம்புகிறார்கள். துளசிதாசர் தம்முடைய ராம சரித மானசத்திலும் இப்படியே பாடுகிறார். ஆகவே, விவாக பஞ்சமியும் மார்கழி மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது.

இது ‘பீத மாதம்’! ‘பீத’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘மஞ்சள்’ என்று பொருள். பீதாம்பரம் (பீத + அம்பரம்) என்றால் மஞ்சள் வண்ண ஆடை என்றும் பொருள். மார்கழியில், அதுவரைக்கும் இருந்த இருளும் மழையும் விட்டுப்போய், குளிர் வந்துவிடும். இருந்தாலும், அடுத்து வரஇருக்கிற உத்தராயணத்தின் காரணமாக, செடிகொடிகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். குறிப்பாக, மஞ்சள் வண்ணப் பூக்களைத் தரும் தாவரங்கள் அதிகமாகப் பூக்கும். இதனால், சுற்றிலும் பார்க்கும்போது, மஞ்சள் வண்ணம் பிரதானமாகக் கண்ணில் படும். இதை வைத்துக் கொண்டு நம்முடைய முன்னோர்கள், இந்த மாதத்தைப் ‘பீத மாதம்’ என்று விவரித்தார்கள். இதுவே காலப்போக்கில் மருவி, ‘பீடை மாதம்’ என்றாகிவிட்டது.

அது சரி, அப்படியென்றால், கல்யாணம் போன்றவை மார்கழி மாதத்தில் வேண்டாமென்று ஏன் சொன்னார்கள்? அதற்கும் முக்கியமான காரணங்கள் உள்ளன. மழை, இருள் போன்ற அகன்று, அடுத்து வரஇருக்கும் தை மாதத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கவேண்டும்.

எந்தப் பணியாக இருந்தாலும் அதைத் தொடங்குவதற்கு முன்னர் கடவுளை வணங்குவது நம்முடைய மரபு. அதுவும் வயிற்றுக்குச் சோறிடும் அறுவடைப் பணிகளுக்கு முன்னதாக தெய்வத்தைத் தொழாதிருக்கலாமா? அது மட்டுமில்லை, அறுவடை முடிந்தால்தான் கையில் பணம் கிடைக்கும். அப்போதுதான் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றை நடத்தமுடியும். இன்னொரு சூட்சுமமும் உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்து வாழ்க்கை. ஒரு வீட்டில் கல்யாணம் என்றால், மொத்த கிராமமும் அதில் பங்கெடுக்கும்.

கிராமம் முழுக்கத் திருமண வீட்டில் குவிந்துவிட்டால், ஊர்ப் பொதுவையும் கோயில் வேலைகளையும் யார் கவனிப்பார்கள்? இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டனர் நம்முடைய பெரியவர்கள். சூழல், வருமானம், கோயில் காரியம் என்று எல்லாவற்றுக்கும் வசதியாக மார்கழி மாதத்தைக் கடவுள் வழிபாட்டு மாதமாக மாற்றிவிட்டனர். மொத்தம் பனிரெண்டு மாதங்களில், ஒரு மாதம் முழுமையும் ஆண்டவனுக்கு என்று அமைத்தனர்; இதனால், மீதமிருக்கும் பதினொரு மாதங்களும் சரியாக இருக்கும் என்பது மட்டுமில்லை, கடவுளுக்கான மாதத்தில் தனிப்பட்ட சுயநலங்களும் அவரவர் வீட்டு விசே‌ஷங்களும் இல்லாமல், வழிபாடுஆலயம்பொது நன்மை என்று மட்டுமே கவனமும் இருக்கும்.

மார்கழி மாதம் என்பது பிரம்ம முகூர்த்த மாதமும் ஆகும். அதென்ன பிரம்ம முகூர்த்தம்? ஒவ்வொரு நாளும், சூர்யோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்த காலமாகும். இந்த நேரத்தில் எந்தச் செயலைச் செய்வதற்கும் ‘நல்ல காலம்’ பார்க்கவேண்டியதில்லை.

மார்கழி எப்படி பிரம்ம முகூர்த்த காலமாகும்? நம்முடைய (அதாவது மனிதர்களுடைய) ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள், அவர்களுக்குப் பகல் பொழுது; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சணாயண ஆறு மாதங்கள், அவர்களுக்கு இரவுப் பொழுது. இந்தக் கணக்குப்படி, தேவ பகல் தொடங்குவதற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்தச் சுப வேளையில், தேவர்களும் முனிவர்களும்கூட, இறைவனை வழிபடுகிறார்கள்.

ஆயர்பாடியின் பெண்கள், கிருஷ்ணனே தங்களுக்கு மணாளனாகக் கிடைக்கவேண்டும் என்பதற்காகக் காத்யாயனி தேவியை வழிபட்டு நோன்பு நோற்றார்கள்; இந்தக் காத்யாயனி நோன்பை மார்கழியில்தான் நோற்றார்களாம். பழந்தமிழ் நூலான பரிபாடல், மார்கழி மாதத்தில் கன்னியர்கள், அம்பா ஆடல் ஆடினர் என்கிறது. காத்யாயனி நோன்பையும் அம்பா ஆடலையும் அடிப்படையாகக் கொண்ட ஆண்டாள் நாச்சியாரும் மாணிக்கவாசகப் பெருமானும், திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிக் கொடுத்தனர்.

பரிபாடல், இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது. மார்கழியில், அந்தணர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள் என்பதே அந்தச் செய்தி. அறுவடைக்குப் பின்னர், வயல்வெளிகளில் வேலைகள் கூடும்; சமுதாய வாழ்க்கை முழு வேகமெடுக்கும். வேதங்களும் துதிகளும் ஓதக்கூடிய அந்தணர்கள், இப்படிப்பட்ட முழு வேகச் சமுதாய வாழ்க்கை நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், ஆண்டு முழுவதும் முறையாக அமையவேண்டும் என்பதற்காகவும் மார்கழியில் பிரார்த்தனை செய்தார்கள்.

மார்கழி மாதப் பண்டிகைகளில் வெகு சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு மோட்சதா (மோட்சம் தருவது) ஏகாதசி, முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலையில், திருமால் திருக்கோயில்களில், வைகுண்ட வாசல் திறப்பு வெகு கோலாகலமாக நடைபெறும்.

திருமால் ஆலயங்களில், உள் பிராகாரத்திலிருந்து வெளிப் பிராகாரத்திற்குத் திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால், வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருள்வார். இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருப்பார்கள். பக்தர்களில் சிலர், பெருமாள் எழுந்தருளும்போது, தாங்களும் கூடவே இந்த வாசல் வழியாக வருவார்கள். இன்னும் சிலர், நாள் முழுவதும் வைகுண்ட வாசல் வழியாக வந்து, ஏற்கெனவே இவ்வாசல் வழியாக எழுந்தருளி, மண்டபத்திலோ அலங்கார மேடையிலோ கொலுவிருக்கும் பெருமாளைச் சேவிப்பார்கள்.

ஆண்டு முழுவதும் திறக்காமல், அன்று மட்டும் திறக்கிற வைகுண்ட வாசலுக்கு என்ன தனிச் சிறப்பு?

ஒருமுறை. பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவைத் தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார்.

அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர்; அவரின் கர்வமும் அடங்கியது. நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர். இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார். 

போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள். தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோயில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேணும்’ என்று வேண்டினர்.

இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. பரமபதமான வைகுண்டப் பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன.

ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரைத் திருவிழாவும் மார்கழியின் சிறப்புகளில் ஒன்று. சிவபெருமானின் நட்சத்திரம் என்று பெருமை பெறுகிற திருவாதிரையில், நடராஜப் பெருமானின் நடனக் காட்சியைக் காண்பதே ஆருத்ரா தரிசனமாகும். சிவன் கோவில்களில், இந்த நாளில் ஏக கொண்டாட்டம்.

27 நட்சத்திரங்களில், இரண்டுக்கு மட்டுமே ‘திரு’ என்னும் அடைமொழி உண்டு திருமாலின் நட்சத்திரமான திருவோணம் (திரு+ஓணம்); சிவனின் நட்சத்திரமான திருவாதிரை(திரு+ ஆதிரை). ஆருத்ரா என்றால் நீருடைய, நீர்த்தன்மை மிக்க, ஈரமான என்று பொருள் சொல்லலாம். ஆ+திரை என்றால் நீர்த்துளி என்றே பொருள்.

கடவுள் கருணையின் ஈரம் கொண்டவர் என்பதே இதன் உட்பொருள். ஓரியன் விண்கூட்டத்தில், பெட்டல்ஜூஸ், ஆல்ஃபா ஓரியானிஸ் என்னும் விஞ்ஞானப் பெயர்களோடு காணப்படுகிற ஆதிரை நட்சத்திரம், சூரியனைப் போல் 30 மடங்கு அளவில் பெரியது; செந்நிறம் கொண்டது. உலக நாகரிகங்கள் அனைத்திலும் இந்த நட்சத்திரம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. அராபியர்களுக்கு பைத்அல்ஜைஸா, சீனர்களுக்கு ஷீன் ஸியுக்ஸி, மத்திய அமெரிக்கர்களுக்குச் சக் டுலிக்ஸ் என்று இதன் பெருமைகள் அபாரம். அமெரிக்காவின் பழங்குடியினர் இதனை அனவரூ (ஆதாரத்தம்பம்) என்று அழைக்கிறார்கள். பண்டைய ரோமாரியர்களைப் பொறுத்தவரை, இறப்புக்கும் மறுபிறவிக்குமான நட்சத்திரம் இது.

ஆதிரை நட்சத்திரம் மட்டுமல்ல, ஆதிரையானான சிவனாரும் செந்நிறத்தவர்தாம்! செம்பொற் சோதி என்றே இவர் போற்றப்படுகிறார். மார்கழி மாத முழு நிலா, மிருக சீர்‌ஷம் மற்றும் அதன் அடுத்த நட்சத்திரமான திருவாதிரை ஆகியவற்றோடு சேரும். இந்த நாளில், வியாக்ரபாத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் நடனக் காட்சி நல்கினார் சிவபெருமான். ஆகவேதான், இந்த நாளில் இறைவனுடைய நடராஜத் திருக்கோலத்தை தரிசிக்கிறோம்.

ஏராளமான சிறப்புகளோடும் கடவுள்தன்மையோடு துலங்குகிற மாதமே, மாதங்களில் தலையாயதான மார்கழி.

மார்கழி மாதத்தைச் சிலர், ‘பீடை மாதம்’ என்று புறந்தள்ளுகின்றனர். கல்யாணம், புதுவீடு புகுதல் போன்ற சுப நிகழ்வுகளை இம்மாதத்தில் நிகழ்த்துவதில்லை என்பதையும் சேர்த்துக்கொண்டு, பீடை மாதம் என்பதற்கு இன்னும் சிலர் ஆதரவு தேடுகின்றனர். பேச்சு வழக்கில், சொற்கள் சில சிதைந்துபோகும். பேச்சு வழக்கின் வேகம் காரணமாகப் ‘பீடை மாதம்’ என்னும் தவறான பிரயோகம் வந்துவிட்டது.

Thursday 6 December 2018

அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்..

அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்..

அழகு மலர்களும் அன்பான விலங்குகளும் சூழ்ந்த அந்த அடர் வனத்தில் நெடுங்காலமாக ஆன்மிக தவம் புரிந்து ஞானியான துறவி ஒருவர் இருந்தார். அவரைக் காண மக்கள் விரும்பினாலும் முற்றும் துறந்தவரான அவர் ஊர் வாழ்க்கையை விரும்பாததால் யாரையும் காண விரும்பாமல் சிந்தனை முழுவதும் சிவனே என்று வாழ்ந்து வந்தார். ஆனாலும் அவரின் தவவலிமையால் அவரின் புகழ் எப்படியோ மக்களிடம் பரவியது. அவரின் பெயரே ‘வனத்துறவி’ என்றாயிற்று.

வனத்தின் அருகில் இருந்த ஊரில் வசித்து வந்த ஆனந்தன் என்ற இளைஞன், இறை சிந்தனை மிகுந்து துறவியாகும் ஆர்வத்தில் இருந்தான். வனத் துறவியைப் பற்றி கேள்விப்பட்டு அவரையே தன் குருவாக ஏற்க விருப்பம் கொண்டான்.

வனத்திற்குச் சென்று துறவியுடன் தங்கினான். அவர் பாராமுகம் காட்டினாலும், அவருக்குத் தேவையான சேவைகளை செய்து அவரின் மனதில் இடம் பிடித்தான். இருவரும் குருவும் சீடனுமாக நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆன்மிக வாயிலாக குருவுடன் ஒத்துப் போன இளைஞனால், தான் பிறந்த இனத்தின் மீது கர்வம் கொண்டிருந்த துறவியையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதையும் அவனால் ஏற்க முடியவில்லை.

எப்படியாவது தனது குருவின் உயர்வு, தாழ்வு எண்ணத்தை, அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்கான நாளும் நெருங்கியது.

ஒரு முறை துறவிக்கு திருவண்ணாமலை ஈசனை வணங்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இதற்காக துறவியும், இளைஞனும் காட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டனர்.

வழியில் பிறரிடம் பிச்சை கேட்டு வாங்கி உணவருந்தினர். அப்போதும் கூட உயர்வானவர்களைப் பார்த்தே பிச்சை வாங்கி உண்டார் துறவி. அதைக் கண்டு இளைஞன் வருந்தினான்.

ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரிந்தது. எந்த திசையில் செல்வது என்று இருவருக்குமே தெரியவில்லை. தோராயமாக ஒரு பாதையைத் தேர்வு செய்து சென்றனர். ஆனால் அது ஆள் நடமாட்டம் இல்லாத பாதையாக இருந்தது. வன விலங்குகளின் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் பசி, களைப்பு ஏற்பட்டது. உணவருந்த ஏதாவது கிடைக்குமா? என்று ஏங்கினர். களைப்பு மிகுதியில் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி உட்கார்ந்தனர்.

அப்போது அங்கு விலங்குகளை வேட்டையாட வந்த வேடன், இருவரையும் பார்த்து, ‘இந்த அடர்ந்த காட்டில் எப்படி வந்து சிக்கினீர்கள்?’ என்று கேட்டான்.

விவரம் அறிந்து கொண்ட வேடம், துறவியையும், இளைஞனையும் தன்னுடைய குடிலுக்கு அழைத்துச் சென்றான். இளைஞன் உற்சாகமாகச் சென்றாலும், துறவி வேண்டா வெறுப்பாகத் தான் உடன் சென்றார். ஏனெனில் வேடன் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவனாயிற்றே.

பசி மயக்கத்தில் இருந்த துறவிக்கும், இளைஞனுக்கும் வேடனின் மனைவி சூடான உணவை பரிமாறினாள்.

நன்றி உணர்வுடன் ஆனந்தன் அந்த உணவை ரசித்து ருசித்துக் கொண்டிருக்க, துறவியும் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக உணவை உண்டார். பசி தீர்ந்ததும், சரியான பாதையில் அவர்கள் இருவரையும் வேடன் அனுப்பி வைத்தான்.

செல்லும் வழியில் “என்ன ஆனந்தா பசி தீர்ந்ததா?” என்று கேட்டார் குரு.

“ஆம் குருவே! அற்புதமான ருசியுடன் அருமையான வெல்லம் போன்ற உணவு” பதிலளித்தான் சீடன்.

“என்னவோ போ.. பசியில உனக்கு ருசி கூட தெரியல.. வேட்டையாடிய உணவைக் கொண்டு சமைத்ததோ என்னவோ, சாக்கடை மண்ணு மாதிரி அவ்வளவு துர்நாற்றம்” முகம் சுளித்தபடி கூறினார் துறவி.

பசிக்கு உணவிட்டவர்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், இழிவாக பேசாமல் இருக்க துறவிக்கு தெரியவில்லையே என்று இளைஞன் வருந்தினான்.

துறவி மீண்டும் தொடர்ந்தார். “சரி.. நீ சாப்பிட்ட உணவை வெளியேற்று. அது வெல்லமாக வருகிறதா? விவகாரமாக வருகிறதா? என்று பார்ப்போம்” என்றார்.

குருவின் கட்டளையை மீறாத சீடனாய் ஆனந்தனும் மூச்சை இழுத்துப்பிடித்து உண்ட உணவின் சிறு பகுதியை வெளியேற்றினான். அதிர்ந்து போனார் துறவி. காரணம் வெல்லம் கலந்த பாயசமாக வந்தது உணவு.

“பார்த்தீர்களா குருவே! நான் சொன்னது சரியானது” என்ற இளைஞன் “நீங்கள் சாப்பிட்டதும் இதே உணவுதானே, உங்களுக்கு மட்டும் எப்படி அது மண்ணாகும்” என்றான்.

எதிர்பாராத விதமாக வாந்தி எடுத்த துறவியின் வாயில் இருந்து சாக்கடை நாற்றத்துடன் உணவு வந்து விழுந்தது. அது அந்த இடத்தையே அசுத்தமாக்கியது.

அதைப் பார்த்த இளைஞன், “குருவே! தங்களின் மனதில் இருந்த அகங்காரமே இப்படி சாக்கடையாக நாற்றம் அடிக்கிறது. வேடனை பசியைத் தீர்க்க வந்த சகமனிதனாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் நீங்களோ அவனை தீண்டத்தகாத மனிதனாகத்தான் நினைத்தீர்கள். இனியாவது உங்கள் மனதிலிருக்கும் அகங்காரத்தை ஒழித்து மகானாக மாறவேண்டும்” என்றான்.

குரு தன் தவறை உணர்ந்து வருந்தினார்.

Monday 3 December 2018

ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகள்

ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகள்

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். 

கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்

3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது

6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது

9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்

10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்

11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்

13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்

18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்

19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்

21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்

22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

Saturday 1 December 2018

சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்

சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்

ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.

‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.

பைரவர் தோற்றம் :

பைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.

அந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.

இதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

காளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.

அசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.

இதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.

இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

மூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

அகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

பிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடத்தப்பெறுகிறது.

அமைவிடம் :

விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.

Friday 30 November 2018

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

* விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
* விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.
* விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
* விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
* விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
* விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
* வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது

Wednesday 28 November 2018

விபத்து, எதிரிகள் தொல்லை நீங்க துர்கா கவசம்

விபத்து, எதிரிகள் தொல்லை நீங்க துர்கா கவசம்

விபத்து, எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்

2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்

3. உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ

4. ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா

5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ

6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ

7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

Monday 26 November 2018

காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் - திருநெல்வேலி

காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் - திருநெல்வேலி

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘ஆனந்த வனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை ஈசன் கூறியுள்ளார். பண்டைய காலங்களில் கல்விக் கூடங்கள் பல அமைத்து, கல்வியிற் சிறந்த நகரமாக காசி விளங்கி இருக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை நகரை அடுத்துள்ள சேர்ந்தமரம் என்னும் ஊருக்கு மேற்கே, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் திருமலாபுரம். இவ்வூரில் புராண காலத்தோடு தொடர்புடைய நீண்ட நெடிய கிழக்கு நோக்கிய மலைத்தொடர் ஒன்று உள்ளது. இந்த மலை புராண காலத்தில் ‘வாரணாசி’ மலை என்றும், ‘வருணாச்சி மலை’ என்றும், இப்பகுதியில் அமைந்திருந்த ஊர் ‘வாரணாசிபுரம்’ என்றும், ‘வருணாச்சிபுரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மலைத்தொடர் ‘சர்வேஸ்வரன் மலை’ எனவும், இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் பெயர் ‘பசுபதேஸ்வரர்’ எனவும் வழங்கப்படுகிறது. சிவபெருமானின் வழித்தோன்றல்களான பாண்டிய வம்ச மன்னர்கள், தங்கள் நாயகனின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு சர்வேஸ்வரன் மலைத்தொடரின் இருபுறமும் இரு குடவரைக் கோவில்களை உருவாக்கினர். கிழக்கு - மேற்காக நீண்டிருக்கும் சர்வேஸ்வரன் மலைத் தொடரின் வடக்குப் பகுதியிலுள்ள குடவரைக் கோவில் முழுமை பெற்றுள்ளது. தென்பகுதியில் உள்ள குடவரை முழுமை பெறவில்லை.

வடக்குப் பகுதியில், வடக்குப் பார்த்து அமைந்த முழுமைப்பெற்ற குடவரைக் கோவில், கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுமார் 19 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட செவ்வக வடிவ அர்த்த மண்டபம் உள்ள இக்குடவரையில், கருவறை எட்டு சதுர அடியில் அமைந்துள்ளது. காசியிலுள்ள கருவறை போன்றே சிவலிங்கத்தை வலம் வந்து அர்ச்சகர் பூஜைசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்குள் ஏறிச் செல்வதற்கு மேற்குப் பகுதியில் இருந்தும், கிழக்குப் பகுதியில் இருந்தும் பாறைக் கற்களால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் குடவரையின் உள்ளே புகாவண்ணம் குடவரையின் மேலே, பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது.

குடவரையில் மூன்று நுழைவு வாசல்கள் உள்ளன. நுழைவு வாசலில் காணப்படும் தூண்களின் மீது அழகிய பூ வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசல்களுக்கு நேரே உள்ளே முன்மண்டபத்தில் நடராஜர், பெருமாள், விநாயகர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதிலுள்ள சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பூதங்கள் நிற்கின்றன. வலப்புற பூதத்தின் உடல் பெரு மளவு சிதைந்துள்ளது. கால்கள் மட்டும் எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனை ஓலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடது தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக்கருவியை வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது.

குடவரை கோவில் அமைந்த மலை

தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.

நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.

காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.

சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். திருக்கார்த்திகை தினமான இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலையில் உலக நலன், உலக ஒற்றுமை, உலக நல்வாழ்வு, உலக ஆரோக்கியம் கருதி ‘மகா ருத்ர யாகம்’ நடைபெறுகிறது.

பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பனை) ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது இக்குடவரைக் கோவில். சாலையில் இருந்து கோவில் வரை செல்லும் மண்பாதையின் இருபுறமும் தல விருட்சமான பனை மரம் அணிவகுத்து நிற்பது கொள்ளை அழகு!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!

அமைவிடம்

சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.

Saturday 24 November 2018

கார்த்திகை தீப தகவல்கள் 30

கார்த்திகை தீப தகவல்கள் 30

1. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, “தீப மங்கள ஜோதி நமோ, நம” என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.

7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (25-ந்தேதி) அண்ணாமலையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் கிரிவலம் வர உள்ளனர்.

8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

9. திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.

10. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு, சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.

11. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

12. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

13. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.

14. கார்த்திகை  மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

15. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.

16. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.

17. இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

18. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.

19. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.

20. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.

21. தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

22. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை வந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

23. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

24. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

25. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

26. திருவண்ணாமலை தீபத்தை காண கடந்த ஆண்டு சுமார் 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

28. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? “இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்”- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

29. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

30. தீப திருவிழாவுக்காக இந்த ஆண்டு (2018) சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதலே சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Thursday 22 November 2018

சூரியன் தோஷம் விலக எளிய பரிகாரங்கள்

சூரியன் தோஷம் விலக எளிய பரிகாரங்கள்

சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். 

உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். 

சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

சூரியதோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி? 

சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். 

தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். 

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய் தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். 

பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். 

சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். 

முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு 

சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. 

தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். 

ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.

தாலி பாக்கியம் தரும் அருணாசலேஸ்வரர் ஆலயம் - திருச்சி

தாலி பாக்கியம் தரும் அருணாசலேஸ்வரர் ஆலயம் - திருச்சி

அம்மனின் பெயரைக்கேட்டதும் திருவண்ணாமலை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் அதே பெயரோடு அம்பிகை அருள்வது திருச்சி ஜே.கே நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில். ஆம்! இறைவன் பெயரும் அதேதான். அருணாசலேஸ்வரர்.

ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நூறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. வலதுபுறம் கால பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற பாதிப்பில் இருந்து பூரணமாக விடுபடலாம் என்பது நம்பிக்கை.

சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மகாமண்டபத் தூண்களை ரசித்தபடி நடந்தால் நந்தியை தரிசித்து, அர்த்த மண்டப நுழைவுவாசலில் உள்ள கம்பீரமான துவாரபாலகர்களின் அனுமதிபெற்று, கருவறையில் இறைவன் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனி முன்சென்று நிற்கலாம். கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இறைவன் முன் நின்று கரங்குவிக்கும் போது மனம் பூராவும் வெற்றிடமாகி, மெல்லிய மலர்களால் வருடப்படும் உணர்வு தோன்றுகிறது.

சிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்கு கால ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம் அனைத்து சோமவார நாட்களில் இறைவனுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாடும் சிறப்பாக நடக்கிறது.

இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்தால் பித்ருதோஷம் நீங்கும் என்றும், ஜாதகக் கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டேசர் சன்னிதியும் உள்ளது.

அன்னை உண்ணாமுலை அம்மன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். புன்சிரிப்பு மலர காட்சி தரும் அன்னையின் அருள் முகம் நம்மை வசீகரிப்பது நிஜம்.

மாங்கல்யம் நிலைத்துத் தழைக்க வேண்டும் என்றும், கணவன் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் என்றும் விரும்பாத பெண் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட பெண்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறாள் அன்னை.

பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தை வெள்ளிக்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் தாலி பாக்கியம் நீடிக்கும் என்றும், நோயுற்றவர்கள் விரைந்து குணமாவார் என்றும், தோஷங்கள் விலகும் என்றும் நம்புவதால் அன்றைய தினம் அன்னையின் சன்னிதியில் பெண்கள் கூட்டம் நிறைந்திருக்கும். தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவிக்கு புடவை சாத்தி, நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலையை இறைவிக்கு சாத்தினால், திருமணம் விரைந்து நடந்தேறும் என்கின்றனர்.

இறைவியின் தேவகோட்டத்தில் இச்சா, கிரியா, ஞான சக்தியரும், எதிரே சண்டிகேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர்.

ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

இறைவன், இறைவியை சேர்ந்தே வலம் வரும் வகையில் உட்பிரகாரம் அமைந்துள்ளது. நிருதி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, நால்வர், நவக்கிரக நாயகர்கள் இங்கே அருள் பாலிக்கின்றனர்.

இறைவியின் சன்னிதியை அடுத்து ஜெயம் கொண்ட விநாயகரின் சன்னிதி உள்ளது. ஆனை முகன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க, கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். அடுத்துள்ளது பாலமுருகனின் சன்னிதி. சஷ்டியின் போது ஆறு நாட்களும் முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெறும். மாத சஷ்டி மற்றும் தைப்பூசத்தின்போது முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ரிஷபங்களின் சுதையாலான திருவடிவங்களுடன் ஆலயத்தைச் சுற்றியுள்ள மதிற்சுவர் அழகுற காட்சியளிக்கிறது.

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம், வில்வம்.

பக்தர்களின் நலம் காக்கும் அருணாசலேஸ்வரரையும், மகளிர் துயர் காக்கும் உண்ணாமுலை அம்மனையும் ஒரு முறை தரிசித்து நன்மை பெறலாமே!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஜே.கேக நகரில் உள்ளது இந்த அருணாசலேஸ்வரர் ஆலயம்.

Tuesday 20 November 2018

16 வகை தீபங்கள்

16 வகை தீபங்கள்

தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு.

தீபத்திற்கான எண்ணெய்

எக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தாலம். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. 

இல்லத்தில் இறை வனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.

Saturday 17 November 2018

சீதாஎலியா திருத்தலம் - இலங்கை

சீதாஎலியா திருத்தலம் - இலங்கை

ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், சீதை நீராடி தவமியற்றிய தலம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், தொல்லியல் சான்றுகள் நிறைந்த தலம், ராவணன் கோட்டைக்கு எதிரே அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.

தல வரலாறு :

தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இரண்டு இதிகாசங்கள், ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். இவை இரண்டும் உண்மையே என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள், இந்தியாவிலும், இலங்கையிலும் நிறைந்துள்ளன. அந்த வகையில்.. சீதையை சிறைபிடித்த ராவணன், அவளை காவலில் வைத்த இடமே, சீதாஎலியா என்ற தலம். இங்கு அமைந்துள்ள கோவிலே, சீதை அம்மன் திருக்கோவில் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

கைகேயின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, மன்னன் தசரதன் தந்த வரங்களின் படி, ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. ராமபிரானுடன் சீதையும் லட்சுமணனும் வனம் சென்றனர்.

ராமன் தண்டகாவனம் சென்று தங்கியபோது, ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு மயங்கினாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினாள். சீதை இருக்கும் வரை ஏக பத்தினி விரதனான ராமன் தன்னை மணம்புரிய மாட்டான் என்று எண்ணிய சூர்ப்பனகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயன்றாள். இதைக் கண்ட லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தான்.

ராவணன் அரசபைக்குச் சென்ற சூர்ப்பனகை, தனது அண்ணனிடம் புலம்பித் தீர்த்தாள். ‘அழகுமிக்க சீதையை உனக்காக கொண்டுவர முயன்று இந்த கதி ஏற்பட்டது’ என்று பொய் கூறினாள். சீதையின் பேரழகு, ராவணனின் கண்ணை மறைத்தது.

மாரீசன் என்ற தன் மாமனோடு, சீதை தங்கி யிருந்த பஞ்சவடிக்கு வந்தான். ராவணனுக்காகப் பொன் மான் வடிவம் எடுத்த மாரீசன், லட்சுமணனின் அம்பு பட்டு இறந்தான். என்றாலும், சந்நியாசி வடிவில் வந்த ராவணன், சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான்.

தன் அரண்மனையில் வைத்துப் பார்த்தால் சீதையின் கோபம் குறையும் என்று நினைத்த ராவணனின் எண்ணம் ஈடேறவில்லை. வேறு வழியின்றி அசோக வனத்தில் சிறை வைத்தான் என்கிறது இந்த ஆலயத்தின் புராணக் கதை.

சீதை சிறைவைக்கப்பட்ட தலமே, சீதாஎலியா என்ற ஊராக விளங்குகிறது. அவ்வூரில் தான் சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

ராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கலா, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா இன்றும் காணப்படுகிறது. இதேபோல, ராவணன் குகை, ராவண எல்லா எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. ராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.

சீதா எலியா ஆலயத்தின் எதிரே பிரமாண்ட மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் ராவணன் கோட்டையும், அரண் மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலையின் முன்பகுதியைப் பார்த்தால் அது அனுமனின் முகம் போல் காட்சி தருவது வியப்பாக உள்ளது.

ஆலய அமைப்பு :

இவ்வாலயம் கண்டி - நுவரெலியா நெடுஞ்சாலையை ஒட்டி, சீதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த இடமே சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும். சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளன. எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருள்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. பிரார்த்தனை செய்வோர் கட்டிய ஏராளமான துணி முடிச்சுகள் அதில் காணப்படுகின்றன.

ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடு கள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி, சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.

ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது.

கோவில் நிர்வாகம் தனியார் வசம் இருக்கிறது. இங்குள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து வந்து செல்பவர்களாக உள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ராமாயணத்தைக் கதையாகப் படித்து, படமாகப் பார்த்த நமக்கு, அசோக வனத்தையும், சீதை அம்மன் திருக்கோவிலையும் கண்டு வணங்கி, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் பார்த்து திரும்பும் போது, நம் மனதிற்குள்ளும் ராமாயண காலத்தில் வாழ்ந்த பிரமிப்பு ஏற்படும். அந்த மெய்சிலிர்ப்பை அங்கு செல்லும் எவராலும் தவிர்க்க இயலாது.

தேங்காய் எப்படி உடைபட வேண்டும்?:

வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியும் உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடிப் பார்க்க கூடாது. ஆனால் சிதறு காய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான் நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.

வாழ்வில் வசந்தம் உருவாக... 

சூரியனுடைய அருளைப் பெற விரும்புபவர்கள் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய வழிபாட்டைத் தினமும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கு ஏழு கைப்பிடி கொள்ளும் தானம் கொடுத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

அமைவிடம் :

இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், கண்டி- நுவரெலியா நெடுஞ்சாலையில் உள்ளது சீதாஎலியா என்ற ஊர். இந்த ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டியே சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. நுவரெலியா, இலங்கை நாட்டின் மலைவாசத் தலம் ஆகும். கண்டியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சீதா எலியா என்ற ஊர் அமைந்திருக்கிறது.

Thursday 15 November 2018

திருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்

திருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்

திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த வலம் 7 என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் இதன் பொருள்...

முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும்.

ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

உலகில் ஏழாக அமைந்தவை

உலகில் ஏழாக அமைந்தவை

இந்த உலகத்தில் சில செயல்களும், வழிபடும் தெய்வங்களும், சில நிகழ்வுகளும் என இப்படி பலவும் 7 என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

கன்னியர்கள் :

பிராம்மி
மகேஸ்வரி
கவுமாரி
வைஷ்ணவி
வராகி
இந்திராணி
சாமுண்டி

ரிஷிகள் :

அகத்தியர்
காசியபர்
அத்ரி
பரத்வாஜர்
வியாசர்
கவுதமர்
வசிஷ்டர்

சிரஞ்சீவிகள் :

அனுமன்
விபீஷணர்
மகாபலி சக்கரவர்த்தி
மார்க்கண்டேயர்
வியாசர்
பரசுராமர்
அசுவத்தாமன்

கொடிய பாவங்கள் :

ஆணவம்
சினம்
பொறாமை
காமம்
பெருந்தீனி
சோம்பல்
பேராசை

மலைகள் :

இமயம்/கயிலை
மந்த்ரம்
விந்தியம்
நிடதம்
ஹேமகூடம்
நீலம்
கந்தமாதனம்

முக்கிய தலங்கள் :

வாரணாசி
அயோத்தி
காஞ்சீபுரம்
மதுரா
துவாரகை
உஜ்ஜைனி
ஹரித்துவார்

கிரகங்கள்

சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி

(ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் ஆகும்)

நதிகள் :

கங்கை
யமுனை
கோதாவரி
சரஸ்வதி
நர்மதா
சிந்து
காவிரி

நீக்கவேண்டியது :

உழைப்பு இல்லாத செல்வம்
மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி
மனிதம் இல்லாத விஞ்ஞானம்
பண்பு இல்லாத படிப்பறிவு
கொள்கை இல்லாத அரசியல்
நேர்மை இல்லாத வணிகம்
சுயநலம் இல்லாத ஆன்மிகம்

மழையின் வகை :

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் - தீ மழை (எரிமலை, சுனாமி)

தலைமுறைகள் :

முதல் தலைமுறை (நாம்)
இரண்டாம் தலைமுறை (தந்தை - தாய்)
மூன்றாம் தலைமுறை (பாட்டன் - பாட்டி)
நான்காம் தலைமுறை (பூட்டன் - பூட்டி)
ஐந்தாம் தலைமுறை (ஓட்டன் - ஓட்டி)
ஆறாம் தலைமுறை (சேயோன் - சேயோள்)
ஏழாம் தலைமுறை (பரன் - பரை)
பரன்- பரை என்பதே ‘பரம்பரை’ என்று சொல்லப்படுகிறது.

Wednesday 14 November 2018

கல்பாத்தி விசுவநாதர் கோவில் - கேரளா

கல்பாத்தி விசுவநாதர் கோவில் - கேரளா

காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கின்ற பலன்களில், பாதி பலன்களைக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கும் விசுவநாதரை வணங்கிப் பெறமுடியும் என்பதால் ‘காசியில் பாதி கல்பாத்தி!’ என்று சொல்லப்படுகிறது.

தல வரலாறு :

கேரளாவிலுள்ள கொல்லங்கோடு எனும் ஊரில் வசித்த லட்சுமியம்மாள், அங்கு தன்னுடைய முன்னோர்கள் வழிபட்டு வந்த தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலைப் போன்று, ஒரு சிவபெருமான் கோவிலைக் கட்ட வேண்டும் என்று ஆசைகொண்டார்.

வயதான காலத்தில், அவர் காசி எனப்படும் வாரணாசிக்குச் சென்று திரும்பி வரும் போது, தன் விருப்பப்படி கோவில் கட்டுவதற்காக, அங்கிருந்து ஒரு பாணலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவர் வரும் வழியில் உள்ள நதிக்கரைகளில் தங்கி, அந்தப் பாணலிங்கத்தை வைத்துப் பூஜை செய்து வழிபடுவதும், பின்னர் அதனை எடுத்துக் கொண்டு வருவதுமாக இருந்தார்.

அவர் பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த நிலா ஆற்றங்கரையில் பாணலிங்கத்தை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பின்னர் வழக்கம் போல், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து அந்தச் சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் சிவலிங்கத்தைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.

தான் கொண்டு வந்த சிவலிங்கம் இருக்க வேண்டிய இடத்தை இறைவனான சிவபெருமானே தேர்வு செய்து விட்டதை உணர்ந்த லட்சுமியம்மாள், அவ்விடத்திலேயேத் தன் விருப்பப்படி கோவிலைக் கட்டுவது என முடிவு செய்தார்.

பின்னர், அப்பகுதியை ஆட்சி செய்த இட்டி கோம்பி அச்சன் எனும் அரசரைச் சந்தித்து, தான் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, அங்கு கோவில் ஒன்றை கட்டுவிக்க வேண்டுமென்று வேண்டினார். அப்படியே, அக்கோவில் கட்டுமானப் பணிகளுக்காகத் தான் சேர்த்து வைத்திருந்த 1,320 பொற்காசுகளையும் அரசரிடம் வழங்கினார்.

அரசரும் லட்சுமியம்மாளின் வேண்டுகோளை ஏற்று, அவ்விடத்தில் சிவபெருமான் கோவிலைக் கட்டுவதற்கான நிலங்களைத் தானமாக வழங்கியதுடன், கோவில் மேற்பார்வைப் பணிகளுக்காகச் சோமசுந்தரக் குருக்கள் (இவரைச் சேகர வர்மா என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்) என்பவரையும் நியமித்தார்.

லட்சுமியம்மாள் காசியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கம் என்பதால், இத்தல இறைவனுக்கும் காசி விசுவநாதர் என்றே பெயர் சூட்டப்பட்டது. பின்னர், அங்கு விசாலாட்சி அம்பாள் சிலையும் நிறுவப்பட்டது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு :

தரைமட்டத்திலிருந்து தாழ்வாக இருக்குமிடத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து 18 படிகள் கீழிறங்கிச் செல்லும்படி இருக்கிறது. இக்கோவில் பள்ளத்தில் இருப்பதால், மலையாளத்தில் ‘பள்ளம்’ என்று பொருள் தரும் ‘குண்டு’ எனும் சொல்லைப் பயன்படுத்தி, ‘குண்டுக்குள் கோவில்’ என்றும், ‘குண்டம்பலம்’ என்றும் அழைக்கின்றனர்.

இறைவன் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கிய நிலையிலும், அம்பாள் விசாலாட்சி தெற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். கோவில் வளாகத்தில், மகாகணபதி, தட்சிணாமூர்த்தி, கங்காதரன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சூரியனார் சன்னிதிகளும், நவக்கிரகங்கள் மனைவிகளுடன் இருக்கும் சன்னிதி, நாக தேவதைகள் உள்ளிட்ட ராகு-கேது சன்னிதி போன்றவைகளும் இருக்கின்றன.

இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் ஆகம விதிகளைப் பின்பற்றியே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கிற பலன்களில் பாதி பலன்கள், கல்பாத்தியில் இருக்கும் விசுவநாதரை வணங்கினாலும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு வந்து செல்லும் பக்தர்கள், நிலா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலயத்தை ‘காசியில் பாதி கல்பாத்தி’ என்று சிறப்பித்துச் சொல்கின்றனர்.

இக்கோவிலில் இருக்கும் அம்பாள், தெற்கு நோக்கிய நிலையில் இருப்பதால், எமபயம் நீக்கும் அன்னையாக இருக்கிறார். மேலும் திருமணத்தடை நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும் அன்னைக்குப் புதிய ஆடை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.

இக்கோவிலில் நாள்தோறும் காலையில் நடைபெறும் ‘மிருத்யுஞ்சய ஹோமத்தில் கலந்து கொண்டு, இறைவனை வணங்கி வழிபடுபவர்களுக்கு, உடல் நலம், ஆயுட்காலம் அதிகரிப்பு, நல்வாழ்வு போன்றவை கிடைக்கும் என்கின்றனர்.

நாக மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீங்க, இங்கிருக்கும் ராகு - கேது சன்னிதியில் பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிலர் கோவில் வளாகத்தில் விற்கப்படும், வெள்ளியிலான சிறிய பாம்பு, வெள்ளியிலான முட்டைகள், புற்று போன்றவைகளை வாங்கி, ராகு- கேது சன்னிதியில் வைத்து வேண்டுவது வழக்கமாக இருக்கிறது.

ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் வரும் கடைசி பத்து நாட்கள் தேர்த்திருவிழா (ரத உற்சவம்) சிறப்பாக நடத்தப்படுகிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மகாமக நாளில், தமிழகத்தைப் போன்றே சுவாமி புறப்பாடு, ஊர்வலம், தீர்த்தவாரி என்று மகாமகத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.