சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு செல்லும் முன்பு சாலையோரம் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து செல்லும் போது இடதுபுறம் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசனம் செய்யலாம்.
தல வரலாறு :
முன் காலத்தில் கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், மரணமும் இல்லாத நன்மையை அளிக்கக்கூடிய மூலிகையை தேடி அங்கு வந்துள்ளார். அப்போது அவர் மலைப் பகுதியில் மூலிகையை தேடி செல்லும் போது, அவருக்கு உதவ, தன்னை விட வயது மூத்தவரும், அதே பகுதியை சேர்ந்தவருமான ஒருவரை சீடனாக ஏற்றார். அவரது இயற்பெயர் கஞ்சமலை காலாங்கிநாதர்.
மூலரும், காலாங்கிநாதரும் மலை அடிவார பகுதியில் குடில் அமைத்து வசித்து வந்தனர். தினமும் காலையில் மூலிகையை தேடி சென்று விடுவார் மூலர். அவருக்கு தேவையான உணவை அவரது சீடரான காலாங்கி நாதர் சமைத்து வைப்பார். இந்த நிலையில் காலாங்கிநாதர் ஒரு நாள், உணவு சமைத்து கொண்டிருந்த போது, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். இதனால் உணவு பொங்கி வந்தது. உடனே அருகில் இருந்த கரண்டியை தேடினார். கரண்டி கிடக்காததால், பக்கத்தில் இருந்த ஒரு செடியை பிடிங்கி, அதன் வேர் பகுதியை பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரில் கழுவி விட்டு, உணவை கிண்டி உள்ளார். சில நொடிகளில் அந்த உணவு கருப்பாக மாறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அந்த வேரை, நெருப்பில் போட்டு விட்டார்.
மேலும் கருப்பாக மாறிய உணவை தனது குருநாதருக்கு கொடுக்க முடியாது என்பதால், அதனை அவரே சாப்பிட்டு விட்டு, சமையல் செய்த பாத்திரத்தை கழுவி, அதில் புதிதாக உணவு சமைத்தார். இதனிடையே மூலிகையை தேடி சென்ற மூலர் வந்தார்.
அப்போது அங்கிருந்த நபரை கண்ட அவர், ‘தாங்கள் யார்?’ என்று வினவினார். அதற்கு காலாங்கி நாதர், ‘நான் தான் உங்களது சீடன். என்னை அடையாளம் தெரியவில்லையா?’ என்றார்.
உடனே அதற்கு மூலர், ‘நீ எப்படி இவ்வளவு இளமையாக மாறினாய்? நடந்ததை கூறு.’ என்றார்.
இதையடுத்து நடந்த அனைத்தையும் கூறினார் காலாங்கிநாதர்.
அதற்கு மூலர், ‘நான் தேடி வந்த மூலிகையே அதுதான். அது எங்கே?’ என்று கேட்டுள்ளார். மேலும் அதனை கழுவிய தண்ணீரை கேட்டார். அந்தத் தண்ணீரைக் குடித்ததன் மூலம் மூலரும் இளமையான தோற்றத்துக்கு மாறினார் என்கிறது வரலாறு.
இளமை திரும்பிய மூலர், அங்கிருந்து புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் வருவதாக கூறிய காலாங்கிநாதரிடம், ‘நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்று கூறி விட்டு, சென்றார்.
குருவின் ஆலோசனையை தட்டிக்கழிக்காத காலாங்கிநாதர், அங்கேயே இருக்க முடிவு செய்தார். ஆனால் வயதான தோற்றத்தில் இருந்த தான், இளம் வயதுக்கு உருமாறியதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து, ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றினார்.
அதன்படி அந்த பகுதியில் மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அப்போது ஒரு மாட்டின் பாலை மட்டும் தொடர்ந்து குடித்து வந்தார். பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பிவிடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள்.
இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது, ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார்.
அப்போது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார். இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி, பொதுமக்களை அழைத்து வந்து, காலாங்கி நாதரை அடித்து உதைத்தனர்.
வலி தாங்க முடியாமல் துடித்த அவர், அங்கிருந்து ஓடி, அருகில் இருந்த சங்கு இலை செடி புதருக்குள் ஒளிந்து கொண்டார். அதனை அகற்றிய ஊர்க்காரர்கள் பார்த்த போது, அங்கே காலாங்கி நாதர் தவக்கோலத்தில் காட்சி அளித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அவரை வணங்கினார்கள். அடித்ததற்கு மன்னிப்பும் கேட்டனர். அவரை சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார்.
அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், அவரை தாக்கியதால், தண்டிக்கப்படுவோம் என்று அச்சத்தில் இருந்தனர். ஆனால் சித்தேசுவரசாமி யாரையும் தண்டிக்கவில்லை. மாறாக அவர் களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார் என்கிறது இந்தத் திருத்தலத்தின் வரலாறு.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது குறைகளை தெரிவித்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால், அதனை சித்தேசுவரசாமி நிவர்த்தி செய்வதாகவும், நோய்களை தீர்ப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனால் கோவிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சித்தேசுவர சாமியை தரிசித்தால் நல்லது என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
காந்த தீர்த்தக்குளம் :
சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக்குளங்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளங்களில் புனித நீராடி விட்டு, சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். மேலும் உப்பு, வெல்லம் போன்றவை தண்ணீரில் கரைவது போன்று கஷ்டங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக்குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால், மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக்குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீரில் குளிப்பதால் நோய்கள் குணமாவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
அமைவிடம் :
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது. மேலும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதாவது இளம்பிள்ளை செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் சித்தேசுவரர் கோவில் வழியாக தான் செல்கின்றன.