Tuesday 25 September 2018

முருகப்பெருமானுக்குரிய நிலத்தை மீட்ட பெண் சித்தர்

முருகப்பெருமானுக்குரிய நிலத்தை மீட்ட பெண் சித்தர்

முருகப்பெருமானை பிள்ளையாகப் பெற்று, தன் சொத்துகளை எல்லாம் உதறி முருகனுக்காக தொண்டாற்றியவர் சிவகாமி பரதேசி அம்மையார். அவர் ஒரு சமயம் திருச்செந்தூர் முருகன் கோவில் தேரை வடம் பிடித்து இழுக்க முயற்சித்த போது, அங்கிருந்தவர்கள் தடுத்தனர். எனவே ‘தேர் நகரக்கூடாது’ என்று தன் தனயனான முருகப்பெருமானிடம் வேண்டுகோள் விடுத்து விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்துகொண்டார்.

சிவகாமி பரதேசி அம்மையார், தேர் வடத்தை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஒரு அடி கூட தேர் நகரவில்லை. அனைவரும் போராடிப் பார்த்தனர்; எந்த பலனும் கிடைக்கவில்லை. விழா நடத்துபவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக முருகனின் அடியவர்கள் சிலரிடம் சென்று, ‘தேர் நகராததற்கு என்ன காரணம்?’ என்று கேட்டனர்.

அவர்கள், சிவகாமி பரதேசி அம்மையாரைப் பற்றியும், அவரை ஒருவர் நிந்தித்தது பற்றியும் கூறினர். மேலும் அந்த அம்மையார், முருகப்பெருமானின் அன்னையாகும் வரம் பெற்றவர் என்றும் எடுத்துரைத்தனர். இதனால் பதறிப்போன விழாக்குழுவினர், உடனடியாக ஓடிச் சென்று கடற்கரையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த சிவகாமி பரதேசி அம்மையாரை அழைத்து வந்தனர். அவர் தேர் வடத்தைப் பிடித்து இழுத்த பிறகே, தேர் அங்கிருந்து நகர்ந்தது.

இதனால் அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவியது.

பண்பொழி வந்த சிவகாமி பரதேசி அம்மையார், அங்கு புது தேரை உருவாக்கினார். வண்டாடும் பொட்டலில் அன்னதான சத்திரம் கட்டினார். அதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளை பராமரிக்க பசு மண்டபம் அமைத்தார். ராகு- கேது வணங்கிய உச்சிஷ்ட கணபதியை பிரதிஷ்டை செய்தார். அதன் மீது மண்டபம் கட்டி வழிபாட்டுக்கு கொண்டு வந்தார். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவை, திருமலைக் கோவிலிலும், வண்டாடும் பொட்டலிலும் பத்து தினங்கள் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

ஒரு நாள் முருகப்பெருமான், சிவகாமி பரதேசி அம்மையார் கனவில் தோன்றி, ‘தாயே! நாளைக்கு தாங்கள் வில்வண்டியில் புளியரைக்குப் புறப்படுங்கள். அவ்வூரில் உள்ள மிகப்பெரிய வயல்வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு, காளைகளை அவிழ்த்து விடுங்கள். அந்த காளைகள் ஓரிடத்தில் நின்று மண்ணை கால்களால் கிளறும். அந்த இடத்தில் எனக்கு பாத்தியப்பட்ட சொத்து பட்டயம் இருக்கிறது’ என்று கூறி மறைந்தார்.

அந்த கனவிற்குப் பிறகு சிவகாமி பரதேசி அம்மையாருக்கு தூக்கம் வரவில்லை. விடிய விடிய விழுத்திருந்தார். மறுநாள் காலை விடிந்ததும் விடியாமலும் வில்வண்டியை கட்டிக்கொண்டார். தன் கணவரையும், இன்னும் சிலரையும் அழைத்துக் கொண்டு புளியரைக்கு சென்றார். அங்கு வயல்வெளியில் வண்டியை நிறுத்தி, காளைகளை அவிழ்த்து விட்டார். அது வெறிபிடித்தது போல் ஓடி, ஓரிடத்தில் நின்று மண்ணைக் கிளறியது.

சிவகாமி பரதேசி அம்மையார் கட்டளைப்படி, உடன் வந்தவர்கள் அந்த இடத்தைத் தோண்டினார்கள். அங்கே 10 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல் ஒன்று கிடைத்தது. அதில் வேலும் மயிலும் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கல்லில் முருகப்பெருமானுக்கு உரிய 160 ஏக்கர் அளவிலான நன்செய் நிலம் மற்றும் தோப்பு துரவுகளுக்கான விவரப் பட்டியல் இருந்தது.

அந்தச் சொத்துகளை எல்லாம், ராயர் ஒருவர் பயன்படுத்தி வந்தார். ஆனால் திருமலை முருகன் கோவிலுக்கு அவர் எந்த திருப்பணிக்கும் உதவவில்லை.

தன் மகனுக்கான சொத்துகளை எப்படி மீட்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார், சிவகாமி பரதேசி அம்மையார்.

சிந்தனையின் ஊடே உறங்கியும் போனார். அப்போது மீண்டும் அவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நீங்கள் நாளை காலை பக்தர்களை திரட்டிக்கொண்டு புளியரைக்குச் செல்லுங்கள். அங்கு நமக்கு சொந்தமான நிலங்களில் ஏர் பிடித்து உழுங்கள். நான் உங்களுக்கு துணையாக வருவேன்’ என்றார்.

மகனின் ஆணை கிடைத்ததும், மறுநாள் அதிகாலையிலேயே பக்தர்கள் பலரை அழைத்துக் கொண்டு, புளியரைச் சென்று முருகனுக்கு உரிய வயல்வெளியில் ஏர் பிடித்து உழுதார்.

இதையறிந்த ராயர், தனது ஆட்களை திரட்டிக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தான். பின் காளைகளை அவிழ்த்து விட்டு, பக்தர்களை விரட்ட முயன்றான்.

அப்போது காளைகள் அனைத்தும் ஆவேசம் கொண்டது போல், ராயரையும், அவர் திரட்டி வந்த ஆட்களையும் விரட்டின. இதையடுத்து அவர்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். பிரச்சினை முடிந்தது என்று பரதேசி அம்மையார் நினைத்தார். ஆனால் ராயர் விடுவதாக இல்லை. நீதிமன்றத்தை நாடினார். ஆனால் முருகப்பெருமானின் அருளால் நீதிமன்றத்திலும், சிவகாமி பரதேசி அம்மையாருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

இதையடுத்தும் பல காலம் முருகப்பெருமானுக்கு திருப்பணியாற்றி வந்தார், சிவகாமி பரதேசி அம்மையார். இவர் சமாதி நிலை அடைந்த காலம் மிக விசேஷமானது. முருகப்பெருமான் பிறந்த நன்நாளாம் வைகாசி விசாகத்தன்று, தன் மகனான திருமலை முருகனின் திருவடிகளில் கலந்தார். திருமலைக்குக் கீழாக, முருகன் சன்னிதிக்கு நேராக, வண்டாடும் பொட்டலில் சிவகாமி பரதேசியம்மையாரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்கு வைகாசி விசாகத்தன்று குருபூஜை நடக்கிறது.

வண்டாடும் பொட்டலில் தான் தனக்கு சமாதி அமைக்கவேண்டும் என பரதேசிஅம்மையார் உயிரோடு இருக்கும் போதே முடிவு செய்துவிட்டார். திருமலை குமரனின் மூல இடத்தில் புளியமர அடியில் அவர் வீற்றிருப்பது போலவே, தான் சமாதி ஆகும் இடத்திலும் ஒரு புளிய மரத்தினை உருவாக்கினார். அதற்கான கருங்கல் மண்டபம் கட்டி வைத்து விட்டார்.

அம்மையார் திருப்பணி செய்த 626 படிகளில் ஏறிச் செல்ல, வயதானவர்கள் திணறி வந்தார்கள். எனவே கீழே இருந்தே முருகனை தரிசித்து வந்தனர். இவர்கள் பிரச்சினை தீர 2010-ல் ரூ.5½ கோடி செலவில் இரு வாகனங்கள் சென்று வருகின்ற அளவுக்கு மலை சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பணி முடிந்து வாகனங்கள் மலை உச்சி வரை செல்கின்றன.

இந்த திருப்பணி செய்தவர்கள், சிவகாமி பரதேசி அம்மையாரின் சிலை ஒன்றையும் உருவாக்கினர். அந்த சிலை வண்டாடும் பொட்டலில், பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இவ்விடம் வந்தாலே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கிறது. மேலும் பெண் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இவ்விடத்தில் வந்து அம்மையை வணங்கி நின்றால், 100 சித்தர் பீடத்துக்கு சென்று தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம். நாள் பட்ட நோய்கள் எல்லாம் நீங்குகிறது. கஷ்டங்கள் எல்லாம் மறைகிறது. நீண்ட நாள் வழக்கு தீருகிறது. இழந்த பொருள் மீண்டும் கிடைக்கிறது. வீடு கட்டும் யோகம் உருவாகுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக முருகப்பெருமானை போன்ற அழகான குழந்தைப்பேறு கிடைக்கிறது.

சிவகாமி பரதேசி அம்மையை வணங்கி விட்டு, அருகில் உள்ள ராகு-கேது வழிபட்ட விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் கோவில் அடிவாரத்தில் உள்ள வல்லப விநாயகரை வணங்கி முருகன் பாதத்தினையும், அதன் அருகே பாறையில் புடைப்பு சிற்பமாக கூப்பிட்ட கையோடு அருள்புரியும் சங்கிலி மாடனையும் வணங்கி மலை மீது ஏறலாம்.

அமைவிடம்

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் வண்டாடும் பொட்டல் உள்ளது. செங்கோட்டையில் 5 கிலோமீட்டரில் வண்டாடும் பொட்டலை அடையலாம். தென்காசி, செங்கோட்டைக்கு ரெயில் வசதி உண்டு. செங்கோட்டையில் அச்சன் கோவில் செல்லும் வழியில் பண்பொழி என்னும் இடத்தில் அம்மை சமாதியும், முருகன் கோவிலும் உள்ளது.

No comments:

Post a Comment