Wednesday, 5 September 2018

கேது பகவான் வழிபட்ட திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்

கேது பகவான் வழிபட்ட திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்

கேது பகவான் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஈழ நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற தலம், திருமால், இந்திரன், ராமன், ராவணன் என பலரும் வழிபட்டு வணங்கிய கோவில், இலங்கை நாட்டின் பஞ்சேஸ்வரங்களில் முக்கிய தலம், பாலாவி என்ற பிரம்மாண்ட தீர்த்தம் கொண்ட ஆலயம், இந்திய அரசின் பொருளுதவியால் எழும்பும் பழம்பெரும் ஆலயம், கருங்கல்லில் சுவாமி, அம்பாள், கருவறை அமைந்துள்ள கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்.

இத்தல இறைவன் திருப்பெயர் கேதீசரநாதர். தன்னை வணங்கும் அடியாரின் பெயரால், தன் பெயரை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் இறைவன், கேது வழிபட்டுப் பேறு பெற்றதைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘கேதீசரர்’ ஆனார்.

மகாதுவட்டா என்ற தேவதச்சன் வணங்கி திருப்பணி செய்ததால், இத்தலம் ‘மகாதுவட்டாபுரம்’ என்றும் வழங்கலானது. மகாதுவட்டா, ராமருக்கு முற்பட்டவராகக் கருதப்படுவதால் இது ராமேஸ்வரத்திற்கும் முன் தோன்றிய கோவிலாகப் போற்றப்படுகிறது.

தொன்மைச் சிறப்பு:

கி.பி. ஆறாம் நூற்றாண்டு கலிங்கநாட்டு இளவரசன் விஜயன் என்பவன் காலத்தில் இத்தலம் சிறப்பு பெற்று விளங்கியதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. பழங்காலத்தில் திருக்கேதீச்சரம் இரட்டை அகழியால் சூழப்பெற்று, 1120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது.

போர்த்துக்கீசியர்கள் காலத்தில் இவ்வாலயம் முழுவதுமாக தகர்க்கப் பட்டு, இதன் சொத்துகள் கொள்ளை யிடப்பட்டதை வரலாறு சொல்கிறது. இங்கே தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ரோம, அரேபிய, எகிப்திய, இந்திய நாணயங்கள் மற்றும் சீனக் களிமண் பொருட்கள், இந்நகரின் தொன்மையையும், சிறப்புக்களையும் நமக்கு உணர்த்துகிறது.

இந்நகரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியதையும், காந்தக்கோட்டை இருந்ததையும் அறிய முடிகிறது. இந்த ஆலயம் பெரிய மாடவீதிகள் கொண்டு விளங்கியதை இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. இத்தலத்தின் அருகேயுள்ள மாளிகைத்திடல் என்ற ஊரும், அங்கே கிடைத்த சோழர்காலக் கல்வெட்டும் இதனை உறுதி செய்கிறது. அந்த கல்வெட்டுகள் தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளன.

கி.பி. 1545-ல் கடல் சீற்றத்தினால் மாதோட்டத்தின் சில பகுதிகள் கடலில் மூழ்கின. கி.பி. 1585-ல் மன்னாரில் வந்திறங்கிய போர்த்துக்கீசியர்கள், இந்து ஆலயங்களில் உள்ள பொன் பொருளைக் கொள்ளையடித்தனர். திருக்கோவில்களைத் தகர்த்தனர். அந்த வகையில் திருக்கேதீச்சரம் ஆலயமும் சூறையாடப்பட்டது.

கி.பி. 1872-ல் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், இவ்வாலயம் பற்றி சிறு குறிப்புகள் மூலம் சைவ சமய மக்களுக்கு நினைவுபடுத்தி, இதன் பெருமைகளை எடுத்துக்கூறினார். அவரது காலத்திற்குப் பின்பு 21 ஆண்டுகள் கழித்து ஆலயத் திருப்பணி கைகூடியது.

கொழும்பில் வணிகம் செய்து வந்த நகரத்தார், முன் முயற்சி செய்து யாழ்ப்பாணத்து பக்தர்கள் ஆதரவோடு, 43 ஏக்கர் நிலப்பரப்பை 3100 ரூபாய்க்கு அரசிடம் இருந்து ஏலத்தில் எடுத்தனர். அதன்மூலம் ஆறுமுக நாவலரின் கனவு நனவானது.

சிவபாதசுந்தரம், சீமான் கந்தையா வைத்தியநாதன், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பெருமுயற்சியால், புதையுண்ட விநாயகர், மகாலிங்கம், சுப்பிரமணியர், நடராசர், சண்டிகேஸ்வரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, கி.பி. 1960-ல் ஆலய கும்பாபிஷே கம் நடந்தேறியது. ஆலயத்தை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆலயமாக்கிய பெருமை கந்தையா வைத்தியநாதன்அவர்களையே சாரும். 1976-ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1983-ல் ஐந்து தேர்கள் வீதியுலா வந்தன.

இந்நிலையில், உள்நாட்டுப் போரினால் 1990 முதல் 2003 வரை இத்திருக்கோவில் மீண்டும் பாதிப்பை சந்தித்தது. இதன்பின் 2003-ம் ஆண்டு திருப்பணி சபையின் பெரும் முயற்சியால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

ஈழ நாட்டின் தேவாரப் பாடல்பெற்ற தலங்களாக, திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகியவை விளங்குகின்றன. இதில் திருக்கேதீச்சரம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் பதிகம் பெற்ற தலமாகும்.

மா சந்தையாக (பெரிய சந்தை) விளங்கிய இப்பகுதி, ‘மாசந்தை’ என்று பெயர்பெற்றது. அதுவே மருவி ‘மாந்தை’யானது. சங்ககால, பல்லவர் கால இலக்கியங்களிலும் இத்தலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

இத்தலம் குறித்து, கந்தபுராணத்திலும், தட்சிண கயிலாய மான்மியம் என்ற சமஸ்கிருத நூலிலும் குறிப்புகள் காணப்படுகின்றன.

திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர், கின்னரர், கேது பகவான், துவட்டா, ராமபிரான், அகத்தியர், ராவணன், மாலியவான், அர்ச்சுனன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு எழிலாக அமைந்துள்ளது. அருகே காண்டாமணியும், மண்டபமும் அமைந்துள்ளன. எதிரில் நந்திதேவர் மண்டபத்தினுள் சுவாமி தரிசனம் செய்தபடி அமர்ந்துள்ளார். உள்ளே மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அனைத்தும் ஒருங்கே அமைந்திருக்க, கருவறையில் மூலவர் திருக்கேதீசரநாதர் வீற்றிருக்கிறார். இவர் கி.பி. 1903-ல் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட திருமேனி ஆவார். தற்போது ஆலயத்தின் சுற்றுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம், பூமியைத் தோண்டும் போது கிடைத்த, சிறிது சேதம் ஏற்பட்ட திருமேனியாகும். இவர், பழைய மூலவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இதேபோல, அன்னை கவுரியம்பாள் சிலையும் உருவாக்கப்பட்டு தென்திசை நோக்கி நிறுவப்பட்டுள்ளது.

சூரியன், சந்திரன், சண்டேஸ்வரர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், கேது பகவான், சமயக்குரவர், சேக்கிழார், சந்தானக்குரவர், சுந்தரர் மற்றும் மேற்கு பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், மகாவிஷ்ணு, பூமியைத் தோண்டிய போது கிடைத்த மகாலட்சுமி, பஞ்சலிங்கம், மகாலிங்கம், சுப்பிரமணியர் ஆகியோர் திருவுருவங்கள் தனித் தனியே நிறுவப்பட்டுள்ளன. இது தவிர, வடக்குப்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், சோமாஸ்கந்தர், பள்ளியறை, கிழக்குப் பிரகாரத்தில் கருவூலம், யாகசாலை, பைரவர் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.

ஆலயத்தின் வெளியே பிரம்மாண்ட திருஞானசம்பந்தர்- சுந்தரர் மடம் கலைநயத்துடன் புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இதில் தங்குமிடம், அன்னதானக் கூடம் என அனைத்தும் உள்ளடங்கி இருக்கிறது.

பாலாவி தீர்த்தம் :

இத்தலத்தின் தீர்த்தமாக, மிகப்பெரிய பாலாவி தீர்த்தம் அமைந்துள்ளது. சுந்தரரின் தேவாரத்திலும், இப்பாலாவி தீர்த்தம் குறித்து பாடப்பட்டுள்ளது. சுந்தரர் தமது பதினொரு பாடல்களில், பத்து பாடல்களில் ‘பாலாவியின் கரைமேல்’ என இத்தீர்த்தத்தைப் புகழ்கின்றார். பழங்காலத்தில், பாலாவி ஆற்றின் முகத்துவாரத்தில் திருக்கேதீச்சரம் இருந்துள்ளது. அந்த ஆறே, இன்று திருக்குளமாக உருமாற்றம் பெற்றுள்ளதாக வரலாறு கூறுகிறது. 

தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.

அமைவிடம் :

இலங்கை நாட்டின் வடக்கு மாகாணம், மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகரில் இருந்து கிழக்கே, யாழ்ப்பாணம் செல்லும் பிரதான சாலையில், 10 கிலோமீட்டர் தொலைவில் திருக்கேதீச்சரம் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 320 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment