பேராபத்துகள் நிறைந்த கரையில்லாப் பிறவிப் பெருங்கடலே மானுட வாழ்வு. இப்பெருங்கடலை எந்தக் கப்பலைக் கொண்டு எந்த மாலுமியின் உதவியால் கடப்பது?
நம்மைக் காப்பாற்றக் கருணை உள்ளம் கொண்ட வேதவியாஸர் என்னும் மாமுனி ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்னும் கப்பலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். இக்கப்பலில் ஏற விருப்பமுள்ளவர்கள் சரணாகதி நெறியில் நின்று நித்ய பூஜை, தோத்திர பாராயணங்கள், கர்மானுஷ் டானாதிகள், பகவத் விஷயங்களைக் கேட்டல் முதலியவைகளைச் சோம்பலின்றி நம்பிக்கையுடன் செய்து வரவேண்டும்.
அப்படி செய்தால் மனம் தெளிவடைந்த ஓர் நன்னாளில் பிறவிப் பெருங்கடலின் மறுகரையான பகவானுடைய திவ்ய சாசனங்களை அடைய முடியும். அந்தப் பகவானே அருளாயிருந்து கப்பலை ஓட்டிச் செல்வான். நம்மை கரையை அடையச் செய்வான். ஸ்ரீமத் பாகவதம் என்பது ஓர் கற்பக விருஷம். அதன் பெருங்கிளைகள் 12 ஸ்கந்தங்கள். சிறு சிறு கிளைகளாக இருக்கும் மேலான அத்தியாயங்களுடன் அது அடர்ந்து படர்ந்துள்ளது.
அந்த மரத்தினுடைய இனிய நறுமணம் வீசுகின்ற பூங்கொத்துக்கள் தான், ஸ்ரீவியாச முனிவரால் உபயோகப்படுத்தப்பட்ட பதவின் யாசங்கள், அதன் குலைகள் தான் 3,000க்கும் மேலான செய்யுட்கள். இவ்வாறு விரிந்து பரந்து வளர்ந்திருக்கின்ற பாகவதத்தை படித்து மனதை அதில் லயித்து விட்டால், மோட்சம் என்ற சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம்
No comments:
Post a Comment