Wednesday, 19 September 2018

முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்

முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அழகுடன் காட்சியளிக்கும் அற்புதமான இடம்தான் ‘பண்பொழி’. இங்குள்ள திருமலை குமரன், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலைவன். பெரும்பாலுமே தெய்வத்தினை தனது தந்தையாக, தாயாக போற்றி வணங்குவது தான் வழக்கம். ஆனால் திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள். பண்பொழி மலை அடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டலில் அடங்கி அருள்தரும் அற்புத பெண் சித்தரான இவரின் அற்புதங்கள் மிகச்சிறப்பானவை. பெண் சாது ஒருவர் அடங்கிய இடத்தில் அருள் தேடினால், அங்கு பல நூறு மடங்கு அருள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

திருமலை குமரன் திருக்கோவில் சிறப்பாகவும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு சிவகாமி பரதேசியம்மையார் தான் காரணம் என்றால் மிகையல்ல. பண்பொழி திருமலை முருகனை பற்றி பேசும் போதெல்லாம், சிவகாமி பரதேசியம்மையாரை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்து, அனைத்தையும் துறந்து, முருகப்பெருமானுக்காக பரதேசி வேடம் பூண்டு, அருளாட்சி புரிந்தவர் அந்த பெண் சித்தர்.

பண்பொழி என்பது மிகவும் விசேஷமான ஊர். இவ்வூரில் தான் அருணகிரிநாதருக்கு பண் (பாடலை) பொழிய ஆசி வழங்கினார், முருகன். எனவே இத்தலம் ‘பண்பொழி’ எனப் பெயர் பெற்றது. இந்நகருக்கு அருகாமையில் உள்ள பெரும் ஊர் ‘அச்சன் புதூர்’. இவ்வூரில் பெரும் நிலக்கிழராக வாழ்ந்து வந்தவர் கங்கை முத்து தேவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெரும் நிலக்கிழாரான சிவகாமி அம்மையாரை மணந்தார். மேற்குதொடர்ச்சி மலையில் பல நூறு ஏக்கர் நிலங்களை தன்னகத்தே கொண்டவர்கள் இவர்கள். தங்களின் சொத்தை பராமரிக்க பல வேலையாட்களை வைத்திருந்தனர்.

எல்லா செல்வமும் அவர்களிடம் இருந்தும், குழந்தைச் செல்வம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் மன அமைதி இன்றி தவித்தனர். இதையடுத்து அவர்கள் இறை சேவையில் இறங்கினர். பாத யாத்திரிகர்களுக்கு திருப்பணி செய்தனர். அச்சன்புதூர் அருகில் பல கல் மண்ட பங்களை அமைத்து, அதில் வழிபோக்கர்கள் தங்கி செல்ல வழிவகுத்தனர். தெய்வ பக்தி, அடியார் களை அன்புடன் உபசரிப்பது முதலான அறச் செயல்களை கணவரின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக செய்து வந்தார் சிவகாமி பரதேசியம் மையார்.

நெடுவயல் கிராமத்திலும் அடியார்கள் தங்கி செல்வதற்காக, கல் மண்டபத்தைக் கட்டிவைத்தார்கள். அந்த மண்டபத்தில் தான் ‘வாலர் மஸ்தான்’ எனும் இஸ்லாமியத் துறவி ஒருவர் வந்து தங்கினார். அவர் தவ வலிமையில் சிறந்தவர். சித்து விளையாட்டுகளிலும் வல்லவர். தன் இடத்தைத் தேடி வந்த அந்தத் துறவிக்கு, அன்போடு பணிவிடை செய்து அன்னமிட்டு உபசரித்து வந்தார், சிவகாமி பரதேசிம்மையார்.

இந்த செயல் உறவுக்காரர்களுக்கு பிடிக்க வில்லை. ‘குழந்தை குட்டி இல்லை. இருக்கிற சொத்துகளை இப்படி வாரி இறைத்தால், இறுதியில் பிச்சைதான் எடுக்கவேண்டும். இருக்கும் சொத்து களை நமக்காவது கொடுத்தால், நம் பிள்ளைக் குட்டிகளாவது நல்லா இருக்கும். அதையும் செய்யாமல் இப்படி பணத்தை வர்றவனுக்கும், போறவனுக்கும் வாரிக் கொடுக்கிறார்களே' என அங்கலாய்த்தனர்.

அதோடு நில்லாமல், சிவகாமி பரேதசியம் மையார் மீது வீண் பழி சுமத்தி வீட்டோடு உட்கார வைத்து விடவும் முடிவு செய்தனர். அதன்படி சிவகாமி பரதேசியம்மையாரின் கற்பு நெறி வாழ்க்கைக்கு களங்கம் கற்பித்தனர். இதைப் பொறுக்க முடியாத அம்மையார், ‘நான் கற்புநிலை தவறாதவள், களங்கமற்றவள் என்றால், நான் தெருவின் மேலக்கோடியில் திரும்பும் முன், என்னை பழித்து பேசியவரின் வீட்டில் இடி விழட்டும்' என்று சாபமிட்டார். அதன் பின் அங்கிருந்து அவர் கிளம்பினார்.

அவர் சாபமிட்ட காலம் கோடைகாலம். சுட்டெரிக்கும் வெயில் காலை 9 மணிக்கே வந்து தெருக்களை வறுத்தெடுத்தது. ஆனாலும் அம்மை யின் சபதம் ஏற்று, வருண பகவான் வெகுண்டு எழுந்தான். திடீரென்று மின்னலும், இடியும் தோன்றியது. மறு நொடியே அம்மையாரை பற்றி தவறாக பேசியவர் வீட்டில் இடி விழுந்தது. எனவே அவரைப் பற்றி புறம் பேசியவர்கள், அவரது சக்தியைக் கண்டு அமைதி அடைந்தனர். பலரும் அவரை வணங்கத் தொடங்கினர்.

ஆனால் சிவகாமி பரதேசியம்மையின் மனமோ அமைதி இன்றி தவித்தது. ‘தனக்கு குழந்தை இல்லாதது தானே பெரும் குறை. இது பற்றி மஸ்தானிடம் கேட்போம்' என கல் மடத்துக்கு கணவருடன் சென்றார்.

மஸ்தான், ‘தாயே! நீயோ தெய்வப்பிறவி. உனக் கென்று குழந்தைபேறு ஏது? உனக்கு தென்திருமலை அடிவாரத்தில் அகத்தியருக்கே தமிழ் போதித்த முருகக் கடவுளே மகனாய் கிடைப்பான்' என அருளினார்.

‘ஐயா! என் குழந்தை எங்கே இருப்பான்? எனக்கு எப்படி கிடைப்பான்?' என சிவகாமி அம்மையார் கேட்டார்.

‘கவலைப்படாதே.. பண்பொழி மலை அடிவாரத் தில், நீ செல்லும் இடத்தில் ஒரு பொட்டல் காடு உண்டு. அதன் மேலே வண்டு ஆடிக்கொண் டிருக்கும். அங்குதான் முருகன், குழந்தையாய் உன் கையில் கிடைப்பார்’ என அருளினார்.

தம்பதியினர் அங்கிருந்து கிளம்பினர். தங்களோடு சிறு குழந்தையில் இருந்து உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த சங்கிலிமாடன் என்பவரையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினர்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது. அவ்விடம் பெரும் பொட்டல்காடாக இருந்தது. அதில் கரும் வண்டு ஒன்று ரீங்காரமிட்டு வட்டமிட்டது. அதன் அருகே உள்ள குளக்கரையில் முருகன், குழந்தையாக கிடந்தார். அவரின் அழுகுரல் கேட்டு அருகே ஓடிச்சென்று அந்த குழந்தையை தழுவி தன் மார்போடு அணைத்து ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வை,

‘மகனே யென்றம்மை தானும்
மார்பொடு சேயைச் சேர்த்து
முகத்தோடு முகத்தை வைத்து
முத்தமிட்டணைத்துக் கொண்டு
மகனே யென்றழைத்தபோது
மார்க்கண்டன் ஒடுங்கி நெஞ்சம்
பகவனை சேர்ந்த ணந்த
பான்மைபோல் இருந்த தைய’

என அச்சன்புதூர் கவிஞர் சுப்பையா, தனது ‘சிவகாமி அம் மையார் கவிதை வரலாறு' நூலில் நெஞ்சம் நெகிழ குறிப்பிடுகிறார்.

குழந்தையாக இருந்த முருகப்பெருமான், திருமலை முருகனாய் சிவகாமி அம்மைக்கு காட்சி தந்து, அதன் பின் திரு மலையில் மறைந்தார். முருகன் வண்டாடிய பொட்டலில் கிடை த்த காரணத்தினால், இவ்வூரு க்கு ‘வண்டாடும் பொட்டல்’ என பெயர் விளங்கியது.

முருகன் மறைந்த திருமலை என்னும் பைம்பொழில் சிறப்பு பெற்ற மலை. அக்காலத்தில் முள்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காட்டுப் பகுதியாக கிடந்தது. அது போதாதென்று கொடிய காட்டு விலங்குகளும் அங்குச் சுற்றித் திரிந்தன. எனவே பகல் நேரத்தில் கூட அங்கே செல்ல மக்கள் அச்சப்பட்டனர். ஆனால் சிவகாமி பரதேசியம்மையார், எதையுமே லட்சியம் செய்யாமல் மலை மீது ஏறினார். மலைக்கு மேல் அருள்பாலித்த திருமலைக்குமார சுவாமியை தரிசித்தார்.

சிறப்பு மிக்க அந்த தெய்வத்தையே, மகனாக பெற்றதை எண்ணி மகிழ்ந்த சிவகாமி பரதேசியம் மையார், அந்த ஆலயத்திற்கு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்காக வண்டாடும் பொட்டலில் மடம் அமைத்தார். திருப்பணி தொடங்கியவுடன் பரதேசியம்மையாரின் வடிவமும் மாறியது. காவி உடுத்தினார். கழுத்தில் ருத்ராட்சம் தரித்தார். கரங்களில் வேலாயுதமும் கமண்டலமும் கொண்டு, நெற்றியில் திருநீறும் குங்குமமும் அணிந்து திருமலை குமரனுக்கு சேவையைத் தொடங்கினார்.

யாத்திரியர்களுக்குத் தினமும் உணவு வழங்கினார். கோடை காலத்தில் நீர் மோர், பானகம் வழங்கினார். தான் தொடங்கிவைத்த திருப்பணிகள் நிலையாக நடைபெற, ஏராளமான நன்செய் நிலங்களையும் மானியமாக்கி வைத்தார். மலையின் மேலே உள்ள வசந்த மண்டபம் திருப்பணி தொடங்கியது. ஏறத்தாழ 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் பணியை தொடங்கினார். இதற்காக முருகன் அடிமைகளை அழைத்தார். தற்போது போல அப்போது படிகளும் கிடையாது. வாகனங்கள் ஏறிச்செல்ல வழியும் கிடையாது. செல்லும் வழியில் கால் வைக்க மட்டுமே பாறையில் சிறு சிறு குழி இருக்கும். அதன் வழியாகத்தான் பாறைகளை தூக்கிச் செல்ல வேண்டும்.

சிவகாமி பரதேசி அம்மையார் நினைத்திருந்தால் திருமலையை குடைந்து கூட, முருகப்பெருமான் ஆலயத்தை அமைத்திருக்க முடியும். ஆனால் ‘இது தன் புதல்வன் மலை. இம்மலைக்கு பங்கம் எதுவும் ஏற்படக்கூடாது’ என்பதற்காக, வேறு இடங்களில் இருந்து கற்களைக் கொண்டு வந்தார்.

மலை உச்சிக்கு தன்னோடு வேலை செய்யும் ஊழியர்களோடு, அம்மையாரும் தலைச்சுமையாக கற்களை தூக்கிச் சென்றார். நடந்து கூட செல்லமுடியாத இடத்தில் பாறைகளை முதுகில் தூக்கி கொண்டு, மேலே கொண்டு சென்றவர் களிடம் இருந்து நழுவி விழும் பாறைகளை தனது தலையால் தடுத்து, பின் தூக்கிச் சென்றும் திருப்பணி செய்தார். அதற்கு அவரது தெய்வ சக்தி ஒத்துழைத்தது. சில நேரங்களில் பாறைகளை கயிறு கட்டி இழுத்த போது, தனது தலைமுடியை சேர்த்துக்கட்டி பாறை களை மேலே இழுத்துச் சென்றுள்ளார். இப்படித்தான், திருமலையில் வசந்த மண்டபம் உள்பட பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் கோவில் தெப்பக்குளத்தை முழுவதுமாக தூர்வாரி, அதை செம்மைப்படுத்தும் பணியையும் மிக கச்சிதமாக செய்து முடித்தார். தற் போதும் கோயில் மலை உச்சியில் அழ காகக் காட்சி தரும் அந்த தெப்பக்குளம், சிவகாமி பரதேசி அம்மையார் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

அம்மையார் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையிலும், திருச்செந்தூர் செல்வது வழக்கம். அங்கு முருகப் பெருமானை தரிசித்து விட்டு நடைபயண மாகவே பண்பொழிக்கு திரும்ப வந்துவிடுவார்.

ஒரு நாள் செந்தூரில் ஆடிவரும் முருகப் பெருமானின் தேரை பார்த்தார். அவன் அழகு முகத்தைக் கண்டு ஓடோடி அருகில் சென்றார். தேரின் வடத்தினை பிடித்து இழுத்தார்.

‘யார் இது.. பெண் பரதேசி. தூரப்போ' என தடுத்தார் ஒருவர். கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அம்மையார்.

‘என் மகன் தேரை நான் வடம்பிடித்து இழுக்கக் கூடாதா? ‘முருகா! நீ என் மகன் தான் என்றால், இந்தத் தேர் நகரக்கூடாது' என ஆணையிட்டு விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டார்.

தேர் நகர்ந்ததா?

திருமலையை ‘பிரணவத்தின் மலை’ என்றும் கூறுவார்கள். பிரணவத்தின் வடிவான ‘ஓம்’ என்ற வடிவில் இம்மலை இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. ‘அகத்தியம்’ என்னும் முதல் தமிழ் இலக்கண நூலை அருளியவர் அகத்தியர். அவருக்கும் தமிழ் போதித்தவர் முருகப்பெருமான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தான், ஓம் வடிவில் அமைந்த பண்பொழி திரு லையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து அகத்தியர் வணங்கினார் என்று கூறுகிறார்கள். மேலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அகத்தியர் அமைத்தார். 

இந்த பூஞ்சுனையில் ஞாயிறு, திங்கள், அக்கினி ஆகிய மூவர் பெயராலும் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். இக்குழியில் எப்போதும் நீர் நின்று கொண்டிருக்கும். இந்த குழியில் நீர் குறைந்து விடுமானால் உடனே மழை பொழிந்து குழியும், சுனையும் நிறைந்து விடும் என்பது ஐதீகம். இச்சுனையில் நாள்தோறும் குவளைப்பூ ஒன்று பூக்கும். அப் பூவினைக் கொண்டு, சப்த கன்னியர்கள் முருகனை வழிப்பட்டு வந்திருக்கிறார்கள்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பூவன் பட்டர் என்பவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் அருகில் உள்ள மூங்கில் காட்டு புதரில் புதையுண்டு கிடக்கிறேன். நான் இருக்கும் இடத்தை எறும்புகள் கூட்டம் கூட்டமாக வந்து அடையாளம் காட்டும். என்னை எடுத்து வந்து திருமலையில் பிரதிஷ்டை செய். நான் அனைத்து மக்களுக்கும் காக்கும் தெய்வமாக இருப்பேன்’ என்று கூறினார்.

அதன்படி மறுநாள் பூவன் பட்டர் மூங்கில் காட்டுக்குள் சென்றார். அங்கு எறும்புகள் அடையாளம் காட்டும் இடத்தில் முருகனை கண்டெடுத்து திருமலையில் பிரதிஷ்டை செய்தார். அது முதல் திருமலை குமரன் காக்கும் தெய்வமாக இருந்து அருள் வழங்கி வருகிறார்.

No comments:

Post a Comment