Saturday 21 September 2019

விபூதி என்கிற மருந்து ?


சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விரிவாக விளக்குகின்றன. ஒருசமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விவரித்தார். அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்தும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றில் மறைந்து நின்று செயல்படுவதையும் விளக்கிக் கூறினார்.

மகா அக்னியாக விளங்கும் தாமே வானத்தில் இடி, மின்னலாகவும் பூமிக்குள் எரிமலை குழம்பாகவும், கடலுக்குள் வடவாமுகாக்னியாகவும் இருப்பதை விரிவாக எடுத்துரைத்தார் சிவபெருமான். பின் அந்த அக்னிப் பிழம்பாக இரண்டு முகங்கள், ஏழு கைகள், ஏழு நாக்குகள், மூன்று கால்கள், தலையில் நான்கு கொம்புகள் திகழக் காட்சியளித்தார். அந்த பேருருவை கண்டு வியந்த உமாதேவி அவரை வணங்கி தமக்கு காப்பாக இருக்கும் ஒரு பொருளை அருளுமாறு வேண்டிக்கொண்டாள்.

தன் செம்பொன் மேனியில் வெண்ணிறமாய் பூத்திருந்த வெண் பொடியை வழித்துக் கொடுத்து, ‘இதனைக் காப்பாக கொண்டு இவ்வுலகினை வழி நடத்துவாய்’ என்று அருளினார். அதனால் அது சிவவீர்யம் எனறு அழைக்கப்பட்டது. தேவி அதனை நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது. உடலெங்கும் பூசிக்கொண்டதால் சிவ கவசம் என்றானது.

எஞ்சிய விபூதியை அவர் ரிஷப தேவரிடம் தர, அவர் அதனை உட்கொண்டார். அதனால் அவர் அளப்பரிய சக்தியைப் பெற்றார். இது, அவர் மூலம் கோ உலகத்தில் உள்ள ஐந்து பசுக்களான சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை, நந்தை ஆகிய பசுக்களிடம் சேர்ந்து பின்னர் பூலோக பசுக்களிடமும் வந்து சேர்ந்தது. அதனாலேயே நாம் கோ ஜலம், கோ சாணம் ஆகியவற்றினை கலந்து உருண்டைகளாக பிடித்து நெருப்பிலிட்டு விபூதியைத் தயாரித்து வருகின்றோம்.

திருநீற்றினை வாங்கி இட்டுக்கொள்வதுடன் சிறிது வாயிலும் போட்டுக்கொண்டால் அநேக நோய்களைத் தீர்க்கும். முறையாக மந்திரிக்கப்பட்ட விபூதி, வாதத்தினால் உண்டாகும் எண்பத்தொருவகை நோய்களையும், பித்தத்தால் உண்டாகும் அறுபத்து நான்குவகை உபாதைகளையும், கபத்தினால் உண்டாகும் இருநூற்று பதினைந்துவகை உடல்நலக் கேடுகளையும் தீர்க்கும் மகிமை கொண்டது.

இந்தப் பலன்களெல்லாம் கடையில் விற்கும் காகித சாம்பல் விபூதியில் கிடைக்காது, பசுஞ்சாண விபூதி வாங்கி அதனை இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து எடுத்து பத்திரப்படுத்தி பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம, நமசிவாய என சொல்லி உபயோகித்தால் மட்டுமே கிட்டும்.

Thursday 19 September 2019

முருகனுக்கு எதனால் இத்தனை பெயர்கள் ?


முருகனுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கின்றது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று கேள்விகள் உங்களுக்கு தோன்றலாம்.

முருகன் :

முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கின்றது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சரவணபவன் :

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர். சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

ஆறுமுகம் :

சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

குகன் :

மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.

குமாரன் :

கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கின்றார்கள்.

கந்தன் :

கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்.

விசாகன் :

விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

வேலன் :

வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

குருநாதன் :

பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார்.

சுப்பிரமணியம் :

சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர். ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.

Wednesday 18 September 2019

இந்துக் கடவுள்களை எப்படி வழிபடுவது ?


1.பிள்ளையாரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது.

2.பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாதது ஆகும். தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3.விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4.சரஸ்வதியை பவளமல்லியால் அர்ச்சனை செய்யக்கூடாது.

5.விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசியால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.

6.மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யக் கூடாது.

7.வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகித்தல் கூடாது.

8. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துதல் வேண்டும்.

9.ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

10.தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதிகள் இல்லை.

11.வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.

12.சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

13.முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை அனைத்தும் சிவபூஜைக்கு உரியவை.

14.துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை ஆகும்.

15.பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம் மற்றும் பலாப்பழம் ஆகும்.

16.திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

17.அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

18.குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்தல் வேண்டும்.

Tuesday 17 September 2019

இந்த கோவில் சிவனை பூஜித்தால் 108 லிங்கங்களை ஒருசேரப் பூஜித்த பலன் கிடைக்கும் !


வாழ்க்கையில் முக்கிய கட்டமான திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனாலோ, திருமணத்தின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ எங்கு  சென்று வேண்டினால் காரிய சித்தியாகும்? என்று இப்பொழுது பார்ப்போம். 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தட்டாத்தி மூலை வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமியை தரிசனம் செய்தால் திருமணம், குழந்தை  பாக்கியம் கைகூடும். கோயில் சின்ன கோயில் தான் எனினும் இங்குப் பிற கோயில்களில் கிடைக்கப்பெறாத நிகழ்வுகள் இங்கு கிடைக்கப்பெறும். 

இராமாயண காலத்தில் இராமபிரான் தாடகியைத் துரத்தி வந்ததாகவும் அந்த அரக்கி இவ்வூரில் ஓர் இரவு ஒளிந்துகொண்டு தங்கியதாகவும் மறுநாள் இராமபிரானால் வதம் செய்யப்பட்டார் எனவும் புராணக் கதைகள் கூறுகின்றன. எனவே, தான் தாடக + அந்த + புரம் = தாடகாந்தபுரம் என இந்த ஊர் பெயர் வழங்கலாயிற்று. ஆனால் இப்போது இந்த ஊரின் பெயர் தட்டாத்திமூலை என்பது ஆகும்.

அம்பிகை கயிலையில் இருந்து இறைவனுடன் திருவாஞ்சியத்திற்கு மானிட ரூபம் கொண்டு மக்களோடு மக்களாக கார்த்திகை ஞாயிறு அன்று குப்தகங்கையில் புனித நீராட வந்த விசாலாட்சி கால்வலி தாங்க முடியாமல் இந்த வளப்பாற்றங்கரையில் அமர்ந்ததோடு சிவபெருமானை மேற்கு முகமாக வைத்து பூஜித்தாள். அந்த லிங்கத்தை  வடகிழக்கு மண்டபத்தில் வைத்துள்ளனர். தற்போது பெரிய பாணம் மட்டும் உள்ளது. இதனால் இங்கு அம்பிகை அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கின்றார்.

சோமவாரத்தில் வளப்பாற்றங்கரையில் நீராடி வில்வத்தால் மேற்கு நோக்கிய காசி சிவலிங்கத்தையும் விஸ்வநாதரையும் வழிபடும் பக்தர்கள் காசிக்கு சென்ற பலனை பெறலாம். 

இத்தலத்து சிவபெருமானை பூஜித்தால் நூற்றியெட்டு லிங்கங்களைப் பூஜித்த பலனோடு குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.  அம்பிகையின் சிறப்பு திருத்தலங்கள் பலவற்றிலும் தமிழகத்துச் சிவாலயங்கள் பெரும்பாலானவற்றில் அம்பிகை நின்ற கோலத்தில் தான் காட்சி தருகிறாள். நம்  தாடகாந்தபுரத்தில் மட்டுமே அம்பிகை விசாலாட்சி என்னும் பெயருடன் அமர்ந்த நிலையில் ஒருகையில் தாமரை மலர் ஏந்தி அருள் பாலிக்கிறாள் என்பது இங்கு தனிச் சிறப்பு.

இந்த திருக்கோயிலில் இருகால பூஜை நடைபெறுகிறது. திருமணம்-புத்திரபாக்கியம் ஆகியவை நல்லவிதமாக அமைய விசாலாட்சி அம்பிகையை பிரார்த்தித்துச் செல்லலாம்.

கருவறை கோட்டத்தில் தென்முகன், துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகனுக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் பைரவர், சூரியன் சனி பகவான்  உள்ளனர். வடகிழக்கில் ஒரு தீர்த்த கிணறும் அமைந்துள்ளது. 

திருவாரூரிலிருந்து செல்வபுரம் வழியாக நன்னிலம் செல்லும் பேருந்தில் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து குடவாசல் ஆனைக்குப்பம் வழியாகவும் நன்னிலம் செல்லும்  பேருந்தில் செல்லலாம்.

Monday 16 September 2019

இழந்த சொத்துகள், பொருட்களை மீட்டுத்தர ஹோமம்


உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாள், திதியில் யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கர்த்தவீர்யார்ஜுன மந்திரம் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் பலன்கள் உண்டு.

கர்த்தவீர்யார்ஜுன ஹோமம் செய்யும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து விட்டு, தூய்மையான ஆடைகள் அணிந்து, உணவு ஏதும் உண்ணாமல் ஹோம பூஜையில் கலந்து கொள்வது சிறப்பாகும். பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகின்றது.

இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகின்றது. கார்த்தவீர்யார்ஜுனன் ஹோமம் செய்யப்படுவதின் பிரதான நோக்கமே இழந்த நமது பூர்வீக சொத்துக்களையும், பொருட்களையும் திரும்ப மீட்பதற்காக தான்.

வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும். இழந்த பொருட்கள், சொத்துக்கள் போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க வழிவகை செய்கின்றது.

அதேபோல் சில குடும்பங்களில் சில நபர்கள் மிக இளம் வயதிலோ அல்லது பல்வேறு காரணங்களால் காணாமல் போவது, பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகின்றது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் தொலைந்த தங்களின் உறவுகளோடு சேர்க்க செய்யும் ஆற்றல் மிக்க ஹோம பூஜையாக கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் இருக்கின்றது.

Sunday 15 September 2019

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன்


சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டு வந்தார். அவர் அவ்வப்போது தீர்த்த யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் கண்ணபுரம் என வழங்கும் சமயபுரத்தில் அருளும் மாரியம்மனை தரிசிக்கச் சென்றார்.

அன்னையை வணங்கி வழிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் வெங்கோஜி. அப்போது அவர் கனவினில் தோன்றிய மாரியம்மன் தஞ்சை நகருக்குக் கிழக்கே புன்னை வனக்காட்டில் புற்றுருவாய் தான் குடி கொண்டிருப்பதாகவும், அங்கேயே தன்னை தரிசிக்கலாம் எனவும் திருவாய் மலர்ந்தருளினாள். திடுக்கிட்டு விழித்த மன்னர் புன்னைக்காட்டினை அடைந்தார். அங்கே திறந்த வெளியில் புற்றுருவாய் அமர்ந்திருந்த அம்பிகையைக் கண்டார். உலகையே ரட்சிக்கும் அன்னை இப்படி வெட்ட வெளியில் இருப்பது கண்டு மனம் நொந்தார். உடனே மேற்கூரை அமைத்து அனைவரும் வந்து வழிபட வகை செய்தார்.

சிறிது காலம் சென்ற பின் வெங்கோஜி மன்னனின் மகனான  துளசிராஜா ஆட்சிக்கு வந்தார். இவருடைய மகளுக்குக் கடும் அம்மை நோய் கண்டது. அதனால் அவளது பார்வை பறிபோயிற்று. மகளுடைய இந்த நிலையைக் கண்டு மன்னர் ஆழ்ந்த வருத்தம் கொண்டார். அவருடைய கனவில் ஒரு சிறுமி தோன்றினாள். ‘உன் தந்தை எனக்கு வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாப்புத் தர மேற்கூரை வேய்ந்தார். அவருடைய மகளான உன்னை நான்  காக்க மாட்டேனா?’ என்று புன்முறுவலுடன் சொன்னாள். அந்தச் சிறுமி புன்னைநல்லூர் மாரியம்மன்தான் என்பதைப் புரிந்து கொண்டார் துளசிராஜா. 

மறுநாள் துயிலெழுந்ததும் முதல் வேலையாக தன் மகளுடன் புன்னைநல்லூர் வந்தார். மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் அபிஷேகங்களும், அர்ச்சனையும் புரிந்து வணங்கினார். அன்னையின் சந்நதியில் நெய்தீபங்களை ஏற்றினார். அந்த தீபங்களின் ஒளி நேராக துளசிராஜாவின் மகளை நோக்கிச் செல்வது போன்ற பிரமை ஏற்பட்டது. ஆனால், அது பிரமை அல்ல; உண்மை. ஆமாம், அவளுக்குப் பார்வை மீண்டது.

அன்னையின் மகத்தான சக்தியை மனப்பூர்வமாக உணர்ந்த மன்னன், திருச்சுற்றுச் சுவர்களைக் கட்டி, இறைவிக்கு அழகிய கோயிலை உருவாக்கி அதை பக்தர்களுக்குக் காணிக்கையாக்கினார். அந்த மன்னனின் திருவுருவச் சிலை இன்றும் இறைவியின் சக்திக்கு சாட்சியாக ஆலயத்தில் காட்சி தருகிறது. 

சக்திக்கே சக்தி தரும் வகையில் மகான் சதாசிவப்பிரம்மேந்திரர் அம்பிகையின் சந்நதியில் புற்றுமண்ணைக் கொண்டே அம்மனை வடிவமைத்து சக்ரத்தையும் நிறுவினார். அதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. உற்சவ அம்மனுக்குத்தான் அபிஷேகம். வரப்ரசாதியாகக் திகழும் இந்த அம்பிகைக்கு பக்தர்கள் பால் குடமெடுத்தும், மாவிளக்கும் போட்டும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

பேச்சியம்மை, லாட சந்நியாசி, மதுரைவீரன், கருப்பன், பாடகச்சேரி சுவாமிகள், சதாசிவ பிரம்மேந்திரர் ஆகியோரின்சுதை உருவங்கள் உடன் திகழ, அன்னை அருளாட்சி புரிகிறாள்.

கடுமையான கோடைக் காலத்தில் அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்வை பெருகி வரும். இது பலநூறு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் அற்புதம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு வெள்ளைக்கார அதிகாரி, இவ்வாறு வியர்வை அரும்புவதை கேலி செய்ததோடு அது தற்செயலாக வேறு ஏதாவது நீர்பட்டு அவ்வாறு தோன்றியிருக்கும் என்று சொல்லி, அந்த நீரைத் துடைக்குமாறு கட்டளை இட்டான். அவன் ஆணையை மீற முடியாத கோயில் அர்ச்சகர் நடுங்கும் கரங்களுடன் அவ்வாறே செய்ய, முத்துகளாய் அரும்பியிருந்த அந்த வியர்வைத் துளிகள் அதிகாரியின் உடலில் அம்மை முத்துகளாகப் பொங்கி, அவனை அதிர வைத்தன. 

அதிர்ச்சிக்குள்ளான அந்த அதிகாரி, அந்தப் பகுதி பக்தர்களின் நம்பிக்கையைக் கேவலப்படுத்திய தன் தவறை உணர்ந்து வருந்தி, கண்களில் நீர் பெருக்கினான். நாளடைவில் அம்மனின் அருளால் அவன் அதிகத் துன்பமின்றி, நோய் வந்த வடுவும் எதுவும் இன்றி பூரண நலம் பெற்றான். சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலய திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக வேண்டிக் கொண்டால் உடலில் தோன்றும் கட்டிகள், மருக்கள் போன்றவை விரைவில் மறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீல் உள்ளது புன்னைநல்லூர் திருத்தலம்.

Saturday 14 September 2019

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை


* காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நற்பணிகளில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்குங்கள். மற்றவர் பேச்சை பொருட்படுத்தாதீர்கள். உங்களின் மனதிற்கு நல்லவராக இருந்தால் போதும்.

* முடிந்தளவு பிறருக்கு உதவி செய்யுங்கள். ஆனால் யாரிடமும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். அன்றாடம் துாங்கும் முன் அரை நிமிடமாவது யோசியுங்கள். தவறை திருத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

* தர்மவழியில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. ஆசைகளில் சிக்கினால் அது பாவத்தில் தள்ளி விடும்.

* ஒரு தொண்டனைப் போல ஆன்மிகத்தில் ஈடுபடுபவன் சேவை தவிர மற்றதை சிந்திக்க மாட்டான்.

* பக்தி என்னும் பண்பு இல்லாவிட்டால் மனிதன் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போவான்.

* தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைப்பவன் எல்லா மேன்மையும் அடைவான்.

* படிப்பு, பணம், புகழ் என எல்லாம் இருந்தாலும் ஒழுக்கம் இல்லாவிட்டால் பயன் உண்டாகாது.

* ஓடும் நதி இறுதியில் கடலைச் சேரும். மண்ணில் பிறந்த உயிர்கள் கடவுளைச் சென்றடையும்.

* உண்பது மட்டுமே வாழ்க்கையல்ல; நாக்கை கட்டுப்படுத்துங்கள். எல்லாம் தானாக அடங்கி விடும்.

* கர்வத்தால் சொல்லும், செயலும் முரண்படும். அடக்கத்தால் சொல்லும், செயலும் ஒன்றுபடும்.

* உலகம் என்னும் சத்திரத்திற்கு கடவுளே உரிமையாளர். யாரும் இதை சொந்தமாக்க முடியாது.

* சத்திரத்தில் சில நாள் தங்கும் பயணி போல, மனிதனுக்கு உலக வாழ்வு சில காலம் மட்டுமே.

- சாந்தானந்தர்