Monday 2 September 2019

நெல் குத்தி சுவாமியை பற்றி தெரியுமா ?


திண்டிவனம் அருகிலுள்ள தீவனுார் கிராமத்தில் நெல்குத்தி விநாயகர் அருள்பாலித்து வருகின்றார். கணபதி லிங்கம் எனப்படும் இவர் தீபாராதனையின் போது மட்டும் விநாயகர் வடிவத்தில் காட்சியளிக்கின்றார்.

செஞ்சி பகுதியை தேசிங்கு ராஜா ஆட்சி செய்த காலம். அப்போது ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர், வயலில் விளைந்திருந்த நெற்கதிர்களை திருடி ஓரிடத்தில் குவித்தனர். கற்களை எடுத்து நெல்லைக் குத்தி அரிசியாக்கி கொண்டனர். ஒருநாள் நெல் குத்த சரியான கல் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நீண்ட தேடலுக்குப் பின் சிறுவன் ஒருவன், யானை முகம் கொண்ட கல் ஒன்றை கண்டான். அது நெல் குத்த பயன்படாது என அனைவரும் கூறியதால் நெற்கதிர்களை அங்கேயே வைத்து விட்டு வேறு கல்லைத் தேடிச் சென்றனர். திரும்பிய போது, நெல் குத்தப்பட்டிருப்பது கண்டு  அனைவரும் அதிசயித்தனர். 

''இது சாதாரண கல் இல்லை! நெல் குத்தி சுவாமி! இதை பத்திரப்படுத்த வேண்டும்'' என ஓரிடத்தில் மறைத்தனர். மறுநாள் கல்லைக் காணவில்லை. அப்போது குளத்தில் தண்ணீர் கொப்பளித்ததைக் கண்டனர். அந்த இடத்திற்குள் கல் கிடக்கவே, அதை எடுத்து மீண்டும் பத்திரப்படுத்தினர். 

இந்நிலையில் விவசாயிகள் நெற்கதிர்கள் திருட்டு போவது குறித்து வருந்தினர். பெரிய தனக்காரரான ஏகாம்பர கவுண்டரிடம் புகார் செய்தனர். விசாரணையில் சிறுவர்கள் சிலர் நெற்கதிர்களை திருடுவதும், யானை வடிவ கல் ஒன்றில் நெல்லை குத்துவதும் தெரிய வந்தது. அன்றிரவு பெரிய தனக்காரரின் கனவில் விநாயகர் தோன்றி, நெல் குத்தி கல்லாக தான் இருப்பதை தெரிவித்து கோயில் கட்ட உத்தரவிட்டார். பெருமாள் பக்தரான அவருக்கோ இதில் உடன்பாடு இல்லை. 'கடவுள் ஒருவரே; அவரே வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறார்' என பகவத்கீதையின் மேற்கோள் ஒன்றை உறவினர் ஒருவர் எடுத்துச் சொல்லி, கோயில் கட்டும் பணியில் அவரை ஈடுபடுத்தினார். 

ஒருமுறை இக்கோயிலின் பூசாரி மிளகு வியாபாரி ஒருவரிடம் நைவேத்யத்திற்கு கொஞ்சம் மிளகு தருமாறு வேண்டினார். விரும்பாத வியாபாரி தன்னிடம் உளுந்து இருப்பதாக பொய் சொல்லி விட்டு சந்தைக்குச் சென்றார். அங்கு மிளகு மூடை, உளுந்து மூடையாக மாறி இருந்தது. தவறை உணர்ந்த வியாபாரி விநாயகரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார். பொய் சொன்னதை தடுத்ததால் 'பொய்யாமொழி விநாயகர்' என பெயர் பெற்றார். கோயிலின் பின்புறம் உள்ள விழுது இல்லாமல் மூன்று ஆலமரங்கள் உள்ளன. திருமணம், குழந்தை பாக்கியம், மன அமைதி பெற வேண்டி பக்தர்கள் இவற்றை சுற்றுகின்றனர். 

விசஷே நாட்கள்: விநாயகர் சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி,பிரதோஷம்

நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி

எப்படி செல்வது: திண்டிவனம் - செஞ்சி வழியில் 12 கி.மீ.,

No comments:

Post a Comment